முதியவரின் ஃப்ரீஸ்டைல் ஃபுட்பால்!



உலகம் முழுவதும் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு, கால்பந்து. போட்டியின் நடுவே கால்பந்து  வீரர்கள் நிகழ்த்தும் சாகசங்கள் அசாதாரணமானவை. அதில் ஒன்று, ரசிகர்களை உற்சாகப்படுத்த கால்பந்து வீரர்கள் பந்தை கை, கால், முதுகு என உடலின் பல பாகங்களில் சுழலவிட்டு ஸ்டைல் காட்டி ஆடுவது. இப்படி ஸ்டைல் காட்டுவதே ஒரு விளையாட்டுதான். அதற்குப் பெயர் ‘ஃப்ரீஸ்டைல் ஃபுட்பால்’. இதில் கில்லாடியாகத் திகழ்கிறார் கேரளாவைச் சேர்ந்த ஜேம்ஸ்.

வருமானத்துக்காக டிரக் வண்டியை ஓட்டி வரும் ஜேம்ஸின் வயது 64. தனது வாகனத்திலேயே கால்பந்து விளையாடத் தேவையான அனைத்து உபகரணங்களையும் வைத்திருக்கிறார். வேலை இல்லாதபோது கால்பந்து விளையாடுவது மட்டும்தான் அவரது ஒரே பொழுதுபோக்கு. நாற்பது வருடங்களுக்கு முன்பு வயநாடு கால்பந்து அணியில் விளையாடி வந்தார் ஜேம்ஸ்.

அந்த அணியைச் சேர்ந்தவர்களில் இன்னமும் கால்பந்து விளையாடும் நபர் ஜேம்ஸ் மட்டும்தான். கால்பந்து விளையாடுவது மட்டுமல்லாமல் அதில் சாகசங்களையும் இப்போது நிகழ்த்துகிறார். அந்த சாகசங்களை வீடியோவாக்கி இன்ஸ்டாவில் தட்டிவிட்டிருக்கிறார் ஓர் இளைஞர். ஐந்து லட்சம் லைக்குகளைத் தாண்டி வைரலாகிவிட்டது அந்த வீடியோ.

த.சக்திவேல்