ஒரு கோயில்... 1000 வருட பொக்கிஷம்... விஞ்ஞானமா ஆன்மிகமா..?அட்வென்ச்சர் மித்தலாஜிக்கல் மிஸ்ட்ரி த்ரில்லரான மாயோன் பட சீக்ரெட்ஸ்

தமிழக கடல் எல்லையைக் கலக்கி வரும் கார்டிலியா குரூஸ் கப்பல் போல் ‘மாயோன்’ படத்தின் மாயோன் சிலை தமிழகத்தைச் சுற்றிவந்து மக்கள் மனதைக் கவர்ந்துள்ளது. ‘வாட்ச்மேன்’, ‘சைக்கோ’ படங்களைத் தொடர்ந்து அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள படம் ‘மாயோன்’. புரொமோஷன் பிஸியிலிருந்த ‘மாயோன்’ டீமிடம் பேசினோம்.
தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்:

இதுல என்னுடைய பார்ட்டா தயாரிப்பு மட்டுமில்லாம திரைக்கதையும் எழுதி நடிச்சிருக்கேன். ‘டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ்’ பிரம்மாண்டமா தயாரித்துள்ளது. கம்பெனிக்கு ஏன் இப்படியொரு பேர்னு கேட்கிறாங்க. டபுள் மீனிங் என்பது ஆபாசத்தைக் குறிப்பது அல்ல. டபுள் மீனிங் என்பதை இரண்டு அர்த்தம், இரண்டு கோணங்கள் என்ற பார்வையில் பார்க்க வேண்டும். எல்லா படத்திலும் ஹீரோ, வில்லன் இருப்பார்கள். ஹீரோவுடைய பார்வையில் அவர் நல்லவராகவும், வில்லன் பார்வையில் அவர் நல்லவராகவும் தெரிவதுண்டு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிஜ முகம், நிழல் முகம் என இரண்டு முகங்கள் இருக்கும். அதையும் நாம் டபுள் மீனிங்னு சொல்லலாம்.

‘மாயோன்’ படம் அட்வென்ச்சர் மித்தலாஜிக்கல் மிஸ்ட்ரி த்ரில்லர். பல காலமா கடவுள் சக்தி பெரிதா, விஞ்ஞான சக்தி பெரிதா என்ற விவாதம் தொடர்கிறது. இதுல இவ்விரண்டுக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்குன்னு சொல்லியுள்ளோம். பக்திப் படமா, கமர்ஷியல் படமா என்றால் அதுக்கான பதில் தியேட்டர்லதான் கிடைக்கும். இந்தப் படத்தை வயசு வித்தியாசம் இல்லாம எல்லா ஏஜ் குரூப் மக்களும் பார்க்கலாம். படம் முடிஞ்சு பார்த்தபோது அப்படி செஞ்சிருக்கிறோம் என்ற திருப்தி கிடைச்சது.

ஒரு கோயிலில் மாலை 6 மணிக்கு மேல் யாரும் நுழைய முடியாதபடி நடை சாத்தப்படுகிறது. அந்த கோயிலில் ஆயிரம் வருடங்கள் பழமையான பொக்கிஷம் பாதுகாக்கப்படுகிறது. தெய்வீக சக்தி இயங்கும் இடத்துல விஞ்ஞானத்தை நம்பி கோயிலுக்குள் இருக்கும் பொக்கிஷத்தை அடைய முடியும் என்று ஒரு குரூப் உள்ளே செல்கிறது. அவர்களுடைய முயற்சிக்கு பலன் கிட்டியதா, இல்லையா என்பதை இந்த டிரெண்டுக்கு ஏத்தமாதிரி விறுவிறுப்பாகச் சொல்லியுள்ளோம்.சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கே.எஸ்.ரவிக்குமார், ஹரீஷ் பேரடி என படத்துல நடிச்ச எல்லாருடைய நடிப்பும் பேசப்படும். டெக்னிக்கலாகவும் இந்தப் படம் வியப்பைத் தரும்.

‘சைக்கோ’ படத்துக்குப் பிறகு மீண்டும் இளையராஜா சாருடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு இதுல கிடைச்சது. கதையில் வரும் பொக்கிஷம் போல் இந்தப் படத்தைப் பொறுத்தவரை ராஜா சார் எங்களுக்குக் கிடைச்ச இன்னொரு பொக்கிஷம். படத்தோட கதையைக் கேட்டதும், இசை மூலம் இறைவனுக்கு தொண்டு செய்கிறோம் என்ற மனநிலையில் அற்புதமா பண்ணிக்கொடுத்தார்.

இறைவனை இசையால் மயக்கச் செய்ய முடியுமா என்ற சவாலை பிரமாதமாக பண்ணியிருப்பதை படம் பார்க்கும்போது உணர முடியும்.
ஒளிப்பதிவு ராம் பிரசாத். தெலுங்கில் நெம்பர் ஒன் கேமராமேன். மகேஷ்பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன், எஸ்.எஸ்.ராஜமெளலி என சுமார் 70 படங்களில் வேலை செய்த அனுபவசாலி. தமிழில் இதுதான் முதல் படம் . அவருடைய கேமரா ஒர்க் வேற லெவல்.

இயக்குநராக கிஷோர் அறிமுகமாகிறார். நாங்கள்  தயாரிச்ச படங்களில் இது பெரிய பட்ஜெட் படமாக இருக்கும். ஆர்ட்டிஸ்ட்ஸ், கிராபிக்ஸ், செட் ஒர்க், லொகேஷன் என எல்லாவற்றிலும் பிரம்மாண்டத்தைப் பார்க்கலாம்.  ‘மாயோன்’ படத்தைப் பொறுத்தவரை பிசினஸைத் தாண்டி எனக்கு மனநிறைவைக் கொடுத்தது ‘மாயோன்’ ரத யாத்திரை. ஏனெனில், ‘மாயோன்’ ரத யாத்திரையில் மாயோனை ஏழை எளிய மக்கள், செல்வந்தர்கள் என பாகுபாடு இல்லாமல் எல்லோரும் தரிசித்தார்கள். இது எனக்கு பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது.
 
இந்தப் படத்துக்குப் பிறகு ‘மாயோன் - 2’ படத்தை ஆரம்பிக்க உள்ளோம். அந்தப் படத்தை நானே டைரக்‌ட் பண்ணுகிறேன். அது சித்தர்களின் ஆளுமையைச் சொல்லும் படமாகவும், பிரம்மாண்ட படைப்பாகவும் இருக்கும்.

சிபி சத்யராஜ்: இதுல எனக்கு தொல்லியல் ஆராய்ச்சியாளர் கேரக்டர். இது மாதிரி கேரக்டர் இதுவரை பண்ணியதில்ல. இந்த மாதிரி கதையில் நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. ‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘ஜுராஸிக் பார்க் - 1’ போன்ற படங்களில் இதுபோன்ற கேரக்டரைப் பார்க்கலாம். அந்த மாதிரி கேரக்டரை எனக்கு மட்டுமல்ல, இந்த ஃபீல்டுல உள்ள எல்லாருக்கும் பிடிக்கும்.

கோயில், அதைச் சுற்றிய மர்மம் என்ற இந்தக் கதையில் நடிக்கும்போது ஹீரோவாக எனக்கு சேலஞ்ச் இருந்துச்சு. தமிழில் இந்த மாதிரி படங்கள் குறைவாதான் வந்திருக்கும். இது ஆன்மிக பக்தர்கள், சைன்ஸ் ஃபிக்ஷன் விரும்பிகள், குழந்தைகள் என எல்லாருக்குமான படமாக இருக்கும். வித்தியாசமான படங்கள் எதிர்பார்க்கும் ஆடியன்ஸுக்கு இந்தப் படம் ரொம்ப பிடிக்கும்.

தான்யா ரவிச்சந்திரன்:இந்தப் படத்துல பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் கேரக்டர் பண்ணியிருக்கிறேன். கேர்ள் நெக்ஸ்ட் டோர் மாதிரி யதார்த்தமான வேடம். படம் முழுவதும் வரக்கூடிய லீட் கேரக்டர். இதுவரை நான் நடிச்ச படங்களில் வித்தியாசமான கேரக்டர்னு சொல்லலாம். சிபி ஸ்வீட் பெர்சன். பந்தா இல்லாம ஃப்ரெண்ட்லியா பழகுவார். டீம்ல இருக்கிறவர்களுடன் பழகியது ஃபன் அனுபவமா இருந்துச்சு. இது ஆர்க்கியாலஜி ஸ்கிரிப்ட் என்பதால் அதைப்பத்தி நிறைய தெரிஞ்சிக்க முடிஞ்சது. பழமையான கோயில், தொல்லியல் என்ற சுவாரஸ்யம் நடிச்ச எனக்கு மட்டுமல்ல,
ரசிகர்களுக்கும் ஏற்படும்.

ராதாரவி:‘டான்’ படத்துக்குப் பிறகு இந்தப் படம் வெளிவருகிறது. கோயில் தர்மகர்த்தாவா வர்றேன். பொதுவா நான் எந்த கேரக்டர் பண்ணினாலும் இன்வால்வாகி பண்ணுவேன். இதிலும் காஸ்டியூம், விக் என எல்லாவற்றிலும் கவனம் செலுத்தினேன். படத்துல என்னுடைய கேரக்டருக்கான முக்கியத்துவம் அதிகமா இருக்கும். பிரமாதமான படம். இரட்டை அர்த்த வசனம் இருக்காது. முகத்தைச் சுழிக்க வைக்கும் காட்சி இருக்காது.

இந்தப் படம் பண்ண முக்கிய காரணம் என் நண்பர் சத்யராஜ் மகன் சிபி இதுல ஹீரோ. என்னுடைய கேரியரில் விஜய், அஜித், உதயநிதி, தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் வரை நடித்திருக்கிறேன். சின்ன மாப்ள சிபியுடன் நடிச்சதில்ல. அது இதுல நடந்தது. சிபி எனக்கு எப்போதும் வியப்பைத் தருவார். காரணம், அப்படியே சத்யராஜின் மறு
வடிவமா லொள்ளு பண்ணுவது, மேனரிசம்னு கவனம் ஈர்ப்பார். எங்கேயும் பெரிய நடிகரின் மகன் என்று வெளிப்படுத்தமாட்டார்.

இன்னொரு சந்தோஷம் ரவிச்சந்திரன் பேத்தி தான்யாவுடன் நடிச்சது. நண்பர் ரவிக்குமாருடன் நடிச்சதும் நல்ல அனுபவம். பெரிய இயக்குநர். ஆனால், எந்த இடத்திலும் தன்னை பெரிய இயக்குநரா வெளிப்படுத்தமாட்டார்.

இயக்குநர் கிஷோர் அமைதியானவர். ரொம்ப பொறுமையா, அதே சமயம் எதிர்பார்க்கும் நடிப்பை வாங்கிக்கொள்வார். எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும் நடிகர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் நடிக்க வைப்பார். இயக்குநரும் தயாரிப்பாளரும் எப்போதும் எனக்கு இரண்டு கண்கள். அவர்களுடைய நடிகராகத்தான் இருப்பேன்.  
இதுல நான் வியந்தது ஆர்ட் டைரக்டர் பாலாவுடைய வேலையைப் பார்த்து... சாமி சிலையை மிக அற்புதமாக நிர்மாணித்திருந்தார். மத்தவங்க சொன்னாதான் செட் னு தெரியும். அவ்வளவு ரியலிசத்தைக் கொண்டுவந்திருந்தார்.

நான், படம் தயாரிப்பதாக இருந்தால் ‘மாயோன்’ டீம்ல உள்ளவங்களை யூஸ் பண்ணுவேன். அவ்வளவு திறமைசாலிங்க இந்தப் படத்துல வேலை செஞ்சிருக்காங்க. தயாரிப்பாளர் அருண்மொழி கதை என்னவெல்லாம் கேட்டதோ அதை சிறப்பா செய்து கொடுத்துள்ளார். ‘மாயோன்’ போன்ற படங்கள் ஓடணும். ஏனெனில் இது நம்முடைய கலாசாரத்தைச் சொல்லும் படம்.

கே.எஸ்.ரவிக்குமார்: இதுல அரசு அதிகாரி வேடம். பொதுவா நான் நடிக்கும் படங்களில் நடிராகத்தான் கலந்துகொள்வேன். டைட்டில் பார்த்ததும் இது கடவுள் படமாக இருக்குமானு நினைக்க வேண்டாம். ஒரு கமர்ஷியல் சினிமா தரும் எல்லா சுவாரஸ்யமும் இருக்கு. நிறைய ஆச்சர்யங்கள் படத்துல இருக்கு.

படப்பிடிப்புக்காக குகை மாதிரி ஒரு இடத்துக்கு சென்றோம். அங்கு உள்ளே ஒரு கோயிலே அமைத்திருந்தார்கள். அந்த கலை இயக்கத்தைப் பார்த்து பிரமித்தேன். இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இது சாமி படம் இல்ல. சாமியைப் பற்றிய படம். இசை உலகின் சாமி இளையராஜா பிரமாதமான இசையை வழங்கியுள்ளார். இந்தமாதிரி திரைக்கதை தமிழில் அதிகம் வந்ததில்லை. இந்தப் படத்துக்குப் பிறகு இந்த ஜானர்ல நிறைய படங்கள் வெளிவரும்.

எஸ்.ராஜா