பிரியாணி மட்டுமல்ல; 200 ரெசிபிகள் செய்யலாம்!



பலா மரத்தின் மகத்துவம் பேசும் மனிதர்

முக்கனிகளில் ஒன்று பலா என்பதுதான் பலாப்பழத்தைப் பற்றி பொதுவாக பலரும் அறிந்த தகவல். ஆனால், ‘பலா மரங்கள் இருக்குமிடத்தில் பஞ்சம் வராது; உடலுக்கு ஆரோக்கியம் தரும்; நோய்களைத் தீர்க்கும்; வளர்ப்பவர்களுக்குப் பொருளாதார பாதுகாப்பு கொடுக்கும்’ எனப் பலரும் அறிந்திடாத பலாவிலுள்ள பல்வேறு நன்மைகளையும் சிறப்புகளையும் அடுக்குகிறார் ஹரிதாஸ்.
தமிழக வேளாண்மைத் துறையில் துணை இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற இவரிடம் பலாவைப் பற்றி பேசப் பேச... இவ்வளவு மகத்துவங்கள் பலாவில் இருக்கிறதா என ஆச்சரியப்பட்டுவிடுவோம். அந்தளவுக்கு பலா மரம் பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்ல.

பலாவுக்காக, ‘பலா ஆத்திச்சூடி’ எழுதிய ஆச்சரிய மனிதர் இவர். சமீபத்தில் பண்ருட்டி அருகேஉள்ள இவரின் பலா ஆராய்ச்சி மையத்தில் நடந்த பலா திருவிழா பலரை கவனிக்கச் செய்தது. குறிப்பாக பலாவில் செய்யப்பட்ட உணவுகள்,வந்திருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பலா பிரியாணி தொடங்கி பலா அல்வா வரை பலாவில் தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு பதார்த்தமும் பார்வையாளர்களுக்குச் சுவைகூட்டி நிகழ்ச்சியைக் கலகலக்க வைத்தது.

கடந்த வாரம்தான் பலா பிரியாணி நடிகை நயன்தாராவின் திருமணத்தில் பரிமாறப்பட்டு தலைப்புச் செய்தியானது. ஆனால், இருபது ஆண்டுகளுக்கு முன்பே பலா பிரியாணி ரெசிபியை தன்னுடைய நூலில் தந்தவர் ஹரிதாஸ். இப்போது தன்னுடைய பலா ஆராய்ச்சி மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பலா ரகங்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்.  
‘‘தமிழகத்துல பலா உற்பத்தி 4 ஆயிரம் ஹெக்டேர் அளவுல நடக்குது. இதிலிருந்து ஹெக்டேருக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ பலாப்பழம் கிடைக்குது. அதன்படி நாம் ஓராண்டுல 16 கோடி கிலோ பழங்கள் உற்பத்தி பண்றோம். ஆனா, இதுல 2 கோடி கிலோ பழங்கள்தான் உணவா பயன்படுத்துறோம்.

ஆக, எட்டு கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு மாநிலத்துல ஒருவர் ஆண்டுக்கு 250 கிராம், அதாவது கால் கிலோ அளவே பலாப்பழம் சாப்பிடுறார். இதையும் எல்லோரும் சாப்பிடறதில்ல. குறிப்பிட்ட சிலரே சாப்பிடுறாங்க. ஆனா, இதுல இருக்கக்கூடிய பயன்கள் அலாதியானது. அதைப் பற்றித் தொடர்ந்து பேசிட்டும், எழுதிட்டும் இருக்கேன்.
பலாப்பழம் தமிழ்நாட்டின் மாநில சின்னங்கள் பட்டியல்ல இருக்கு. அதாவது தமிழ்நாட்டின் பழம் எதுனு கேட்டா அது பலாப்பழம்தான். ஆனா, பலாப்பழம் பற்றி யாருக்கும் விழிப்புணர்வு இல்ல. அதன் அற்புதங்களும், பயன்களும் தெரியமாட்டேங்குது. அதனால, இதை பரவலா கொண்டு சேர்க்கணும்னு பலாவை காய்கறியா மாத்தி சாப்பிட வைக்கிற திட்டத்துடன் இயங்கிட்டு இருக்கேன்...’’ என வேதனையாகவும், நம்பிக்கை கலந்தும் பேசுகிறார் ஹரிதாஸ்.

‘‘எனக்கு சொந்த ஊர் பண்ருட்டி தாலுகாவுல இருக்கிற பத்திரக்கோட்டை கிராமம். தாத்தா காலத்துல இருந்தே விவசாயம் செய்றோம். மொத்தமுள்ள இருபது ஏக்கர் நிலத்துல நாலு ஏக்கர் பலா மரம்தான். நான் பி.எஸ்சி அக்ரி முடிச்சிட்டு அரசு வேலைக்கு வந்துட்டேன். 2001ல் என்னுடைய பலா மரங்கள்ல ஒரு மரத்தின் பழத்தை சாப்பிட்டப்ப மிகுந்த சுவையா இருந்தது. அந்தச் சுளை அடர்மஞ்சள்ல அருமையான நறுமணத்துடன் காணப்பட்டது ஆச்சரியம் தந்துச்சு. ஏன்னா, பலாவைப் பொறுத்தவரை ஒரு மரத்துல சுவை இருக்கும். ஆனா, நறுமணமோ, கலரோ இருக்காது.

இன்னொரு மரத்துல அடர் மஞ்சள் கலர் இருக்கும். ஆனா சுவையோ, நறுமணமோ இருக்காது. இந்த மூணும் சேர்ந்து இருக்கிற பலாப்பழம் ரொம்ப அரிதானது. அப்படியொரு மரத்தின் பழத்தை நான் சாப்பிட்டதும், அதை ஆய்வு செய்து வெளியிடணும்னு கேட்டேன். அப்ப பாலூர் காய்கறி ஆய்வு பண்ணை இதை ஆய்வு செய்து 2007ல் ‘பாலூர் 2’னு வெளியிட்டாங்க. இந்தப் பலாவை தேன் பலானு சொல்வோம். இங்கிருந்துதான் பலாமரங்கள் மேல எனக்கு ஆர்வம் அதிகமானது.

இதன்பிறகு நான் வேளாண்மைத் துறையின் மாதாந்திரக் கூட்டத்தில் பேசறப்ப எல்லாம் பலா மரம் பற்றிக் குறிப்பிட்டேன். அதனால, பலாவில் யாருக்காவது சந்தேகம் வந்தால் ஹரிதாஸ்கிட்ட கேளுங்கனு சொல்ற அளவுக்கு வந்திடுச்சு. மற்றவங்க கேட்கும்போது நானும் பல விஷயங்களைக் கத்துக்க ஆரம்பிச்சேன். இப்படியாக, பலாவில் ஈடுபாட்டை அதிகரிச்சுகிட்டேன்.

2006ல் பலா மரம் பத்தி புத்தகம் வெளியிட்டேன். அதன் மருத்துவ குணம், அதில் செய்கிற உணவுகள் எல்லாம் அதில் கொடுத்தேன். உதாரணத்திற்கு 20 டூ 40 நாட்கள் கொண்ட பலாவின் பூ மற்றும் பிஞ்சுல பொரியல், அவியல், கூட்டு, ஊறுகாய், கிரேவி எல்லாம் செய்யலாம்.

கொஞ்சம் 40 டூ 60 நாட்கள் உள்ள முற்றாத காய்ல கொத்துக்கறி அவியல், பக்கோடா, பலா பிரியாணி, கட்லெட், ஆட்டுக்கறியுடன் பலா பொரியல்னு வெரைட்டி காட்டலாம். அப்புறம், முக்கால் பங்கு முற்றிய காய்ல இட்லி, தோசை, அடை உள்ளிட்ட ஐட்டங்கள் பண்ணலாம். முற்றிய பழுக்காத சுளையில் உலர்ந்த சுளைகள்ல மாவு தயாரிக்கலாம். பஜ்ஜி போடலாம். பப்படம் செய்யலாம். ஆப்பம் பண்ணலாம்.

அதுவே, பழுத்த பலாப்பழ சுளையா இருந்தால் ஐஸ்கிரீம், அல்வா, பலா கீர், பாயசம், ஒயின்னு நிறைய தயாரிக்கலாம். அடுத்து பச்சை பலாக்கொட்டையில் சாம்பார் பண்ணலாம். பலாக்கொட்டை கறி சமைக்கலாம். பலாக்கொட்டையை மாவாக்கி பூரி, சப்பாத்தி, முறுக்கு, பேக்கரி ஐட்டங்கள் எல்லாம் பண்ண முடியும்.

மொத்தமா இருநூறுக்கும் மேற்பட்ட உணவுப் பதார்த்தங்களை பலாவுல செய்யலாம். இதுல சில உணவுகளின் செய்முறையையும் என்னுடைய நூலில் தந்திருக்கேன். அப்புறம் பலாவைப்பொறுத்தவரை விவசாயிகளுக்கு நிறைய நன்மைகள் அளிக்குது. முதல்ல இது வறட்சி, வெள்ளம், புயல்னு எல்லா இயற்கை அசம்பாவிதங்களையும் தாங்கி வளர்
கிற பயிர்.

அடுத்து, இடுபொருட்கள் செலவோ, வேலையாட்களோ அதிகம் தேவைப்படாது. தண்ணீரும் அதிகம் வேண்டியதில்ல. ஒருமுறை நட்டு பராமரிச்சால் போதும். நான்கு ஆண்டுகள்ல நல்ல மகசூல் தரும். சுமார் 20 தலைமுறைகளுக்குப் பலன் கிடைக்கும். நல்லா பராமரிச்சால் கூடுதல் லாபம் பெறலாம். இல்லன்னா குறைஞ்ச லாபம் கிடைக்கும். அதனாலதான் இதை விவசாயிகளுக்கு சர்வ நிவாரணினு சொல்றேன்.

எங்க பண்ருட்டி பகுதியைப் பொறுத்தவரை ஒரு காம்புல ஒரு பிஞ்சு மட்டும் விட்டு சாகுபடி செய்வாங்க. கூடுதலா உள்ள பிஞ்சுகளை அகற்றிடுவாங்க. அதனால, ஆரோக்கியமான, தரமான பலாப்பழம் கிடைக்கும். சுளையும் சுவையா இருக்கும். இந்தமுறையில் இந்தியாவிலேயே பண்ருட்டிதான் முன்னோடி. இதனை இப்ப பல மாநிலங்கள் பின்பற்ற ஆரம்பிச்சிருக்காங்க...’’ என பலாவின் அருமை பற்றி நீண்ட விளக்கம் தந்தவர், தொடர்ந்தார்.   

‘‘நான் 2016ல் அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்றேன். அப்போதிலிருந்து ஆண்டுக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பலா கன்றுகள் வழங்கிட்டு வர்றேன். இப்ப என்கிட்ட தமிழ்நாட்டுல உள்ள பத்துக்கும் மேற்பட்ட ரகங்கள் இருக்கு. தவிர, 20க்கும் மேற்பட்ட கர்நாடகா ரகங்களும், பத்து கேரள ரகங்களும் வச்சிருக்கேன். இதனுடன் தமிழ்நாட்டுல ஆங்காங்கே உள்ள ரகங்கள் இருக்கு.

இவற்றையெல்லாம் என் மையத்தில் உற்பத்தி பண்றேன். இப்ப யாராவது என்னிடம், ‘இந்தப் பலா மரம் நல்லா காய்க்குது. பழம் நல்லாயிருக்கு’னு சொன்னா போய் பார்த்து அதன் குச்சியை வாங்கிட்டு வந்து இங்கே மரமா பராமரிக்கிறேன். அப்படியாக, இப்ப நூற்றுக்கும் மேற்பட்ட பலா ரகங்களை ஒரு இடத்துல கொண்டு வந்திருக்கேன். இது எனக்குக் கிடைச்ச பெரும் வாய்ப்பு.

இந்த பலா மரங்கள் நாற்பது ஐம்பது ஆண்டுகள் கழித்து கீழ விழுந்திட்டால் கூட அது மரமா பயனளிக்கும். அதிலிருந்து மரப்பொருட்கள் செய்யலாம். யானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன்னுனு சொல்றமாதிரி பலாமரத்தையும் சொல்லலாம். அவ்வளவு பயன் இதிலிருக்கு. இதனாலதான் பாருக்குள்ளே நல்ல மரம் பலா மரம்னு வலியுறுத்திச் சொல்றேன்.
இதன் மகத்துவத்தை வெளிக் கொண்டு வரவே சமீபத்துல இயற்கை விவசாயம் செய்ற நண்பர் ஒருவர் பலா திருவிழா நடத்துவோம்னு சொன்னார்.

அப்படியாக முதல்முறையா என் ஆராய்ச்சி மையத்துல நடந்தது. இந்த முதல்முயற்சியில் ஐநூறு பேர் வரை வருவாங்கனு எதிர்பார்த்தேன். ஆனா, 1500 பேர் வந்தாங்க. இதுல 1200 பேருக்கு பலா பிரியாணி சமைச்சு ஃப்ரீயா கொடுத்தோம். பலா ஐஸ்கிரீம், பலா அல்வா, பலா பக்கோடா, பலா பஜ்ஜி எல்லாம் விற்பனைக்கு வச்சோம். ரொம்ப சிறப்பா நடந்தது.
என் ஆசையெல்லாம் தமிழக மக்கள்கிட்ட பலா மரங்கள் பற்றியும் அதன் மகத்துவம் பற்றியும் நிறைய விழிப்புணர்வு வரணும் என்பதுதான். அரசு ஒவ்வொரு கிராமத்திலும் பலா பயிரிடுவதை ஊக்குவிக்கணும்.

அப்புறம், உயர் ரகங்களைக் கொண்டு வந்து விளைச்சலை அதிகப்படுத்தணும். அதாவது ஆண்டுமுழுவதும் காய்க்கும் ரகங்களைக் கொண்டு வரணும். ஏன்னா, இப்ப 5 சதவீத மரங்கள்தான் ரெண்டு முறை காய்க்கக்கூடியதா இருக்கு. இதுல பாலூர்-1 ரகம் ஆண்டுக்கு ரெண்டு முறை காய்க்கக்கூடியது. இந்த மாதிரி உள்ள ரகங்களை மேம்படுத்தணும். அப்பதான் ஆண்டுமுழுவதும் பலா சாப்பிடுகிற மாதிரி மாறும். ஆரோக்கியமும் பெருகும்...’’ என்கிறார் ஹரிதாஸ்.

சூப்பர் ஃபுட்

பலாவைப் பொறுத்தவரை சரிவிகித கார்போஹைட்ரேட்டும், புரதமும், தாதுப்பொருட்களும், நார்ச்சத்தும் இருக்கு. இதிலுள்ள பைட்டோ நியூரியண்ட் நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும். அப்புறம், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், மலச்சிக்கல், ஆஸ்துமா, வைட்டமின் குறைபாடுனு பல நோய்களுக்கு மருந்தாகுது. அமெரிக்கா, சவுதி அரேபியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள்ல இதை சூப்பர் ஃபுட் வகைல வச்சிருக்காங்க. அதாவது எல்லா சத்துகளும் உள்ள ஒரே பழம் என்பது இதன் அர்த்தம்.

பேராச்சி கண்ணன்