டான்ல ஆர்ட் டைரக்‌ஷனுக்கு என்ன வேலைனு கேட்பதே வெற்றிதான்!



காலரை உயர்த்துகிறார் கலை இயக்குநர் மகேஷ்குமார்

‘‘‘டான்’ல என்னுடைய ஆர்ட் டைரக்‌ஷன் நல்லா இருக்குன்னு சொல்றாங்க. அந்தப் பெருமை எல்லாமே என்னுடைய குருநாதர் முத்துராஜ் சாருக்குத்தான் சேரும். அவர்தான் எனக்கு சினிமா கற்று கொடுத்தார்...’’ அடக்கத்துடன் சொல்கிறார் கலை இயக்குநர் மகேஷ்குமார். சினிமாவுல நடிக்கதான் சான்ஸ் தேடுவாங்க...

உங்களுக்கு எப்படி ஆர்ட் டைரக்‌ஷன் மீது ஆர்வம் வந்துச்சு?

அடிப்படையில் நான் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் ஸ்டூடண்ட். ஸ்கூல் படிக்கும்போது ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டுவேன். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்த திருவேங்கடம் என்ற டிராயிங் மாஸ்டர் என்னை கைட் பண்ணினார். நண்பர்கள் கழகமும் எனக்கு உதவிக்கரமா இருந்துச்சு. காலேஜ் அட்மிஷன் அவ்வளவு சுலபமா கிடைக்கல. தமிழ்நாட்டிலேயே சென்னை மற்றும் கும்பகோணம் ஆகிய இரண்டு இடங்களில்தான் ஓவியக் கல்லூரி இருக்கு. நுழைவுத் தேர்வு எழுதிதான் செலக்ட் ஆக முடியும்.

காலேஜ்ல சிலை வடிவமைப்பு பிரிவை தேர்ந்தெடுத்தேன். சென்னை ஸ்டெர்லிங் சாலையில் சிலம்பம் கலையை போற்றும் விதமாக காட்சி தரும் சிலைகள், தரமணி பூங்காவில் பாசத்தை வெளிப்படுத்தும் அண்ணன் - தங்கை சிலைகள்... எல்லாமே என்னுடைய கைவண்ணத்தில் உருவானவைதான்.அதுதான் என்னை சினிமாவுக்குள் கொண்டுவந்தது. காலேஜ் முடிச்ச பிறகு கலை இயக்குநர் முத்துராஜ் சாரிடம் வேலை செய்யும் வாய்ப்பு கிடைச்சது.  ‘நண்பன்’ படத்தில் குழந்தை சிலையை வடிவமைக்கும் வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து முத்துராஜ் சாரிடம் சிலை தொடர்பான பணிகளை செய்து கொடுத்தேன். ‘ஐ’ படத்தில் சாரிடம் உதவியாளனாக சேர்ந்தேன். ‘தெறி’, மெர்சல்’, ‘ரெமோ’, ‘2.0’ வரை சாரிடம் இருந்தேன்.

முதல் படமே சிவகார்த்திகேயன் படமாக அமைந்தது எப்படி?

‘மெர்சல்’ படத்தில் வேலை செய்யும்போது முத்துராஜ் சாருடன் போலந்து சென்றேன். அந்தப் படத்தில் ‘டான்’ இயக்குநரான சிபி சக்கரவர்த்தி உதவி இயக்குநர். அப்போது முதல் எங்களுக்குள் நட்பு ஆரம்பமானது. ‘நான் படம்போது என்னுடைய படத்துக்கு நீதான் ஆர்ட் டைரக்டர்’ என சிபி சொல்லியிருந்தார். சொன்னபடி ‘டான்’ படத்தில் வேலை செய்ய அழைத்தார்.
சிவ கார்த்திகேயன் சாரை ‘ரெமோ’ படத்திலிருந்து பழக்கம். படத்துக்குள் என்னை அழைத்து வந்தது சிபி என்றால் எனக்கு அங்கீகாரம் கொடுத்தவர் சிவகார்த்திகேயன் சார். எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் கலையும் எனக்கு உறுதுணையாக இருந்தார்.

‘டான்’ செட்டை பார்த்துவிட்டு ‘என்னுடைய படத்துக்கு பெரிய செட் ஒர்க் போட்டு அசத்திட்டீங்க’னு சிவா சார் பாராட்டியதை மறக்க முடியாது. சிவா சார் நடிப்பைத் தாண்டி டெக்னிக்கலாவும் நிறைய விஷயம் தெரிஞ்சு வெச்சிருப்பார். அந்த விதத்துல செட் ஒர்க்கை மிக துல்லியமா கவனிச்சு அதோட ஸ்பெஷலாட்டியை சொல்லி பாராட்டினார்.

‘டான்’ மாதிரியான கமர்ஷியல் படத்தில் ஆர்ட் டைரக்‌ஷனுக்கு என்ன வேலை இருந்திருக்க முடியும்?

இது பலருடைய கேள்வியா இருக்கு. எல்லா படத்திலும் ஆர்ட் டைரக்‌ஷனுக்கான வேலை இருக்கும். சில படங்களில் வெளிப்படையா தெரியும். சில படங்களில் அது தெரியாது.
‘டான்’ படத்தில் காலேஜ் பெயர் பலகையை மாற்றியது, மழைக் காட்சிகள், காலேஜ் அடையாள அட்டை, க்ளாஸ் ரூம், மேஜை, நாற்காலி, மேசை என எல்லாவற்றையும் கதையோடு பயணித்து கலர் கொடுத்து வேலை செய்திருப்பேன்.

பொதுவா செட் ஒர்க் என்றால் சாங்ல தெரிஞ்சுடும். இதுல சூரி சார் வீடு, காலேஜ் கேம்பஸ், கேன்டீன், பெரிய சைச் புக்ஸ் இதெல்லாமே செட் ஒர்க். அதற்கு முன் அந்த இடம் எம்ப்டி ப்ளேஸா இருந்துச்சு. ஆனா, படத்துல அது செட் ஒர்க்னு தெரியாது. ‘ஜலபுல...’ சாங் ஓப்பன் கிரவுண்ட்ல செட் போட்டு எடுத்தது. பார்ட்டி சாங்கும் செட்ல எடுத்தது. காலேஜ் மொட்டை மாடியை பெயிண்ட் பண்ணியது உட்பட எல்லாமே ஆர்ட் டைரக்‌ஷனோட வேலை.

சமீப காலமாக மாணவ, மாணவிகள் ஒழுங்கீனமாக நடந்து வரும் வேளையில் டிரைலரில் ‘ஆசிரியரை டார்ச்சர் செய்வது எப்படி?’ என்ற புத்தகத்தை வாசிப்பது போல காண்பித்தது மாணவர்களை மேலும் தவறான பாதைக்குத் தூண்டும் விதமாக இருக்குமே... மாஸ் ஹீரோ படத்தில் இதை எப்படி கொண்டு வந்தீர்கள்?

நானும் அந்த வீடியோவை பார்த்தேன். சினிமாவைப் பொறுத்தவரை எல்லாமே டீம் ஒர்க்கா பண்ணுவார்கள். அந்த மாதிரி புத்தகம் படத்தோட கன்டன்ட்டுக்கு தேவையா இருந்துச்சு. டைரக்‌ஷன் டிப்பார்ட்மெண்ட் ஐடியா அது. கமர்ஷீயல் காமெடி படம் என்பதால் எல்லாமே ஒருவித ஃபன்னுக்காக பண்ணியது. கடைசியில், எஸ்.ஜே.சூர்யா சார் ஒரு டயலாக் பேசியிருப்பார்... ‘எல்லாரும் ஒவ்வொரு காலகட்டதுல விளையாட்டா இருந்திருப்போம். பக்குவப்படும் வயது வந்ததும் எல்லாரும் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வார்கள்...’ அதைதான் மனசுல வெச்சுக்கணும்.

உங்கள் குருநாதர் முத்துராஜிடம் கற்றது?

முத்துராஜ் சார் படம் பார்த்துவிட்டு டீடெயிலா நோட் பண்ணி பாராட்டினார். குருவோட அந்த பாராட்டை முக்கியமா பார்க்கிறேன். காலேஜ் முடிச்சதிலிருந்து சாரிடம்தான் இருந்தேன். சாருடன் ஒர்க் பண்ணும்போது ஸ்டோரி டிஸ்கஷன் டைமிலிருந்து டிராவல் பண்ணுவேன். டைரக்டர்களின் எதிர்பார்ப்பு , கேமராமேன்களின் கேமரா கோணங்களுக்கு ஏத்தமாதிரி எப்படி செட் அமைத்து தரவேண்டும் என்பதெல்லாம் சாரிடமிருந்து கற்றுகொண்டேன். சாதாரணாம தெரியும் ஒரு பொருளை சினிமாவுக்காக எப்படி மாற்றுவது என்பதையும் சாரிடம்தான் கற்றேன்.

இப்ப வேறென்ன படங்கள் செய்கிறீர்கள்?

சித்தார்த் சார் நடிக்கும் ‘டக்கர்’, சுசீந்திரன் சார் இயக்கும் ‘வள்ளிமயில்’. இவ்விரண்டு பணிகளிலும் எனக்கான சவால் நிறையவே இருந்தது. சினிமா தவிர விளம்பர படங்கள், ஆல்பம் ஒர்க்கும் பண்றேன். சமந்தா நடிச்ச ஜூவல்லரி விளம்பரம்,  மெட்ராஸ் கிக், ஐதராபாத் கிக் ஆல்பம் எல்லாமே நான் பண்ணியது.

ஆர்ட் டைரக்டர் ஞாபகத்தில் வைத்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்?

செட் போடும்போது அளவீடுகள் முக்கியம். 30 அடி இடத்தில் 20 அடி செட் போட்டால் எந்தளவுக்கு கேமராமேனால் கேப்ச்சர் பண்ணமுடியும் என்ற புரிதலுடன் செட் போடணும். கலர் சென்ஸ் முக்கியம். பேக் டிராப்க்கு கூல் கலர்ஸான பச்சை, நீலமும் வார்ம் கலர்ஸான சிவப்பு, மஞ்சள் பயன்படுத்துவோம். காதலைச் சொல்ல சிவப்பு கலர் யூஸ் பண்ணுவோம்.
‘டான்’ படத்துல பார்ட்டி சாங்ஸ்ல பூக்களை க்ளோ எஃபெக்ட்டில் காண்பிக்க விசேஷ மெட்டீரியல் பயன்படுத்தினேன். அந்தப் பாடல் பேசப்பட்டது.   

எஸ்.ராஜா