நாய்தான் சைவம் பக்கம் நான் வரக் காரணம்!



உணவகங்களில் காலம் காலமாக நமக்குத் தெரிந்தது சைவமும், அசைவமும் மட்டும்தான். ஆனால், இப்போது இதில் வீகன், பாலியோ, கீட்டோ... என பல வகை உணவு முறைகள் வந்துவிட்டன. இதில் குறிப்பாக வீகன் உணவு, அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாறுபவர்களுக்கான மாற்று உணவு.
‘‘இறைச்சிகள் மட்டுமில்லாமல் மிருகங்களில் இருந்து பெறப்படும் பால், முட்டை மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் தயிர், நெய், சீஸ், பனீர் போன்ற எந்த வகை உணவுகளையும் இவர்கள் சாப்பிட மாட்டார்கள். அசைவம் சாப்பிட்டுப் பழகியவர்களாகவே இருந்தாலும், அந்த உணவு இல்லாமல் இருக்க முடியும்...’’ என்று கூறும் மரீன் விஜய், அதற்கு மாற்றான ஆரோக்கியமான வீகன் உணவைத் தயாரித்து வழங்கி வருகிறார்.

சென்னை ஹாரிங்டன் சாலையில் வசித்து வரும் மரீன், தன் வீட்டிலேயே ‘வீகன் டேபிள்’ என்ற பெயரில் வீகன் உணவுகளைத் தயாரித்து உணவகங்களுக்கும், ரீடெயில் கடைகளுக்கும் மார்க்கெட் செய்து வருகிறார். ‘‘வீகன் உணவு முழுக்க முழுக்க சைவ உணவுதான். சாப்பிடும் போது அசைவம் சாப்பிடற உணர்வு ஏற்படும். நாங்க சிரிய கிருஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்தவங்க. எங்க வீட்ல அசைவ உணவு இல்லாம சாப்பாடே இருக்காது. காலைல முட்டையாவது கண்டிப்பா இருக்கணும்.

நானும் அசைவப் பிரியை. ரொம்பவே விரும்பிச் சாப்பிடுவேன். தட்டுல அசைவம் இல்லைன்னா என்னால சாப்பிடவே முடியாது. ஒரு சிக்கன் பீசாவது கடிச்சாதான் ஒரு உருண்டை சாப்பாடு உள்ள இறங்கும். இப்படி எவ்வளவு அசைவ உணவை விரும்பிச்சாப்பிடறேனோ... அதே அளவுக்கு பல வகை உணவுகளையும் சமைப்பேன்...’’ என்றவர், தான் வீகன் உணவுக்கு மாறியதைக் குறித்தும் அந்த உணவைத் தயாரிக்கத் தொடங்கியது குறித்தும் பேசத் தொடங்கினார்.‘‘அன்று நைட் நடந்த நிகழ்வு இப்பவும் நினைவுல இருக்கு. அந்த ஒரு சம்பவம்தான் மனதை உலுக்கி என் உணவுப் பழக்கத்தையும் மாத்தியது.  எங்க வீட்ல நான் ஒரு நாயை வளர்த்து வந்தேன். அது குட்டிபோடும் நேரம். நைட் அதுக்கு பிரசவ வலி வந்தது. வீட்டிலேயே பிரசவம் பார்த்தேன்.

பொதுவா நாய்கள் குட்டி போடும் போது, தாய் நாய் தன்னுடைய பல்லாலேயே தொப்புள் கொடியைக் கடித்து அறுக்கும். அப்படித்தான் எங்க வீட்டு நாயும் செய்தது.

ஆனா, ஒரு குட்டியின் தொப்புள் கொடியை அறுக்கும் போது அது வேகமா கடிச்சிடுச்சு போல... அந்தக்குட்டியின் குடல் வெளிய வந்துடுச்சு. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. இரவு நேரம் வேற... எங்க கூட்டிட்டுப் போகணும்னு புரியல. மறுநாள் காலை விடிஞ்சதும், வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு தூக்கிக்கிட்டு ஓடினேன். மருத்துவ சிகிச்சை அளித்தும் அன்றிரவே அது இறந்துடுச்சு. ஆனா, தாய் நாய்க்கு தன் குட்டில ஒண்ணு இறந்த கவலையே இல்ல. அது எப்பவும் போல சகஜமா இருந்தது. ஒரு வேளை மற்ற குட்டிகள் உயிரோடு இருந்ததால இறந்த குட்டியின் இழப்பு தெரியலை போல.

இந்த சம்பவம் என்னை ரொம்பவே பாதிச்சது. ஓர் உயிருக்கு இவ்வளவுதான் மதிப்பா... அப்படீன்னா தினமும் நான் அசைவம் சாப்பிடறேனே... எவ்வளவு உயிர்களைக் கொலை
செய்யறேன்... இந்த எண்ணம்தான் என்னை அசைவம் சாப்பிடுவதில் இருந்து தடுத்தது. முழுமையா சைவத்துக்கு மாறினேன். வீட்ல எல்லாரும் கிண்டல் செய்தாங்க. ‘ஒரு நாள் இருப்பா... அப்புறம் சிக்கன் வேணும்னு கேட்பா. அவளால அசைவம் சாப்பிடாம இருக்க முடியாது’ன்னு எல்லாம் சொல்லி கிண்டல் செய்தாங்க.

நான் ரொம்பவே வைராக்கியத்தோடு அசைவ உணவுகளைச் சாப்பிடக் கூடாதுனு முடிவெடுத்தேன். ‘பீப்பிள் ஃபார் அனிமல்ஸ்’ அமைப்பில் இணைந்தேன். அந்த சமயத்துல மேனகா காந்தி எழுதின ‘ஹெட்ஸ் அண்ட் டெயில்ஸ்’ புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அதன் முதல் அத்தியாயத்திலேயே பால் பற்றி எழுதியிருந்தாங்க. அதைப் படிச்சப்ப அதிர்ச்சியா இருந்தது.
பால், தயிர் இல்லாம நம்மோட உணவு முழுமை அடையறதில்ல. ஆனா, அந்த பால் உற்பத்தியில் நடக்கக்கூடிய பிராசஸ் என்னை அதிர வச்சது. அதிகம் பால் சுரக்க வைக்கும் ஹார்மோன் ஊசிகளை மாடுகளுக்கு செலுத்தறோம். பாலைக்கூட நாம் கைகளால கறக்கறதில்ல. அதுக்குனு இருக்கற இயந்திரங்களைப் பயன்படுத்தறோம்.

இப்படி கறக்கப்பட்ட பாலையும் அப்படியே நாம பயன்படுத்தறதில்ல. கலப்படம் செய்துதான் குடிக்கறோம். இதனால மன ரீதியா நமக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.இந்தச் செய்தியைப் படிச்சதும் உண்ணும் உணவுல மாற்றம் கொண்டு வரணும்னு யோசிச்சேன். அப்படித்தான் வீகன் உணவு அறிமுகமாச்சு.ஒருமுறை சிங்கப்பூர் போயிருந்தப்பதான் வீகன் பத்தி தெரிய வந்தது. நாமே ஏன் வீகன் உணவுகளைத் தயாரிக்கக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனா, எப்படிச் செய்யறதுன்னு தெரியல.

இணையத்தில் தேடினேன். அசைவம் சாப்பிடுவது போன்ற உணர்வு தரணும்... சுவையும் மாறக்கூடாதுன்னு பல ஆய்வுகள் செய்தேன். டிரையல் அண்ட் எரர் மூலமா கடைசில நான் எதிர்பார்த்ததை அடைந்தேன்.கோதுமை மற்றும் சோயா பீன்ஸ் மட்டுமில்லாம அதனுடன் வேற சில பொருட்களையும் சேர்த்தாதான் மாமிசத்துக்கு இணையான உணவைக் கொடுக்க முடியும். சப்பாத்தி மாவு மாதிரி இருக்கும் இந்தக் கலவையை நல்லா பேக் செய்யணும். அப்புறம் அதை சின்னச் சின்ன துண்டுகளா நறுக்கி நாம விரும்பற உணவை சமைக்கலாம்...’’ என்றவர் இதனை இரண்டு வகையாகத் தருகிறார்.

‘‘ஆரம்பத்துல சமைக்கப்படாத வீகன் உணவைத்தான் கொடுத்து வந்தேன். இப்ப ரெடி டு சர்வ் மற்றும் மேயனீஸ் போன்றவற்றையும் தருகிறேன். சமைக்கப்படாத உணவுல நாம விரும்பும் சைனீஸ், தென்னிந்தியா, செட்டிநாடு, கான்டினென்டல், தாய்... இப்படியெல்லாம் சமைக்கலாம். அதாவது சைனீஸ் உணவுனா அதை தயாரிக்கும் முறைல எந்த மாற்றமும் இருக்காது. அதுல சேர்க்கப்படும் சிக்கன், முட்டைக்கு பதிலா இந்த வீகன் உணவை சேர்க்கணும். அவ்வளவுதான். ஃபிரைட் ரைஸ், நூடுல்ஸ், பீட்சா, பாஸ்தா, கிரில், பார்பெக்யூ...னு பல உணவுகளைச் செய்து அசத்தலாம்.

ரெடி டூ ஈட் ஏற்கனவே சமைக்கப்பட்டிருக்கும். அப்படியே சூடு செய்து சாப்பிடணும். முன்னாடி சொன்னது மாதிரி முட்டை, பால், தயிர், வெண்ணெய், பனீர், சீஸ்னு எதுவுமே இதுல கிடையாது. இதையெல்லாம் சோயா, முந்திரி, பாதாம், வேர்க்கடலை மாதிரியான பொருட்களை வச்சு ரீபிளேஸ் பண்றேன். சோயா, பாதாம், முந்திரில இருந்து பால்; சோயால பனீர்; முந்திரில சீஸ்; வேர்க்கடலைலேந்து தயிர் தயாரிக்கறேன். அசைவம் சாப்பிட்டுப் பழகினவங்களால வித்தியாசத்தை கண்டுபிடிக்கவே முடியாது. நான்-வெஜ் சாப்பிடற மாதிரியே இருக்கும். வீகன்ல கிடைக்காத உணவே இல்லைங்கிற அளவுக்கு இதில் பல புது உணவுகளைச் செய்யலாம்...’’ என்றவர் அடுத்த கட்டமாக ஃபோகாசியா ரொட்டியையும் வழங்கி வருகிறார்.

‘‘லாக்டவுனின்போதுதான் ஃபோகாசியா (Focaccia) ரொட்டியை செய்ய ஆரம்பிச்சேன். இது இத்தாலிய வகை ரொட்டி. அழகான கலைநயத்துடன் சமைக்கப்படும் உணவு. இதுல வெங்காயம், காய்கறிகள், கீரைகள்னு நாம் விரும்பும் வடிவத்துல அலங்கரிக்கலாம். சர்க்கரை, ஈஸ்ட், கோதுமை மாவு, மைதா மாவு, எண்ணெய், ஒரிகானோ, ரோஸ்மெரி, சுடுதண்ணீர் கொண்டு அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையணும். ஈஸ்ட் சேர்ப்பதால், அந்த மாவு இரண்டு மடங்கு உப்பி வரும்.

அப்புறம் பேக்கிங் டிரேயில் மாவைப் பரப்பி, அதன்மேல காய்கறிகள் கொண்டு அலங்காரம் செய்து, அவன்ல பேக் செய்யணும். முதல்ல வீட்ல உள்ள பொருட்களைக் கொண்டு தயாரிச்சு இன்ஸ்டால பதிவு செய்தேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. ஆர்டரின் பேரில் இது மட்டுமில்லாம, வீகன் உணவு மற்றும் ஃபோகாசியா பிரட்களையும் செய்து தர்றேன்...’’ என்கிறார் மரீன் விஜய்.
            
செய்தி: ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்