100 நிமிடங்கள்... சிங்கிள் ஷாட்... ஒரே படம்! இரா.பார்த்திபன் ஓப்பன் டாக்



‘‘மனசுக்குள்ள இப்பவும் ஒரு அஞ்சு கதைகளை அசைபோட்டுக்கிட்டே இருக்கேன்... எப்போ எந்த கதையைப் படமாக்கலாம்  அப்படிங்கறதுதான் எனக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கற ஒரே விஷயம். இப்படிதான் கடந்த 10 வருஷமா ‘இரவின் நிழல்’ கதையையும் அதனுடைய உருவாக்கத்தையும் அசைபோட்டுட்டு இருந்தேன்...’’ ரிலீஸ் மும்முரத்துக்கிடையே பேச ஆரம்பித்தார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

சினிமா மேல் ஏன் இத்தனை காதல்?

காதலிக்க வேறெதுவும் இல்லாததுனால முழுக் காதலையும் சினிமா மேல வச்சிட்டேன். ஆனா, அதைக் கொண்டாடி காதலிக்கறதுக்கு என்கிட்ட போதுமான வருமானமும் பணவசதியும் இல்ல. ஆனாலும் இந்தத் துறையில் எனக்குன்னு ஒரு சின்ன பெயரை சம்பாதிச்சு அந்த பெயரை தக்க வைச்சுக்க நிறைய இடங்கள்ல சுயநலமா சிந்திக்கிறேன்னு கூட சொல்லலாம்.
நான், என் பெயர், என்னுடைய சினிமா ஆக்கம்... இதை மட்டும்தான் யோசிக்கிறேன். ஒரு நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்... இப்படியான ஒரு மனிதருடைய வாழ்க்கை எப்படி இருக்கணும்... குழந்தைகளுடைய வாழ்க்கை எவ்வளவு ஆடம்பரமா இருக்கணும்... ஆனால், அந்த மாதிரியான எதுவும் என் குழந்தைகளுக்கு நான் செய்யலை. இதைத்தான் சுயநலமா பார்க்கறேன்.

‘இரவின் நிழல்’ படத்துக்கான விதை எங்கே... எப்படி விழுந்தது?

ஒரு சிங்கிள் ஷாட் படம் பார்த்து திரும்பத் திரும்ப அந்தப் படத்தைப் பார்க்கும்போது எப்படி எந்த இடைவெளியும் இல்லாமல் ஷூட்டிங் எடுக்க முடியும்... என்கிற எண்ணம்தான் ‘இரவின் நிழல்’ . ஒரு சிரிப்புக்கு மட்டுமே 88 ஷாட்ஸ் எடுப்போம். அப்படி இருக்கும்போது அந்த சிங்கிள் ஷாட் படம் என்னை நிறைய யோசிக்க வச்சது. இதை ஏன் நாம் செய்து பார்க்கக் கூடாதுனு நினைச்சேன். யோசிச்ச மறுகணம் இதை ரஹ்மான் சார்கிட்ட சொன்னேன். அவர் கதையைக் கேட்டுட்டு ஓகே சொன்ன அடுத்த கட்டமே இந்த படத்தை உலக அளவுக்கு எடுத்துட்டுப் போகமுடியும் என்கிற நம்பிக்கை வந்திடுச்சு.

ஏ. ஆர். ரஹ்மான் - ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இந்த காம்போ எப்போதோ நடந்திருக்கணுமே..?
 
அன்னைக்கு சொன்னதைத்தான் இன்னைக்கும் சொல்றேன். கடவுளைக் கூட அபிஷேகம் செய்து ஏமாத்திடலாம்... ஆனால், ரஹ்மான் சார் அவ்வளவு சுலபமா ஏமாற மாட்டார்.
ஒருசில விஷயங்களை நாம உலகத் தரத்துக்குக் கொண்டு போக சில மார்க்கெட் & பிராண்ட் தேவைப்படுது. அப்படி என் படத்துக்கு கிடைச்ச மிகப் பெரிய பிராண்ட்தான் ரஹ்மான் சார்.
பொதுவா உலக அளவில் ஒரு படத்தை எடுத்துட்டு போகும்போது அதில் ஆயிரம் படங்கள் நுழையும். ஆயிரம் படங்களையும் யாரும் பார்க்கறதே கிடையாது. அதில் குறைந்தபட்சம் 5 படங்களைப் பார்த்தாலே பெரிய விஷயம். எனில் அந்த அஞ்சு படங்கள்ல என் படமும் இருக்கணும். அதுக்கு இந்த பிராண்ட் அவசியம்.

ஒருசில காரணங்களால தள்ளிப்போனாலும் இந்த காம்போ இப்ப இந்தக் காலக்கட்டத்தில் கிடைச்சதை இன்னும் சிறப்பானதா பார்க்கறேன். படத்தின் பாடல்கள், இசை பற்றி சொல்லுங்க..? ஆரம்பிக்கும்போது ஒரு பாடல்னு ஆரம்பிச்சோம். ஆனால், முடியும்போது ஆறு பாடல்களா வளர்ந்திடுச்சு. அதிலே மூணு பாட்டு நானே எழுதியிருக்கேன். இந்தப் படத்தின் ‘கண்ணெதிரே...’ பாட்டின் கடைசி டியூனை எடுத்து அதிலே ஒரு பாட்டு உருவாக்கிட்டு, ‘வரிகளை  நீங்களே எழுதுங்க’னு சொன்னார். அந்தப் பாடல்தான் ‘காயம்...’

இப்படிப்பட்ட ஒரு மனுஷன கொண்டாடித் தீர்க்கணும்னு முடிவு செய்துதான் அவரை மேடையில் உட்கார வெச்சு பியானோ வாசிக்கச் சொல்லி அழகு பார்த்தேன்.
100 நிமிடங்கள்,  நான்-லீனியர், சிங்கிள் ஷாட்... இத்தனை சவால்களையும் மீறி டிரெய்லரில்  ஏகப்பட்ட கலரிங் தெரிகிறதே..?

360 பேர் சேர்ந்து இந்த ‘இரவின் நிழல்’ படத்தை உருவாக்கி யிருக்கோம். இதை எப்படி வார்த்தைகளால் புரிய வச்சாலும் யாருக்கும் புரியாது. எப்படி விளக்கிச் சொன்னாலும் இந்தப் படம் மேக்கிங்கில் எந்த அளவுக்கு சிரமம் இருந்துச்சுன்னு யாருக்கும் தெரியாது. இதைப் புரியவைப்பதற்காகவே ஒரு மேக்கிங் வீடியோ வெளியிடலாம்னு முடிவு செய்திருக்கேன். இப்ப நீங்க பாக்கப் போற ‘இரவின் நிழல்’ படம் கூட எத்தனையோ ஓகே டேக்குகள்ல இருந்து ஓகே ஆன ஒரு டேக் படம்தான். அமெரிக்காவிலிருந்து ஐந்து நண்பர்கள் பொருளாதார ரீதியா எனக்கு உதவி செய்தாங்க.

இந்த மாதிரி உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி சினிமாவில் இருக்கிற கலைஞர்களுக்கு உதவி செய்யணும்னு ஒரு சிலர் நினைக்கறதாலதான் இன்னும் சினிமா இயங்குது. இல்லைன்னா என்னை மாதிரி கலைஞர்கள் எல்லாம் என்னைக்கோ வாய்ப்புகள் இல்லாமலும் தகுந்த அங்கீகாரம் இல்லாமலும் செத்தே போயிருப்போம்.இன்னைக்கு ஒரு கலைஞனுடைய வெற்றியைக் கொண்டாட கூட சினிமா உலகத்துல ஆள் இல்ல. என்னளவில், என்னால் முடிந்த குரலாவோ, இசை வெளியீட்டில் பேச்சாளனாவோ உதவியைச் செய்துட்டு இருக்கேன். அதனால்தான் என்னுடைய இசைவிழாவில் வெற்றி பெற்ற ‘விக்ரம்’ படத்துக்கும் கமல்ஹாசனுக்கும் நான் வாழ்த்துகள் சொல்லி ஆரம்பிச்சேன். ஒரு கலைஞனா சக கலைஞனுக்கு இதையாவது செய்யணும் இல்லையா!

ஆனா, இங்க செய்ய ஆளில்ல. இதையெல்லாம் மீறி இப்படி ஒரு படத்தை உருவாக்க எந்த அளவுக்கு பாடுபட்டிருப்போம்... இதை வார்த்தைகளில் சொல்றதை விட அதையும் ஒரு படமா காண்பித்தால்தான் புரியும் என்பதால் விரைவில் மேக்கிங் வீடியோ வரும். வெறும் புரொடக்‌ஷன் டிசைனுக்கு மட்டும் ரெண்டரை வருஷம் ஆச்சு. குரோம்பேட்டை கிட்ட ஒரு லொகேஷன். அங்கே படம் எடுக்கலாம்னு செட்டு போட்டமாதிரி பிளான் செய்துட்டு ஆறு மாசம் தினமும் காலையில் ஷூட்டிங் கிளம்பற மாதிரி போயிட்டு போயிட்டு வருவோம்.

சொன்னால் நம்பமாட்டீங்க... டிராலி இங்கே இருக்கும்... இங்கே இந்தக் காட்சி நடக்கும்... இப்படி திட்டமிட்டு திட்டமிட்டு ஆறு மாசமும் சாக்பீஸில் வரைஞ்சு வரைஞ்சு ரிகர்சல் மட்டுமே போயிட்டு இருந்தோம். இப்படி ஒவ்வொரு இடமா மாறி மாறி ஓர் இடம் தேர்வு செய்யவே எங்களுக்கு அத்தனை மாதங்கள் ஆச்சு. இதில் இன்னமும் பெரிய சிக்கல் என்னன்னா என் கூட இருந்த டெக்னீஷியன்கள் மற்றும் நடிகர்களுக்கு இதெல்லாம் வெறும் ரிகர்சல்னு புரியவைக்கிறதுக்கே எனக்கு பல நாள் ஆச்சு என்பதுதான். இடையில் கொரோனா, ஊரடங்கு வேறு... கேட்கணுமா? எல்லாத்தையும் சமாளிச்சோம்.

‘இரவின் நிழல்’ பெயருக்கான காரணம்..?

இந்தப் பெயரை கண்டுபிடிக்கவும் பல வருஷமாச்சு. மறுபடியும் கோடிட்டுக் காட்றேன்... பல வருஷமாச்சு. இரவுக்கு நிழல் இருக்குமா..? அதை கண்டு பிடிப்பதற்கான தலைப்புதான் இந்த ‘இரவின் நிழல்’. அதுதான் கதையும்.

நடிகர் பார்த்திபன், இயக்குநர் பார்த்திபன்... யாருக்கு வேலை அதிகம்?

நடிகர் பார்த்திபனுக்கு வேலை அதிகம். இந்த முகத்தை மக்கள் ஏத்துக்கணும்... ஏத்துக்கற மாதிரி நடிப்பையும் கொடுக்கணும்... என்னைப் பொறுத்தவரை பார்த்திபன் அப்படிங்கற இயக்குநர் கூப்பிட்டா உடனே ஓடி வருகிற நடிகர் பார்த்திபன்தான். அவரையும் மீறி வந்த சில நடிகர்கள் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர். இவர்கள் இல்லாம மற்ற நடிகர்கள் எல்லாருமே புதுசுதான். இந்தப் படத்துக்கு அப்புறம் நிச்சயம் அவங்க எல்லாரும் நல்ல நடிகர்களா பிரபலமாவாங்க. படத்திற்கு மிகப்பெரிய பலம் தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லையா..?  

ஆமா. ஆர்தர் வில்சன் சினிமோட்டோகிராபி. பல வருஷமா இவர் கூட வேலை செய்யணும்னு ஆசைப்பட்டு இப்போதான் சந்தர்ப்பம் அமைஞ்சிருக்கு. ஆர்.கே.விஜய் முருகன் தொடர்ந்து என் படங்களுக்கு ஆர்ட் டைரக்‌ஷன் செய்துட்டு இருக்கறார். அவர்தான் இந்தப் படத்துக்கும் ஆர்ட் டைரக்டர். என்னுடைய கோ - டைரக்டராக கிருஷ்ணமூர்த்தி சார். பல இடங்கள்ல நான் கேமராவுக்கு முன்னாடி ஓடணும்... அந்த நேரங்களில் அவர்தான் வெளியே இயக்குநரா இருப்பார். கொத்தாலிங்கோ லியோன் கிராபிக்ஸ், VFX செய்திருக்கார். அவரும் ஆஸ்கர் வாங்கின ஒரு கலைஞர். இன்னொரு ஆஸ்கர் புகழ் சவுண்ட் டிசைனர் கிரேக்மேன் இந்தப் படத்தில் வேலை செய்திருக்கிறார். ரஹ்மான் சாரையும் சேர்த்து மூணு ஆஸ்கர் டெக்னீஷியன்ஸ் படத்தில் இருக்காங்க.

உங்களின் அடுத்த நடவடிக்கை, அடுத்த முயற்சி, அடுத்த அதிர்ச்சி என்ன?

ஒண்ணுமே இப்பவரைக்கும் திட்டமிடலை என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். எனக்கு ரொம்ப காலமா முழு நீள காமெடி கமர்ஷியல் படம் எடுக்கணும்னு திட்டம் இருக்கு. அடுத்த படம் அப்படியான ஒரு படமா இருக்கும்னு நம்பறேன். எந்தவித மெனக்கெடலும் இல்லாமல் முழுக்க முழுக்க காமெடி கமர்ஷியல்... இதுதான் இப்போதைக்கு திட்டம். குறிப்பா எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் வருமானம் தருகிற மாதிரி ஒரு படம் பண்ணணும்.

‘ஒத்த செருப்பு சைஸ் 7’ இந்தி ரீமேக் எப்படி வந்திருக்கு?

பெரிய சர்ப்ரைஸ்... அந்தப் படத்துக்கு அபிஷேக் பச்சன் ஓகே சொன்னது. பெரிய அளவில் தயாராகியிருக்கு. சீக்கிரம் அறிவிப்புகள் வரும். ‘இரவின் நிழல்’ என்ன கொடுக்கப் போகுது? முதலில் பணம் கொடுக்கும். அந்த நம்பிக்கை எனக்கு அதிகமாகவே இருக்கு. காரணம்,  இதை இதுவரை பார்த்த மக்கள் சுமார் ஆயிரம் பேர் இருப்பாங்க... ஒருத்தர் கூட படம் சுமார்னு சொல்லவே இல்ல. ஒவ்வொருத்தரும் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய் என்னைப் பாராட்டி தள்ளிட்டாங்க.

படம் முழுக்க வச்ச கண்ணு வாங்காம நிறைய பேர் படத்தைப் பார்த்தாங்க. ஜாலியா பாப்கார்ன் சாப்பிட்டுட்டு பார்க்கக்கூடிய படமா இது இருக்காது. ஒவ்வொரு நிமிஷமும் அவ்வளவு முக்கியம். அந்த 100 நிமிடங்களை பார்வையாளர்கள்கிட்ட இருந்து எனக்கு நானே சொந்தமாக்கிக்கப் போறேன். அப்படி ஆரம்பம் முதல் முடிவு வரை படம் ஆடியன்ஸை எங்கேயும் நகரவிடாம பார்க்க வைக்கப்போகுது... அதுதான் ‘இரவின் நிழல்’.  

ஷாலினி நியூட்டன்