மரபு விதை சேகரிப்பவராக மாறிய ஏரோநாட்டிக்கல் எஞ்சினியர்!
‘‘இன்னைக்கு நிறைய பாரம்பரிய மரபு விதைகள் அழிவின் விளம்பில் இருக்கு. பல ரகங்கள் காணாமலும் போயிடுச்சு. தமிழகத்துல கத்திரிக்காயில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட ரகங்கள் இருந்ததா சொல்றாங்க.
அதனால புழக்கத்துல இருக்கிற, புழக்கத்துல இருந்து அழிஞ்சிட்டு வர்ற பாரம்பரிய மரபு விதைகளை சேகரிச்சு அதை பயிர் பெருக்கம் செய்து திரும்பவும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு சேர்க்கவேண்டியது அவசியமா இருக்கு. அதுக்காகவே இந்த மையத்தை தொடங்கி செயல்பட்டுட்டு இருக்கேன்...’’ நம்பிக்கை மிளிரப் பேசுகிறார் பரமேஸ்வரன். ‘ஆதியகை மரபு விதைகள் சேகரிப்பு மையம்’ என்கிற பெயரில் பாரம்பரிய மரபு விதைகளை கடந்து எட்டு ஆண்டுகளாக சேகரித்து வரும் இளைஞர் இவர்.
அதுமட்டுமல்ல. அந்த விதைகளை விவசாயிகள், வீட்டுத்தோட்டம் போடுபவர்கள், மாடித்தோட்டத்துக்காரர்கள் எனப் பலரிடம் பரவலாக்கமும் செய்து வருகிறார். ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரிங் படித்த பரமேஸ்வரன் மரபு விதை சேகரிப்பாளராக மாறியது தனிக்கதை. ‘‘சொந்த ஊர் ஒட்டன்சத்திரம். பிறந்து வளர்ந்ததெல்லாம் சின்னச் சின்ன கிராமங்கள்ல. ஏன்னா, அப்பா ஆறுமுகம் குத்தகைக்கு நிலங்கள் எடுத்து விவசாயம் செய்யக்கூடியவர். இரண்டு, மூணு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு கிராமங்களுக்குப் போய் நிலங்கள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வார்.
ஐம்பது ஆண்டுகளா விவசாயம்தான். ஆனாலும்கூட பொருளாதார அளவில் மேம்படல. விவசாயம் பண்றதால ஏகப்பட்ட கடனாகிடுச்சு. இந்தச் சூழ்நிலையில் என்னை ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரிங் படிக்க வச்சாங்க. கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் 2008 டூ 2012 வரை படிச்சேன். கடைசி ஆண்டு படிப்பை பாதியில் விட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.
ஏன்னா, என்னுடைய படிப்புக்கு நகரங்கள்லதான் வசிக்க வேண்டி வரும். அதனால, நகரத்திலேயே வாழ்ற மாதிரியான சூழல் வந்திடுமோனு பயந்து படிப்பை நிறுத்திட்டு கிராமத்துல வாழணும்னு வந்திட்டேன்.
கடன் வாங்கிதான் படிச்சேன். அந்தக் கடன் தொகையை இப்பவும் கட்டிட்டு இருக்கேன். அதனால ஆரம்பத்துல அப்பா ரொம்ப வருத்தப்பட்டார். பிறகு, உனக்கு பிடிச்சதை பண்ணுனு விட்டுட்டார். எனக்கு வேறு வாய்ப்புகள் பற்றி தெரியாது. அதனால அப்பா, அம்மாவுடன் சேர்ந்து விவசாயம் செய்யலாம்னு இருந்துட்டேன். அவங்க நிலக்கடலை, பருத்தி, மக்காச்சோளம், காய்கறிகள் எல்லாம் போட்டாங்க.
2012ல் இருந்து ரெண்டு ஆண்டுகள் அவங்க கூடவே இருந்தேன். அவங்க என்ன விவசாய முறைகளை பின்பற்றினாங்களோ அதையே நானும் பின்பற்றி செய்தேன். அப்பதான் அவங்க எவ்வளவு கஷ்டப்படுறாங்க... எவ்வளவு கடன்ல இருக்கிறாங்கனு தெரிஞ்சது. இதை மாத்தணும்னு முடிவெடுத்தேன்.
அப்ப முகநூல்ல விவசாயிகள் பலரின் அறிமுகம் கிடைச்சது. அவங்ககிட்ட பேசினேன். இந்நேரம், 2014ல் நம்மாழ்வாரின் வானகத்துல ஐந்து நாட்கள் பயிற்சி எடுத்தேன். அங்கதான், ‘என்னவெல்லாம் தவறு செய்றோம். ஏன் இந்தப் பொருளாதார சிக்கல்’னு தெளிவு கிடைச்சது. பொதுவா, விவசாயிகள் ஒரு பொருளை உற்பத்தி செய்து அதை சந்தைக்குக் கொண்டு போய் போடுவாங்க. அதுல வரக்கூடிய வருமானம் சொற்பமா இருக்கும். அதை வச்சு குடும்பம் நடத்துவாங்க. அவங்க குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளைக் கூட அந்த நிலத்துல போட்டுக்கிறது கிடையாது. அதெல்லாம் வானகத்துல தெரிஞ்சுக்கிட்டேன். குடும்பத்திற்கான உணவுச் செலவு ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரும். அந்தச் செலவுகளை விவசாய நிலங்கள் மூலம் குறைச்சுக்க வாய்ப்பு இருந்தும், அதை செய்யாமல் அப்படியே உற்பத்தி செய்து சந்தைக்குக் கொண்டு போறது தப்பா இருந்துச்சு.
அதை மாத்தணும்னு நினைச்சால் இவங்க மாறுவதற்கு தயாரா இல்ல. ஏன்னா, ஐம்பது ஆண்டுகளா இதுல பழகிட்டாங்க. வானகத்துல கோபிச்செட்டிபாளையம் மருதம் குமார் அண்ணன் பயிற்சிகொடுத்தார். அவர்தான் அப்ப இருந்து இப்ப வரை என்னை வழி நடத்திட்டு இருக்கார். அவர், ‘பாரம்பரிய விதை ரகங்கள் இந்தியா முழுக்க ஐயாயிரத்துக்கும் மேற்பட்டு இருக்கு. இதுல தமிழ்நாட்டுக்குள்ள இருக்கிற பாரம்பரிய விதை ரகங்களைச் சேகரிச்சு அதை பயிர் பெருக்கம் செய்யணும். விதைகள் மட்டும் சேகரிக்காமல் அந்தந்த பகுதிகள்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்த மக்களுக்குக் கொண்டு சேர்க்கணும்’னு வழிகாட்டினார் அப்போதுதான் விதைகள் சேகரிக்கிற ஆர்வம் பிறந்தது.
அப்ப எங்க பகுதிகள்ல ஒன்றிரண்டு பேர் நாட்டு விதைகள் கொடுத்திட்டு இருந்தாங்க. நாட்டுக் கத்திரி, வெண்டைக்காய், பாகற்காய், பீர்க்கங்காய்னு ஒரு 20 விதமான காய்கறி ரகங்கள் அவங்க கொடுத்தாங்க. அவங்ககிட்ட விதைகள் வாங்கி கேட்கிறவங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சேன். ஆனா, இதை மட்டும் செய்தால் போதாதுனு தோணுச்சு. அப்ப மக்கள்கிட்ட, ‘இந்த ரகங்களை உற்பத்தி பண்ணலாம்னு இருக்கேன்’னு சொன்னேன். உடனே நிறைய பேர் பாரம்பரிய ரக விதைகளைக் கொடுக்க முன்வந்தாங்க.
அப்படியா, பாரம்பரிய மரபு விதைகளை சேகரிச்சு பயிர் செய்யத் தொடங்கினேன். இதுக்காக நான் அப்பாவிடமிருந்து பாதி நிலங்களை எடுத்துக்கிட்டேன். அவர் 20 ஏக்கர் குத்தகைக்கு எடுத்திருந்தால் பத்து ஏக்கரை நான் எடுத்து அதுல பாரம்பரிய ரகங்களைப் போட்டுக்கிறதுனு செய்தேன். 2014ல் 25 ரகத்திலிருந்து ஆரம்பிச்ச என் விதை சேகரிப்பு இன்னைக்கு 300 ரகங்கள் வரை வந்திருக்கு. பெரும்பாலும் காய்கறி ரகங்கள்தான்...’’ என்கிறவர், மையத்தின் செயல்பாடுகள் பற்றி பகிர்ந்தார்.
‘‘இதுல ஐந்துவிதமான செயல்பாடுகளை முன்னெடுக்கிேறன். முதல்ல பாரம்பரிய ரகங்களைப் பத்தின தகவல்களைச் சேகரிக்கிறது. ரெண்டாவது, அந்த விதைகளைச் சேகரிக்கிறது. மூன்றாவது, சேகரிச்ச விதைகளை நம் தோட்டத்திலோ அல்லது எங்கு வாய்ப்பு இருக்கோ அங்க பயிர் செய்து அதை ஆவணப்படுத்துறது.
அதாவது அந்தக் காய்கறிகளின் பண்புகள் பற்றிக் குறிப்பு எடுத்துக்கிறது. நான்காவது, அந்த விதைகளை பரவலாக்கம் பண்றது. ஐந்தாவது, இந்த விதைகள் பத்தின விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துறது. இதை நோக்கிதான் பயணிச்சிட்டு இருக்கேன்.
உதாரணத்துக்கு, தர்மபுரி மாவட்டத்துல பொம்மடிங்கிற ஊர்ல ஒரு வெண்டைக்காய் ரகம் வச்சிருந்தாங்க. அதன் தகவல்களை சேகரிச்சிட்டு அதை அங்க போய் வாங்கிட்டு வந்து இங்க பயிர் செய்தேன். இப்பவும் நான் பொம்மடி நீள வெண்டைனு கொடுத்திட்டு இருக்கேன்.
நாட்டு ரகத்துல பொம்மடி வெண்டைக்காய்னு கேள்விப்பட்டால் அது 2016க்குப் பிறகு நான் பயிர் செய்ததாகவே இருக்கும். இப்படி வெவ்வேறு பகுதிகள்ல 15 விதமான வெண்டைக்காய் ரகங்களை சேகரிச்சேன். இதுமாதிரி மற்ற காய்கறி ரகங்களையும் சேகரிச்சேன்.இந்த ரகங்களை மானாவாரியா எங்க பகுதியில் போடும்போது ஓரளவு நல்லா வந்துச்சு. ஆனா, அதே ரகங்களை இன்னொரு இடத்துல போடும்போது சில ரகம் நல்லா வரும். சிலது நல்லா வராது. அதனால, விவசாயிகள் என்கிட்ட ஏக்கர் கணக்குல பயிரிட விதைகள் வேணும்னு கேட்டாலும் நான் உடனே கொடுக்குறதில்ல.
‘ஒவ்வொரு ரகத்திலும் பத்து பதினைஞ்சு விதைகள் கொடுக்குறேன். வெவ்வேறு இடங்கள்ல போடுங்க. அப்ப பூச்சி தாக்குதல் இல்லாமல் நல்லா வளருதா, முளைச்சு நல்லா வருதா, வளரும்போது நல்லா காய்ப்பு கொடுக்குதா, கொடுக்குற காயை சமைச்சு சாப்பிடும்போது ருசியா இருக்குதா, உங்களுக்கு பிடிச்சிருக்கானு பாருங்க’னு கேட்டுக்கிறேன். அதன் பிறகு அவங்கள சுத்தி இருக்கிறவங்களுக்கு கொடுக்கச் சொல்றேன். அவங்களுக்கும் பிடிச்சிருந்தால் அதை பயிர் செய்து அதிலிருந்து விதைகளை உற்பத்தி பண்ணி வைச்சுக்குங்க. காய்கறிகளையும் சந்தைப்படுத்துங்கனு சொல்றேன்.
விவசாயிகளாட்டும், வீட்டுத் தோட்டம் போடுறவங்களாகட்டும் எல்லோருக்குமே பத்து, இருபது ரூபாய்னு பாக்கெட்டுல போட்டு விதைகள் கொடுக்குறேன். இதிலிருந்து கிடைக்கிற தொகையை வச்சு குத்தகைக்கும், விவசாயக் கூலி ஆட்களுக்கும், கூரியர் செய்யவும் பயன்படுத்திக்கிறேன். இதுல தக்காளி, கத்திரி, மிளகாய், வெண்டைக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய்னு ஒவ்வொரு ஆண்டும் 200 வகையான விதை ரகங்கள் கொடுக்கறோம். ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் வரைக்கும் கூரியர் மூலம் விதைகள் அனுப்புறேன்.
இதுபோக நேரடியா வாங்கிட்டு போறவங்க, விதைத் திருவிழாக்கள், விவசாயக் கூட்டங்கள்னு அதுல கொடுக்குறது தனி. அப்புறம், சில பேர் கிராமத்துல இருக்கிற நூறு விவசாயிகளுக்கு விதைகளை பரிசா கொடுத்துக்கிறோம்னு சொல்லி வாங்கிட்டுப் போவாங்க. அப்படியா, ஓராண்டுக்கு பத்தாயிரம் பேர்கிட்ட மரபு விதைகளைக் கொண்டு சேர்க்கிறேன்...’’ என்கிற பரமேஸ்வரன் முறையான சந்தைப்படுத்துதல் மூலம் தன் தந்தையின் விவசாயக் கடனை அடைத்திருக்கிறார்.
‘‘முன்னாடி விதை ரகங்களை விவசாயிகள்தான் வச்சிட்டு இருந்தாங்க. அப்புறம், சந்தைக்கு புதுப் புது ஹைபிரிட் ரகங்கள் வந்ததும் அதை உற்பத்தி செய்யத் துவங்குனாங்க. உதாரணத்துக்கு தக்காளியை சொல்லணும்னா, இருபது வருசத்துக்கு முன்னாடி வந்த சாதாரண ரக விதையின் விலை பத்து கிராம் நூறு ரூபாய் இருந்திருக்கும். அப்புறம், உயர் ரகம் வந்ததும் பத்து கிராம் இருக்கக்கூடிய விதை முந்நூறு ரூபாய் ஆகிடுச்சு.
ஒரு ஏக்கருக்கு இருநூறு கிராம் விதையை பயிர் செய்ய வேண்டி வரும். அப்படியா, 6 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணினாங்க. இதன்பிறகு இதிலும் வீரியமான விதைகளைக் கண்டுபிடிச்சாங்க. இப்ப பத்து கிராம் விதை ஆயிரம் ரூபாய் ஆகிடுச்சு. இருநூறு கிராம் இருபதாயிரம் ரூபாயாச்சு. ஆக, ஒரு ஏக்கருக்கு விதைக்காக மட்டும் 30% செலவு பண்றாங்க. இன்னும் நாலஞ்சு ஆண்டுகள் கழிச்சு பத்து கிராம் விதை ஐயாயிரம் ரூபாய் ஆகலாம்.
இந்த விதைகளை ஒருமுறை மட்டுமே பயிரிடமுடியும். மறுமுறை விதைக்கணுனா விதைகளை அவங்ககிட்டதான் வாங்கியாகணும். விவசாயிகள் உற்பத்தி செய்துக்க முடியாது. அப்ப விவசாயிகள்கிட்ட பாரம்பரிய விதைகள் இருந்தா விதைக்காக இவ்வளவு செலவழிக்க வேண்டியிருக்காது. விலை இல்லாம நஷ்டமே வந்தாலும் விதைகளையாவது எடுத்து வைக்க முடியும். இதுல இன்னொரு விஷயம், மக்கள் எதிர்பார்க்கிற ருசியும் வீரிய ரக காய்கறிகள்ல இல்ல.
அப்புறம், நிறுவனங்களும் எல்லா பகுதிகளுக்கும் ஒரேமாதிரியான விதை ரகங்களையே கொண்டு வர்றாங்க. தமிழகம் முழுவதும் ஒரே ரக தக்காளிதான் பயன்படுத்துறாங்க. ஆனா, பல ரக தக்காளிகள் அந்தந்த மண்ணுக்கு ஏற்ப இருக்கு. அவற்றை மீட்டெடுக்கணும். அதனால விதைகள் அழியாம பாதுகாக்கணும்னா ஒவ்வொரு ஆண்டும் விதைகளை விதைச்சு நம்ம உணவுக்காக பயன்படுத்திக்கிட்டது போக கொஞ்சம் விதைகளை எடுத்து சேமிச்சு வைக்கணும். இல்லைனா மரபு விதைகள் புழக்கத்துல இருந்து காணாமல் போயிடும்.
அதனால, இந்தப் பாரம்பரிய விதைகள் பாதுகாப்பிற்காக, என்னுடைய அந்த ஐந்து செயல்பாட்டையும் முறைப்படுத்த வேண்டியிருக்கு. அதாவது, நான் ஒரு கிராமத்துல சின்ன அளவுல பண்ற விதை சேகரிப்பை இன்னும் சிறப்பா அரசு அனுமதியுடனும், உதவியுடனும் பண்ணணும்னு நினைக்கிறேன். அப்பதான் நிறைய பேர்கிட்ட போய்ச் சேரும். அரசு இதுக்கென ஒரு அமைப்பை உருவாக்கி இதுசம்பந்தமா வரக்கூடிய விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கணும். இதனை மாவட்டங்கள், தாலுகாக்கள் தோறும் கொண்டு போகணும்.
ஏன்னா, தமிழகம் முழுக்க இருக்குற விதைகளை சேகரிச்சு ஒரே தோட்டத்துல பயிர் செய்து பரவலாக்கம் பண்றது சரியா இருக்காது. அந்தந்த ஊர்கள்ல பயிர் செய்து அந்த மண்ணுக்கான ரகங்களை சேகரிச்சு அந்த மண்ணுல பயிரிட்டு பரவலாக்கம் செய்யும்போதுதான் பரவலா பலரிடம் போய்ச் சேரும். பாரம்பரிய மரபு விதைகளும் எப்பவும் புழக்கத்தில் இருக்கும்’’ என்கிறார் பரமேஸ்வரன்.
பேராச்சி கண்ணன்
|