102 வயது சாம்பியன்!



தாய்லாந்து முழுவதும் 102 வயதான சவாங் ஜான்ப்ராமைப் பற்றித்தான் ஹாட் டாக்.

சமீபத்தில் அங்கே 100 முதல் 105 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப் போட்டிகள் நடந்தன. 100 மீட்டர் ஓட்டம், ஈட்டி எறிதல் உட்பட அனைத்து போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார் சவாங். குறிப்பாக 100 மீட்டர் தூரத்தை 27.08 நொடிகளில் எட்டியுள்ளார். 2009ம் வருடம் 9.58 நொடிகளில் 100 மீட்டர் தூரத்தை எட்டி உலக சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார் உசேன் போல்ட்.

தினமும் 70 வயது மகளுடன் நடைப்பயிற்சி செய்வது, மனதை நேர்மறையான எண்ணங்களுடன் வைத்துக்கொள்வது, தோட்டத்தில் கீழே விழுந்திருக்கும் இலைகளைக் கூட்டிப் பெருக்குவதுதான் சவாங்கின் ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணம். தவிர, வாரம் இரண்டு முறை  ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல் போன்ற தடகளப் பயிற்சிகளை மேற்கொள்கிறார் சவாங்.

இப்போது சவாங்கின் நடைப்பயிற்சி முதல் ஓட்டப்பந்தயம் வரையிலான அனைத்து வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

த.சக்திவேல்