எப்படியிருக்கு உக்ரைன் சினிமா..?



உலகப் பத்திரிகைகள், நாளிதழ்கள், சமூக வலைத்தளங்கள்... என அனைத்து ஊடகங்களிலும் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் குறித்த செய்திகளே அலங்கரிக்கின்றன.
போர் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் உக்ரைனைப் பற்றிய சுவாரஸ்யங்களை அறிந்துகொள்வதற்காக பொது மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் உக்ரைன் திரைப்படங்களின் மீது பலரது கவனம் திரும்பியிருக்கிறது.

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட்டுடன் ஒப்பிடும்போது உக்ரைனின் திரைப்படத்துறை ரொம்பவே சிறியது. அந்நாட்டைத் தாண்டி உக்ரைனின் படங்களுக்கு பெரிய சந்தை இல்லை. பல உக்ரைன் படங்கள் திரைப்பட விழாக்களில் மட்டுமே வெளியாகியிருக்கின்றன. சமீபத்தில் ஒருசில உக்ரைன் படங்கள் ‘நெட்பிளிக்ஸ்’ போன்ற ஓடிடி தளங்களில் காணக்கிடைக்கின்றன. தவிர, உக்ரைனுக்குள்ளேயே ஹாலிவுட்டிலிருந்து வெளியாகும் படங்கள்தான் அதிக வசூலை அள்ளுகின்றன.

அங்கே இருக்கும் 2300க்கும் அதிகமான ஸ்கிரீன்களில் 80 சதவீதத்தை ஹாலிவுட் படங்களே ஆக்கிரமித்திருக்கின்றன. வருடத்துக்கு அதிகபட்சமாக 50க்கும் குறைவான படங்களே உக்ரைனில் தயாரிக்கப்படுகின்றன. முழுநீளப்படம், ஆவணப்படம், அனிமேஷன் என அனைத்து வகையான படங்களும் இந்த 50க்குள் அடங்கும். இச்சூழலில் கடந்த சில வருடங்களில் வெளியான சிறந்த உக்ரைன் படங்களைப் பற்றிய விவரங்கள் இதோ...

அட்லான்டிஸ்  (Atlantis)

இதுவும் போர் பற்றிய படம் தான். ஆனால், படத்தின் கதை எதிர்காலத்தில் நடக்கிறது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் முடிந்து ஒரு வருடமாகிறது. அதாவது 2025ம் வருடம் உக்ரைனின் இராணுவ வீரன் ஒருவன் அமைதியைத் தேடி அலைகிறான். அவனால் போர் முடிந்துவிட்டது என்று நம்பக்கூட முடியவில்லை. அவனுக்குள் போர் ஏற்படுத்திய பாதிப்புகளின் வழியாக போர் மீதான எதிர்ப்பை, போரின் அவலங்களை சாட்டையில் அடித்த மாதிரி பதிவு செய்கிறது இந்தப் படம். 2019ம் வருடம் வெளியான இப்படத்தின் இயக்குநர் வேலன்டின் வஸ்யனோவிச். இருபதுக்கும் மேலான விருதுகளை வென்றுள்ள இப்படம் சுமார் 29 லட்ச ரூபாய் வசூலித்திருக்கிறது.

த கைடு  (The  Guide)

முப்பதுகளின் மத்தியில் படத்தின் கதை நிகழ்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த எஞ்சினியர் ஒருவர் தனது பத்து வயது மகனுடன் உக்ரைனுக்கு வருகிறார். வந்த இடத்தில் அவர் கொலை செய்யப்படுகிறார். தனித்து விடப்படும் மகன் ஒரு கண் தெரியாதவருக்கு வழிகாட்டியாக மாறி எப்படி உக்ரைனில் பிழைத்திருக்கிறான் என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஒலேஸ் சனின். சமீப வருடங்களில் உக்ரைன் சினிமாவுக்கு சர்வதேச அங்கீகாரத்தை வழங்கிய படங்களில் இப்படம் முக்கியமானது. கண் தெரியாதவர்களுக்காக ஆடியோவில் மாற்றம் செய்யப்பட்டும் இப்படம் வெளியானது. 15 கோடி ரூபாயில் உருவான இப்படம் 2014ல் வெளியாகி, 7 கோடி வசூல் செய்தது.

பேட் ரோட்ஸ் (Bad Roads)

‘‘போர் காட்சிகளைக் காட்டாமல் போர் மற்றும் அதன் பாதிப்புகளை அழுத்தமாக பதிவு செய்திருக்கிற படம்...’’ என்று ரசிகர்களும், விமர்சகர்களும் ‘பேட் ரோட்ஸை’க் கொண்டாடி வருகின்றனர். 2022ம் வருடத்துக்கான சிறந்த அயல்நாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு உக்ரைனிலிருந்து அனுப்பப்பட்ட படமும் இதுவே. ‘வெனிஸ்’ திரைப்பட விழாவில் முக்கிய விருது உட்பட 10 விருதுகளைத் தட்டியிருக்கிறது இந்தப் படம்.

2014ம் வருடத்தின் ஏப்ரல் மாதம். உக்ரைனில் உள்ள டான்பாஸ் எனும் பகுதி. அங்கே உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் தொடங்கிய நாட்களில் படத்தின் கதை நிகழ்கிறது. டான்பாஸில் மக்கள் பயணிக்கிற எந்த சாலையும் பாதுகாப்பாக இல்லை. அடுத்து என்ன செய்வதென்று அந்த சாலைகளில் பயணிக்கும் யாருக்குமே தெரிவதில்லை.
மக்கள் பாதுகாப்புக்காக எந்த இடமும், சூழலும் இல்லை என்று போரின் பதற்றங்களை ஆழமாகச் சித்தரித்திருக்கிறார் இயக்குநர் நடால்யா வொரொஸ்பிட். சமகால உக்ரைனின் முக்கியமான பெண் இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் இவர். இதுவரை இந்தப் படம் 21 லட்ச ரூபாயை வசூலித்திருக்கிறது.

ஹோம்வார்டு (Homeward)

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான ஆச்சர்ய கதை இது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் மூத்த மகனை இழந்துவிடுகிறார் முஸ்தபா. போர்க்களத்தில் இருக்கும் தனது மகனின் உடலை எடுத்துக்கொண்டு போய் சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும். இதற்காக இளைய மகனுடன் செல்கிறார் முஸ்தபா.

இளைய மகனுக்கும் தந்தைக்கும் அவ்வளவாக நல்ல உறவு இல்லை. ஊருக்குப் போகும் பயணத்தில் தம்பிக்குள் நிகழும் மாற்றங்களும், அப்பாவை அவன் புரிந்துகொள்ளும் விதமும்தான் கிளைமேக்ஸ். 2019ல் வெளியான இப்படத்தின் இயக்குநர் நாரிமன் அலீவ்.

பிளாக் லெவல் (Black Level)

மனிதனின் தனிமையைப் பற்றிய முக்கியமான படம் இது. உக்ரைனில் உள்ள பெரு நகரம். அங்கே வசித்து வரும் கோஸ்டியாவுக்கு வயது 50. திருமண நிகழ்வுகளுக்கு புகைப்படம் எடுக்கும் தொழிலைச் செய்து வருகிறார். சமீபத்தில்தான் அவருடைய தந்தைக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. அவருடைய காதலியும் கோஸ்டியாவைப் பிரிந்து சென்றுவிடுகிறாள்.

தனிமையில் சுழல்கிறார் கோஸ்டியா. மகிழ்ச்சி பொங்கும் திருமண நிகழ்வுகளுக்குப் புகைப்படம் எடுப்பதே அவருக்குத் துயர அனுபவமாக மாறிவிடுகிறது. இந்தத் தனிமையிலிருந்து விடுபட கோஸ்டியா என்ன செய்கிறார் என்பதே இப்படத்தின் மீதிக்கதை. 2017ல் வெளியான இப்படம் உக்ரைன் சார்பாக ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், விருதை வெல்லவில்லை. ‘அட்லான்டிஸ்’ படத்தை இயக்கிய வேலன்டின் வஸ்யனோவிச்தான் இப்படத்துக்கும் இயக்குநர்.

த.சக்திவேல்