குடியரசுத் தலைவர் தேர்தல் முக்கியத்துவம் மிக்கதா?குடியரசுத் தலைவர் என்பவர் எதற்காக தேவைப்படுகிறார் என்பதைப் புரிந்துகொண்டால்தான், அந்தப் பதவிக்கான தேர்தலை மதிப்பிட முடியும். அரசு (State) என்பது ஒட்டு மொத்த மக்களின் வெளிப்பாடு; அருவமானது. அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சட்டங்கள், நெறிமுறைகளின் தொகுப்பு. அரசாட்சி (Governance/ Government) என்பது நாட்டை நிர்வகிக்கும் சக்திபெற்ற நபர் அல்லது நபர்கள் கைவசம் இருப்பது, தூலமானது. மன்னர்கள் காலத்திலேயே கூட அரசு என்ற கருத்தாக்கம் மன்னராக உள்ளவரைவிட முக்கியமானது. மணிமுடி, செங்கோல் தாங்கி அரியணையில் யார் அமர்ந்தாலும் அவர்களுக்கு குறியீட்டு அதிகாரத்தை வழங்குவது அரசு என்ற கருத்தாக்கம்தான்.

மக்களாட்சியில் அரசியல் நிர்ணய சட்டம் என்பது குடியரசின் அடிப்படையாக விளங்குகிறது. அந்த சட்டத்தின், ஆட்சியின் குறியீடாக கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒரு குடியரசுத் தலைவர் தேவைப்படுகிறார். ஆனால், இவரிடம் ஆட்சியதிகாரம் இருக்காது. அது மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவர் பிரதமரானால் அவரிடம்தான் இருக்கும்.  

இதனால் குடியரசுத் தலைவர் பதவி என்பது வெறும் அலங்காரப் பதவி, ரப்பர் ஸ்டாம்ப், வெட்டிச் செலவு, மக்கள் வரிப் பணத்தில் ஊர் சுற்றி வருவதற்கானது என்றெல்லாம் பலரும் கடுமையாக விமர்சிப்பார்கள். உண்மையில் அதனை அவ்வளவு பொருளற்றதாகப் பார்க்க முடியாது. ஏதோவொரு அசாதாரண சூழ்நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்ந்தால், உள்நாட்டில் குழப்பம் மேலிட்டால், குடியரசைப் பாதுகாக்கும் பொறுப்பும், அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு உண்டு.

மணிமகுடம், செங்கோல், அரியணை போல இறையாண்மையின் வெளிப்பாடுதான் அவர். அதனால் எப்போதுமே பாராளுமன்றம் இயற்றும் சட்டங்களில் அவர்தான் இறுதியில் கையெழுத்திட வேண்டும். அவருக்கு பாராளுமன்றத்தை மீண்டும் பரிசீலிக்கச் சொல்லி திருப்பி அனுப்பும் அதிகாரம் உண்டு; சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் முன் பரிசீலிக்கவும் அதிகாரமும், அதற்கான அவகாசமும் உண்டு.  அவரால் பாராளுமன்றம் இயற்றும் சட்டத்தை தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது என்றாலும், ஒப்புதல் வழங்குவதில் தற்காலிகமாக சிக்கலை உருவாக்கலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை அவ்வாறு குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் பெரிய பிரச்னைகள் என்று வந்ததில்லை என்றாலும், சில சமயங்களில் சுமுகமற்ற உறவு இருந்துள்ளது. சொல்லப்போனால் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும், குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்திற்கும் பல சமயங்களில் உரசல்கள் இருந்தன என்பது பிரசித்தம். அப்போதுதான் குடியரசு உருவானது என்பதால், செயல்முறை வழமைகளும் உருப்பெறாத காலம் என்பதால் அவ்வப்போது சிக்கல் தோன்றியது.

*குடியரசுத் தலைவர் தேர்தல் நடைமுறை

குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதிலும் சற்றே சிக்கலான நடைமுறை பின்பற்றப்படுகிறது. அவரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுத்தால் அவருக்கும் பிரதமருக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். அதற்குப் பதில் அது இங்கிலாந்து மன்னர் போல வாரிசுரிமையாக இருந்தாலோ, நியமன பதவியாக இருந்தாலோ மக்களாட்சிக்கு பொருத்தமில்லாமல் போய்விடும்.

அதனால் குடியரசுத் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்ற வடிவத்தை இந்தியா தேர்ந்தெடுத்தது. அவர் எலக்டரல் காலேஜ் எனப்படும் ஒன்றால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அது என்னவென்றால் பாராளுமன்ற உறுப்பினர்களும், அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் கொண்ட தொகுதி.

ஒவ்வொரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருக்கும் ஒரு வாக்குதான் என்றாலும் அதன் மதிப்பு என்பது அவர்கள் தொகுதியின் சராசரி மக்கள் தொகையைப் பொருத்து அமையும்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வாக்கின் மதிப்பு 708. தமிழக சட்டமன்ற உறுப்பினரின் வாக்கின் மதிப்பு 176; கேரள சட்டமன்ற உறுப்பினரின் வாக்கின் மதிப்பு 152. உத்திரப் பிரதேச சட்ட மன்ற உறுப்பினரின் வாக்கின் மதிப்பு 208. ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையை, மொத்த பிரதிநிதிகளின் எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கி அதைக்கொண்டு வகுத்தால் இந்த எண்ணிக்கை கிடைக்கும்.   

இதன் அடிப்படையில் குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யும்போது மத்தியில் ஆளும் கட்சியே பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சி செய்தால் பெரிய சிக்கல் ஏற்படாது.  
பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆண்டால் சிக்கல் வரும். ஏனெனில் பாராளுமன்றத்திலும் மாநிலங்களவை உறுப்பினர்களை மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதால் அதிலும் மாநில கட்சிகளுக்கு வாக்கு இருக்கும். அந்த நிலையில் மத்தியில் ஆளும் கட்சி அனைவருக்கும் பொதுவான ஒரு நபரை குடியரசுத் தலைவராக்குவதாக பேச்சு வார்த்தை நடத்த முன்வரும்.   

இதுவரை குடியரசுத் தலைவர் ஆனவர்களை குறைந்தது ஐந்து வகையாகப் பிரிக்கலாம். ஆளும் கட்சியில் பிரதமராகும் அளவு சீனியராக இருந்து அந்த பதவிக்கு வர முடியாதவர்கள் (எடுத்துக்காட்டு: ராஜேந்திர பிரசாத், பிரணாப் முகர்ஜி); ஆளும் கட்சியில் உள்ள பண்பாளர்கள், அறிவாளிகள் (ராதாகிருஷ்ணன், ஜாகிர் ஹுசைன்); கைக்கு அடக்கமான கட்சிக்காரர்கள் (ஆர்.வெங்கட்ராமன், பிரதிபா பாட்டில்);  அரசியலுக்கு அப்பாற்பட்ட திறனாளர்கள் (அப்துல் கலாம், கே.ஆர்.நாராயணன்); எளிய பின்னணி/விளிம்பு நிலை சமூகப் பிரிவினர் (ஜெயில் சிங், ராம்நாத் கோயிந்த்).

*மனசாட்சி ஓட்டு

மிகுந்த சர்ச்சைக்குரிய குடியரசுத் தேர்தல் என்றால் அது வி.வி.கிரி அவர்கள் 1969ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் என்று கூறலாம். ஏனெனில் பிரதமர் இந்திரா காந்தி தொழிற்சங்க பாரம்பரியம் கொண்ட  குடியரசுத் துணைத்தலைவராக இருந்த வி.வி.கிரியை குடியரசுத் தலைவராக்க விரும்பினார். காங்கிரஸ் கட்சித் தலைமையோ நில உடைமை பின்னணி கொண்ட நீலம் சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக நியமித்தது.

வி.வி.கிரி சுயேச்சையாகப் போட்டியிட்டார். பிரதமர் இந்திரா காந்தி காங்கிரஸ்  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம் என்று சொன்னார். அதனால் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வமான வேட்பாளர் சஞ்சீவ ரெட்டி தோற்கடிக்கப்பட்டார். சுயேச்சை வி.வி.கிரி வென்றார். காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளந்தது. அதிலிருந்தே மனசாட்சி ஓட்டு கருத்தாக்கப்படி யாராவது கட்சிக் கட்டுப்பாட்டை மீறி வாக்களித்துவிடுவார்களோ என்ற அச்சமும் நிலவத்தான் செய்கிறது. அதனால்தான் கூடியவரை கருத்தொருமிப்பின் அடிப்படையில் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முயற்சிகள் நடக்கும்.

*இன்றைய நிலை

அடுத்த மாதம் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் இந்தியா சந்திக்கப் போகும் மிக முக்கியமான 2024 பொதுத்தேர்தலின்போது பதவியில் இருப்பார். அநேகமாக பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் கூட்டணியும் கடுமையாக மோதிக்கொள்ளும் தேர்தலாக இது இருக்கும். தேர்தலுக்குப் பிறகு ஏதேனும் இழுபறி நிலை வந்தால், அவரது பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.

இப்போதே பாரதீய ஜனதா கட்சிக்கு தன் வேட்பாளரை தடங்கலின்றி வெற்றி பெறவைக்க வாக்குகள் சற்றே போதாமல் இருக்கிறது. ஒரிஸ்ஸாவின் பிஜு ஜனதா தளம், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவை ஆதரவு தருவதாகக் கூறியிருப்பதால் பிரச்னை இல்லை. ஆனாலும் காங்கிரஸும், பிற மாநில கட்சிகளும் வலுவான வேட்பாளரை நிறுத்தினால் சிறிது கலக்கமாகத்தான் இருக்கும்.

ஆனால், பாரதீய ஜனதா கட்சிக்கும் சரி, எதிர்க்கட்சி கூட்டணிக்கும் சரி அனைவரையும் ஈர்க்கும் வலுவான வேட்பாளரைக் காண்பது சற்றே சவாலாகவே இருக்கிறது. எதிர்க்கட்சி அணி காந்தி - ராஜாஜியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியைப் பரிசீலித்து வருகிறது. வேறு பெயர்களும் பேச்சில் இருக்கலாம். சரத் பவார், ஃபரூக் அப்துல்லா ஆகிய மூத்த அரசியல்வாதிகள் மறுத்துவிட்டார்கள். அவர்கள் அன்றாட அரசியலில் ஈடுபட்டிருப்பவர்கள்.

பாரதீய ஜனதா கட்சியும் என்ன நினைக்கிறது என்று தெளிவாகப் புலனாகவில்லை. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பெயர் அடிபடுகிறது. ஓரளவாவது எதிர்க்
கட்சிகளால் தீவிரமாகத் தாக்க முடியாத ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்க அது விரும்பலாம்.  அநேகமாக ஆளும் பாஜக-வின் வேட்பாளர் வெற்றி பெறுவதற்குத்தான் வாய்ப்பு அதிகம் என்றாலும், எதிர்க்கட்சி அணி தங்கள் அரசியல் ஒருங்கிணைப்பை சோதித்துப் பார்த்துக்கொள்ள குடியரசுத் தலைவர் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ளத்தான் செய்யும். அந்த வகையில் எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தல் சுவாரசியமானதாக இருக்கலாம்.

ராஜன் குறை