பயோ டேட்டா-ரோலக்ஸ் வாட்ச்



பெயர் : ரோலக்ஸ்.

பெயர்க் காரணம் : இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள். தன்னுடைய கடிகார நிறுவனத்துக்கு ஒரு பெயரைத் தேடிக்கொண்டிருந்தார் ஹான்ஸ்
வில்ஸ்டோர்ஃப்.

மொழியைத் தாண்டி சுலபமாக மக்களைச் சென்றடையக் கூடியதாக அந்தப் பெயர் இருக்கவேண்டும் என்பதுடன் எந்த மொழி பேசுபவர்களாலும் சுலபமாக உச்சரிக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்பது அவரது விருப்பம். தவிர, கைக்கடிகாரத்தின் முகப்பில் பெயரைக் கச்சிதமாக பதிவு செய்யும் வகையில் குறைந்த எழுத்துகளுடன் அந்தப் பெயர் இருக்கவேண்டும் என்பது ஹான்ஸ் தனக்குத்தானே விதித்துக்கொண்ட நிபந்தனை. வருடக்கணக்கில் ஆங்கிலத்திலுள்ள எழுத்துகளை விதவிதமாகக் கோர்த்து நூற்றுக்கணக்கான சொற்களை உருவாக்கினாலும் அவர் தேடிக்கொண்டிருந்த பெயர் கிடைக்கவில்லை.

1908ம் வருடம் லண்டன் நகரில் இரண்டு அடுக்கு கொண்ட ஒரு குதிரை வண்டியின் மேல்தளத்தில் இருந்தவாறு பயணித்துக்கொண்டிருந்தார் ஹான்ஸ். அப்போது அவரது காதில் ‘ரோலக்ஸ்’ என்று மெலிதாக அசரீரி கேட்டிருக்கிறது. அதுவே நிறுவனத்தின் பெயராகி, மாபெரும் பிராண்டாகிவிட்டது.

பிறந்த இடம் : 1905-ம் வருடம் இங்கிலாந்திலுள்ள லண்டன் மாநகரம்.

வளர்ந்த இடம் : சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரம்.

நிறுவனர்கள்: ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப், ஆல்பிரட் டேவிஸ்.

அடையாளம்: உலகின் விலையுயர்ந்த கைக்கடிகாரங்களில் ஒன்று; உலகின் மதிப்புமிக்க பிராண்ட்.

உற்பத்தி : ஒவ்வொரு வருடமும் 8 லட்சம் முதல் 10 லட்சம் கடிகாரங்களைத் தயாரிக்கிறது ‘ரோலக்ஸ்’.

வரலாறு : ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப்பின் தொலைநோக்குப் பார்வையும், ரோலக்ஸின் வரலாறும் நெருக்கமாகப் பிணைந்துள்ளன. 24 வயதான ஹான்ஸிற்கு நேர்த்தியான, நெடுங்காலம் உழைக்கக்கூடிய, நம்பகமான ஒரு கைக்கடிகாரத்தை உருவாக்க வேண்டும் என்பது கனவு. அப்போது கைக்கடிகாரம் ஓரளவுக்கு அறிமுகமாகியிருந்த போதிலும், அதன் தரம், டிசைன் என எதுவும் அவ்வளவு சிறப்பாக இல்லை. தவிர, கைக்கடிகாரத்தைக் காண்பதும் அரிதாகவே இருந்தது.

இனிமேல் கைக்கடிகாரம்தான் எதிர்காலம் என்பதை முழுமையாக நம்பினார் ஹான்ஸ். அதனால் 1905ம் வருடம் லண்டனில் தனது மைத்துனர் ஆல்பிரட் டேவிஸுடன் இணைந்து ‘வில்ஸ்டோர்ஃப் அண்ட் டேவிஸ்’ என்ற கடிகாரம் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார் ஹான்ஸ். இதுதான் ‘ரோலக்ஸி’ன் ஆரம்பப்புள்ளி. நேர்த்தியான கைக்கடிகாரத்தை உருவாக்க வேண்டுமானால் எல்லா உபகரணங்களும் சிறிய அளவில் இருக்க வேண்டும். இதற்காக சுவிட்சர்லாந்தின் முன்னணி வாட்ச் நிறுவனங்களிடமிருந்து முக்கிய பாகங்களை லண்டனுக்குக் கொண்டு வந்தார். தான், கனவு கண்ட மாதிரி நேர்த்தியான கைக்கடிகாரத்தை வடிவமைத்தார்.

ஆரம்பத்தில் நகைக்கடைகளுக்கு மட்டுமே அந்த கடிகாரங்களை விற்பனை செய்தார். நகைக்கடைக்காரர்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரை கடிகாரத்தின் முகப்பில் பதிவிட்டு விற்றனர். பிறகு ‘டபிள்யூ & டி’ பிராண்டை பதிவிட்டு விற்பனை செய்தார். ஹான்ஸ் நினைத்தபடி கைக்கடிகாரம் தயாராகிவிட்டது.

ஆனால், அதற்கு ஒரு நல்ல பிராண்ட் பெயர் கிடைக்காதது அவரை உறங்கவிடவில்லை. மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் ‘ரோலக்ஸ்’ என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது.1908ம் வருடம் ‘ரோலக்ஸ்’ என்று பிராண்ட் பெயர் பதிவு செய்யப்பட்டு, அந்தப் பெயரிலேயே கைக்கடிகாரங்கள் தயாராகின. ஆனால், நிறுவனத்தின் பெயர் மாறவில்லை. உலகில் முதல் முறையாக தண்ணீர் புகாத கைக்கடிகாரத்தை வடிவமைத்தார் ஹான்ஸ்.

1915ம் வருடம் நிறுவனத்தின் பெயர், ‘ரோலக்ஸ் வாட்ச் கோ. லிமிடெட்’ என்று மாற்றப்பட்டது. முதல் உலகப்போருக்குப் பிறகு இங்கிலாந்தின் பொருளாதாரச் சூழல் நிறுவனம் நடத்த சாதகமாக இல்லை. அதனால் ஜெனீவாவுக்கு இடம்பெயர்ந்தது ‘ரோலக்ஸ்’. 1920ல் ஜெனீவாவில் திறக்கப்பட்ட நிறுவனத்துக்கு ‘மொன்ட்ரிஸ் ரோலக்ஸ் எஸ்ஏ’ என்று பெயர் சூட்டினார் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப். பிரெஞ்ச் மொழியில் ‘மொன்ட்ரிஸ்’ என்றால் கடிகாரம் என்று பொருள். பிறகு நிறுவனத்தின் பெயர் ‘ரோலக்ஸ் எஸ்ஏ’ என்று மாறியது.

ஹான்ஸின் மரணத்துக்குப் பிறகு, அதாவது 1960லிருந்து ‘ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப் பவுண்டேஷ்ன்’ எனும் தொண்டு நிறுவனம் ‘ரோலக்ஸை’ நிர்வகித்து வருகிறது. இப்போது ‘ரோலக்ஸி’ல் 30 ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர். ஜீன் பிரடெரிக் டுஃபோர் என்பவர் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார்.

சிறப்பு : உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன கைக்கடிகாரங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்திலும், கடிகாரங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்திலும் உள்ளது ‘ரோலக்ஸ் டேடோனா (ref.6239)’ எனும் கைக்கடிகாரம். இதுபிரபல ஹாலிவுட் நடிகர் பால் நியூமனுக்குச் சொந்தமானது. அக்டோபர் 26, 2017ம் வருடம் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் இந்த கைக்கடிகாரம் 17.75 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 138 கோடி ரூபாய்.

விலை காரணம் : ஒரு புதிய மாடலை உருவாக்குவதற்கு முன்பு பல வருடங்கள் பரிசோதனைகள் நடத்துகிறது ‘ரோலக்ஸ்’. இதற்காகவே தனியாக ஒரு ஆய்வுக்கூடத்தை நிறுவியிருக்கிறது. இதில் உலகப் பிரசித்தி பெற்ற அறிவியல் வல்லுநர்கள் பணியாற்றுகின்றனர். ‘ரோலக்ஸி’ல் பயன்படுத்தப்படும் உதிரிப்பாகங்கள் எல்லாமே மிகச் சிறியவை. இவற்றை நேர்த்தியாக உருவாக்க நீண்ட நாட்கள் தேவைப்படும். இவற்றை உருவாக்கும்போது வீணாகும் பாகங்களின் அளவும் அதிகம்.

அடுத்து முக்கிய பாகங்களை தேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு கைகளாலேயே வடிவமைக்கின்றனர். ஆரம்பத்தில் கைக்கடிகாரத்தை பாலிஷ் செய்ய ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. தண்ணீர் புகாமல் இருக்கிறதா என்பதை சோதனை செய்யவே பல  பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதில் பயன்படுத்தப்படும் தங்கம், வைரம் போன்ற விலைஉயர்ந்த உலோகங்களையும், கற்களையும் சோதிக்க தனியாக நிபுணர்கள் இருக்கின்றனர். தவிர, கைக்கடிகாரத்துக்குத் தேவையான  தங்கம் போன்ற உலோகங்களையும் ‘ரோலக்ஸ்’ நிறுவனமே தயாரிக்கிறது. முக்கியமாக ஒரு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை முழுமையாகத் தயாரித்து முடிக்க ஒரு வருடம் தேவைப்படுகிறது.

இதுபோக நேரத்தை துல்லியமாகக் காட்டும் திறன், வேறு எங்கேயும் காணமுடியாத டிசைன், பல வருடங்களாக நிலைத்து நிற்கும் தரம், அதிகமாகிக்கொண்டே போகும் அதன் மதிப்பு... ஆம்; ரோலக்ஸை வாங்குவது ஒரு வகையில் சிறந்த முதலீடு என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள். காரணம், வாங்கும் விலையைவிட அதன் விற்கும் விலை எப்போதுமே அதிகம்.  

த.சக்திவேல்