சக்கர நாற்காலியில் கிளிமஞ்சாரோவில் ஏறிய மனிதர்!



ஆப்பிரிக்க கண்டத்திலேயே மிக உயரமான மலை, கிளிமஞ்சாரோ. கடல் மட்டத்திலிருந்து 5,895 மீட்டர் உயரம் கொண்டது இம்மலை. செயலற்ற எரிமலை வகையைச் சார்ந்த கிளிமஞ்சாரோவின் உச்சிக்குச் செல்வது ஒவ்வொரு மலையேற்ற வீரரின் கனவு. சமீபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த மார்ட்டின் ஹிப்பர்ட் என்ற 45 வயதானவர், கிளிமஞ்சாரோவின் உச்சியைத் தொட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறார். இத்தனைக்கும் மார்ட்டின் ஹிப்பர்ட்டால் நடக்க முடியாது என்பதுதான் இதில் ஹைலைட்.

2017ம் ஆண்டு நடந்த ஒரு குண்டுவெடிப்பில் சிக்கிக்கொண்டார் மார்ட்டின். பலத்த காயம். குறிப்பாக முதுகுத் தண்டில் பலமான அடி. சிகிச்சைக்குப் பிறகு அவரால் எழுந்து நடக்கவே முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். சக்கர நாற்காலியின் துணையின்றி ஒரு அடி கூட நகர முடியாது என்ற நிலை.

இருந்தாலும் அவருக்குள் மலையேற வேண்டும் என்ற ஒரு கனவு விழித்துக்கொண்டே இருந்தது. அதற்காக மலையேறுவதற்கு உகந்த மாதிரி தனது சக்கர நாற்காலியை வடிவமைத்தார்.

கிளிமஞ்சாரோவின் மீது ஏறுவதற்கு முன்பு உயரம் குறைவான பல மலைகளில் ஏறி பயிற்சி மேற்கொண்டார். இப்போது சக்கர நாற்காலியின் துணையுடன் கிளிமஞ்சாரோவில் ஏறியவர் என்ற சாதனையைத் தன்வசமாகிவிட்டார்.

த.சக்திவேல்