கிராஃபிக் நாவல்களில் இலங்கையின் இன்னொரு முகம்!



கதை சொல்லல் என்பது ஒரு சிறப்பான கலை. எல்லோராலும் ஒரு கதையை அவ்வளவு சுவாரஸ்யமாக சொல்லிவிட முடியாது. அந்தக் கலையைத்தான் கலர்ஃபுல்லாக செய்கிறார் பவனீதா லோகநாதன். சொந்தமாக கதை எழுதி அதற்கு ஓவியத்தில் கதாபாத்திரங்களை உருவாக்கி, டிஜிட்டலில் கதை சொல்கிறார் பவனீதா. ‘‘நான் ‘பாதையின் கைதி’ என்று சொல்லலாம். தேடலோடு பயணிக்கின்றேன். சினிமாவில் எனக்கான தேடலைக் கண்டடைய முயற்சிக்கிறேன். நான் சுயாதீன திரைப்பட இயக்குநர் மற்றும் விளம்பரத் துறை எழுத்தாளர்.

இலங்கையின் மலையக இந்தியத் தமிழர்கள் என்னும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனது குடும்பத்தினர். 60 வருடங்களுக்கு மேலாக கொழும்பில் வாழ்ந்து வருவதால் கொழும்பு எங்கள் வாழ்வோடு கலந்துவிட்டது...’’ ஆரம்பமே ஒரு கதையோட்டமாக தன் கதையைச் சொல்லத் தொடங்கினார் பவனீதா.
‘‘என் சிறுவயது மிகவும் சிக்கலானது. பிறந்ததிலிருந்தே குடும்ப வன்முறையை மட்டும்தான் பார்த்து வளர்ந்திருக்கிறேன். வளர வளர இன ரீதியான புறக்கணிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தன. கற்றல் குறைபாடு (dyslexia) இருந்ததால் பள்ளியிலும் புறக்கணிக்கப்பட்டேன். எனக்கு வெளி உலகத்தினைப் புரிந்துகொள்வதற்கு நிறைய காலம் எடுத்தது. நான் இந்த உலகத்தை வேறு மாதிரி அணுகிக் கொண்டிருந்தேன். அது சராசரி நடைமுறை வாழ்க்கையிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது.

ஏழு வயதில் தந்தையை இழந்த பின்னர் தாத்தா வீட்டுக்கு நானும் அம்மாவும் வந்துவிட்டோம். எனது தாத்தா பழைய இரும்புக்கடை வைத்திருந்தார். அங்கே பல்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட பழைய பத்திரிகைகள் குவிந்து கிடக்கும். அந்தப் பத்திரிகைகளைத் திறந்து எதையாவது தேடுவது எனது பழக்கம்.
அந்தப் பத்திரிகைகளில் ரூபாய் நோட்டுகள், முத்திரைகள், கடிதங்கள், வாழ்த்து அட்டைகள் என்று ஏதாவது கிடைக்கும். அதை சேகரித்து வைத்துக்கொள்வதும் என் வழக்கம்...’’ இப்படி நினைவுகளின் ஓட்டத்தில் கதை சொல்லிக்கொண்டிருந்த பவனீதாவுக்கு தனது பத்தாவது வயதில் ஒரு பத்திரிகையில் VCD ஒன்று கிடைத்திருக்கிறது. அதில் இருந்த விஷுவல்கள்தான் அவர் வாழ்க்கையை மாற்றியிருக்கின்றன.

‘‘அதுவரை நான் பார்த்து வந்த சினிமாக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு காட்சி அனுபவம் அந்த விசிடியில் இருந்த ‘ரன் லோலா ரன்’ படத்தால் கிடைத்தது. அது ஒரு ஜெர்மன் திரைப்படம். என் கண் முன்னே என் உலகம் மாறுவதை உணர்ந்தேன். அன்றிலிருந்து சினிமா என் வாழ்க்கையாக மாறியது.நான் அந்தப் படத்தைத் தேடி அலைந்து பெயரைக் கண்டுபிடித்தேன்.

அப்போதுதான் உலகத்தில் பல நாடுகள் இருக்கின்றன; அந்தநாடுகளில் எடுக்கப்படும் சினிமாக்கள் வித்தியாசமானவை என்று அறிந்துகொண்டேன். உலக சினிமாக்கள் எனக்கு வாழ்க்கையைக் கற்றுத்தந்தன...’’ என்னும் பவனீதா, பள்ளி முடித்த பின்னர் வெளிநாடு சென்று திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படித்து படங்களில் பணிபுரியவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், வறுமை அவரை படிக்கும் போதே சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.

‘‘ஊடகத்துறை, பின்னர் அதிலிருந்து விலகி விளம்பரத் துறை என என் பயணம் ஆரம்பித்தது. இந்தப் பயணத்தில்தான் சுயாதீன சினிமாவை அறிந்துகொண்டேன். குறும்படங்களை இயக்கி சர்வதேச திரைப்பட விழாக்களில் கால் பதிக்க ஆரம்பித்தேன். ‘Noise’, ‘By the sea’, ‘Generations’ இவை மூன்றும் நான் இயக்கிய குறும்படங்கள். மூன்று குறும்படங்களும் பல விழாக்களையும், விருதுகளையும் கொண்டு வந்தன. முக்கியமாக பெர்லின் திரைப்பட விழா வரை என்னைச் செல்ல வைத்தது...’’ என தன் பயணம் குறித்து நெகிழும் பவனீதா தனது டிஜிட்டல் நாவல்கள் குறித்து பேசத் தொடங்கினார்.

‘‘இப்போது 5 மோஷன் கிராஃபிக் நாவல்கள், 15 கிராஃபிக் நாவல்கள் புத்தகங்களை உருவாக்கி வருகிறேன். தவிர குறும்படத்துக்கான திரைக்கதை உருவாக்கப் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறேன்.

இலங்கை நிலத்தில் கதைகளுக்கு பஞ்சமே இல்லை. இலங்கை என்றாலே வடக்கில் வாழும் மக்களின் போர் சார்ந்த கதைகளைத்தான் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்கள். இங்கே பல்வேறு சமூகங்கள் வாழ்கின்றன. எங்களுக்குள் எண்ணற்ற சொல்லப்படாத கதைகள் இருக்கின்றன. அதனை உணரவும், அதன் வடிவத்தைக் கண்டடையவும் முடியாத நிலையில் புரிதலற்று இருப்பதே பிரச்னை.

இலங்கையில் காண்பியல் கலை வளர்ச்சி இன்னும் முழுமையாக வளரவில்லை. காமிக்ஸ் பற்றிய புரிதலோ ரசனையோ அறிமுகமோ இல்லாத நிலையில் அதை உருவாக்க தொழில்நுட்பம், தொழில்நுட்பக் கலைஞர்கள், சரியான பட்ஜெட் என்று எதுவுமே இல்லாத சூழலில் என் பயணத்தைத் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் யாருக்கும் என் மீது நம்பிக்கை இல்லை. சிலர் பெண்ணின் தலைமைக்குக் கீழே பணிபுரிய மாட்டோம் என்று கூறினார்கள். தனி ஒருத்தியாக   5 வீடியோக்கள், 15 புத்தகங்களை உருவாக்க 40 + கலைஞர்களை ஒருங்கிணைப்பது சுலபமல்ல. நான் அதைச் செய்தேன்; செய்து வருகிறேன்.

எதிர்காலத் திட்டமாக அடுத்து நான் LGBTQ + குறித்த வெப் காமிக்ஸ் ஆரம்பித்திருக்கிறேன். அத்தோடு எனது குறும்படம், முழு நீள திரைப்படத்துக்கான வேலைகளை இன்னொரு பக்கம் செய்து கொண்டிருக்கிறேன்.இலங்கைக்கு என்று தமிழ் காமிக்ஸ் துறை ஏற்படுத்துவதும்  இலங்கைக்குரிய  கார்ட்டூன் தயாரிப்புகளை ஆரம்பிப்பதும்தான் என் இலக்கு. Bigeyes நிறுவனத்தை ஆரம்பித்து அதை செய்யத் தொடங்கியிருக்கிறேன்...’’ என்னும் பவனீதா இன்று தொடர் முயற்சியால் பல சொல்லப்படாத உண்மைக் கதைகளை கிராஃபிக் நாவல்களாக வெளியிட்டு சாதித்து வருகிறார். ஆராய்ந்தால், இலங்கையிலிருந்து கிராஃபிக் நாவல்களை முழுமையான கண்ணோட்டத்தில், நவீன தொழில்நுட்பத்தில் கொடுப்பவரும் பவனீதா லோகநாதன்தான்.

சமீபத்தில் ‘குட்டு’ என்னும் யானைகள் சார்ந்த கிராஃபிக் நாவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் பவனீதா. இந்த கிராஃபிக் நாவலில் இலங்கை யானைகள் எவ்வாறு அரசியல் காரணங்களுக்காக அழிக்கப்படுகின்றன என்ற உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுவரை சொல்லப்படாத உண்மைகளும் கூட அதில் சொல்லப்பட்டுள்ளன.

ஷாலினி நியூட்டன்