விக்ரம் 18 வகை செட் போட்டோம்!



‘விக்ரம்’ சூப்பர் டூப்பர் வெற்றியால் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி திக்குமுக்காடிப் போயுள்ளது. இந்த வெற்றியின் ஓர் அங்கமாக இருப்பவர் கலை இயக்குநர் சதீஸ்குமார். ‘விக்ரம்’ வெற்றி: இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?இந்தப் படத்தை என்னுடைய சினிமா கரியரில் முக்கியமான படமாகப் பார்க்கிறேன். உலக நாயகன் கமல் சார் படம். மத்த படங்கள் பண்ணுவதைவிட இதில் கூடுதல் கவனம் இருந்தது. அதுக்கு காரணம், சினிமாவின் அனைத்து கிராப்ட் பற்றிய அறிதல், புரிதல் உள்ளவர் அவர்.

அதனால், நானும் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டிய சூழல் இருந்தது. இந்தப் படத்தோட வெற்றி எனக்கு பெரிய அங்கீகாரத்தையும், பெருமிதத்தையும் கொடுத்திருக்கு. இது எனக்கு 21 வது படம். மத்த படங்களைக் கடந்து இந்தப் படம் எனக்கு மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்திருக்கு. சந்தோஷமாவும், பெருமையாவும் இருக்கு.

‘விக்ரம்’ படத்தில் மொத்தம் எத்தனை வகை செட் போட்டீர்கள்?

18 வகை செட் போட்டோம். அதில் 8 செட் புதுசு. மத்த படங்களிலிருந்து அது வேறுபட்டு இருக்கும். வழக்கமான வீடு, ஆபீஸ் செட் தவிர்த்து புதுவிதமான செட் போட்டது எனக்கே ஃப்ரெஷ்தான். இதுக்காக நிறைய ரிசர்ச் பண்ணினேன். மெட்டீரியலா பல லோடு பொருட்களை பயன்படுத்தினோம். க்ளைமாக்ஸ் காட்சிக்காக 70, 80 லாரி லோட் மெட்டீரியல்
யூஸ் பண்ணினோம்.

‘விக்ரம்’ படத்தில் எந்த இடத்தில் உங்களுக்கான சவால் இருந்தது?

8 செட் புதுமையா இருந்ததுனு சொன்னேன். அதுல க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் 6 மாடி ஆயுதக் கிடங்கு செட்டை குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த செட்டுக்கு ஹாலிவுட் படங்களிலிருந்து கூட ரெபரன்ஸ் எடுக்க முடியவில்லை. அதுக்கு ரிசர்ச் ஒர்க் அதிகமா இருந்துச்சு. அதே சமயம் சவாலாகவும் இன்ட்ரஸ்ட்டிங்காவும் இருந்துச்சு.

தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் பணிபுரியும் அனுபவம் பற்றி?

‘மாநகரம்’ படத்துக்கு முன்பே லோகேஷைத் தெரியும். ‘மாநகரம்’ படத்திலிருந்து அவருடன் பயணிக்கிறேன். எங்கள் தொடர் பயணத்துக்கான காரணமா அவருடைய சம கால சிந்தனையைச் சொல்லலாம். எங்களுக்கிடையே ஒருமித்த சிந்தனை இருப்பதாகவும் நினைக்கிறேன். அவர் ஒரு விஷயத்தை சொன்னா அதை நான் சரியா உள்வாங்கி வெளிப்படுத்தியிருப்பேன்.
மரியாதை சார்ந்தும், அன்பு சார்ந்தும் எங்களிடையே நட்பு இருப்பதால் தொடர்ந்து பயணிக்கிறோம். மத்த இயக்குநர்களிடம் இந்த மாதிரியான பழக்கம் இருந்ததில்லை. லோகேஷுடன் பயணிக்கும்போது அவர் சொல்வதை சரியாகப் பண்ணமுடிகிறது.

என்னுடைய வீட்ல நடக்கும் ஒரு வேலைக்காக எவ்வளவு சிரத்தை எடுப்பேனோ அதுபோல் அவருடைய படத்துக்கு வேலை செய்கிறேன். சினிமாவைத் தாண்டி அண்ணன் - தம்பி என்ற சகோதரத்துவம் எங்களிடையே இருக்கு. எந்த மாதிரி கதைக்களம் கலை இயக்குநருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி?

தொழில் மேல் பக்தி உள்ளவங்களுக்கு எந்தப் படத்தை கொடுத்தாலும் அல்வா சாப்பிடுவது மாதிரி இருக்கும். அல்வா சாப்பிடுவது மாதிரி இருந்தாலும் எல்லாமே கடினமான வேலையை வாங்கும் படங்களா இருக்கும். எல்லா படங்களுக்கும் அதிக சிரத்தை எடுத்து வேலை செய்யணும். கலை இயக்குநர் என்பவர் ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் வேலை செய்யணும் என்ற அவசியம் இருக்கும். அது நிறைய பேருக்கு தெரிவதில்லை. ரியல் லொகேஷனுக்கு போனாலும் ஃப்ரேமுக்கு எத்தமாதிரி வேலை செய்யணும் என்பதைத் தவிர்க்க முடியாது.

கதைக்கு அத்தியாவசியமாக இருப்பதால் விட்டுக்கொடுக்காமல் பண்ணுவோம். எந்த வேலையையும் பிடித்துப் போய் பண்ணினால் அல்வா சாப்பிடுவது மாதிரிதான்.கலை இயக்குநராக ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கும்போது எந்த விஷயத்தை கவனத்தில் வைத்திருப்பீர்கள்?ஒரு கதையை உள்வாங்கி வேலை செய்ய ஆரம்பிக்கும்போது எக்காரணத்தைக் கொண்டும் ஆடியன்ஸின் பார்வை அந்த களத்தைவிட்டு பின்வாங்காதளவுக்கு இருக்கணும். அந்தளவுக்கு உண்மையாக இருந்தால்தான் ஆடியன்ஸ் ஆர்வத்துடன் பயணிக்க முடியும்.

ஓர் இடத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் அந்த சம்பவத்துக்கு ஏத்தமாதிரி அந்த இடம் இருக்கணும். அதுக்காக மிகவும் சிரமப்பட்டு வேலை செய்யணும். அதை ரியாலிட்டினு சொல்லலாம். என்னுடைய புரிதலில் இருந்து சொல்வதாக இருந்தால் எந்த இடத்தில் செட் போட்டிருக்கிறோம்னு தெரியக்கூடாது. அதுதான் நல்ல வேலைக்கான அர்த்தம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

ஒரு படம் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்றாலே பொதுவாக அந்தப் படத்தின் இயக்குநர், நடிகர்கள், இசையமைப்பாளர் என அவர்கள் மீதுதான் பார்வையாளர்கள் கவனம் பெரும்பாலும் இருக்கும். அதைத் தாண்டி இப்போது வெளியாகி இருக்கும் ‘விக்ரம்’ படத்தில் உங்களுடைய வேலையும் அதிகம் கவனம் பெற்றிருக்கிறது. இந்த வரவேற்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

‘விக்ரம்’ வெளியாகி நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு. இதுவரை 20  படங்கள் பண்ணிட்டேன். ‘மாஸ்டர்’ படம் வந்தபிறகுதான் இண்டஸ்ட்ரியில் இப்படி ஒரு ஆர்ட் டைரக்டர் இருக்கார்னு தெரிஞ்சது. அதுமட்டுமல்ல, எல்லா படங்களிலும் கலை இயக்குநர்கள் மிகச் சிறந்த உழைப்பைத் தருகிறார்கள். ஆனா, கவனிக்கப்படுவதே இல்லை.

பொதுவா பெரிய படம் பண்ணும்போதுதான் கவனம் பெறுகிறோம். சின்ன படங்களுக்கு அது கிடைக்காது. உதாரணத்துக்கு நான் ‘ஜோக்கர்’ பண்ணினேன். அதுல 15 முதல் 20 செட் போட்டிருப்பேன். யாரும் கண்டுகொள்ளவில்லை. பெரிய உழைப்பைக் கொடுத்தபிறகு அங்கீகாரம் கிடைக்காதபோது மனசு வலிக்கும்.

அந்தவிதத்துல ‘விக்ரம்’ படத்தை எல்லாரும் கவனிச்சு பாராட்றாங்க. டெக்னிக்கலா பேசுறாங்க. ஆர்ட் டைரக்‌ஷன் இப்படி இருக்குமான்னு புரிஞ்சு பேசுவது சந்தோஷமா இருக்கு.
கமலிடம் கற்றவை?கமல் சார் ஒரு பல்கலைக் கழகம். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். ‘விக்ரம்’ அவருக்கு 232வது படம். அவருடைய அனுபவம் கூட என் வயசு இருக்காது. அப்படி இருக்கும்போது இப்போது டிரெண்டுல இருக்கிற டெக்னிக்கல் அம்சங்களைக் கற்றுக்கொண்டு அப்டேட்டில் இருக்கிறார். அது பெரிய வியப்பு.

துறை சார்ந்து எல்லாருக்கும் அந்த அறிவு வருமா என்றால் தெரியாது. இன்னும் உயிர்ப்புடன், ஆக்டிவ்வா வேலை செய்கிறார். அதைத்தான் அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டும்.
சினிமாவில் சோர்வு ஏற்படும்போது கமல் சார் முகம் ஞாபகம் வந்தாலே நாம் சுறுசுறுப்பா இயங்க ஆரம்பிச்சுடுவோம். செட் ஒர்க் போடும்போது உயிர்ச் சேதம், பொருள் சேதம் ஏற்படுகிறதே... பாதுகாப்பு அம்சங்கள் ஹாலிவுட்டை ஒப்பிடும்போது இங்கு எப்படி உள்ளது?

எந்த வேலை செய்தாலும் பாதுகாப்பு முக்கியம். வேலை செய்பவர்களும் கவனமா, எச்சரிக்கை உணர்வுடன் வேலை செய்ய வேண்டும். முடிந்தளவுக்கு சேஃப்டி ரூல்ஸ் கடைப்பிடிப்போம். அதனால் சேதம் தவிர்க்க முடிகிறது. எந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்தப் போகிறோமோ அந்த இடத்தை கவனிச்சு வேலை செய்தாலே அசம்பாவிதத்தைத் தவிர்க்கலாம். ‘விக்ரம்’ படத்துல யூனிட்ல இருக்கிறவங்களுக்கு இன்சூரன்ஸ் பண்ணியிருந்தாங்க.

ஆர்ட் டைரக்‌ஷனுக்கு இலக்கணமாக எதைச் சொல்வீர்கள்?

ரியாலிசம்தான் இலக்கணம். ‘அவதார்’ மாதிரி பண்ணினால் அப்படி ஒரு உலகம் இருக்கிற மாதிரி காட்டணும். எதிர்காலத்தைக் காட்டுவதாக இருந்தாலும் ஃப்யூச்சர் இப்படித்தான் இருக்கும் என்று அழுத்தமா காட்டணும்.முன்பு பாடல்களை செட்ல எடுத்தார்கள். பிறகு ஃபாரீன்ல எடுத்தார்கள். இப்போது லைவ் லொகேஷன்... உங்கள் கருத்து?

சினிமா அடுத்தடுத்த கட்டத்திற்கு போகும்போது எல்லாமே மாறும். ரியல் லொகேஷனில் பண்ணும்போது எங்க டிபார்ட்மெண்ட்டுக்கும் சினிமாவில் இருப்பவர்களுக்கும்தான் அது எவ்வளவு சவால்னு தெரியும். ஏனெனில், சிலவற்றை இருப்பது போலவும், சிலவற்றை இல்லாதது போலவும் காட்டணும். காலத்துக்கு ஏத்தமாதிரி மாற்றத்தை எதிர்கொள்ளவேண்டும்.
பொதுவாக எந்த மாதிரி வண்ணத்தை பின்புலத்துக்கு பயன்படுத்துவீர்கள்?

கதை, கேரக்டரின் தன்மை பொறுத்து கலர் மாறும். வண்ணத்துக்கும் உணர்வுக்கும் உளவியல் ரீதியா தொடர்பு இருக்கு. அதனால் கேரக்டர் என்ன உணர்வை வெளிப்படுத்துகிறதோ அதுக்கு ஏத்தமாதிரி பின்புல வண்ணத்தைக் கொடுக்கணும். அதை ‘கலர் பேலட்’னு சொல்வோம். கேரக்டர் மூட் முடிவானதும் கலர் முடிவாகிவிடும். கேரக்டர்களின் உணர்வுகள் சார்ந்துதான் வண்ணம் இருக்கும். வெளிநாட்டில் அதை கவனமாகப் பார்க்கிறார்கள். பாலிவுட்டில் இப்போது பின்பற்றுகிறார்கள். தமிழில் இப்போது ஆரம்பித்துள்ளார்கள்.

எஸ்.ராஜா