தெளிவுஅதிர்ச்சி அடங்கிய சில நிமிடங்களில் மனதில் மெல்ல, ஆனால் வலுவாக அந்தக் கேள்வி எழுந்தது.

எப்படி இதைத் தாங்கிக் கொள்ளப் போகிறார்கள்?

மஞ்சுளா அனைவருக்குமான தேவதை. இனிமையும், பண்புகளும் நிறைந்த ஐந்து வயது வெல்லக்கட்டி. அவர்கள் வீட்டுக்குள் நுழையும்போதே கால்கள் வெட
வெடத்தன. உள்ளே மஞ்சுவின் தாத்தாவும், பாட்டியும் உட்கார்ந்திருந்தனர். இருவரின் கண்களும்  மூடியிருக்க, கைகள் குவிந்திருந்தன. எதிரிலிருக்கும் சிவபெருமானின் படத்துக்கு முன்னால் உட்கார்ந்திருந்தனர். அவர்களின் மன ஓட்டம் எனக்குத் தெளிவாகவே புரிந்திருந்தது. ‘‘எங்கள் பேத்தி குணமாகிவிட வேண்டும்...’’ கூடவே ஏதாவது வேண்டுதலையும் செய்து கொண்டிருப்பார்கள்.

எனக்குக் கிடைத்த தகவலை அவர்களிடம் எப்படிச் சொல்வேன்? ‘‘பார்த்து கவனமா சொல்லுங்க...’’ என்று தொலைபேசியில் தெரிவித்திருந்தார் டாக்டர். மூடநம்பிக்கைகள் இல்லாதவன் என்றாலும் ‘சனிப் பிணம் தனிப் போகாது...’ என்ற சொலவடை மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. இன்று மஞ்சு மருத்துவமனையில் இறந்துவிட்டிருந்தாள்.மூன்று நாளில் டெங்கு என்ற காரணம் காட்டி அவள் உயிர் பறிக்கப்பட்டிருந்தது. இரு வாரங்களுக்குமுன் கூட மஞ்சு சிரித்த அழகு இன்னும் கண்களில் நிற்கிறது. அவர்கள் வீ​ட்டின் நுழைவாயில் உயரம் குறைவானது. சராசரி உயரம் கொண்டவர்கள் நுழைந்தால்கூட அதில் தலை இடிபடும்.  

அன்று மஞ்சு வேகமாக உள்ளே நுழைந்தபோது அவள் தாத்தா ‘‘பாத்து... தலை இடிச்சுடப்போகுது...’’ என்று கூறியபோது அந்தக் குழந்தை அப்படிச் சிரித்தது. ‘‘தாத்தா... என் உயரம் ரொம்பக் கம்மி. என் தலை இதிலே எப்படி இடிக்கும்?’’ என்று கேட்டபோது தாத்தா அசடு வழிந்தார். வாயைப் பொத்தியபடி கண்களில் குறும்பு மின்ன மஞ்சு அப்போது சிரித்த காட்சி மனதில் தோன்ற, கண்கள் கலங்கின. தூரத்துச் சொந்தம் என்றாலும் நெருங்கிப் பழகிய குடும்பங்கள் எங்கள் இருவருடையதும். தவிர அடுத்தடுத்த தெருக்களில் குடியிருக்கிறோம். நாங்கள் சந்தித்ததெல்லாம் மகிழ்ச்சியான ​சூழல்களாகவே அமைந்துவிட்டிருந்தன.  

இது நேரெதிர் ​சூழல். குழந்தை மஞ்சு இறந்த விவரத்தை இவர்களிடம் எப்படி சொல்லப் போகிறேன்?  

‘‘என்னப்பா... இந்த நேரத்திலே வந்திருக்கே? ஆபீஸுக்குப் போகல்லியா?’’ என்று கேட்டார் மஞ்சுவின் பாட்டி. நான் பதில் கூறுவதற்குள் ‘‘டாக்டர் ரமணா உ​ன்கிட்டே ஏதாவது சொன்னாரா..? எப்போ மஞ்சுவை டிஸ்சார்ஜ் பண்ணப்போறாங்களாம்?’’ என்று கேட்டார் மஞ்சுவின் தாத்தா. மஞ்சுவை அட்மிட் செய்த மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ரமணா என் நண்பன்தான். என் மெளனத்தின் ​மூலம் கூறிய பதில் அவருக்கு எதையோ உணர்த்தியிருக்க வேண்டும். கொஞ்சநஞ்ச ஐயம் இருந்தாலும் அவர் கைகளை நான் பற்றியதும், என் கண்கள் தரையைப் பார்த்ததும் அதைப் போக்கியிருக்கும்.

‘‘மஞ்சு..?’’ குரல் நடுங்க கேட்டார்.  ‘‘எதிர்பார்க்காதது நடந்திடுச்சு... அரை மணி நேரத்துக்கு முன்னாலே மஞ்சு...’’அலறினார்கள். தலையில் அடித்துக் கொண்டார்கள். இறைவனை நிந்தித்தார்கள். மஞ்சுவுக்குப் பதிலாக தங்கள் உயிரை எடுத்துக் கொ​ண்டிருக்கலாமே என்று பிரலா​பித்தார்கள்.  இன்னும் பதினைந்து நிமிடங்களில் மஞ்சுவின் உடல் வீட்டுக்கு வந்துவிடும். அவள் அப்பா அம்மாவும் அதே ஆம்புலன்ஸில்தான் வரப்போகிறார்கள்.  மஞ்சுவின் தாத்தாவின் முகம் வெளுத்து விட்டது. கைகள் நடுங்கின. அவர் மனைவி மேஜை ​இழுப்பறையைத் திறந்து இரு மாத்திரைகளையும்  தண்ணீரையும் அவருக்குக் கொடுக்க அவர் இயந்திரத்தனமாக அவற்றை உட்கொண்டார்.

 கூடத்தின் நடுவிலிருந்த நாற்காலிகளை எடுத்து வீட்டின் வெளிப்புறத்தில் வைத்​தேன். இடம் வேண்டி இருக்கு​மே... அப்போதுதான் மேஜையின் மீதி​ருந்த பர்ஸை எடுத்து பீரோவுக்குள் மஞ்சுவின் தாத்தா வைத்ததைப் பார்க்க முடிந்தது. மஞ்சுவின் பாட்டி கண்ணீரோடு பூஜையறைக் கதவை ​மூடிக் கொண்டிருந்தார். ‘‘ஐயோ...’’ என்ற அலறலுடன் வீட்டுக்குள் நுழைந்தாள் ப்ரியா. மஞ்சுவின் அத்தை. தன் அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். ‘‘என்னம்மா இது... நம்ம வீட்டு மகாலட்சுமி போயிட்டாளாமே... கடவுளுக்குக் கண் இல்லையா? இப்பதான் பாஸ்கர் போன் பண்ணினான். அலறியடிச்சுட்டு வரேன். எப்போ கொண்டு வரப்போறாங்க..?’’

சற்று நேரத்தில் என் மனைவி காபி பிளாஸ்க்கோடு அங்கே வந்தாள். ‘‘தயவு செஞ்சு சொல்றதைக் கேளுங்க. அழுவதற்குக்கூட சக்தி வேணுமே. எல்லாரும் வரதுக்குள்ளே கொஞ்சம் காப்பி குடியுங்க...’’ என்றபடி காபியை நீட்டினாள்.  ப்ரியாவின் புலம்பல் தொடர்ந்து கொண்டிருந்தது. ‘‘இதையெல்லாம் கேட்க நான் உயிரோடு இருக்கணுமான்னு தோணுது...’’ என்றாள். அவளுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான குடும்பம் உண்டு என்பதும், அவளுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு என்பதும் நினைவுக்கு வந்தது.  

ப்ரியாவின் கணவர் காரை பார்க் செய்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார். தன் மாமனாரின் கரங்களைப் பற்றியபடி, ‘‘இந்த மாதிரி சமயங்களிலே கடவுள்  இருக்காரான்றதிலேயே சந்தேகம் வருது. செய்தியைக் கேட்டதிலிருந்து உலகமே நின்னுட்ட மாதிரி இருக்கு...’’ என்ற அவருக்கும் காப்பியை நீட்டினாள் என் மனைவி. காப்பி டம்ளரை வாங்கிக் கொண்டு சிறிது குடித்த ப்ரியாவின்  கணவரின் கை தன்னிச்சையாக அந்த டம்ளரை அசைத்து அசைத்துப் பார்த்தது. ஒருவேளை சர்க்கரை சரியாகக் கரையவில்லையோ?

இதற்குள் அக்கம்பக்கத்து வீடுகளிலும் செய்தி பரவிக் கொஞ்சம் கொஞ்சமாக வரத்தொடங்கி இருந்தனர்.  சற்று நேரத்தில் வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது. கதறல் ஒலிகள் உச்சத்தை எட்டின. மஞ்சு உள்ளே கிடத்தப்பட்டாள். யாரோ ஒருவர் அவள் தலைமாட்டில் ஒரு விளக்கை ஏற்றி வைத்தார்கள்.  அந்தக் குழந்தையைப் பார்க்கப் பார்க்க எனக்கும் துக்கம் அதிகமானது. அடுத்த தெருவில் வசிக்கு​ம் எங்களைப் பார்க்க அடிக்கடி வந்துவிடுவாள். என் மனைவியும் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தாள்.  பாஸ்கர் குரல் தழுதழுக்க, ‘‘நிச்சயம் மீண்டு வந்துடுவான்னு நம்பினேனே...’’ என்றபடி தலையைப் பிடித்துக்கொண்டான்.  

அவன் மனைவி,  மஞ்சுவின் முகத்தைத் தாங்கியபடி பேயறைந்ததுபோல் இருந்தாள். ‘‘மனசுவிட்டு அழுதுடு...’’ என்று அவளது அம்மா விசும்பிக் கொண்டே கூறினாள்.  
சற்று நேரத்தில் சாஸ்திரிகள் வந்தார். ஆக வேண்டியதைச் சொன்னார். பாஸ்கரைத் தேற்றும் விதத்தில் ‘‘இப்போது நான் இதைச் சொல்வது சரியான்னு தெரியலே... ஆனாலும் சொல்றேன்... பிறக்கும்போது ஆத்மா உடலில் சிறைப்படுகிறது. இறக்கும்போது அதற்கு விடுதலை கிடைக்கிறது. அதனாலே உங்க குழந்தைக்கு இப்போது எந்த துக்கமும் நடந்துவிடவில்லை. உங்க மனசை ஆறுதல் படுத்திக்கணும்... யார் கண்டது, அவளே உங்களுக்கு வருங்காலத்திலே குழந்தையாக​ப் பிறக்கலாம்...’’ என்றார்.  

சில நிமிடங்கள் கழித்து மஞ்சுவின் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியைகள் ஆறுபேர் வந்தார்கள். ‘‘அவ்வளவு ​புத்திசாலி... அவ பேசினா இன்னிக்கெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கலாம்... எங்களுக்கெல்லாம் இது பெரிய இழப்பு...’’ என்று நடந்த விஷயத்தை நம்ப முடியாத உணர்வோடு அவர்கள் கூறிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு உறவினரோ, நண்பரோ வீட்டுக்குள் நுழையும்போதும் வெளியே, உள்ளே என்று உணர்வுக் கூக்குரல்கள் மேலெழும்பின.  அன்றிரவு என் மனைவியிடம் மிகவும் கவலையுடன் ஒரு கேள்வியைக் கேட்டேன்.

‘‘பாவம், அவங்களெல்லாம் இந்த துக்கத்திலேயிருந்து சுலபத்திலே மீளமுடியாது. அவங்க வாழ்க்கையெல்லாம் இனிமே நரகமாகத்தான் இருக்கும் இல்லையா..?’’  அவள் சிறிது நேரம்  மெளனமாக இருந்தாள். பிறகு, ‘‘எனக்கு ​அப்படித் தோணலே... மீண்டு வந்திடுவாங்க...’’ என்றாள்.  ‘‘காலத்துக்கு எதையும் மாற்றுகிற சக்தி இருக்குன்னு சொல்லவ​ரியா..?’’ என்று கேட்டேன்.  ‘‘ஆமாம்... தவிர இன்னிக்கு யாருமே அத்தனை துக்கத்திலும் அவங்க வீட்டுக்குள்ளே நுழையும்போது தலையை இடிச்சுக்கலேன்றதை கவனிச்சீங்களா?’’ என்றாள்.

அருண் சரண்யா