அந்தப் பொண்ணதான் தேடிக்கிட்டு இருக்கேன்! கண்ணடிக்கிறார் டார்லிங் பிரபாஸ்



‘‘ரொம்ப சீக்கிரமாகவே உங்களை எல்லாம் சந்திக்கணும்னு நினைச்சேன். ஆனா, கொரோனா காரணமா பெரிய கேப் ஆகிடுச்சு...’’ ஸ்டைலிஷ் கூலர், டெனிம் கோட்டை சரி செய்தபடியே பேசத் தொடங்கினார் ‘பாகுபலி’ பிரபாஸ். டி-சீரீஸ் ஃபிலிம்ஸ், யுவி கிரீயேஷன்ஸ் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியீட்டில் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கும் படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தின் ரிலீஸ் மகிழ்ச்சியில் இருக்கிறார் நாயகனாக நடித்திருக்கும் பிரபாஸ்.

வெல்கம் பேக் டூ தமிழ் சினிமா?

தேங்க் யூ சோ மச்! ஒன்பது வருஷங்கள்ல எனக்கு மொத்தமாகவே நாலு படங்கள்தான் வெளியாகியிருக்கு. நிச்சயம் நிறைய படங்கள் செய்யணும். ஏராளமான பொறுப்புகள் இருக்கு. அதிலும் தமிழ் சினிமா ‘பாகுபலி’ பட பாகங்களுக்குக் கொடுத்த ஆதரவுக்கு இன்னும் நிறைய கடமைப் பட்டிருக்கேன். இந்த கேப்புக்கு நிச்சயம் ‘ராதே ஷ்யாம்’ ஒரு பெரிய பதிலா
இருக்கும்.

தெலுங்கு நடிகர் பிரபாஸ் Vs PAN இந்தியா ஹீரோ பிரபாஸ்... இப்ப எவ்வளவு பிரஷர் அதிகரிச்சிருக்கு?

இப்ப நாமே சின்னப் படங்கள் செய்யலாம்னு யோசிச்சா கூட நம்ம மார்க்கெட் விடாது போல. பிரஷர்... யெஸ்... நினைச்சுப் பார்க்கவே முடியாத அளவுக்கு இருக்கு.
கதைகளை இப்ப தேர்வு செய்யும் போது இந்தியப் படங்களா, கதைகளா தேர்வு செய்ய வேண்டியிருக்கு. எல்லா மொழி, கலாசாரம், பழக்கங்கள்னு பொதுவான சீன்ஸை உருவாக்க வேண்டிய சூழலும் டைரக்டர்களுக்கு இருக்கு. நிச்சயம் பிரஷர்தான். ஆனா, உலக அரங்கில் நம்ம படைப்புகளும் நிற்கணும்னா இந்த மாற்றத்தை நாம ஏத்துக்கிட்டு ஆகணும்.
‘ராதே ஷ்யாம்’ கதை எப்படி உங்களை இம்ப்ரஸ் செய்தது?

‘பாகுபலி’, ‘சாஹோ’ படங்களுக்கு இடைல ஒரு லைட் வெயிட் ரொமான்டிக் படத்துல நடிக்கணும்னு தோணுச்சு. என்னுடைய பழைய படங்கள் பெரும்பாலும் காதல் கதைகள்தான். அந்த பிரபாஸுக்கு ஒரு கதைன்னு யோசிச்சப்ப ‘ராதே ஷ்யாம்’ ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, அப்பவும் இயக்குநர் ராதாகிருஷ்ணகுமார் சும்மா விடவே இல்ல. அதுல ஒரு திரில்லர், எனக்கு ஒரு வித்யாசமான கேரக்டர், 1970 பீரியட்னு நிறைய யோசிச்சிருந்தார்.

‘விக்ரமாதித்யா... த பால்மிஸ்ட்’ என்ன செய்யப் போகிறார்?

பால்மிஸ்ட்டா? இப்படியெல்லாம் நான் நடிச்சா யாரும் நம்ப மாட்டாங்களேன்னு யோசிச்சிட்டே கதை கேட்டேன். ஆனா, மொத்தமா வேற கதை சொன்னார் ராதா.
பொதுவா இந்த கைரேகை ஜோசியத்துல எனக்கு பெரிய நம்பிக்கை கிடையாது. ஆனா, கங்கனா ரணாவத்துக்கு ஒரு கேரள ஜோசியர் கைரேகை பார்த்து ‘நீ பெரிய நடிகையா வருவே’ன்னு சொன்னதாகவும், அதன்படியே நடந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கேன்.

என் அங்கிளுக்கு ரெண்டு தாரம்னு ஒரு ஜோசியர் சொன்னார். அதன்படியே நடந்துச்சு. ஆனா, எனக்கு இப்படி எந்த அனுபவமுமில்ல. இதனாலயே ‘ராதே ஷ்யாம்’ல நாம கைரேகை ஜோசியரானு ஒரு ஜெர்க் கொடுத்தேன். கதைப்படி நான் உலகின் தலைசிறந்த கைரேகை ஜோசியர். ஃபேமஸ்னாலே பிரச்னைதானே... அப்படி அந்த கைரேகை ஜோசியருக்கு ஒரு பிரச்னை... அந்தப் பிரச்னைதான் லவ்.

மதன் கார்க்கி சார் சொன்னார்... ஒவ்வொரு லவ்வும், ஒரு டைம் , சந்தர்ப்பத்தை எல்லாம் சார்ந்தது... அதைத்தான் இந்தக் கதை சொல்லுதுன்னு சொன்னார்.
எல்லாத்துக்கும் மேலே நான் ஏதோ ஒரு லவ் ஸ்டோரில நடிச்சா பார்ப்பீங்களா..? அதான் ஸ்பெஷல் எலிமெண்ட்ஸ் இணைச்சிருக்கார் டைரக்டர். அதுக்கு விஷுவல் இன்னொரு ஸ்பெஷல். பை த வே, படத்தின் ஸ்பெஷல் பூஜா ஹெக்டேதான். அவங்கதான் கதைக்கரு. சூப்பரா நடிச்சிருக்காங்க.

PAN இந்தியா படங்கள் செய்யறதுனால என்ன பயன்னு நினைக்கறீங்க?

ஏற்கனவே நாம தாமதமாதான் ஆரம்பிச்சிருக்கோம். என்னைக்கோ இந்திய சினிமாக்களா நாம ரிலீஸ் செய்து உலக மேடைகள்ல நம்ம அடையாளத்தைக் காண்பிச்சிருக்கணும். ஏன்னா ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியே பல வருஷங்கள் ஆகியிருச்சு. அப்படிப்பட்ட டெக்னீஷியன்ஸ் எல்லாம் நம்மகிட்ட இருக்கும்போது ஒரு தேச அடையாளத்தோடு படங்கள் வந்தாதான் உலக சினிமாக்கள் கூட போட்டி போட முடியும். அதிலும் நம்ம நாட்ல எல்லா மொழிகள்ல இருந்தும், எல்லா கலாசார அடிப்படையிலும் படங்கள் வருவது நமக்கு எக்ஸ்ட்ரா பிளஸ்.

தமிழ் ஆடியன்ஸ், தமிழ் சினிமா பத்தி உங்க பார்வை?

என்னைக்கு தமிழுக்காகவும் படம் செய்ய ஆரம்பிச்சோமோ அன்னைக்கே கதைக்குள்ளயே நிறைய மொழி சார்ந்த மாற்றங்கள் செய்யவும் நாங்க தயாராகிட்டோம். அதுக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள் மதன் கார்க்கி சார். இந்த தமிழ் வெர்ஷன் ‘ராதே ஷ்யாம்’ல கதையோடு சேர்த்து ‘அ, ஆ, இ...’னு தமிழ் மொழி கேம் ஒண்ணு விளையாடியிருக்கார். அந்த மேஜிக் எல்லாம் தமிழ்லதான் செய்ய முடியுது; தமிழுக்காகனு சில விஷயங்களும் செய்ய முடியுது. இங்க ஆடியன்ஸை ஈசியா ஏமாத்த முடியாது. கதைகளை கொஞ்சம் யோசிச்சுதான் செய்ய வேண்டியிருக்கு.
 
உங்க கல்யாணம் எப்ப? எப்படிப்பட்ட பெண் தேவைனு காத்திருக்கீங்க?

என்னவோ தெரியலை... கல்யாணம் மட்டும் என் லைஃப்ல மிஸ் ஆகிட்டே இருக்கு. எப்படிப்பட்ட பொண்ணு வேணும்னு எனக்கே சொல்லத் தெரியலை. அந்தப் பொண்ணைத்தான் நான் தேடிட்டு இருக்கேன்! ஒருவேளை நேர்ல வந்தா அந்த ஸ்பார்க் தோணும் போல.

‘ராதே ஷ்யாம்’ என்ன எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும்?

லைட் வெயிட்டா ஒரு லவ் ஸ்டோரி... அதுல பீரியட், 1970ல் ஐரோப்பா... மேலும் மனோஜ் பரமஹம்சா சார் சினிமோட்டோகிராபில மாஸ் காட்டியிருக்கார். கலர்ஃபுல் காதல் கதையா ஆடியன்ஸ் என்ஜாய் பண்ணலாம்.

உங்க அடுத்தடுத்த படங்கள் பத்தி சொல்லுங்களேன்?

இந்த வருஷம் கொஞ்சம் அதிகமாகவே உங்களை எல்லாம் சந்திக்கணும்னு முடிவு செய்திட்டேன். ‘சலார்’ படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிஞ்சிடுச்சு. கூடிய சீக்கிரம் ரிலீஸ். தவிர இந்தி, தெலுங்கு ‘அடிபுருஷ்’ படமும் அடுத்தடுத்து தயாராகிட்டு இருக்கு. இதைத் தாண்டி இந்த வருஷம் இன்னமும் நிறைய படங்கள்ல நடிக்கணும்னு டார்கெட் வச்சிருக்கேன்.

ஷாலினி நியூட்டன்