காபி டேபிள்
பண்ணைகளில் ஆக்டோபஸ்
ஆடு, மீன், கோழிக்கு அடுத்து ஆக்டோபஸ்களையும் பண்ணைகளில் வளர்க்க சில நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் ஸ்பெயின், ஜப்பான் போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. இதற்குக் காரணம் மக்கள் மிகவும் விரும்பிச் சாப்பிடும் உணவுகளில் ஒன்றாக ஆக்டோபஸும் மாறியிருப்பதுதான். ஆக்டோபஸ்கள் மற்ற உயிரினங்களில் இருந்து மிகவும் மாறுபட்டது. நேர்த்தியான நரம்பு மண்டலம், பெரிய அளவிலான மூளை, கடல் உயிரினங்களில் பெரிய பிஸ்தாவாக சுறாக்களுக்கே அல்வா கொடுப்பது, விளையாட்டுத்தனம் கொண்டது, அதன் வேட்டையாடும் தன்மை என விசேஷ குணங்கள் கொண்டது.
என்றாலும் இதன் வாழ்நாள் மிகவும் குறைவு. ஆனால், சீக்கிரமே வளர்ந்துவிடக்கூடியது. இப்படிப்பட்ட ஓர் இனத்தை கடலில் இருந்து பிரித்து தனியாக பண்ணைகளில் வளர்க்க ஆரம்பித்தால் வேறு உயிரினங்கள் காணாமல்போனது போல் இதுவும் அழிவுற்ற இனமாக மாறலாம் என எச்சரிக்கின்றனர் சூழலியல்வாதிகள்.
டேப் உடை!
ஹாலிவுட் மற்றும் டிவி புகழ் நடிகை கிம் கர்தாஷியான் பெயரைக் கேட்டாலே ஏதோ வைரல் சம்பவம் நடக்கப் போகிறது என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வீட்டை விட்டு வெளியேறினாலே வைரலாகவே வலம் வருவேன் என்கிற சபதத்தோடு வாழ்ந்து வருபவர். சமீபத்தில் இவர் பாரீஸ் ஃபேஷன் வீக் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அதில் அவர் அணிந்து வந்த உடைதான் அங்கே மாஸ் வைரல் ஹிட்!
கப்பல் மற்றும் சரக்கு ரயில்களில் கட்டப்பட்டும் மஞ்சள் டேப்பில் மொத்த உடையையும் டிசைன் செய்து அல்லது ஒட்டிக்கொண்டு வந்திருந்தார் 41 வயதான கிம் கர்தாஷியான். மேலும் அதே டேப்பில் ஷூ, ஹேண்ட்பேக் என அம்மணி கலக்கலாக வர இன்டர்நெட் வைரலில் ஜம்மென டிரெண்டாகிக் கொண்டிருக்கிறார் கிம்.
புயலின் ஸ்டூடியோவில் ஞானி!
‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சிக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்குச் சென்று அவருடன் இளையராஜா எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வந்தது. இதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான், “மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களை பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. எதிர்காலத்தில் எங்கள் ஸ்டூடியோவில் அவர் இசையமைப்பார் என நம்புகிறேன்...” என பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதிலளிக்கும் வகையில் இளையராஜா, ‘‘கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசையமைப்பேன்...’’ என்று பதிவிட்டிருக்கிறார்!
ஆறு உலகக் கோப்பை...
ஆறு உலகக் கோப்பைகளில் கலந்து கொண்டவர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவர் பாகிஸ்தானின் மியான்தத், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரராகி இருக்கிறார். 2000ல் நடந்த உலகக்கோப்பையில் தொடங்கி இப்போதைய உலகக் கோப்பை வரை ஆடிவருகிறார் 39 வயதான மிதாலி ராஜ்.
சென்று வாருங்கள் வார்னே...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணம் கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 90களின் தொடக்கத்தில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஆக்கிரமிப்பில் கிரிக்கெட் இருந்தபோது லெக் ஸ்பின் மூலம் உலகின் கவனத்தைத் தன்பக்கம் திருப்பியவர் வார்னே. அவரின் டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமே இந்தியாவுடன்தான்.
145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 708 விக்கெட்டுகள் வீழ்த்தி உலகின் இரண்டாவது இடத்தில் ஜொலிக்கிறார். இதில், 37 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 293 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 1999ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பை வெல்ல வார்னே முக்கிய காரணியாக இருந்தார்.
கடந்த 2000ம் ஆண்டு 20ம் நூற்றாண்டின் ஐந்து விஸ்டன் கிரிக்கெட் வீரர்கள் என பிராட்மேன், சோபர்ஸ், ஹாப்ஸ், சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் பெயருடன் வார்னேவும் இடம்பிடித்தார்.
2007ல் ஓய்வுபெற்ற வார்னே கிரிக்கெட் வர்ணனையாளர், பயிற்சியாளர் என பன்முகத்தன்மையுடன் செயல்பட்டு வந்தார். அவரின் இழப்பு கிரிக்கெட் உலகிற்கு ஈடுசெய்ய முடியாதது என வேதனை தெரிவிக்கின்றனர் சக வீரர்கள்.
What a wonderful world..!
ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்து இதுவரை 15 லட்சம் ஊழியர்கள் உக்ரைனில் இருந்து புலம்பெயர்ந்து உள்ளதாகச் சொல்கிறார்கள். அப்படி சமீபத்தில் லிவிவ் என்ற உக்ரைன் நகரத்தில் இருந்த ஏராளமான மக்கள் போலந்து நாடு செல்வதற்காக ரயில்வே ஸ்டேஷனில் குவிந்திருந்தனர். அப்போது ரயில்வே ஸ்டேஷன் வாசலில் ஒரு பெண் அமைதியாக அமர்ந்து பியானோ வாசிக்க ஆரம்பித்தார்.
கடுமையான போர்ச்சூழலும், மன அழுத்தமும் கொண்ட நிலையில், தங்கள் உடைமைகளை விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் வேறு நாடுகளுக்குப் பறந்து கொண்டிருந்த அந்த உணர்ச்சிகரமான தருணத்தில் அவர் பியானோவில் வாசித்துக்கொண்டிருந்த பாடல் ஆம்ஸ்ட்ராங் எழுதிய ‘What a wonderful world...’ இது ட்விட்டரில் வைரலாகி பல தரப்பு மக்களிடையே உணர்ச்சிப் பெருக்கை உருவாக்கியது.
மனைவியே கண்கண்ட தெய்வம்!
பத்தில் ஒன்பது இந்தியர்கள், மனைவி எப்போதும் தன் கணவருக்குக் கண்டிப்பாகக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்கிற கருத்தை ஏற்றுக் கொள்வதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவின் வாஷிங்டனிலிருந்து செயல்படும் பியூ ஆய்வு மையம் கொரோனாவுக்கு முன்பு 2019 முதல் 2020 மார்ச் வரை முப்பதாயிரம் இந்தியர்களிடையே குடும்பத்திலும், சமூகத்திலும் நிலவும் பாலின சமத்துவம் பற்றி ஒரு ஆய்வு நடத்தியது. அதில்தான் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளனர் ஆண்கள். இதே கருத்தை கொஞ்சம் குறைவான சதவீதத்தில் பெண்களும் ஒப்புக்கொள்கின்றனர் என்பதுதான் ஆச்சரியம் என்கிறது அந்த ஆய்வறிக்கை.
குங்குமம் டீம்
|