யார் இந்த வம்சி பைடிபள்ளி? விஜய் 66 Exclusive



இன்னும் படத்துக்கு பெயர் வைக்கவில்லை. முதல் ஷெட்யூல் மட்டுமே முடிந்திருக்கிறது. தற்காலிகமாக ‘விஜய் 66’ என்று அழைக்கிறார்கள். ஸோ வாட்..? ஹாட் ஆஃப் த டவுன் இந்தப் படம்தான்!காரணம், தளபதி விஜய் நடித்து வரும் படம் இது! அதனால்தான் வைரல் மோட்!சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்திய ‘பீஸ்ட்’ படத்துக்குப் பின் விஜய் நடித்து வரும் இந்தப் படத்தை தெலுங்குத் திரையுலகின் மோஸ்ட் வாண்டட் தயாரிப்பாளர்களான ‘தில்’ ராஜும் சிரிஷ்ஷும் தயாரிக்கிறார்கள். விஜய்க்கு ஜோடி, இளசுகளின் ட்ரீம் கேர்ள் ஆன ராஷ்மிகா மந்தனா. இசை, தமன்.

சென்டிமெண்ட்டும் ஆக்‌ஷனும் கலந்த இந்த மாஸ் படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷ்யாம், பிரபு உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
இவர்கள் அனைவருமே தமிழிலும் தெரிந்த முகங்கள். எனவே அதிகாரபூர்வமாக ஆர்ட்டிஸ்ட்ஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாக வெளியாக ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கிறார்கள்.
இதற்கு இடையில்தான் ஒரு பெயர் பளிச்சிடுகிறது. இந்தப் பெயரைத்தான் தமிழர்கள் அதிக முறை கூகுளில் தேடியிருக்கிறார்கள்; தேடுகிறார்கள்.

அந்தப் பெயர், வம்சி பைடிபள்ளி!

‘விஜய் 66’ படத்தை எழுதி இயக்குபவர் இவர்தான்! தெலுங்குத் திரையுலகின் டாப் மோஸ்ட் யங் டைரக்டர்களில் ஒருவரான வம்சியின் பயோதான் என்ன?  
தெலங்கானா பகுதியில் உள்ள பீமரம்தான் வம்சியின் சொந்த ஊர். ஓரளவு வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். விவசாயம் உட்பட பல தொழிலகளை வம்சியின் குடும்பம் செய்து வந்தாலும் கூடவே இன்னொரு பிசினஸையும் நடத்தி வந்தது.அந்தத் தொழில்தான் இன்று டைரக்டராக வம்சி கோலோச்சவும் காரணம்.

அந்த பிசினஸ்... தியேட்டர்! பீமரம் பகுதியிலுள்ள ஒரு திரையரங்கை வம்சியின் குடும்பம் நடத்தி வந்தது. போதாதா..? வம்சி தவழ்ந்தது... தட்டுத் தடுமாறி நடை பயின்றது... எல்லாம் இந்த தியேட்டர் வளாகத்தில்தான். ப்ரொஜக்‌ஷன் வழியே திரையில் ஒளிர்ந்த பிம்பங்கள் குழந்தை வம்சியை ஈர்த்தது. சிறுவன் வம்சியை அதுவே வசீகரித்தது. தங்கள் தியேட்டரில் வெளியான அனைத்துப் படங்களையும் வம்சி தவறாமல் பார்த்தார்; ரசித்தார். மக்கள் எங்கெல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்... எந்த கட்டங்களில் கசிந்துஉருகுகிறார்கள்... என்பதையெல்லாம் தெளிவாகப் பார்த்தார்.

ஆனால், திரைத்துறைக்குள் நுழைய வேண்டும் என்று மட்டும் வம்சி நினைக்கவேயில்லை!ஹைதராபாத்திலுள்ள புகழ்பெற்ற உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சாஃப்ட்வேர் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கைநிறைய சம்பளம் வாங்கினார்.ஆனால், ஏதோ ஒன்று அவரை உறங்கவிடவில்லை. பணத்துக்குக் குறைவில்லை. வசதிக்கும் உணவுக்கும் கூட. எல்லாம்... எல்லாமும் கிடைத்தது. ஆனாலும் ஏதோ ஒன்று கிடைக்காத ஃபீலிங். என்ன அது..?ரூம் போட்டு யோசித்தவரின் மூளையில் பல்பு எரிந்தது. ஸ்விட்ச் போட்டு எரிய வைத்தவர், வம்சியின் நண்பர்!

அந்த நண்பரின் அண்ணன் திரைத்துறையில் இருப்பதை எதேச்சையாக அறிந்தார் வம்சி. மார்த்தாண்ட கே.வெங்கடேஷ்! இதுதான் நண்பரின் அண்ணன் பெயர். இந்த மார்த்தாண்ட கே.வெங்கடேஷ் வேறு யாருமல்ல... தெலுங்குத் திரையுலகின் மோஸ்ட் வாண்டட் எடிட்டர். மெகா ஸ்டார் சிரஞ்சீவியில் ஆரம்பித்து நாகார்ஜுனா வரை அனைத்து டாப் மோஸ்ட் நடிகர்களின் படங்களையும் எடிட் செய்து வந்தவர் சாட்சாத் மார்த்தாண்ட கே.வெங்கடேஷ்தான்.அந்தக் கணம்தான் எதை, தான் தேடிக் கொண்டிருக்கிறோம் என்பதையே வம்சி கண்டடைந்தார்.

சினிமா! அதுதான் நம் உலகம். அந்த உலகம்தான் நமக்கு நிம்மதியைத் தேடித் தரும் என்ற ஞானம் வம்சிக்குப் பிறந்தது. நம்பிக்கையோடு தன் உலகத்துக்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தார். வம்சியைக் கண்டதுமே... வம்சியுடன் உரையாடியதுமே மார்த்தாண்ட கே.வெங்கடேஷுக்கு அவரது திறமை புரிந்தது. நிச்சயம் பட்டையைக் கிளப்புவார் என நம்பினார். இயக்குநர் ஜெயந்திடம் வம்சியை அறிமுகப்படுத்தினார்.சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, மகேஷ்பாபு... என அனைத்து மாஸ் நடிகர்களையும் வைத்து சூப்பர் ஹிட் படங்களாக இயக்கி வந்த ஜெயந்த், உடனே வம்சியை தன் உதவியாளராகச்சேர்த்துக் கொண்டார்.

அசிஸ்டெண்ட் டைரக்டராக வம்சி பணிபுரிந்த முதல் படம், ‘ஈஸ்வர்’. இதே படம்தான் ஹீரோவாக பிரபாஸுக்கு முதல் படம்! கண்டதும் நட்பு பற்றிக் கொண்டது. வம்சியும் பிரபாஸும் நண்பர்களானார்கள்.‘ஈஸ்வரை’த் தொடர்ந்து ‘வர்ஷம்’, டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் டைரக்டராக அறிமுகமான ‘மாஸ்’, ‘பத்ரா’... என வம்சி உதவி இயக்குநராக பணிபுரிந்த படங்கள் அனைத்துமே மெகா ஹிட் அடித்தன.

இந்த நேரத்தில்தான் தயாரிப்பாளர் தில் ராஜு அறிமுகமானார். முதல் சந்திப்பே இருவருக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்திவிட்டது.  வம்சியை டைரக்டராக்க தில் ராஜு முடிவு செய்தார். தன் நண்பரான பிரபாஸை சந்தித்து இந்த மகிழ்ச்சியை வம்சி பகிர்ந்துகொள்ள... உடனடியாக கால்ஷீட் கொடுத்தார் பிரபாஸ்.அப்படி உருவான படம்தான் ‘முன்னா’! பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது... அதேநேரம் நஷ்டமும் இல்லை. சுருக்கமாக சொல்வதென்றால் முதலுக்கு மோசமில்லை என்ற நிலையைத்தான் ‘முன்னா’ ரிலீஸ் கண்டது.

எதனால் பம்பர் ஹிட்டை, தன் படம் அடையவில்லை என வம்சி ஆராய்ந்தார். செய்த தவறுகள் புரிந்தன. அடுத்தபடத்துக்கான திரைக்கதையை மெல்ல மெல்ல செதுக்கத் தொடங்கினார். இதற்காக அவர் எடுத்துக் கொண்ட கால அளவு இரண்டாண்டுகள்!ஸ்கிரிப்ட் பக்காவானதும் ஜூனியர் என்டிஆரை சந்தித்தார்.

ஒன்லைன் கேட்டதுமே கால்ஷீட் கொடுத்துவிட்டார். சமந்தாவும் காஜல் அகர்வாலும் அடுத்தடுத்து புக் ஆனார்கள்.பூஜை போடப்பட்டு ஷூட்டிங் தொடங்கி, படமும் வெளியானது.இம்முறை சொல்லி அடித்த கில்லியாக வம்சியின் இரண்டாவது படம் பாக்ஸ் ஆபீசை அதிர வைத்தது. அதுதான் ‘பிருந்தாவனம்’.

இந்த ப்ளாக்பஸ்டர் ஹிட், தெலுங்கு சினிமாவில் வம்சியின் இடத்தை அழுத்தமாகப் பதிவு செய்தது.இதனையடுத்து அவர் டைரக்ட் செய்த படம், ‘யவடு’. ராம் சரண் - அல்லு அர்ஜுன் இணைந்து நடித்த... ஃபேஸ்ஆஃப்-பை இன்ஸ்பிரேஷனாகக் கொண்ட இந்தப் படமும் வசூல் சாதனை நிகழ்த்தியது.‘யவடு’வின் இந்த வெற்றி வம்சிக்கு தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியது. நான்காவது படமாக மீண்டும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டையே கையில் எடுத்தார் - சின்ன திருத்தத்துடன்!

ஆம். இம்முறை தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த இருவரை ஹீரோவாக்கவில்லை. மாறாக, ஒருவர் தெலுங்கு; மற்றவர் தமிழ்... என மொழிக்கு ஒரு ஹீரோவை தேர்வு செய்தார்.
தெலுங்கு ரெப்ரசன்டேட்டிவ் ஆக படத்துக்குள் வந்தவர் நாகார்ஜுனா. தமிழ் சார்பாக ப்ராஜெக்ட்டுக்குள் நுழைந்தவர்... வேறு யார்... கார்த்திதான்!இவர்களுடன் தமன்னா, பிரகாஷ்ராஜ், கெளரவ வேடத்தில் ஸ்ரேயா ஆகியோர் நடித்த அந்தப் படம்... புரிந்திருக்குமே! அதேதான்... தமிழில் ‘தோழா’ என்றும் தெலுங்கில் ‘ஊப்பிரி’ என்றும் வெளியான இந்தப் படமும்
மெகா மகா ஹிட்.

ஐந்தாவதாக தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான பிரின்ஸ் மகேஷ் பாபுவை இயக்கினார். வம்சியின் கரியரிலேயே ஹை பட்ஜெட் படம் இதுதான். மட்டுமல்ல, மகேஷ்பாபுவின் 25வது படமும் இதுவேதான்.இப்படி பல அடைமொழிகளுடன் வெளியான வம்சியின் ஐந்தாவது படம், ‘மஹரிஷி’. சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்ற இந்தப் படம், வசூலிலும் பட்டையைக் கிளப்பியது.

சுருக்கமாகச் சொல்வதென்றால் வம்சி இயக்கத்தில் இதுவரை வெளிவந்த 5 படங்களும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தவை. திரையரங்க உரிமையாளர்களையும், விநியோகஸ்தர்களையும், தயாரிப்பாளர்களையும்... எல்லாவற்றுக்கும் சிகரமாக ரசிகர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவை.ஃபேமிலி சென்டிமெண்ட்டும், மாஸ் ஆக்‌ஷன் ப்ளாக்குகளும், க்ளாஸ் காட்சிகளும் வம்சியின் டிரேட் மார்க்.வம்சியின் இந்த சிக்னேச்சர் ‘விஜய் 66’ படத்திலும் அழுத்தமாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்.

கே.என்.சிவராமன்