தமிழர்களை ஏமாற்றிய KGF! ரீல் அல்ல... ரியல் ஸ்டோரி‘‘மா ஃபியா... கள்ளக் கடத்தல் பார்ட்டிகளின் துப்பாக்கியால் உருவானது அல்ல நிஜமான கே.ஜி.எஃப்! உழைக்கும் தமிழர்கள் சிந்திய இரத்தத்தால் உருவானதே நிஜமான கே.ஜி.எஃப்...’’ என்று அடித்துப் பேசுகிறார் ஜோதிபாசு. ‘‘‘கே.ஜி.எஃப்.’ படத்தின் இரண்டாம் பாகத்தின் வசூல் 1000 கோடி ரூபாய் என்கிறார்கள். ஆனால், கோலார் தங்கவயல் 2001ல் மூடப்பட்டபோது கடைசியாக வேலை செய்த 3500 தமிழர்களுக்கு கொடுக்கவேண்டிய இழப்பீடு தொகை எவ்வளவு தெரியுமா..? வெறும் 52 கோடிதான்...’’ என்று இரத்தக் கணக்கு சொல்கிறார் ஜோதிபாசு.

தன் தந்தையின் நீண்டநாள் கனவான கோலார் வரலாற்றை ‘தங்கவயல் தொழிற்சங்க வரலாறு’ எனும் பெயரில் வெளியிட்டிருக்கும் ஜோதிபாசு, தங்கவயல் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் வக்கீலாகவும் இருக்கிறார். கே.ஜி.எஃப்பின் மூன்றாம் தலைமுறையான ஜோதிபாசு இந்த புத்தகம் வெளியிடும் நேரத்தில் தன் தந்தை இல்லையே என்று ஏங்கினாலும் தன் தந்தை எழுதிய வரலாறு, சொந்த அனுபவம், இன்றைய கே.ஜி.எஃப்பின் நிலைகள் குறித்து நம்மிடம் பேசினார்.

‘‘1880களில் பிரிட்டிஷ் அரசால் கோலார் தங்கவயல் உருவானது. பிரிட்டிஷார் சென்றதும் 1947க்குப் பிறகு மைசூர் சமஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. அப்போது அதன் பெயர் கே.ஜி.எம்.யு. அதாவது ‘கர்நாடகா கோல்ட்மைன் அண்டர்டேக்கிங்’. ஆனால், கோலார் 1962ல் தேசியமயமானது. அப்போது ‘பாரத் கோல்ட்மைன் லிமிட்டெட்’, அதாவது ‘பி.ஜி.எம்.எல்.’ என பெயரிடப்பட்டது. 2001க்குமுன் கோலார் தங்கவயலுக்கு எதிராக பல செய்திகள், வதந்திகள் பரப்பப்பட்டன. இந்த செய்திகளை பெரிய கண்டுபிடிப்பாக அல்லது ஓர் ஆய்வாக அரசு நம்பி  2001ல் கோலார் தங்கவயல் தொழிலையே மூடியது...’’ என்று சொல்லும் ஜோதிபாசுவிடம் அந்த செய்திகள், வதந்திகள் பற்றியும் கேட்டோம்.

‘‘இந்த அறிக்கைகளுக்கு முன் கோலார் தங்கவயல் குறித்து தெரிந்துகொள்வது முக்கியமானது. ஏனென்றால் இந்த அறிக்கைகள், குற்றச்சாட்டுகள், சதிகள் எல்லாமே தமிழர்களைக் குறிவைத்து, அவர்களை கோலார் தமிழன் எனும் ஓர் அடையாளத்திலிருந்தே துரத்திவிடவேண்டும் என்ற குறிக்கோளுடன் செய்யப்பட்டது. உதாரணமாக, கோலார் உருவானபோது கோலாருக்கு பக்கத்தில் இருந்த கன்னட மக்களோ அல்லது தெலுங்கு மக்களோ இந்த வேலைக்கு ஆர்வம் காட்டவில்லை.

ஏனென்றால் இந்த வேலை உடல் உழைப்பைக் கோரிய வேலை. ஆனால், தமிழகத்தின் வடமாவட்ட மக்கள் இந்த தொழிலுக்கு ஆர்வமாக வந்தார்கள். அதிலும் வட ஆற்காடு மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த வேலைக்காகப் போனார்கள். கோலாரில் வேலை செய்த 100 பேரில் 80 சதவீதம் தமிழர்கள். அதுவும் இவர்கள் எல்லோருமே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

என் தாத்தா சுப்பராயன் தன் 10 அல்லது 14 வயதில் இந்த வேலைக்கு வந்தார். தாத்தாவுக்கு ஏழு பிள்ளைகள். மூத்தவனை, அதாவது என் தந்தையான இராமசாமியை மட்டும் தன்னோடு வைத்துக்கொண்டு குடும்பத்தை ஊரில் இருக்கச் செய்தார். வட ஆற்காடு மாவட்டம், வந்தவாசி தாலுக்காவில் எச்சூர் எனும் ஒரு கிராமத்தில் குடும்பம் இருந்தது. அப்பாவை இங்கே கோலாரில் படிக்க வைத்தார்.

தாத்தா ஒரு வெடிவிபத்தால் 1964ல் தங்கவயலில் இறந்துபோனார்.ஒன்று, உள்ளூரில் பெரிய தொழில் வாய்ப்பு இல்லாதது; அடுத்து, போகும் இடத்தில் கஷ்டப்பட்டாவது குடும்பத்தைக் கரையேற்றலாம், பிள்ளைகளை படிக்க வைக்கலாம் என்ற காரணங்களே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை கோலார் நோக்கி தள்ளின.

கோலார் 2001ல் மூடும்வரை தமிழர்கள் முன்னேற்றப் பாதையில் சென்றனர்...’’ என்று சொல்லும் ஜோதிபாசு, கோலார் தங்கவயல் 2001க்குமுன், பின் என்று வரலாற்றைச் சொன்னார்.
‘‘ஆங்கிலேயர் காலத்தில் கோலார் ஒரு மினி இங்கிலாந்தாக இருந்தது. வெள்ளைக்காரர்கள் வாழும் பங்களா, தமிழர்கள் வாழும் காலனிகள், மருத்துவமனை, சாலைகள், ரயில் பாதைகள் என்று கோலார் பிரதேசமே ஒரு சொர்க்கபூமியாக இருந்தது.

ஆனால், 2001க்குப் பிறகு தமிழர்களின் வாழ்வில் இருண்ட காலம் ஆரம்பித்தது. உதாரணமாக 2001க்கு முன் கர்நாடகாவிலேயே கல்வியில் உயர்ந்த பிரதேசமாக இந்த கோலாரும் தமிழர்களுமாக இருந்தனர். என் தாத்தா இங்கே ஒரு வெடி வைக்கும் மேஸ்திரியாக இருந்தபோதுதான் என் தந்தை எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் இங்கே படித்தார்.

அதேபோல 2008 வரைக்கும் இங்கே ஒரு நகரசபை உறுப்பினர், எம்.எல்.ஏ. எல்லாம் தமிழர்களாகவே இருந்தார்கள். ஆனால், இன்று இதையெல்லாம் அழிக்கும் விதமாக தெலுங்கு பிரதேசத்தையும், கர்நாடக பிரதேசத்தையும் கோலாருடன் சேர்த்து இந்தப் பகுதியில் தமிழர் அடையாளமே இல்லாமல் செய்துவிட்டனர்.இவை எல்லாம் மத்தியில் பா.ஜ.க.  ஆட்சிக்கு வந்ததும் அரங்கேறியவை...’’ என்ற ஜோதிபாசு, கோலார் தமிழர்களின் இன்றைய நிலை, எதிர்காலம் குறித்தும் பேசினார்.

‘‘2001க்கு முன் கோலாரில் சுமார் 3 லட்சம் தமிழர்களாவது இருந்தனர். ஆனால், இன்று 2 லட்சம் தமிழர்களே இங்குள்ளனர். 2001ல் கோலாரை மூடும்போது சந்தையில் இருக்கும் தங்கத்தின் விலையைக் காட்டிலும் கோலாரில் எடுக்கும் தங்கத்தின் விலை கூலியால் அதிகமாகிறது என்றார்கள். ஆனால், உண்மையில் அதிகாரிகள் செய்த தவறான மேலாண்மைதான் நட்டத்துக்குக் காரணம் என்பதை அரசு ஏற்றுக்கொள்ளத் தயாராகஇல்லை. நீதிமன்றம் தங்கச் சுரங்கத்தை மூட உத்தரவிட்டாலும் சில பரிந்துரைகளைச் செய்தது. வீடுகளை நிரந்தரமாக்குவது, வேலை செய்தவர்களுக்கு இழப்பீடு, சுரங்கங்களை தனியார் நடத்தலாம் என்பது போன்ற சிபாரிசுகள் இருந்தன.

ஆனால், இதில் எதுவுமே நடக்கவில்லை. இழப்பீட்டை சிலருக்கு வழங்கும்போது அவர்கள் உயிரோடு இல்லை. இன்று கோலார் தங்கவயலில் வசிக்கும் தமிழர்கள் விடியற்காலையில் ரயிலைப் பிடித்து பெங்களூர் சென்று கூலி வேலை செய்துவிட்டு மாலை திரும்புகிறார்கள்.ஒரு காலத்தில் ஒப்பந்தக் கூலி முறை என்பதே ஒடுக்குமுறையானது என்று பேசி வந்தோம். ஆனால், இன்று தமிழர்கள் செய்யும் கூலி வேலையைப் பார்த்தால் ஒப்பந்தக் கூலி வேலையே பரவாயில்லை என்று சொல்லும் விதத்தில் இருக்கிறது.மொத்தத்தில் கோலார் தமிழர்களைக்  கைவிட்டது அரசுகள் மட்டுமல்ல; சினிமாவும்தான்...’’ என்கிறார் ஜோதிபாசு.

டி.ரஞ்சித்