கிஸ் to மதுரா நகரிலோ..! ஸ்ரீலீலா பளிச்



தொரக்க தொரக்க
தொரகிந்தி...
தலுக்கு சிலகா இதி!
பளக்க பளக்க
பளிகேஸ்து
ஜலக்கு
விசிறினதி...

- பலருக்கும் இந்தப் பாடலின் அர்த்தம் புரியாது. எந்தப்படம் என்பது கூட நிறைய பேருக்கு தெரியாது. ஆனால், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், முகநூல், டுவிட்டர், மோஜ்... உள்ளிட்ட அத்தனை தளங்களிலும் வைரல் ஹிட்டில் இருக்கிறது இந்தப்பாடலின் இந்த வரிகளும், வித்யாசமான  நடனமும். ‘பெல்லி சந்தத்’ படத்தின் ‘மதுரா நகரிலோ...’ என்னும் பாடலின் அனுபல்லவி வரிகள்தான் இன்று இணையத்தில் டிரெண்ட். இதற்கு அற்புதமாக நடனம் ஆடியவர்கள் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மேகாவின் மகன் ரோஷன் மற்றும் ஸ்ரீலீலா. இந்தப் பாடலின் ஸ்பெஷல் ஸ்ரீலீலாவின் கச்சிதமான நடன அசைவுகளும், அவரின் முகபாவங்களும்தான்.

யார் இந்த ஸ்ரீலீலா? அவரையே கேட்டுவிட்டோம். ‘‘‘கிஸ்’, ‘பராதே’, ‘பெல்லி சந்தத்’, ‘பை 2 லவ்’, ‘தமாகா’... இப்படி கன்னடம், தெலுங்கு ரெண்டு மொழிகளிலும் இதுவரை 6 படங்கள் நடிச்சிருக்கேன். அதுல இந்த ‘மதுரா நகரிலோ...’ பாட்டுதான் என்னை இந்தியா முழுக்க டிரெண்ட் ஆக்கியிருக்கு. கர்நாடகா பெங்களூருதான் சொந்த ஊர். தெலுங்கு குடும்பம். எங்க குடும்பமே செம படிப்ஸ் ஃபேமிலி. அம்மா கைனகாலஜிஸ்ட். நான் இப்ப எம்பிபிஎஸ் படிச்சுட்டு இருக்கேன். விரைவில் ‘டாக்டர் ஸ்ரீலீலா’ன்னு பெயர் வரும். ஆனாலும் நான் நடிப்பு, சினிமான்னு சொன்னப்ப வீட்ல சப்போர்ட் பண்ணினாங்க...’’ புன்னகைக்கிறார் ஸ்ரீலீலா.  

முதல் பட வாய்ப்பு எப்படி அமைந்தது?

‘கே ஜி எஃப் 1’ மற்றும் 2 படங்களின் சினிமாட்டோகிராபர் புவன் கௌடா என்னை புகைப்படம் எடுத்திருந்தார். அந்த போட்டோக்களை சோஷியல் மீடியால பார்த்துட்டு இயக்குநர் ஏ.பி.அர்ஜுன் அவருடைய ‘கிஸ்’ படத்தின் நாயகியாக தேர்வு செய்தார். இப்படித்தான் முதல் பட வாய்ப்பு அமைஞ்சது. எனக்கு தெலுங்கு சினிமா வட்டாரத்தில் நிறைய நண்பர்கள் இருக்காங்க. தாய்மொழி கூட தெலுங்குதான். ஆனாலும் நான் பிறந்த கன்னடத்தில்தான் முதல் படம் செய்யணும்னு வெயிட் பண்ணினேன். அதுக்கு கிடைச்ச பரிசுதான் ‘கிஸ்’ படம். அந்த படத்துக்கு எனக்கு SIIMAல பெஸ்ட் அறிமுக நாயகி அவார்டு கூட கிடைச்சது.

சினிமா துறையில் உங்களின் கனவு என்ன?

மொழி ஒரு தடை இல்ல. பெரிய பெரிய கனவுகள் சூழ சினிமாவுக்குள்ள அடி எடுத்து வச்சிருக்கேன். குறிப்பா எதைச் செய்தாலும் 100% உண்மையா நேர்மையா செய்யணும்... இதை மட்டும்தான் குறிக்கோளா எடுத்திருக்கேன். ஒரு நல்ல நடிகை என்கிற பெயர் ரொம்ப பெரிய கனவுதான். ஆனாலும் அந்தக் கனவை அடைய என்னால் முடிஞ்ச அளவுக்கு போராடுவேன்.

‘மதுரா நகரிலோ...’ பாடல் பற்றி சொல்லுங்க?

இப்ப வரைக்கும் சர்ப்ரைசா இருக்கு. இந்த பாட்டும் என்னுடைய டான்ஸும் இந்த அளவுக்கு ஃபேமஸ் ஆகியிருக்கறதை நினைக்கறப்ப என்னாலயே நம்ப முடியலை. எந்த வீடியோ app சோஷியல் மீடியாவை ஓபன் செய்தாலும் இந்தப் பாட்டு செம வைரல்ல இருக்கு. என்னுடைய உலகமே டான்ஸ்தான். என்னுடைய டான்ஸ் மூலமா நான் ஃபேமஸ் ஆகியிருக்கறதை நினைக்கும்போது இன்னமும் சந்தோஷமா இருக்கு. அந்தப் படத்தில் இருந்து ஒரு பாடல் மட்டுமல்ல... எல்லா பாட்டுமே இந்தியா முழுக்க செம ஃபேமஸ் ஆகிடுச்சு. அதனால் எந்த மொழிக்கு போனாலும் எனக்கு இந்தப் படமே ஒரு மிகப்பெரிய அடையாளமாவும் அறிமுகமாவும் இருக்கும்.

உங்க ஃபிட்னஸ் ரகசியம் என்ன?

எனக்கு ஜிம் போறதெல்லாம் பெரிய ஆர்வம் இல்லை. டான்ஸ்தான் என் ஃபிட்னஸ் சீக்ரெட். அப்பறம் நிறைய நடப்பேன்.

வெல்கம் டூ தமிழ் சினிமா?

ரொம்ப ஆச்சரியமா இருக்கு தமிழ் சினிமா மக்களுடைய அன்பையும் ஆதரவையும் பார்க்கும் போது. அவங்களை அவ்வளவு ஈசியா ஏமாற்றவே முடியாது. ஒரு நடிகரை அவங்க நம்பி ஏத்துக்க ஆரம்பிச்சுட்டா கிட்டத்தட்ட அவங்க வீட்டுக் குழந்தை மாதிரி பாத்துப்பாங்க. நல்ல நல்ல புராஜெக்ட்கள் தமிழ்ல பேசிக்கிட்டு இருக்கேன். விரைவில் மிகப்பெரிய அறிவிப்போடு தமிழிலும் என்ட்ரி கொடுக்கப் போறேன்.

தமிழ்ப் படங்கள் பார்க்கறதுண்டா?

என்ன இப்படி கேட்டுட்டீங்க... ஒரு படம் விடமாட்டேன். எல்லா தமிழ்ப் படமும் பார்த்திடுவேன். குறிப்பா இளைய தளபதி விஜய் சார், விஜய் சேதுபதி சார் படங்கள் எனக்கு அவ்வளவு இஷ்டம். அவங்க ரெண்டு பேர்தான் என்னுடைய ஃபேவரிட் ஹீரோக்கள். ஆங்.. இப்போ கூட முணுமுணுக்குற பாட்டு ‘மலமபித்தா பித்தாதே...’ (‘பீஸ்ட்’ - அரபிக் குத்து)

அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்கள்?

ரவிதேஜா சார் ஜோடியா ‘தமாகா’ படம் ரிலீசுக்கு காத்திருக்கு. ‘அனாகனகா ஒக்க ராஜு’ படம் நடிச்சுட்டு இருக்கேன். ‘நான் ஈ’, பாலகிருஷ்ணா சார் நடிச்ச ‘லெஜெண்ட்’... இப்படி நிறைய படங்களை தயாரிச்ச ‘வராஹி சலசித்திரம் புரொடக்‌ஷன் ஹவுஸ்’ சார்பா ஒரு படம் சைன் பண்ணிருக்கேன். சீக்கிரம் தமிழில் அறிமுகமாகப் போறேன். தளபதி  ஸ்டைல்ல சொன்னா ‘ஐயம் வெயிட்டிங்’!          
                    

ஷாலினி நியூட்டன்