பாவேந்தர் இல்லம்!



‘தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்...’
- எனத் தமிழை உயிருக்கு நிகராக நினைத்து வாழ்ந்தவர்

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். ‘அழகின் சிரிப்பு’, ‘பாண்டியன் பரிசு’, ‘குடும்ப விளக்கு’ எனப் பல்வேறு ஆகச்சிறந்த படைப்புகளைத் தந்தருளியவர். புதுச்சேரியில் 1891ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி பிறந்து, பாரதியாருடன் நெருங்கிப் பழகி, அவரை தன் குருவாக ஏற்று, தன் இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசனா’க மாற்றி, பின்னர் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பின்பற்றி, தன்னுடைய எழுச்சி மிக்க எழுத்துக்களால் தமிழுக்கும் சமுதாயத்திற்கும் அவர் ஆற்றிய பணிகள் அத்தனை மகத்துவமானவை. அந்தப் பெருங்கவியின் வீட்டை புதுச்சேரி மாநில அரசு கடந்த ஐம்பது ஆண்டுகளாக நினைவு அருங்காட்சியகமாக பராமரித்து வருகிறது. புதுச்சேரியின் பெருமாள் கோயில் வீதியில் இருக்கும் பாவேந்தரின் இல்லத்தைப் பார்ப்பது ஒருபெரும் பாக்கியம்தான்.

1900ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த வீட்டை பாவேந்தர் சொந்தமாக வாங்கி 1944ம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரை வாழ்ந்தார். வீட்டின் உள்ளே நுழைந்ததும் வரவேற்கும் திண்ணைகள் பழமையின் ஞாபகச் சின்னங்கள். வலதுபக்கத்தில் உள்ள கல்வெட்டு, ‘‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு’ எனச் சொன்ன புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் இந்த நினைவு நூலகம், காட்சிக்கூடம் 1971ல் கவிஞரின் 80ம் ஆண்டு பிறந்தநாளில் திறந்து வைக்கப்பட்டது’ என்கிற தகவலைத் தருகிறது. இந்த வீட்டை அப்போதைய புதுவை மாநில முதல்வர், திமுகவைச் சேர்ந்த எம்.ஓ.எச்.ஃபரூக் தலைமையில், மாநில துணை நிலை ஆளுநர் பி.டி.ஜாட்டி திறந்து வைத்திருக்கிறார்.   

இதன்பிறகுள்ள விசாலமான நாலுகை தாழ்வாரம் பாவேந்தரின் மொத்த வாழ்க்கைச் சுருக்கத்தையும் எளிமையாகச் சொல்லிச் செல்கிறது. அதன் நடுவில் பாவேந்தரின் வெண்கலச் சிலை பார்வையாளர்கள் அனைவரையும் வரவேற்கிறது.  இந்தச்சிலையை 1992ம் ஆண்டு பாவேந்தரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு மலேசிய தமிழ் மக்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இதனை, மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலுவின் மனைவி இந்திராணி சாமிவேலு திறந்து வைத்துள்ளார்.

இடதுபக்கமுள்ள சிறிய அறையில் பாவேந்தர் நடத்திய ‘கவிதா மண்டலம்’, ‘குயில்’, ‘புதுவை முரசு’ ஆகிய இதழ்களின் அட்டைகளைப் பார்க்கமுடிகிறது. இதனுடன் 1944ல் கலைஞர் கருணாநிதி, பாரதிதாசனின் மூத்தமகள் சரஸ்வதியின் திருமணத்திற்கு அளித்த வாழ்த்து மடலும், 1942ல் கலைஞர் நடத்திய தமிழ் மாணவர் மன்றத்தின் முதலாமாண்டு விழாவிற்கு பாவேந்தர் அனுப்பிய வாழ்த்துக் கவிதையும் அந்தக் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.

அந்தச் சின்ன அறையிலிருந்து வெளியேறும் இடத்தில் பாவேந்தரின் பல்வேறு எழிலுருவ தோற்றங்களையும், 1947ல் பாவேந்தர் சென்னையில் தங்கியிருந்தபோது பல்வேறு ஓவியர்கள் வரைந்த விதவிதமான ஓவியங்களையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.இதன்பிறகு பாவேந்தரின் குடும்பத்தினரின் புகைப்படங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில், பாவேந்தர் மனைவி பழநியம்மாள் மற்றும் மகன், மகள்களுடன் இருக்கும் அரிதான புகைப்படங்கள் அழகு சேர்க்கின்றன. இதனுடன் பாரதிதாசன் தமிழாசிரியராக பணி செய்த போது எழுதிய பாடக்குறிப்புகளை கண்ணாடிப் பேழையில் பாதுகாக்கின்றனர். இதற்கிடையில்  ‘காசுக்கடை அசெம்பிளித் தொகுதியில் கவிஞர் பாரதிதாசனுக்கு யானைப் பெட்டியில் ஓட்டு அளித்து ஆதரியுங்கள்’ எனக் கவிஞரின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் ஆச்சரியம் அளிக்கிறது.

இந்தியாவுடன் புதுவை இணைந்தபிறகு 1954ல் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் பாவேந்தர் போட்டியிட்டிருக்கிறார். அதில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்று தற்காலிக சபாநாயகராகப் பணியாற்றி இருக்கிறார். இதன்பிறகு பாரதிதாசனின் நண்பர்கள், அவரின் மாணவர்கள், நூல் வெளியீட்டாளர்கள், இதழாசிரியர்கள், அணுக்கத் தொண்டர்களின் புகைப்படங்கள் நிறைய உள்ளன. இதனுடன் அவர் கைப்பட எழுதிய பாடல்கள், கவிதைகள்... உள்ளனஇதையடுத்து ஒரு கண்ணாடிப் பெட்டகத்தில் பாரத மாதா சிலையும், பாரதிதாசன் மறைந்தபிறகு வழங்கப்பட்ட சாகித்ய அகடமி விருதும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த பாரதமாதா சிலை பற்றிய கதை சுவாரஸ்யமானது. இதுபற்றி பாரதிதாசனின் பேரன் கோ.பாரதி, ‘‘அப்போது பாரதியார் பாரத மாதா சிலையைச் செய்ய பாரதிதாசனிடம் சொல்கிறார். அதுவும் ‘சர்வ அலங்கார பூஜிதையாக’ இருக்கவேண்டும் என்கிறார். அதாவது அலங்கார மணிகளுடன், விடுதலை பெற்ற மகிழ்ச்சியுடன் அன்னை இருக்க வேண்டும் என்கிறார்.
உடனே வ.வே.சு.ஐயர், ‘பாரதம் இன்னும் விடுதலையாகல. பிறகெப்படி அன்னை மகிழ்ச்சியுடன் இருப்பாள்’ எனக் கேட்கிறார்.

அதற்கு பாரதி, ‘அப்படித்தான் என் அன்னை எல்லோருக்கும் ஆற்றல் கொடுக்கக்கூடியவளாக இருக்கவேண்டும்’ என்கிறார். அதில் இந்திய வரைபடம் பின்னால் இருக்கும்படி சொல்கிறார்.
இதில் சில குறிப்பிட்ட பொம்மைகளில் மட்டும் குறியீடு இருக்கும். அந்த பொம்மையைத் திறந்தால் சுதேசிகளுக்கு அவர்களின் தற்காப்பிற்காகவும், போராட்டத்திற்காகவும் கைத்துப்பாக்கி வைத்து  சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொடுக்கும்படி பாரதிதாசனிடம்  சொல்றார் பாரதி. இதை சென்னையில் உரியவர்களிடம் கொடுக்கச் சென்றபோது உள்ளூர்க்காரருடன் தகராறு நடக்கிறது. அடிபட்டாலும் பரவாயில்லையென கஷ்டப்பட்டு பாரத மாதாவைக் காப்பாற்றிக் கொண்டு பாரதிதாசன் வருகிறார். இதை ‘குடும்ப விளக்கி’ல் எழுதியிருக்கிறார் பாவேந்தர். அந்த பாரதமாதா சிலையில் ஒன்று அப்பாவிடம் இருந்தது. அதை அருங்காட்சியகத்துக்குக் கொடுத்தார்...’’ என்கிறார்.  

வீட்டின் வலதுபக்கத்திலும் அடுக்கடுக்காக புகைப்படங்கள்தான். இதில் பாரதிதாசன் பிறந்தநாள் காட்சிகளும், கலை, இலக்கியம் சார்ந்த நண்பர்களுடன் எடுத்துக் கொண்டதும் வரிசையாக மாட்டப்பட்டுள்ளன. இறுதியாக பாவேந்தரின் மறைவன்று எடுக்கப்பட்ட இறுதி ஊர்வலப் புகைப்படங்கள் சோகத்தை ஏற்படுத்துகின்றன.  

தொடர்ந்து இந்த நினைவு நூலகத்தின் திறப்பு விழா படங்களும், 2001ல் மத்திய அரசு வெளியிட்ட பாரதிதாசன் அஞ்சல் தலையும் கவனிக்கச் செய்கின்றன. இடதுபக்கம் உள்ளது போலவே வலதுபக்கத்திலும் ஒரு சிறிய அறை உள்ளது. இதில் பாரதிதாசனின் சாய்வு நாற்காலியும், கட்டிலும், பயன்படுத்திய பொருட்களும் உள்ளன. இந்த இல்லத்தை காலை 9.40 மணி முதல் மாலை 5.20 மணி வரை  பார்வையாளர்களுக்குத் திறந்து வைத்துள்ளனர். திங்கள்கிழமையும், அரசு பொது விடுமுறை நாட்களிலும் பார்வையிட முடியாது.

இல்லம் வந்த கதை

இந்த வீடு வாங்கப்பட்ட பின்னணி பற்றி பாவேந்தரின் ஒரே மைந்தரான மன்னர்மன்னனின் மகன் கோ.பாரதி பேசினார்: ‘‘பாரதிதாசனின் மூதாதையர்கள் புதுச்சேரி காமாட்சியம்மன் கோயில் தெருவில் வழிவழியாக வாழ்ந்து வந்த வணிகர்கள். அந்தத் தெருவிலுள்ள ஒரு வீட்டில்தான் பாரதிதாசன் பிறந்தார். அவரின் தந்தை பெயர் கனகசபை. தாய் லட்சுமி அம்மாள்.

பாரதிதாசன் தன்னுடைய பதினேழரை வயதிலேயே கல்வியை முடித்துவிட்டார். தமிழ் இலக்கியத்தை ஃபிரஞ்சு கலவை கல்லூரியில் பயின்றார். உடனே தமிழாசிரியர் வேலை கிடைத்தது. அப்போது, சிலர் பதினேழரை வயதில் எப்படி ஒருவருக்கு வாத்தியார் வேலை கொடுக்க முடியும் என வழக்குத் தொடுத்தனர். அதில் வெற்றி பெற்று காரைக்கால் பகுதியில் நிரவி கிராமத்திற்குச் சென்றார். தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்காதவர். இதனால் பதிமூன்று பள்ளிகளுக்கு இவரை மாற்றினார்கள். அதன்பிறகு இவரை மாற்றமுடியவில்லை. ஏனெனில், அவ்வளவே பள்ளிகள் அப்போது இருந்தன.

புதுச்சேரி வந்ததும் பள்ளிகள் இருக்கிற பகுதிகளிலேயே வீடுகள் பார்த்துக் குடியிருந்தார். கடைசிவரை தொடக்கப்பள்ளி ஆசிரியராகவே இருந்தார். பதவி உயர்வுக்கு வாய்ப்பு இருந்தும் அதை அவர் விரும்பவில்லை. அவர் புதுச்சேரி நகர் பகுதியில் சில வீடுகள் மாறினார். கடைசியில் அவர் தனக்கென்று ஒரு வீடு வேண்டுெமன விரும்புகிறார். அப்போது புதுச்சேரி பெருமாள் கோயில் வீதியில் ஒரு வீடு ஏலத்திற்கு வருகிறது.

அந்நேரம், பாவேந்தரின் கவிதைகளை எல்லாம் வெளியிட்ட ‘முல்லை பதிப்பகம்’ முத்தையா, கவிதைகள் தொகுப்பிற்காக ராயல்டி கொடுக்கிறார். அந்தத் தொகையில் வாங்கப்பட்ட வீடுதான் இது. இந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற அரும்பணிகள் செய்தவர் என் தந்தையார். பாவேந்தர், முதலில் மாடர்ன் தியேட்டர்ஸ்க்கு கதை, வசனம், பாடல்கள் எல்லாம் எழுதுகிறார். ‘பாலாமணி அல்லது பக்காத்திருடன்’, ‘பொன்முடி’, ‘வளையாபதி’ உள்ளிட்ட படங்கள் பாரதிதாசன் கதை, வசனத்தில் வந்தவை. திரைத்துறையில் சிலவற்றுக்கு வளைந்து கொடுக்காததால் இவர் வெளியே வந்துவிட்டார். பிறகு ‘பாண்டியன் பரிசு’ கதையைப் படமாக்க மீண்டும் சென்னைக்குப் போகிறார்.

‘பாண்டியன் பரிசு’ படத்தில் சிவாஜி கணேசன் நடிப்பதாக இருந்தது. ஆனால், எடுக்கப்படவில்லை. ‘பாரதிதாசன் பிக்சர்ஸ்’ என ஆரம்பிக்கிறார். கடன் கையைக் கடிக்க ஆரம்பித்ததும் வெளியே வந்து பாரதியார் வாழ்க்கை வரலாறு பற்றிய கதையை எழுதுகிறார். பாரதியார் இறக்கிற காட்சி வரை எழுதி முடிக்கிறார். அப்போது இவருக்கு உடல்நலம் கெட்டுப் போகிறது. ன்னையிலேயே காலமாகிவிடுகிறார். புதுச்சேரிக்கு அவரின் உடலை எடுத்துவர கவிஞர் கண்ணதாசன், நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் வண்டி கொடுத்து உதவினார்கள்.  

இவரின் பெருமாள் கோயில் இல்லத்தை புதுச்சேரியின் அடையாளமாக்க வேண்டுமென என் தந்தையார் நினைத்தார். அப்போது பெண்களுக்கும் சொத்துரிமை வந்தது. தவிர, கவிஞர் சென்னைக்குப் போனபோது இந்த வீட்டின் மேல் கடன் வந்துவிட்டது. எல்லாவற்றையும் அப்பா சரிசெய்தார். தன் சகோதரிகளிடம் பேசி சம்மதிக்க வைத்தார்.

அப்போது  புதுச்சேரியில் திமுக ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஃபரூக் மரைக்காயர் இருக்கிறார். அவரைப் போய்ப் பார்த்தார். தென் இந்தியாவில் முதல்முதலாக அரசிடம் பாவேந்தரின் வீட்டை ஒப்படைத்தார். 1971ல் அந்த வீடு அரசுடைமையாகியது...’’ என்கிறார் கோ.பாரதி.  

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: முபாரக் ஜான்