கலெக்டர் கைதியானார்… கைதி அமைச்சரானார்..! மதுரை சிறையின் உண்மைக்கதை
‘‘ஒரு மனிதன் திருந்தவும் அல்லது மேலும் கெட்டுப்போகவுமான எல்லா சூழ்நிலைகளையும் ஒரு சிறை வைத்திருக்கிறது. சிறைகள் எல்லா கைதிகளையும் ஒரே பாத்திரத்தில் போட்டு ஒரு குலுக்கு குலுக்கிவிடுகிறது. அதனால்தான் கைதிகள் திருந்துவதற்கான வாய்ப்புகள் அங்கே குறைவு.
அத்துடன் பெரிய பிஸ்தாக்கள் என்றால் ஒரு சலுகை, பிக்பாக்கெட்காரர்கள் என்றால் கண்டுகொள்ளப்படாமை போன்ற பல்வேறு நிர்வாகக் குறைபாடுகளும் அரங்கேறுகின்றன. உண்மையில் சிறை என்பது மனம் திருந்துவதற்கான ஒரு வாய்ப்பாக இல்லாமல் கைதிகளுக்கு வாழ்நாள் முழுவதுமான ஒரு சிறையாக மாறுகிறது...’’ என்கிற நல்லதம்பி, தமிழகத்தின் சிறைகளுக்கான ஓர் உதாரணமாக மதுரை மத்திய சிறை இருப்பதாகச் சொல்கிறார். முப்பது வருடங்களாக மதுரை சிறையில் பணிபுரிந்த அனுபவங்களை வைத்து, ‘சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்’ என்ற புத்தகத்தை மதுரை நம்பி எனும் புனைபெயரில் எழுதியிருக்கிறார் நல்ல தம்பி. சமீபத்தில் இந்தப் புத்தகத்தை ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வெளியிட்டது. சென்னைப் புத்தகத் திருவிழாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் புத்தகம் பற்றியும், சிறை அனுபவங்கள் குறித்தும் அவருடன் பேசினோம்.
‘‘1985ம் வருடம் மதுரை மத்திய சிறையில் காவலராகச் சேர்ந்தேன். இரண்டாம் நிலை வார்டன் அல்லது கான்ஸ்டபிள் என்று இந்தப் பதவியைச் சொல்லலாம். வேலைக்குச் சேர்ந்ததும் மதுரையில் படித்து வந்த பி.ஏ படிப்பை இடையில் விட்டுவிட்டேன். சொந்த ஊர் மதுரை பெத்தானியாபுரம். குடும்பத்துடன் மதுரையில்தான் வசிக்கிறேன். மதுரை சிறையில் பல சிறைக் காவலர்களுக்குப் பதவி உயர்வு என்பது 10 அல்லது 12 வருடங்களில் கிடைத்துவிடும்.
ஆனால், நான் சிறையில் வேலை செய்துகொண்டே காவலர்களின் உரிமை, கைதிகளின் உரிமைகள் பற்றிப் பேசி வந்ததால் என் பதவி உயர்வில் உயரதிகாரிகள் கைவத்து விட்டார்கள். 25 வருடங்களுக்குப் பிறகுதான் ஏட்டுப் பதவியை அடைந்தேன். மேலும் 5 வருடங்களுக்குப் பிறகுதான் உதவி சிறைக் காவலர் எனும் பதவி கிடைத்தது...’’ என்று ஆரம்பித்த நல்லதம்பி, மதுரை சிறை குறித்து விவரித்தார்.
‘‘சுமார் 30 ஏக்கர் சுற்றளவு கொண்டது மதுரை சிறை. 1400 முதல் 2000 கைதிகளாவது புழங்கலாம். தண்டனைக் கைதிகள் மற்றும் ரிமாண்ட் கைதிகள் எனப்படும் விசாரணைக் கைதிகளுக்கு என்று தனித்தனியான ப்ளாக்குகள் இருக்கும். ‘மகாநதி’ போன்ற படங்களில் காண்பிக்கப்பட்ட சிறை மாதிரிதான் மதுரை சிறையும் பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படும். கஞ்சா பயன்பாடு, பாலியல் சீண்டல், ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். வசதிகள் குறைவு. சுகாதாரக்கேடு அதிகம். உணவுக்கூடத்திலும், சமையல் கூடத்திலும் சுகாதாரமே இருக்காது...’’ என்கிற நல்லதம்பி, ‘‘ஒரு சிறை என்பது அந்தச் சிறை அதிகாரிகளின் மனப்பான்மைக்கு ஏற்றபடிதான் இருக்கும்...’’ என்று வெளிப்படையாகச் சொல்கிறார்.
‘‘சில பெரிய மனிதர்களுக்கு மட்டுமே சிறப்பான சலுகைகள் வழங்கப்படும். மற்றபடி எல்லா கைதிகளும் ஒரே மாதிரிதான் நடத்தப்படுவார்கள். அதனால்தான் ஒரு கைதி திருந்துவதற்கான சூழ்நிலை அங்கே இருப்பதில்லை. சில குற்றவாளிகள் திரும்பத்திரும்ப சிறைக்கு வருவார்கள். சிலர் புதிதான கைதிகளாக இருப்பார்கள். சிலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளிகளாக மாறியிருப்பார்கள். சிலர் விபத்தாக குற்றம் புரிந்திருப்பார்கள்.
இவர்களை எல்லாம் பாகுபடுத்தி, அவர்களின் தராதரம் அறிந்து, அதற்கேற்ப சூழலை உருவாக்குவதில் சிறைத்துறை தவறுகிறது. ஒரு கைதியின் தேவைக்கேற்ப சுகாதாரம், உணவு, உளவியல் பிரச்னைகளைக் கையாள்வதில் சிக்கல் இருப்பதால்தான் சிறை என்பது ஒரு கொடுமையான இடமாகத் திகழ்கிறது...’’ என்கிற நல்லதம்பி, சிறையில், தான் சந்தித்த மிக முக்கியமான ஆளுமைகளைக் குறித்தும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். 31 அத்தியாயங்களில் 37 மனிதர்களின் சிறைக்கதைகள்.
‘‘சிறையில் கைதிகள் நடத்திய ஒரு போராட்டத்தை அடக்க சுடும் உத்தரவு பிறப்பித்த ஒரு கலெக்டரே பிறகு ஒரு ஊழல் வழக்கில் கைதியாக வந்தது; சிறையில் கைதியாக இருந்த ஒருவர், பிறகு சிறைத்துறை அமைச்சராக மாறியது... என பலபேரின் கதைகளை இதில் உலாவவிட்டிருக்கிறேன். ஒரு சாதாரண கைதி, கொடூரமான கைதியாக மாறுவதும், ஒரு கொடுமையான கைதி மனம் திருந்தி புதுவாழ்க்கையை அமைத்திருப்பதுமான கதைகளுக்காகத்தான் இந்தப் புத்தகத்துக்கு ‘சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்’ எனப் பெயரிட்டேன். இந்த 30 வருட சிறை அனுபவத்தில் இந்தக் கதைகள் ஒரு துளிதான். இன்னும் ஏராளமான கதைகள் மனதின் ஆழத்தில் இருக்கின்றன...’’ என்று முடித்தார் நல்லதம்பி.
டி.ரஞ்சித்
|