MUST WATCHஜெயேஷ்பாய் ஜோர்தார்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, விமர்சகர்களின் பாராட்டுகளை அள்ளிய இந்திப்படம், ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார்’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது.
ஊர்த்தலைவர் பிருத்விஷ். பயங்கர ஆணாதிக்கவாதி. அவரைப் பொறுத்தவரை ஆண் வாரிசைப் பெற்றுக்கொடுக்கவும், சமைத்துப்போட்டு வீட்டைப் பார்த்துக் கொள்வதற்காகவும் படைக்கப்பட்டவர்கள்தான் பெண்கள். இதையே கிராமத்திலுள்ள மற்ற ஆண்களும் பின்பற்றுகிறார்கள். பிருத்விஷின் மகன் ஜெயேஷ். ரொம்பவே அப்பாவி.

ஜெயேஷிற்கு முன்பே ஒரு மகள் இருக்கிறாள். அவனின் மனைவி முத்ரா இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். அடுத்து ஆண் வாரிசுதான் வேண்டும். பெண் என்றால் கருக்கலைப்பு செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஜெயேஷ் தந்தை.

முத்ராவின் வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்று சட்டத்தை மீறி ஸ்கேன் செய்யப்படுகிறது. அதுவும் பெண் குழந்தைதான் என்று ஜெயேஷிற்கு மட்டும் தகவல் தெரிகிறது. ஆணாதிக்கவாதியான தந்தையிடமிருந்து பிறக்கப்போகும் மகளை ஜெயேஷ் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே திரைக்கதை. இந்த டிஜிட்டல் யுகத்திலும் இப்படியெல்லாம் நடக்குமா என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது இந்தப் படம். ஜெயேஷாக பட்டையைக் கிளப்பியிருக்கிறார் ரண்வீர் சிங். படத்தின் இயக்குநர் திவ்யங் தாக்கர்.

இன்னலே வரே

‘சோனி லிவ்’வில் நேரடியாக வெளியாகியிருக்கும் மலையாளப்படம், ‘இன்னலே வரே’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. பிரபல நடிகர் ஆதி. அவர் சமீபத்தில் நடித்த படம் ப்ளாப் ஆகிறது. இதுபோக கோடிக்கணக்கில் கடன் வேறு. கடன் கொடுத்தவர் ஆதியிடமிருந்த சொகுசு கார்களை பறிமுதல் செய்கிறார். இன்னொரு பக்கம் ஆதிக்கு திருமணமான கார்த்திகாவுடன் தொடர்பு இருக்கிறது. அத்துடன் ஐசு என்ற பெண்ணைக் காதலித்து வருகிறார் ஆதி. தவிர, வேறு சில பெண்களுடனும் தொடர்பில் இருக்கிறார்.

இந்நிலையில் கார்த்திகா கர்ப்பமடைகிறாள். கடன், கார்த்திகாவின் கர்ப்பம், ஐசுவுடனான திருமணம் என சிக்கலில் தவிக்கிறார் ஆதி. மட்டுமல்லாமல் சரத், சானி என்ற இருவர் ஆதியின் ரகசியங்களைத் தெரிந்து, அவரை அமுக்கப் பார்க்கின்றனர். உண்மையில் சரத், சானி யார்? தன்னைச் சுற்றிலும் நடக்கும் பிரச்னைகள், கடன் தொல்லைகளிலிருந்து ஆதி மீண்டாரா... என்பதே சஸ்பென்ஸ் திரைக்கதை. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற சுவாரஸ்யத்தை கடைசி வரைக்கும் கொண்டு போயிருப்பது சிறப்பு. ஆசிப் அலி, அந்தோணி வர்கீஸ், நிமிஷா உட்பட படத்தில் நடித்த எல்லோருமே தங்களின் கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கின்றனர். படத்தின் இயக்குநர் ஜிஸ் ஜோய்.

இன்டர்செப்டர்

‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இருக்கும் ஆங்கிலப்படம், ‘இன்டர்செப்டர்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. எதிரி நாட்டுப் படைகள் ஏதாவது நுழைகிறதா... யாராவது தாக்குதல் நடத்த திட்டமிடுகிறார்களா... என்பதை 24 மணி நேரமும் கண்காணித்து, அமெரிக்காவைப் பாதுகாக்க இன்டர்செப்டர் மையங்கள் இயங்குகின்றன. அதில் ஒரு மையத்தை சிலர் தாக்கி அழித்துவிடுகின்றனர். ஒரு வேளை தாக்குதல் நடத்தியது ரஷ்யப்படையா அல்லது தீவிரவாதக் கும்பலா என்ற கோணத்தில் விசாரணை போகிறது.

ஒரு தீவிரவாதக் கும்பல் அணு ஆயுதங்களைத் திருடி தாக்குதல் நடத்துவது தெரிய வருகிறது. அதனால் பசிபிக் பெருங்கடல் நடுவே இருக்கும் இன்னொரு இன்டர்செப்டர் மையத்துக்கு எச்சரிக்கை விடப்படுகிறது. அந்த மையத்துக்குக் கேப்டனாக ஜே.ஜே நியமிக்கப் படுகிறார். அந்த மையத்தை அழித்துவிட்டால் சுலபமாக அமெரிக்காவுக்குள் தாக்குதல் நடத்தலாம் என்பது தீவிரவாத கும்பலின் திட்டம். இந்த திட்டத்தை எப்படி ஜே.ஜே. முறியடிக்கிறார் என்பதே ஆக்‌ஷன் திரைக்கதை. ஆக்‌ஷன் படப்பிரியர்களுக்கு நல்ல விருந்து இந்தப் படம். கேப்டன் ஜே.ஜே வாக எல்சா அதகளம் செய்திருக்கிறார். படத்தின் இயக்குநர் மேத்யூ ரெய்லி.

சாகன் சாக்னே

அதிக வசூலைக் குவித்த பஞ்சாபி மொழிப்படங்களில் ஒன்று, ‘சாகன் சாக்னே’. ‘அமேசான் ப்ரைமில்’ பார்க்கக் கிடைக்கிறது. தம்பதியினரான நிர்மலும் நசீப்பும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகிவிட்டன.

ஆனால், குழந்தையில்லை என்பது மட்டுமே அவர்கள் வாழ்வில் ஒரு குறை. மருத்துவமும், மந்திர, தந்திரங்களும் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் நசீப்பின் மாமியார், அதாவது நிர்மலின் அம்மா தன் மகனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைத்துவிடலாம் என்று மருமகளிடமே யோசனை சொல்கிறாள். நசீப்பும் மாமியாரின் யோசனைக்கு சம்மதிக்கிறாள். நிர்மலையும் வற்புறுத்தி இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறாள் நசீப்.

அம்மாவும், மனைவியும் சேர்ந்து நிர்மலுக்கு இரண்டாவது மனைவியைத் தேட கிளம்புகின்றனர். கடைசியில் தனது தங்கையையே திருமணம் செய்து வைத்துவிடலாம் என்ற முடிவுக்கு வருகிறாள் நசீப். இந்த முடிவு என்னென்ன விளைவுகளைக் கொண்டு வருகிறது என்பதே மீதிக்கதை. ஜாலியாக ஒரு படத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்கு இந்தப் படம் நல்ல சாய்ஸ். படத்தின் இயக்குநர் அமர்ஜித் சிங்.

தொகுப்பு: த.சக்திவேல்