‘மாமனிதன்’ குறித்து மனம் திறக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி



யுவன் தயாரிப்பு... இசைஞானி + யுவன் இசை... நீங்கள் இயக்குநர்...

உங்களுக்கும் இளையராஜாவுக்கும்  என்ன பிரச்னை..?


‘‘ஒரு தாய்க்கு எந்த அளவுக்கு அவளது குழந்தை முக்கியமோ அந்த அளவுக்கு ஓர் இயக்குநருக்கு அவன் படைக்கும் ஒரு திரைப்படம் முக்கியம். எத்தனையோ கடினமான சூழல்களைக் கடந்து இன்று இதோ ‘மாமனிதன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயார்...’’ மனதில் இருக்கும் ஏதோ ஒரு பாரம் குறைந்த மனநிலையுடன் நம்மிடம் பேசத் தொடங்கினார் இயக்குநர் சீனு ராமசாமி.
ஏன் இந்த டைட்டில்..?

எத்தனையோ அடையாளம் காட்டப்படாத மாமனிதர்கள் நம் அருகில், நாம் வசிக்கும் தெருவில், ஏன்... நம் குடும்பத்தில் கூட வாழ்ந்து கொண்டிருக்கலாம். அவரைத் தேடிக் கண்டுபிடியுங்கள்... அவரைக் கொண்டாடுங்கள்... ‘மாமனிதன்’ என்பவன் தன்னை உணர்ந்தவன்... அப்படிப்பட்ட ஒரு மனுஷனுடைய கதைதான் ‘மாமனிதன்’.

விஜய் சேதுபதிக்கும் உங்களுக்கும் அப்படி என்ன பிரிக்க முடியாத பந்தம்?

யாருமே எங்களை நம்பாத போது ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இணைந்து பயணித்தவர்கள்தான் நானும் விஜய் சேதுபதியும். இதுதான் கலை, இதுதான் கலை ஆர்வம்னு நான் ஓடத்துவங்கியதும் என்னுடன் சேர்ந்து ஒரு நான்கு திறமைசாலிகள் என் பின்னாலேயே ஓடி வந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் விஜய் சேதுபதி. நான் ஏதோ அவருக்கு மிகப்பெரிய உதவியைச் செய்துவிட்டதாக நினைத்து இன்னமும் என்னைப் புகழ்ந்துகொண்டும் எனக்காக சில முயற்சிகள் எடுத்துக்கொண்டும் இருக்கும் நல் உள்ளங்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். அப்படித்தான் இந்த ‘மாமனிதன்’ திரைப்படமும் எனக்கு அமைந்தது.

முதல்முறையாக இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் மற்றும் தயாரிக்கும் திரைப்படம்... இதில் இயக்குநராக நீங்கள் வந்தது எப்படி..?  
‘ஒய்.எஸ்.ஆர் புரடக்‌ஷன்ஸ்’ சார்பில் முதன்முறையாக இசைஞானியும் அவரது இரண்டு மகன்களும் இணைந்து ஒரு படம் செய்யலாம் என முடிவெடுத்து விஜய் சேதுபதியிடம் கேட்டிருக்கிறார்கள். அந்தக் குழுவில் நான் இருக்கவேண்டும் என்று விஜய் சேதுபதி என்னும் மாமனிதர் நினைத்திருக்கிறார் போல... என் பெயரை அவர் ரெகமண்ட் செய்திருக்கிறார்.

‘தர்மதுரை’ படம் முடித்த தருவாயில் மாமனிதன் படத்தின் கதையை நான் எழுதி முடித்து விட்டேன். அப்போது பேப்பரில் இருந்த இந்தக் கதை விஜய்சேதுபதியின் முயற்சியால் இந்தக் குழுவில் இணைந்து இப்பொழுது திரை வடிவம் பெற்றிருக்கிறது. ‘மாமனிதன்’ கதை உருவாக உங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த மனிதர் யார்?

நிறைய பேர் எந்த பிரதிபலனும் பார்க்காமல், எந்த பயன்களையும் அனுபவிக்காமல் ஏதோ ஒரு வகையில் இந்த உலகிற்கும் சமூகத்திற்கும் எதையோ செய்துவிட்டுச் சென்றிருப்பார்கள். இப்படி நிறைய மனிதர்களை நான் கடந்து வந்திருக்கிறேன். ஏன், என் குடும்பத்திலேயே அப்படிப்பட்டவர்கள் உண்டு. அவர்கள்தான் இந்த மாமனிதன் படத்திற்கான விதை.
 
கதையைப் பொறுத்தவரை பாதி நிஜம் பாதி கற்பனை. நிச்சயமாக இது ஒரு மனிதனையோ அல்லது ஒரு மிகப்பெரிய வரலாற்று உண்மையையோ சொல்லக்கூடிய கதை கிடையாது. படம் ஆரம்பித்த தருவாயில் இது இவரின் வாழ்க்கை வரலாறு அவரின் வாழ்க்கை வரலாறு என நிறைய வதந்திகள் சுற்றிக்கொண்டிருந்தது. ஆனால், இது ஒரு நபரின் வாழ்க்கை வரலாறு அல்ல, பல மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்ஸ்..?

முதல் முறையாக இந்தப் படத்தின் கதையை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் இல்லத்தின் வாசலில் இருக்கும் விநாயகர் கோவிலில் வைத்து ‘இந்த படத்துக்குப் பிறகு உங்களில் பாதி பெயரை விஜய் சேதுபதி சம்பாதிக்க வேண்டும்’ என்று வணங்கினேன்.இப்படி எனக்குத் தெரிந்த அனைத்து மாமனிதர்களின் சிலையையும் வணங்கிவிட்டே படத்தை ஆரம்பித்திருக்கிறேன். விஜய் சேதுபதியின் எதார்த்த நடிப்பு, தனது கதாபாத்திரத்தை உள்வாங்கிக் கொண்டு அவர் திறமையை வெளிக் காட்டிய விதம் இப்படத்துக்கு மாபெரும் பலம்.

இந்தப் படத்தை முடிப்பதற்கு என்னிடம் தயாரிப்பு தரப்பு கொடுத்த அவகாசம் ஐம்பத்தி ஏழு நாட்கள். ஆனால், எனக்கு கிடைத்த நடிகர்கள் அத்தனை பேரும் திறமைசாலிகள். அவர்களை வைத்துக்கொண்டு 37 நாட்களில் படப்பிடிப்பை முடித்தோம். இதற்கு இன்னொரு பலமாக இருந்தவர் காயத்ரி. ‘படத்தில் உங்களுக்கு இரண்டு குழந்தைகள்...’ என்பதைக் கேட்டு பல கதாநாயகிகளும் பின்வாங்கிய நிலையில் காயத்ரி ஒருவர் மட்டுமே நான் நடிக்கிறேன் என முதல் ஆளாக முன்வந்தார்.

அதேபோல் இரண்டு குழந்தைகளும் - குறிப்பாக கொட்டாச்சியின் மகள் - ஒவ்வொரு காட்சியிலும் நம்மை ஆச்சரியப் படுத்துவார்கள். இவர்கள் தவிர குரு சோமசுந்தரம் பேசாமலேயே உணர்வுகளின் குவியலாக வலம் வருவார். கஞ்சா கருப்பு , கே.பி.ஏ. சி. லலிதா இந்தப் படத்தில் மிக முக்கிய ரோல் செய்திருக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவில் மதுரையும் மதுரை சார்ந்த இடங்களும் ரொம்ப அற்புதமாக வந்திருக்கு. விஜய் தென்னரசு படத்தின் ஆர்ட் டைரக்‌ஷன் பணிகளைச் செய்திருக்கிறார்.

என் வாழ்க்கையில் நான் நினைத்த மாபெரும் கனவான இசைஞானி அய்யாவும் யுவன் சங்கர் ராஜாவும் இந்தப் படத்துக்கு அற்புதமான இசையைக் கொடுத்திருக்கிறார்கள். ரொம்ப பிரபலமான கர் பிரசாத் இந்தப் படத்துக்கு எடிட்டிங் பணிகளை சிறப்பாகச் செய்து கொடுத்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா பேனர்... உங்களின் இயக்கம்... இடையே சில பூசல்கள் இருந்ததே... என்னதான் நடந்தது?

அன்பின் கோபம் என இதைச் சொல்லலாம். ஓர் இயக்குநராக எனக்கு படத்தின் பாடல்களும் இசையும்... ஏன், பாடல்களின் வரிகள் கூட எனக்கு கொடுக்கப்படலை. பாடல் கம்போஸிங்கில் என்னைக் கூப்பிடவும் இல்லை. இதுதான் எனக்கு மிகப்பெரிய கோபமாக இருந்தது. நான் இசைஞானி ஐயாவின் ஏகோபித்த ரசிகன். அவர் கம்போஸிங் செய்வதை உடனிருந்து பார்க்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு, ஆசை. இது, படத்தின் இயக்குநராக என் படத்தில் நடக்கவில்லை எனில் அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று தெரியாத கோபமான அன்பாகவும் கூட இதைச் சொல்லலாம்.

ஓர் இசையமைப்பாளர், இயக்குநருக்கு எப்படி பாடல்களைக் காண்பிக்காமல் இருக்கலாம் என பலரும் கேள்வி கேட்டனர். என்னைப் பொறுத்தவரை அவருடன் இணைந்து இன்னும் பல படங்கள் வேலை செய்யக் காத்திருக்கிறேன். ஆனால், அடுத்த முறை அவர் என் படங்களுக்கு கம்போசிங் செய்வதை நான் உடன் இருந்து பார்க்க வேண்டும்... இதை மட்டும்தான் நான் சொல்லிக் கொள்கிறேன்.

‘இடம் பொருள் ஏவல்’... படம் எப்போது ரிலீஸ்?

ஆரம்பத்தில் சொன்னது போல் ஒரு தாய்க்கு குழந்தை எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் ஓர் இயக்குநருக்கு அவன் படம். என்னுடைய இந்தக் குழந்தை சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு மேலாக கருவிலேயே இருக்கிறது. விரைவில் வெளியாக வேண்டும் என்று உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன். இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஆவன செய்தால் ஒரு நல்ல படைப்பு வெளியே வரும்.   

‘மாமனிதன்’ இந்த சமூகத்திற்கு என்ன கொடுக்கப் போகிறது?

சந்தோஷத்தையும் மனநிறைவையும் கொடுக்கும். உங்கள் அருகில்... உங்கள் தெருவில்... ஏன், உங்கள் வீட்டில் இருக்கும் நல்ல மனிதர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவனை அங்கீகரியுங்கள்... இதைத்தான் ‘மாமனிதன்’ இந்த சமூகத்திற்கு சொல்லப் போகிறது.

ஷாலினி நியூட்டன்