அரண்மனை குடும்பம் - 24அந்த குகைப்பகுதி உள்ளே விசாலமாக இருந்தது. மையத்தில் தீக்குண்டம் போல் ஒரு நெருப்புத் தொட்டி இருந்து அதில் திகுதிகுவென தீ நாக்குகள் எரிந்துகொண்டிருக்க... அதன் வெளிச்சம் பக்கவாட்டு கல் சுவரில் பட்டு பிரதிபலித்தபடி இருக்க... அந்த தீக்குண்டத்துக்கு நேர் மேலே ஒரு உடும்பு தலை கீழாக தொங்கவிடப்பட்ட நிலையில் அதன் வயிற்றுப்பகுதி ஒரு ஐந்தாறு அங்குலத்திற்கு கிழிக்கப்பட்டு அதன் ரத்தமானது வடிந்து உடும்பின் முகம் வழியாக சொட்டு சொட்டாக சொட்டிக் கொண்டிருந்தது.

லேசான புகை சூழ்ந்திருக்க உள்ளே ஜல்லி சொன்ன மாரப்ப வாத்யார் ஒரு கோவணம் மட்டும் தரித்திருந்த நிலையில் அந்த யாக குண்ட நெருப்புக்குள் ஒரு இரும்புக் கோலை விட்டு கிளறிக் கொண்டிருந்தார்.தலையிலும் தாடையிலும் பல வருடங்களாய் சிரைக்கப்படாத அளவுக்கு காடு போல முடி! காலுக்கு ஜல்லி தைத்துக் கொடுத்திருந்த டயர் செருப்பு.
உள்ளே ஒரு மூலையில் காளியின் முகப்படாம் மட்டும் இருக்க அதன் முன் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது.

காளியின் முகப்படாம் முன் நிறைய கோழி முட்டைகள், குடுமி இல்லாத தேங்காய்கள், வேர்த்துண்டு கட்டுகள், ஒரு சிறு கூண்டுக்குள் தேவாங்கு ஒன்று என்று அந்த சூழலே வித்தியாசமாக இருந்தது.எல்லாம் ஒன்று சேர்ந்து எட்டிப்பார்த்த போதிமுத்துவின் விழிகளில் அதிர்வாக வழிந்து கொண்டிருக்க, ஜல்லி போதிமுத்துவைக் கடந்து நடந்து குண்ட நெருப்பைக் கிளறியபடி இருந்த மாரப்ப வாத்யாரின் காலடியில் விழுந்து வணங்கிவிட்டு எழுந்து நின்றான். அவன் வணங்கியதை மாரப்ப வாத்யார் பார்த்தது போலவே தெரியவில்லை.போதிமுத்துவையும் விழுந்து வணங்குபடி ஜல்லி சமிக்ஞை கொடுத்தான்.

போதிமுத்துவும் நெருங்கி வந்து காலில் விழுவதற்குள் அங்கிருந்து விலகி காளி முகப் படாம் இருக்கும் இடத்திற்குச் சென்று அங்கிருந்த ஒரு வேர்த் துண்டு கட்டை எடுத்து வந்து அதைப் பிரித்து அதை ஒவ்வொன்றாக நெருப்பில் போடத் தொடங்கி விட்டார் மாரப்ப வாத்யார் என்கிற கோவணக்காரர்.ஜல்லி விடாமல் காலில் விழச் சொல்லி தூண்டவும், போதிமுத்துவும் விழுந்து எழுந்து நின்றான்.“யாருடா இது புதுசா..?” என்று அதன் பிறகு மாரப்ப வாத்யாரிடமும் கேள்வி. ஆனால், முகம் பார்த்தே பேசாமல் தீக் குண்டம் மேலேயே இருந்தது பார்வை. அதைக் கிளறுவதும், அதில் வேர்த் துண்டை போடுவதுமாய் இருந்தது அவரின் செயல்.

“என் சினேகிதன் ஆசானே... பேரு போதிமுத்து. பூச்சிங்கள பிடிச்சி விஷமெடுத்து வித்து பொழப்பு நடத்தறான். இப்ப ஒரு பெரிய சிக்கல்ல இருக்கான். நான்தான் ஆசானே உங்களால நல்லது நடக்கட்டும்னு கூட்டி வந்தேன்...”“என்ன சிக்கல்டா அது?” என்கிற அடுத்த கேள்விக்கு போதிமுத்துவையே பதிலைச் சொல்லச் சொல்ல, அவனும் சொல்லி முடித்தான்.
சொல்லும்போது கை கட்டியபடியே பணிவாகச் சொல்லும்படி ஜாடை காட்டினான் ஜல்லி. போதிமுத்துவும் சொல்லி முடித்தான்.

“உன்னை ஆயுதமா வெச்சு கொல்லப் பாத்துருக்கான் ஒருத்தன்... நீயும் போய் சிக்கிட்டியா..?”“ஆமாம் ஆசானே... நான்தான் மனமொடக்கியை ஊதிவிட்டு போலீஸ்காரங்க கிட்ட இருந்து காப்பாத்தி கூட்டிக்கிட்டு வந்தேன்...” என்று போதிமுத்துவுக்காக இடையிட்டான் ஜல்லி.“ஓ... சும்மா கிடந்த சங்கை ஊதிட்டு வந்துட்டியா? அவனுங்க விட மாட்டானுங்களே..?”
“ஆமாம் ஆசானே! இப்ப அவங்களையும் சமாளிக்கணும்.

யாருக்காக யாரை கொலை பண்ணப் போனான் இந்த போதிமுத்துங்கறதையும் கண்டுபிடிக்கணும் ஆசானே!”“கண்டுபிடிச்சி..?” ஒரு மாதிரி இழுவைக்குரலில் கேட்டார் மாரப்ப வாத்யார்.“கொல்லச் சொன்னதும் பெரிய கை... கொல்ல வேண்டியவங்களும் பெரிய கையாதான் இருக்கணும். இடைல போதி சிக்கிட்டான். இவனைக் காப்பாத்தணும்னா அவங்க யார்னு தெரிஞ்சாதானே ஆசானே நல்லாருக்கும்..?”“அதுவும் சரிதான்...”“நீங்களும் சில்லரைல சம்பாதிக்காம ஒரே தடவைல நல்ல பெரும் பணமா பாத்துட்டு இதையெல்லாம் விட்டுடணும்னு சொன்னீங்களே...”“புரியுது... காக்கா குருவின்னு சுடாம, ஒரு சிங்கத்தை சுடச் சொல்றே... அப்படித்தானே..?”

“ஆமாம் ஆசானே...”“சரி போய் கட்டயக் கிடத்தி ஒரு ஒறக்கம் போடு. பொழுது விடியட்டும். பேசுவோம்...”என்ற மாரப்ப வாத்யார் அங்கே ஒரு பாறை இடுக்கில் இருந்து ஒரு கலயம் நிறைய இருந்த பாலை எடுத்து வந்து எரிந்தபடி இருந்த குண்டத்தில் தெளிக்கவும் ஒரு தினுசான சப்தத்தோடு அந்த குண்டம் அடங்கி புகை மண்டத் தொடங்கியது.

“வெள்ளிய பொன்னாக்கற ஐங்கோலக் கருவுக்கான மைச்சாம்பலைத்தான் செஞ்சுகிட்டிருக்கேன். இது அவிஞ்சு அடங்கவும் இதை எடுத்து அந்த மைய செஞ்சு குப்பில அடைச்சு கொடுக்கணும்... விடியவும் பார்ட்டி தேடி வரும். பார்ட்டி வந்து போகட்டும். நம்ம விசயத்தைப் பத்தி யோசிப்போம். நீ என்ன பண்றேன்னா... விடியவும் குறுக்குப் பாதைல போய் அருள்மணி கடைல எனக்கு பரோட்டாவும் சால்னாவும் வாங்கிட்டு வந்துட்றே! அப்படியே கிடா மார்க் சுருட்டையும் ஒரு கட்டு வாங்கிக்கிட்டு, குடுவைல காச்சப்பாட்டையும் (சாராயம்) ரொப்பிக்கிட்டு
வந்துடு...

நான் பொழுது விடியவும் நல்லா சாப்பிட்டு ஒரு பெரு ஒறக்கம் (தூக்கம்) போடப் போறேன். ஒறங்கி எழுந்தபிறகு நீ சொன்னதைப் பத்தி யோசிக்கிறேன்... என்ன..?” என்று கட்டளைக் குரலில் சொல்லிவிட்டு, பாதி குடித்து மீதியை அணைத்து விட்டு வைத்திருந்த சுருட்டுத் துண்டை தேடி எடுத்து வந்து தீப்பந்த நெருப்பில் பற்றவைத்துக் கொண்டார் மாரப்ப வாத்யார் என்கிற அந்த கோவணக்காரர்.

முகம் பார்த்தே பேசாத ஒரு அலட்சியமான அவரின் போக்கும் பேச்சும் போதிமுத்துவுக்கு வியப்பாக மட்டுமல்ல, சற்று அச்ச மூட்டுவதாகவும் இருந்தது.
ஜல்லியும் அதற்கு மேல் அவரிடம் பேசாமல் தட்டையான பாறைப்பரப்பின் மேல் ஏறி போதிமுத்துவையும் அருகில் அழைத்து “அப்படியே கொஞ்சம் படுப்போம்... விடியட்டும் பாத்துக்கலாம்...” என்றபடி தலைப்பாகையை அவிழ்த்து உதறி விரித்தான்.

அப்போது கூண்டுக்குள் இருந்த தேவாங்கு ஒரு தினுசாகக் கத்தி அச்ச மூட்டியது. மங்கலான தீப்பந்த வெளிச்சத்தில் அதைப் பார்த்தபடியே படுத்த போதிமுத்துவுக்கு தூக்கமே வரவில்லை. கற்பனை கூட செய்து பார்த்திராத ஒரு புதிய உலகிற்கு, தான் வந்திருப்பது உண்மை என்பது மட்டும் தெரிந்தது.அதுவரை அங்கே நடமாடிய மாரப்ப வாத்யாரும் எங்கோ போய் குகைப்பரப்பே மெளனமாய் காட்சியளித்தது. அதில் தீக்குண்டத்தின் மேல் தெரிந்த உடும்பின் உடல் போதி முத்துவுக்கு ஒரு பெரும் புதிராகவே தொங்கிக் கொண்டிருந்தது.ஏற்காட்டின் பங்களாவில் சேலம் நோக்கி புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தான் கணேசன்.

சேலம் நோக்கி அனுப்பப்பட்டிருந்த நாச்சிமுத்துவும் பங்கஜமும் காலை முதல் பஸ்ஸிலேயே சேலத்திலிருந்து கிளம்பி பங்களாவுக்கு திரும்பி வந்து விட்டிருந்தனர்.இருவரையும் பார்க்கவும் கணேசனிடம் ஒரு சன்னச் சிரிப்பு. நாச்சிமுத்து அதையே கிரான்ட்டடாக எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.“உடனே புறப்பட்டு வரச் சொன்னீங்கன்னாங்க... அதான் மொத பஸ்லயே கௌம்பி வந்துட்டோம்...”“ஆமாம்... அது சரி... என் மாமா போகச் சொன்னாருன்னு போனியே... எனக்கு போன் பண்ணி ஒரு வார்த்தை சொன்னியா..?”“எனக்கு உங்க நம்பரே தெரியாதுங்களே...”“ஓ... அப்படியா... சரி, இப்ப சொல்றேன் குறிச்சிக்க...” என்ற கணேசன் நம்பரைச் சொல்லவும் அதைக் குறித்துக்கொள்ள பேனா பேப்பரைத் தேடினான் நாச்சிமுத்து.

“வேண்டாம் இரு...’’ என்று தன் பர்சில் இருந்து தனது விசிட்டிங் கார்டை எடுத்துத் தந்தவனாய், “இதுல என் பர்சனல் நம்பர், ஆபீஸ் நம்பர்னு ெரண்டும் இருக்கு. மெயில் ஐடியும் இருக்கு. இதை பத்ரமா வெச்சுக்கோ. இனி மாமா சொன்னால்லாம் கேக்காதே... இந்த பங்களாவைப் பொறுத்தவரை நான் சொல்லணும்...” என்றான் கணேசன் சற்று கடுமையான குரலில்.
“நல்லதுங்க... எங்களை மாமாய்யா எதுக்கு போகச் சொன்னார்னே தெரியலீங்க... சேலம் போனா அங்க தோட்டத்துல எல்லாரும் திருதிருன்னு முழிக்கறாங்க. எனக்கு உடனேயே தப்பாதாங்க தோணிச்சு...”“தப்பாவா... புரியற மாதிரி சொல்லு...”“அதை எப்படிச் சொல்றதுன்னு தெரியலீங்க... மாமாய்யாவும் ரொம்ப படபடப்பா இருந்தாருங்க...”“அவ்வளவுதானே... வேற எதுவும் இல்லையே..?”“அவ்வளவுதாங்க...”

“சரி... போய் வேலைய பாரு... நாங்க இப்ப கிளம்பிட்டோம். ஜாக்ரதையா பாத்துக்கோ...”“உத்தரவுங்க...” நாச்சிமுத்து உள்நோக்கிச் செல்ல, அதுவரை தியாவைத் தூக்கிக்கொண்டிருந்த பங்கஜமும் அவளை விட்டுச் செல்ல, ரத்தி மட்டும் உறைந்து போன விழிகளோடு அமைதியாகப் பார்த்தபடி இருந்தாள்.

காருக்குள் நாச்சிமுத்து வரும் முன்பே பெட்டிகளை ஏற்றி விட்டிருந்த கணேசன் ரத்தியைப் பார்க்க அவளும் தியாவும் அரைமனதாக ஏறிக்கொள்ள அந்தக் கார் புறப்பட்டது. நாச்சிமுத்து பின்னாலேயே ஓடிவந்து பங்களாவின் க்ரில் கேட் கதவைத் திறந்துவிட்டு பிறகு பூட்டிக் கொண்டான். தியா பின்புறக் கண்ணாடி வழியாக பங்கஜத்திற்கு டாடா காட்டுவது நெடுந்தூரம் கார் மறையும் வரை தெரிந்தது!

ஏற்காட்டின் நகரப்பகுதி கடந்து சேலம் நோக்கிச் செல்லும் சாலையின் தொடக்கத்துக்கு கார் வந்தபோது போலீஸ் ஜீப்புடன் சில போலீஸ்காரர்கள் கண்ணில் பட்டனர்.
அருகாமை காப்பி தோட்டத்துக்குள் இருந்து மீதமுள்ள பாம்புகளோடு போதி முத்து வீசி எறிந்திருந்த பாம்புகளை அடக்கும் வட்டமான அந்த மூன்று பிரம்பு பெட்டிகளும் கிடைத்திருந்தன.

எஸ்.ஐ. சாமிக்கண்ணு போலீசுக்கே உரிய ஒயிட் டீ ஷர்ட், காக்கி பேண்ட உடுப்பில் ஜீப்பின் முன் சிந்தனையோடு நின்றபடி இருந்தார். பானட் மேலே அந்த பிரம்பு பெட்டிகள்!
அவரைப் பார்க்கவும் கணேசனும் காரை அவரருகே கிரீச்சிட்டு நிறுத்தினான்.

(தொடரும்)

அன்றுதான் சூரிய கிரகணம்!

காலை சீக்கிரமாகவே எழுந்து விட்டார் அசோகமித்திரன். அவருக்கும் முன்னால் எழுந்து குளித்து சந்தியாவந்தனமும் செய்து முடித்தவராக முன்வந்தார் கனபாடிகள்.
“உங்களோடு சேர்ந்து ஏரிக்குப் போய் குளிச்சிட்டு வரலாம்னு நினைச்சா நீங்க இங்கயே குளிச்சிட்டீங்க போலத் தெரியிதே..?” என்றார் அசோகமித்திரன்.

“பதினோரு மணிக்கு கிரகணம் பிடிக்கத் தொடங்கி 11.30 வரை அது நீடிக்கிறது... அந்த கிரகண காலத்துக்கு இரண்டு மணி நேரம் முந்தியும், இரண்டு மணி நேரம் பிந்தியும், ஆக நான்கு மணி நேரம் நான் ஜெபத்துல இருக்கேன்.

எச்சில்கூட விழுங்கமாட்டேன். கோயில் சன்னதியையும் 10 மணிக்கே மூடிடுவாங்க. அதனால இப்பவே போய் தரிசனம் பண்ணிட்டு வந்துடலாம்னு இருக்கேன்.நீங்க பின்னால கிணத்துல குளிச்சிட்டு வாங்க... நாம கோயிலுக்கு போய்ட்டு வந்துடலாம். மத்த விஷயங்கள நடந்துண்டே பேசுவோம்...” என்றார் கனபாடிகள்.

அசோகமித்திரனும் அவர் சொன்னது போலவே கொல்லைப் புறம் போய் குளித்துவிட்டு வந்தார். மணக்க மணக்க இருவருக்கும் டபரா டம்ளரில் காபி தரப்பட்டது. ஃபில்டர் காபி! அசோகமித்திரனுக்கு அதன் சுவையும் சூடும் பரமானந்தமாக இருந்தது.

தெருவில் இறங்கி நடந்தபோது ஒரு கிராமத்து வீதியின் அத்தனை அம்சங்களும் கண்களில் பட்டன.மாடு பிடித்தபடி சிலர் நடந்து சென்றனர். மேலே சட்டையில்லாமல் அரை டிரவுசரில் சிறுவர்கள் பம்பரம் விட்டுக் கொண்டிருந்தனர்.பெரும்பாலான வீடுகளில் சாணி தெளித்து கோலம் போட்டிருந்தனர். அதேபோல பெரும்பாலான வீடுகளில் முல்லைக் கொடி முன்னால் மதர்ப்பாய் வளர்ந்து அள்ளித் தெளித்தாற் போல் முல்லை மொட்டுகளும் துளிர்த்திருந்தன.

ஒரு டீக்கடையும் முகப்புத் தட்டியில் சில சினிமா போஸ்டர்களும் கண்ணில் பட்டன. டீக்கடை முன்பான மர பெஞ்சில் அமர்ந்திருந்தவர்கள், கனபாடிகளும், அசோகமித்திரனும் வரவும் மரியாதையாக எழுந்து நின்று அளவாகச் சிரித்தனர்.டீக்கடைக்குள் இலவச தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று யார் பார்க்கிறார்கள் என்கிற கேள்விக்கே இடமின்றி ஓடிக்கொண்டிருந்தது.
அந்தக் கடையைக் கடந்து நடக்கவும், எதிரில் பழமையான அந்த சிவாலயம் கண்ணில் பட்டது. முன்புறமாய் ராஜகோபுரம் - கோபுரச் சுவரில் காவிப் பட்டை. கோபுர வாசலில் தட்டையான கீற்றுக் கொட்டகை நிழலில் இரண்டு பூக்கடைகள். கடைகளில் மல்லிப்பூவும், தாமரைப் பூவும் நிறைய கண்ணில் பட்டன. சாமந்தி மாலைகள் தொங்கிக் கொண்டிருந்தன.

சற்றுத் தள்ளி காவிச் சுவரை ஒட்டி ஒரு டிவி சேனலின் வேனும் நின்றிருக்க அதன் சிம்பல் வேன் கண்ணாடியில் பளிச்சிட்டது. கனபாடிகள் அதைப் பார்த்துவிட்டுத் திரும்பிய நொடி கையில் பித்தளைக் குடத்துடன் கோயிலின் ஊழியன் ராஜாமணி தெரிந்து “வாங்கோ மாமா...” என்றான் பெருமூச்சுடன்.“என்ன ராஜாமணி... எப்படி இருக்கே..?”“இருக்கேன் மாமா... வாங்க...” என்று முன்னால் நடந்தான்.

பேச்சில் பெரிதாய் உயிர்ப்பில்லை.“ஆமா... டிவிகாரா யாரானா வந்துருக்காளா என்ன..?” அசோகமித்திரனுடன் பின்தொடர்ந்தபடியே பேசினார் கனபாடிகள்.
“ஆமாம் மாமா... கிரகணத்தின்போது சர்ப்பம் வந்து பூஜை பண்ணப் போறதைத் தெரிஞ்சு அதை படமா பிடிச்சு போடப் போறாளாம்...”“இதெல்லாம் தப்பாச்சே... யார் இதுக்கு பர்மிஷன் கொடுத்தா..?”“பர்மிஷன் வாங்க தர்மகர்த்தாவை பார்க்கப் போயிருக்கா...”ராஜாமணி நடந்தபடியே சொன்னது அசோகமித்திரன் காதிலும் விழுந்தது.

கனபாடிகள் முகத்திலும் ஏனோ சலனம்.சன்னதிக்குள் போய் நின்றபோது குருக்களின் சகோதரர் கண்ணில் பட்டார். குருக்கள் படுத்த படுக்கையாக இருப்பதால் இவர் வந்து நடை திறந்து நாகேஸ்வர லிங்கத்தின் முன் விளக்கேற்றி, ஊதுவத்தியையும் தகிக்க வைத்திருந்தார்.கனபாடிகளைக் காணவும் கற்பூர ஆரத்தி காட்டி எழுந்துவந்தார். விபூதி பிரசாதம் தரும்போது, “உங்களத்தான் எதிர்பார்த்துண்டு இருந்தேன்... அண்ணாவுக்கு ரொம்பவே முடியல. நீங்க வந்துட்டு போனவுடனே நடையைச் சாத்திண்டு வரச் சொல்லிட்டா...” என்றார் அவர்.

“நல்லது... நான் பிரதட்சணம் பண்ணிட்டு வரேன். நீ நடையைச் சாத்திட்டு புறப்படு!” என்றார்.“காத்தால இருந்து நூத்துக்கணக்குல வரத் தொடங்கிட்டா. நடை சாத்தப் போறத சொல்லி எல்லாரையும் வெளிய அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னாயிடுத்து...” என்று அவர் சொன்னதைக் கேட்டபடியே வெளியே வந்து வலம் வரத் தொடங்கினார் கனபாடிகள்.
அசோகமித்திரனும் உடன் நடந்தார். கோயிலின் மதில் சுவரை ஒட்டிய வெளியில் ஒரு வில்வமரம் தழைத்து வளர்ந்திருந்தது.

அந்த மரத்தின்மேல் ஏறித்தான் அந்த சர்ப்பமானது வில்வத்தை தன் வாயாலேயே கவ்விப் பறிக்கும் என்பதால் அதைக் கையால் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு நடந்தார் கனபாடிகள்.

இறுதியாக வெளியே வரவும், காத்திருந்த ராஜாமணியும், குருக்களின் தம்பியும் கோயில் கதவை இழுத்து மூடினர்.வெளியே ஒரு பெரும் கூட்டம் காத்திருந்தது. டிவி காரர்களுக்கு தர்மகர்த்தா அனுமதியளித்திருந்தார். ஆனால், கூட்டம் கூடினாலோ இப்படி கேமராவோடு காத்திருந்தாலோ சர்ப்பம் வராமல் போகக்கூடும் என்றும் சொல்லியிருந்தார். அவர்களும் எதற்கும் தயார் என்பது போல கூட்டத்தைப் படம் பிடித்தபடி இருந்தனர்.

அசோகமித்திரன் வரையில் ஏமாற்றம் ஒருபுறம், எதிர்பார்த்ததுதான் என்கிற எண்ணம் ஒருபுறம். கனபாடிகளிடம் “நீங்க வீட்டுக்கு போங்க... நான் ஊரை ஒரு சுற்று சுற்றிப்பார்த்துவிட்டு வருகிறேன்...” என்று சொல்லிவிட்டு பிரிய முயன்றபோது குருக்கள் இறந்து விட்டதாகச் செய்தி வந்து சேர்ந்தது. அப்போது மணி மிகச்சரியாக 10.30! நாடி ஜோதிடர் சொன்னது பலித்துவிட்டது!

இந்திரா செளந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி