கலைஞர் முதல் கமல்ஹாசன் வரை கலக்கும் பந்தல் சிவா



50 ஆண்டுகள்... 10 பிரதமர்கள்...25 முதலமைச்சர்கள்... 10 ஜனாதிபதிகள்...

நான்கு கீற்றுக் கொட்டகைகள், மூங்கில்கள் கட்டி அமைத்தாலும் பந்தல்தான். ஆயிரக்கணக்கான தூண்கள் அமைத்து, தகரசீட்டுகள் போட்டு, பிரம்மாண்ட மேடை அமைத்தாலும் பந்தல்தான்.
சாதாரண பந்தலுக்கு இவ்வளவு மவுசா என்றுதான் பந்தல் சிவாவைப் பார்க்கிற வரை அனைவரும் நினைப்பார்கள். அவரையோ, அவர் அமைத்திருக்கும் பந்தலையோ பார்ப்பவர்கள் அதற்குப் பின்பு தன் கருத்தை மாற்றிக் கொள்வார்கள். அப்படியொரு அழகு, கலைநயம், பிரம்மாண்டம்.

செம்மொழி மாநாட்டுக்கு லட்சம் பேர் அமர்ந்த லட்சக்கணக்கான சதுர அடி கொண்ட ராஜராஜன் அரியணைத் தோற்றத்தில் பந்தல் அமைத்தது சிவாதான். தஞ்சாவூரில் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டிற்கு பந்தல் அமைத்து ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம் பிடித்தவரும் இந்த சிவாதான். சமீபத்தில் நடந்த இவரின் புதல்வி திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினே சென்று ஒரு நாள் தங்கியிருந்து அதற்கு தலைமை ஏற்று நடத்திக் கொடுத்திருக்கிறார்.

சற்றே பெரிய உருவம். கருத்த தேகம். யதார்த்தமான பட பட பேச்சு. இதுதான் சிவா.‘‘எங்க கம்பெனி ஆரம்பிச்சு 49 வருஷம் ஆச்சு. அடுத்த வருஷம் பொன் விழா. முதல்வர்கிட்ட தேதி கேட்டுட்டு அவர் தலைமையில்தான் அதை நடத்தணும்!’’ என்றபடி தம் அனுபவங்களை சொல்லலானார்.‘‘எனக்கு சொந்த ஊர் வடூர். தஞ்சை, திருவாரூர் முகத்துவாரமே இதுதான். எங்க தாத்தா 9 பேர். பாட்டி 2 பேர்.
எங்க தாத்தா மிகப்பெரிய உப்பு வணிகர். 9 பேர் அண்ணன் தம்பி என்பதால் மிகப் பெரிய அளவில் உப்பு வணிகத்தை மொத்த வியாபாரம் செய்தார்கள். ஒரு கட்டத்தில் அப்பா கீற்று மரத் தொழில் ஆரம்பிச்சார். அதோட தகரமும் கொண்டு வர ஆரம்பித்தார். அதை வைத்து திருமணம், அரசியல் கட்சி  பொதுக்கூட்டங்களுக்கு அதை கொண்டு போய் பந்தல் போடுவது, கழற்றிட்டு வருவதுன்னு செஞ்சோம்.

கல்லூரியில் நான் படிக்கிறப்ப தஞ்சை ராஜராஜருடைய ஆயிரம் ஆண்டு சதய விழா நடந்தது. அங்கே எம்ஜிஆர், ராஜீவ் காந்தி போன்ற தலைவர்கள் வந்தாங்க. பஸ்ஸை விட்டு இறங்கி கல்லூரியைக் கடந்து போகும்போது அந்தக் காட்சியைப் பார்த்தேன்.மாநிலச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர், பல்வேறு துறையின் உயர் அதிகாரிகள் எல்லாம் நிற்கிறப்ப, அங்கு ஃபேமஸாக இருந்த பந்தல் முருகையா பிள்ளை அவங்களுக்கு பல விஷயங்களை விளக்கிச் சொல்றார். அத்தனை பேரும் கேட்டுக்கிட்டு நிற்கிறாங்க.

நம்ம தந்தையும் இதே பந்தல்தான் போடறார். அதையே நாம இந்த அளவுக்கு செஞ்சா என்னன்னு யோசிச்சேன். அதுதான் இதுல விதையா மாறுச்சு. 1985ல் கல்லூரிப் படிப்பை முடிச்சதும் தஞ்சாவூர்ல உலகத்தமிழ் மாநாடு எஸ்டிஎஸ் தலைமையில் 1995ல் நடந்தது. அதில் ஒரு பங்கு பணிகளை நான் எடுத்துக்கிட்டேன். அதுக்கு முந்தி ஒரு பெரிய வேலை. இந்தியாவின் ஜனாதிபதி வெங்கட்ராமன் உப்பு சத்தியாக் கிரக விழாவை வேதாரண்யத்தில் தொடங்கி வைத்தார். அதுக்கு மிகப்பெரிய மேடை பண்ணினோம்.

அப்படியே பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் ஆகி, அந்த தொழில்ல எங்களை நாங்க வளர்த்துக்கிட்டோம். வளர்த்துக் கிட்டோம் என்பதை விட தலைவர் கலைஞரால் வளர்க்கப்பட்டோம்!’’ என்று சொன்ன சிவா, சற்றே சிலிர்த்துக் கொள்கிறார். ‘‘இப்படித்தான் அப்பாவின் பெயரைச் சொன்னாலே எனக்கு சிலிர்த்துக் கொள்ளும்!’’ என்கிறார்.

அவர் அப்பா என்று சொன்னது மறைந்த திமுக தலைவர் கலைஞரைத்தான். அந்த அளவு கலைஞர் மீது மட்டுமல்ல, அவர் குடும்பத்தின் மீதே இவருக்கு அபார பக்தி.  ‘‘நான் கலைஞரை அப்பான்னுதான் அழைப்பேன். ஏன்னா, என்னுடைய தந்தை திமுகவின் சாதாரண தொண்டர். கலைஞரைப் பற்றியே சொல்லிச் சொல்லி என்னை வளர்த்தவர். அப்படிப்பட்ட தொண்டன் மகனான எனக்கு தன் பக்கத்தில் அமர்ந்து பேசக்கூடிய வாய்ப்பை கலைஞர் கொடுத்தார். அதற்குக் காரணம் நான் கற்றுக்கொண்ட இந்தப் பந்தல் கலை.

நான் போட்ட முதல் பெரிய பந்தல் கலைஞர் முதல்வர், கோ.சி.மணி அமைச்சரா இருக்கிறப்ப நடந்தது. அது ஒரு பெரிய அரசு விழா. உள்ளாட்சித் துறையின் நிகழ்வு ஒன்றை வடபாதி மங்கலத்தில் நடத்தினார்கள். அதை பெரிசா பண்ணினோம். அடுத்தது அன்பில் அமைச்சரா இருக்கறப்ப, திமுக மாநாடு ஒன்று நடந்தது. அதை செய்யும்போது என் வேலையில் வேகமெடுத்துட்டேன்...’’ என்ற சிவா, ஸ்டேஜ் போடுவதற்கு முன்னால் வரைபடம் உள்ளிட்டவற்றை பக்காவாக செய்ய மதிப்பீட்டுக்குழு இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

‘‘அது தமிழக அரசினுடைய பொதுப் பணித்துறை அதிகாரிகள் கொண்டது. இந்த இடத்தில் இத்தனை லட்சம் பேர் உட்காரணும், இத்தனை லட்சம் பேர் சாப்பிடணும்... என அவங்க ஒரு முடிவு எடுப்பாங்க. அதிலிருந்துதான் நாங்க திட்டமிடல் தொடங்குவோம். பொதுப்பணித்துறை நீள, அகலத்தை கொடுத்துடுவாங்க. இந்த அரங்கத்தில் ஐம்பதினாயிரம் பேர் உட்காரணும் என்றால் இதுக்குள்ள நீள அகலம், இதுக்கான மேடை, இதுக்குள்ளே ரெஸ்ட் ரூம், பொதுமக்களுக்கான டாய்லெட், போலீஸ் உள்ளயிருந்து வர்றப்ப வெளியிலிருந்து வர்றவங்களை செக் பண்றதுக்கு செக்கிங் பாய்ண்ட், அதுக்குள்ளே லைட்டுகள், அதுக்குள்ளே ஃபேன்கள்னு அவங்க பட்டியல் போட்டுக் கொடுத்திடுவாங்க.

பட்டியலிட்டுட்டு காவல்துறை, பொதுப் பணித்துறை, வருவாய்த் துறை, செய்தித் துறை இந்த வேலைகளை அடுத்தடுத்து வந்து பார்த்துட்டே இருப்பாங்க...’’ என்ற சிவா, திமுக தலைவர்கள் மீதும், அந்த குடும்பத்தின் மீதும் இவ்வளவு பாசமும் பற்றும் வைத்து அவர்களின் குடும்பத்தில் ஒருவராகவே இருப்பவர். அப்படிப்பட்டவர் எப்படி அதிமுகவிற்கும் மேடையமைத்து, ஜெயலலிதாவின் குட்புக்கிலும் இடம் பெற்றார்..?

‘‘தஞ்சாவூர்ல அந்த அம்மையார்க்குரிய நிகழ்வு ஒன்றிற்கு முதன் முதலா பந்தல் போட்டேன். அவங்க எதையுமே பிரம்மாண்டமா பண்ணச் சொல்லுவாங்க. ஆனா அவங்களை சந்திக்கவெல்லாம் முடியாது. அதிகாரிகள்தான் நம்மகிட்ட பேசுவாங்க. அப்படி பந்தல் போட்டதுல தஞ்சாவூர்ல மட்டும் மேடையில் இருந்து இறங்கி வரும்போது எங்கிட்ட பேசினாங்க. ‘உங்க ஊர் என்பதால் இந்த பிரம்மாண்டமா’ன்னு சிரிச்சுகிட்டே கேட்டாங்க. ‘இல்லம்மா, எல்லா ஊர்லயும் இப்படியேதான் பண்ணுவேன்’னு சொன்னேன். ‘நல்லா பண்ணியிருக்கீங்க’ன்னாங்க.

அந்த அம்மையார் மட்டுமல்ல, தலைவர் வைகோ, தலைவர் கலைஞர், அண்ணன் தளபதியார்... எல்லோருமே எம் மேல ஒரு தனிப்பட்ட பாசம் உள்ளவங்க. ஏன்னா, ஒரு காலத்தில் வட இந்தியர்களுடைய ஆதிக்கத்தில் இருந்த தொழில் இது. நான்தான் இதை ஏன் நம்ம செய்யக்கூடாது... ஏன் இது மாதிரி மட்டுமில்ல, இதைவிட பிரம்மாண்டமா செய்யக்கூடாதுன்னு களத்தில் இறங்கினேன். அதை வெற்றி பெறச் செய்தும் காட்டினேன்.

இப்ப எல்லாமே சீக்கிரம் சீக்கிரம்னு மாறிட்டிருக்கு. ஃபாஸ்ட் ஃபுட் உலகம். சென்னை மோட்டார் சிட்டியா மாறிட்டிருக்கு. கோயமுத்தூர் டெக்ஸ்டைல் சிட்டி. திருப்பூர் பனியன் சிட்டி, இதுபோல தஞ்சாவூர் ஃபுட் சிட்டியா உருமாறி வருது.  ஒவ்வொரு சிட்டியும் இப்படி மாறும்போது ஒரு துறையில் இருந்து டெவலப் ஆகாதவங்க, புது தொழில் மூலமா கோபுரத்திற்கு போகமுடியும். இப்ப இந்த தொழிலை என் நாலாவது தலைமுறையா என் மகள் பார்க்கிறாள். இதுல ‘வெட்டிங் பிளானர்’னு ஒரு கம்பெனி வச்சிருக்கா. ஜெம் கிரானைட் வீரமணி பையன் கல்யாணம், இப்ப அடிகளாருடைய பேத்தி திருமணம்... இதெல்லாம் மகளுடைய கம்பெனி நடத்தியதுதான்.

எனக்கு கூடப் பிறந்தவங்க ரெண்டு பேர். ஒரு அக்கா, ஒரு தங்கச்சி. என் அக்கா பையன் சந்திரசேகர்தான் இந்த நிறுவனத்தை இந்த அளவுக்கு வளர்ப்பதற்கு உறு
துணையா இருந்தவர். அவர்தான் இங்கே ஆல் இன் ஆல். அதேபோல் எனக்கு ரெண்டு பொண்ணு. பெரியவ டாக்டர். சின்னவ ‘ஆர்க்கிடெக்ட்’. இதனுடைய சார்பா ரெண்டு வருஷமா வெட்டிங் ப்ளானிங் பண்றது சின்னவதான். அதை பெரிய லெவல்ல பண்றா.

ஆனா, எதைப் பண்ணினாலும், இப்ப இந்த தொழில் மறைக்கப்பட்டு விட்டது. மிகப் பெரிய கல்யாணமா இருக்கும். 10 ஆயிரம் பேர் அந்தக் கல்யாணத்துல உட்கார்ந்திருப்பாங்க. அத்தனை பேருக்கும் அரங்கம் போட்டது, லைட் போட்டது. கம்பளம் விரித்தது, நாற்காலி போட்டு அமர வைத்தது எல்லாமே நாங்களா இருப்போம். ஆனா, ஒரு பத்து நிமிஷத்துல ஒரு பட்டு பீதாம்பரம் விரிச்சு அங்கே உட்கார்ந்து ஒரு மிருதங்கச் சக்கரவர்த்தி வாசித்துக் கொண்டிருப்பார். அவரை அழைத்து, ‘இந்த வித்வான் அவர்களுக்கு இந்தப் பொன்னாடையைப் போர்த்துகிறோம்!’ என்று சொல்லி சிறப்பு செய்வாங்க. ஆனா, பந்தல்காரருக்கு இதெல்லாம் கிடைத்ததா சரித்திரம் இல்லை.

நான் வந்ததற்குப் பிறகுதான், ஒரு பத்திரிகையில் ‘அரங்கம் வடிவமைப்பு - பந்தல் சிவா’ன்னு பேர் போட்டு வச்சாங்க. அதற்கு நான் நன்றி சொல்ல வேண்டியது கலைஞர் அப்பாவுக்கு மட்டும்தான். அவர் மட்டும்தான், ‘இந்த மாநாட்டு அரங்கத்தை நிர்மாணித்த பந்தல் சிவாவுக்கு’ன்னு சொல்லி தங்கமோதிரம் போடுவார். ஒலி, ஒளி அமைத்துத் தந்தவர்க்கு தங்க மோதிரம் போடுவார். பத்து பவுன் செயின் அணிவிப்பார். அதுதான் சமூக நீதி. அது கலைஞர்கிட்டதான் கிடைத்தது.

அதற்குப் பிறகு அதையே அதிமுக, காங்கிரஸ், பாஜக எல்லா மேடைத் தலைவர்களும் செய்ய ஆரம்பிச்சாங்க. கமல்ஹாசன் ‘ஹேராம்’ படத்துக்கு சினிமா செட் போட்டுக் கொடுத்தேன். பரிசுகள் தந்தாங்க. திருச்சியில் நடந்த தாமரை மாநாட்டில் ஏழு பவுன் தங்கச்சங்கிலிய பிரதமர் மோடி என் கழுத்தில் அணிவித்தார்!என் தாத்தா ‘நீ என்ன பண்ணினாலும், உன்னால முடிஞ்சதை பயப்படாம பண்ணிடு. தோல்வி வெற்றி எல்லாம் அந்தப் பக்கம்’னு அடிக்கடி சொல்லுவார்.

அப்படி வங்கிக் கடன் வாங்கி, வாங்கி பயப்படாம வந்ததனால இந்தத் தொழில்ல நாலு தலைமுறை, 50 ஆண்டுக்குள்ளே நுழையறேன். 25 முதலமைச்சர்கள், 10 பிரதமர்கள், 10 ஜனாதிபதிகள்கிட்ட பணியாற்றியிருக்கேன். சங்கர் தயாள் ஷர்மா தஞ்சாவூர்ல வந்து மிகப் பெரிய தமிழ்ப் பல்கலைக் கழகத்தை தொடங்கறப்ப, கலைஞர் முதலமைச்சரா இருந்தார். மொழிபெயர்ப்பை வை.கோ பண்ணினார். அந்த பிரம்மாண்ட அரங்கத்தை நான் பண்ணினேன்.

அஞ்சாறு பல்கலைக்கழகம், அணு விஞ்ஞானிகள் மாநாட்டுப் பந்தலையே நான்தான் அமைச்சேன். ஒரு தமிழனுக்கு அது பெருமை. அகில இந்திய டாக்டர்ஸ் கான்ஃபரன்ஸ் இப்ப நடந்ததே... அதுக்கும் எங்க நிறுவனம்தான் மேடை, அரங்கம் அமைத்தது. இந்த ஒட்டுமொத்த உழைப்பும் நேர்மையும், பெருமையும் இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பணியாளராலும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட இந்தத் தொழிலுக்கு - தன்னிகரற்ற சேவைக்கு - பத்மஸ்ரீ போன்ற விருதுகள் கொடுத்து அங்கீகரிக்கணும்!’’ என்ற வேண்டுகோளுடன் நிறைவு செய்தார் சிவா.

கா.சு.வேலாயுதன்