5 வயது எழுத்தாளர்!



பொதுவாக குழந்தைகள் வாசிப்பதையும், எழுது வதையும் ரொம்பவே ஆர்வமாகச் செய்வார்கள். ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த பெல்லா ஜே டார்க் என்ற ஐந்து வயதுச் சிறுமி படிப்பது, எழுதுவதோடு மட்டுமல்லாமல், தான் எழுதிய கதையை புத்தமாக வெளியிட்டு அப்ளாஸை அள்ளி வருகிறார்.
அவர் எழுதியிருக்கும் புத்தகத்தின் பெயர், ‘தி லாஸ்ட் கேட்’. இதில் ஒரு பூனைக்குட்டி தனியாக வீட்டைவிட்டு வெளியே சென்றுவிடுகிறது. திரும்பி வர வழி தெரியாமல் தவிக்கிறது. தொலைந்து போனதைப் போல உணர்கிறது. அம்மாவின் துணையில்லாமல் எங்கேயும் செல்லக்கூடாது என்ற பாடத்தைக் கற்றுக்கொள்கிறது அந்தப் பூனைக்குட்டி.

இதுதான் பெல்லா எழுதியிருக்கும் கதையின் சுருக்கம். கதையின் இடையில் வரும் ஓவியங்களைத் தன் சகோதரியுடன் சேர்ந்து பெல்லாவும் வரைந்திருப்பது சிறப்பு.
புத்தகம் எழுத பெல்லாவிற்கு பெற்றோர் உறுதுணையாக இருந்திருக்கின்றனர். ‘ஜிஞ்ஜர் ஃபயர் பிரஸ்’ என்ற பதிப்பகம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. புத்தகம் வெளியான ஒரு மாதத்துக்குள் ஆயிரம் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. அத்துடன் ‘உலகிலேயே மிகக்குறைந்த வயதில் புத்தகம் எழுதிய பெண்’ என்ற கின்னஸ் சாதனையையும் தன் வசமாக்கிவிட்டார் பெல்லா.

த.சக்திவேல்