யார் இந்த மர்ம யோகி? அம்பலமாகும் NSE தகிடுதத்தங்கள்!



சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன், ‘மர்ம‘ யோகி... கடந்த இரு வாரங்களாக இந்தப் பெயர்கள்தான் இந்தியாவின் வணிக உலகில் வைரல். குறிப்பாக, இந்த மூன்று பேரும் சேர்ந்து தேசிய பங்குச் சந்தையில் கடந்த இரு தசமங்களாக நடத்தி வரும் குளறுபடிகள், தகிடுதத்தங்கள் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டிருக்கின்றன வணிக ஊடகங்கள்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் மூன்றாவது கேரக்டரான ‘மர்ம’ யோகி பற்றி யாருக்குமே தெரியாது. இந்த உலகில் அவரைப் பார்த்தவர்கள் சித்ரா ராமகிருஷ்ணா தவிர யாருமே இல்லை. திகில், மர்மம், அபத்த நகைச்சுவை, ஊழல், க்ரைம் என நவரசங்களும் நிரம்பிய ஒரு நிஜமான நாடகம் இது. இப்படி நடந்திருக்கிறது என்று ஒருவரிடம் சொன்னால் நம்பக்கூட மாட்டார்கள்.

சரி... யார் இந்த சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன் என்பதைப் பார்க்கும் முன்பு தேசிய பங்குச் சந்தை பற்றி கொஞ்சம் அறிமுகம் செய்து கொள்வோம்.
தேசிய பங்குச் சந்தை, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு தனியார் அமைப்பு. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இந்தியா உலகமயமாக்கல் கொள்கைக்குள் நுழையும்போது, இந்தியாவுக்கு என நவீனமான எல்லா தரப்பு மக்களும் பயன்படுத்தும்படியான ஒரு பங்குச் சந்தை அமைப்பு வேண்டும் என்ற சூழல் உருவானது.

இதை ஆராய பெர்வாணி என்பவர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அவர் தலைமையிலான கமிட்டிதான் இப்படி ஒரு அமைப்பின் தேவையை அறிக்கையாக
அளித்தது. எனவே, அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் நிதியமைச்சர் மன்மோகன் சிங் இருவரின் ஏற்பாட்டில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இருக்கும் சில முதன்மையான நிதி அமைப்புகளின் கூட்டு முயற்சியில் 1992ம் ஆண்டு தேசிய பங்குச் சந்தை உருவாக்கப்பட்டது.

தேசிய பங்குச் சந்தை தனியார் அமைப்பு என்றாலும் எல்.ஐ.சி, பாரத ஸ்டேட் வங்கி, ஐ.எஃப்.சி.எல், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா போன்ற இந்திய அரசின் ஆளுமை கொண்ட நிதியமைப்புகள், தனியார் கார்ப்பரேட்டுகள் உட்பட பலதரப்பட்ட முதலாளிகளையும் கொண்ட அமைப்பு.

இன்றைய தேதிக்கு எண்ணிக்கை அளவில் அதிகமான பங்குதாரர்கள் வணிக நடவடிக்கையில் ஈடுபடும் பங்குச் சந்தை இதுதான். சந்தை மதிப்பின் அடிப்படையில் பார்த்தால் உலக அளவில் பத்தாவது இடத்திலும், பணப் பரிவர்த்தனையின் அடிப்படையில் பார்த்தால் உலக அளவில் நான்காவது இடத்தையும் வகிக்கிறது தேசிய பங்குச் சந்தை.தொண்ணூறுகளில் இதனை முழுமையாக கணினி மயமாக்க முன் முயற்சி எடுத்தபோது அதன் வடிவமைப்பாளர்களில் ஒருவராக வந்தவர்தான் சித்ரா ராமகிருஷ்ணா.
ஓர் ஆடிட்டராக தனது பணியைத் தொடங்கிய இவர், 1985ல் ஐ.டி.பி.ஐ நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

‘செபி’ ஆரம்பிக்கப்பட்டபோது அதற்கான விதிமுறைகளை உருவாக்கியதில் சித்ராவுக்கும் பங்குள்ளது என்கிறார்கள். மேலும் 1980களின் இறுதியிலேயே இந்தியாவின் பங்குச் சந்தையை வழிநடத்தும் பொறுப்புகளில் எல்லாம் இருந்திருக்கிறார்.தேசிய பங்குச் சந்தையில் ஸ்க்ரீன் பேஸ்டு ட்ரேடிங் சிஸ்டம் என்ற புதிய கணினி மைய சேவை தொடங்கப்பட்டபோது அதை வடிவமைக்க சித்ரா ராமகிருஷ்ணா அழைக்கப்பட்டார். அதை வெற்றிகரமாகச் செய்தும் காட்டினார்.

2013ம் ஆண்டில் தேசிய பங்குச் சந்தையின் மிகப் பெரிய பதவியான எம்.டி மற்றும் சி.இ.ஓ எனப்படும் தலைமைச் செயல் அதிகாரி பதவிக்கு உயர்ந்தார். இனிமேல்தான் நாம் முன்பு சொன்ன அபத்த நகைச்சுவைகள் எல்லாம் நிகழத் தொடங்கின. அவர் பதவியேற்றதுமே ஆனந்த் சுப்ரமணியன் என்பவருக்கு தலைமை கோட்பாட்டு அதிகாரி (Chief Strategic Officer) என்ற தேசிய பங்குச் சந்தையின் மிகப் பெரிய பதவி ஒன்றை வாரி வழங்கினார். அப்போதே முணுமுணுப்புகள் எழத் தொடங்கின.

ஏனெனில், இந்த ஆனந்த் சுப்ரமணியன் இந்தத் துறையில் எந்தவித முன் அனுபவமும் இல்லாதவர். இந்த வேலைக்கு அமர்த்தப்படும் முன்பு ஆனந்த் சுப்ரமணியன் மத்திய அரசுக்குச் சொந்தமான பால்மர் லாவ்ரி நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றில் இடைநிலை அதிகாரி பொறுப்பில் இருந்தவர். அங்கு அவரது சம்பளம் ஆண்டுக்கு பதினைந்து லட்சம் என்பதாக இருந்தது.

பங்குச் சந்தை குறித்து எந்தவித தொடர்பும் முன் அனுபவமும் இல்லாத இவரைத்தான் ஆண்டுக்கு ஒரு கோடியே அறுபத்தெட்டு லட்சம் சம்பளத்தில் இந்தியாவின் மிகப் பெரிய பொறுப்பில் உட்கார வைத்தார் சித்ரா.

இதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு வருடமும் இவருக்கு கன்னாபின்னாவென சம்பளம் உயர்த்தித் தரப்பட்டிருக்கிறது. பதவி உயர்வும் தரப்பட்டிருக்கிறது. 2016ம் ஆண்டில், அதாவது மூன்றே ஆண்டில் வருடத்துக்கு நாலு கோடியே இருபத்தொரு லட்சமாக இவரது சம்பளம் உயர்ந்துவிட்டது. தேசிய பங்குச் சந்தையில் இருக்கும் மிகப் பெரிய அனுபவ அதிகாரிகளுக்குக்கூட வழங்கப்படாத உச்சபட்ச சம்பளம் இது என்பது குறிப்பிடத்தக்கது.இது மட்டுமில்லை: சித்ரா ராமகிருஷ்ணா தேசிய பங்குச் சந்தையின் முக்கியமான தகவல்களையும் பங்குச் சந்தை தொடர்பான அதி ரகசியங்களையும் ஒரு சாமியாரிடம் பகிர்ந்து வந்திருக்கிறார்.

அவர் யார் என்று யாருக்குமே தெரியவில்லை. ‘அவர் ஒரு சித்புருஷர், மகாஞானி, காலத்தை வென்றவர், என் அலுவலக சிக்கல்களுக்கு எல்லாம் அவரிடம் தீர்வு கேட்பேன். அவர் சொன்னதைச் செய்தேன். அவரின் கட்டளைப்படியே தேசிய பங்குச் சந்தையின் மிகப் பெரிய பதவியை ஆனந்த் சுப்ரமணியனுக்குக் கொடுத்தேன்...’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

அந்த ‘மர்ம’ யோகி யார் என்று ஒட்டுமொத்த இந்தியாவும் வலை வீசித் தேடிக்கொண்டிருக்கிறது. ஆனால், அவர் யாரென ஒருவருக்கும் தெரியவில்லை. அப்படி ஒரு கேரக்டரே இல்லை என்றும், அந்த மர்ம யோகியே இந்த ஆனந்த் சுப்ரமணியன்தான் என்றும் சொல்கிறார்கள். அதுதான் இந்தக் கதையின் முக்கிய டுவிஸ்ட்டே.

தேசிய பங்குச் சந்தையின் சேர்மன் அசோக் சாவ்லா, செபிக்கு (SEBI) எழுதிய விளக்கக் கடிதத்தில் இதனைத் தெரிவித்திருக்கிறார். செபியும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆனால், இதனை சித்ரா  மறுத்திருக்கிறார். அவரை, தான் இருபது வருடங்களுக்கு முன்பு சந்தித்ததாகவும், அதன்பிறகு அவரிடம் இமெயில் தொடர்பு மட்டுமே கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார். rigyajursama@outlook.com என்ற அந்த இமெயில் ஐடியை ஆராய்ந்துவிட்டு, இது ஆனந்த் சுப்ரமணியனோடு தொடர்புடையது என்பதற்கான ஆவணங்களை எடுத்திருக்கிறார்கள்.

இந்தக் கூத்துகள் நடந்திருக்கும் நிலையில் கடந்த மாதத்தில் சித்ராவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருக்கிறது. இந்த வருமான வரி சோதனைக்குப் பிறகு சிபிஐ களத்தில் இறங்கி, தகுதியற்ற அனந்த் பாலசுப்ரமணியனை பணியில் அமர்த்தியது, யாரோ ஒரு மர்மயோகியிடம் தேசிய பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களைப் பரிமாறியது தொடர்பாக விசாரித்திருக்கிறார்கள்.

விசாரணை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. யாரோ ஒரு சாமியாரின் பெயரைப் பயன்படுத்தி, சித்ராவும் பாலசுப்ரமணியனும் கூட்டணி போட்டுத்தான் தில்லாலங்கடி வேலைகள் செய்திருக்கிறார்கள் என்கிறார்கள் விமர்சகர்கள்.

இன்னமும் இவர்கள் செய்த ஊழல் மற்றும் தேசிய பங்குச் சந்தையில் இவர்கள் நிகழ்த்திய பாதிப்பின் பொருளாதார மதிப்பு தொடர்பான தகவல்கள் கசியவில்லை.
இந்த தகிடுதத்தங்களின் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்... இவர்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி யாரார் என்னென்ன செய்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. உண்மை என்றாவது வெளிவந்தே தீரும்.

இளங்கோ கிருஷ்ணன்