‘எதற்கும் துணிந்தவன்’ கமர்ஷியலா சமூக கருத்தை பேசப் போகிற ஃபேமிலி படம்! நெகிழும் டி.இமான்



‘சும்மா சுர்ருன்னு...’ இப்படித்தான் அத்தனை குழந்தைகளும் முணுமுணுக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் பரபரப்புக்கு இடையே நமக்கு ஹாய்சொன்னார் படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்.
‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. எவ்வளவு வைரல் ஹிட் அடிச்சாலும், ரெக்கார்ட் பிரேக்குகள் கொடுத்தாலும் நாம கம்போஸ் பண்ண பாடலை ரெண்டு குழந்தைகள் பாடிட்டுக் கடந்து போகும் போதுதான் ஓர் இசைக் கலைஞனா எனக்கு திருப்தி. குழந்தைகளை திருப்திப் படுத்துறதுதான் மிகப்பெரிய சவால். அது என் விஷயத்தில் நடக்குதுன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு...’’ புன்னகைக்கிறார் டி.இமான்.

‘எதற்கும் துணிந்தவன்’?!

சூர்யா சார் கூட முதல் படம்... பாண்டிராஜ் சார் கூட மூணாவது படம்... சன்பிக்சர்ஸ் கூட தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள்... கடந்த ரெண்டு வருஷமா சூர்யா சாருக்கு சீரியஸா சமூகம் சார்ந்த கருத்தியல் படங்களாதான் வந்திருக்கு. கமர்ஷியல் படங்கள், அதிலும் தியேட்டரில் வெளியாகி ரொம்ப நாள் ஆச்சு. அதை மனசுல எடுத்துக்கிட்டுதான் மியூசிக் கம்போஸ் செய்தேன். 2019க்கு அப்புறம் இப்பதான் சூர்யா சார் ஃபேன்ஸ் அவரை திரையில் பார்க்கப் போறாங்க. அதைத்தான் நான் டார்கெட் செய்திருக்கேன்.

பாண்டிராஜ் சார்கூட இதுக்கு முன்னாடி ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘கடைக்குட்டி சிங்கம்’ல பணிபுரிஞ்சிருக்கேன். ரெண்டுமே ஃபேமிலி சப்ஜெக்ட். ஆனா, ‘எதற்கும் துணிந்தவன்’ கமர்ஷியலா சமூகக் கருத்தை பேசப் போகிற ஃபேமிலி படம். அதனால முந்தைய ரெண்டு படங்களில் இருந்து இந்தப் படத்தின் பாடல்கள் மொத்தமா வேற மாதிரி இருக்கணும்னு யோசிச்சு கம்போஸ் செய்திருக்கேன். டைரக்டர் பாண்டிராஜ் பத்தி சொல்லுங்க?

ஒரு படத்துக்கும் எனக்கும் இருக்கற ஒரே தொடர்பு டைரக்டர்கள்தான். அவங்க கிரியேட்டர். அதைக் கடந்து முதல் பார்வையாளரும் கூட. எனக்குத் தெரிஞ்சு பாண்டிராஜ் சார் ஒரு மியூசிக் டைரக்டர் கூட மூணாவது படம் சேர்ந்து செய்யறது என் கூடதான்னு நினைக்கறேன். அந்தளவு அவர் என் மேல அவ்வளவு நம்பிக்கை வெச்சிருக்கார். அதனால்தான் இந்த காம்போ நடந்திருக்கு. நல்ல ஃபிரீடம் கொடுத்து படத்துக்கு என்ன வேணும்னு தெளிவா சொல்லிடுவார்

‘வாடா தம்பி...’ பட்டி தொட்டி எங்கும் மாஸ் காட்டிக் கொண்டிருக்கே?

விக்னேஷ் சிவன் எழுதின பாட்டு. மனுஷன் இப்படியே ஹீரோ ஓபனிங் பாடல்  ஸ்பெஷலிஸ்ட் ஆகிடுவார் போல! சூர்யா சாருக்கு ஓபனிங் பாடல்கள் நிறைய இருக்கு. ஆனா, எதுவுமே அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ஓர் உரையாடல் நடத்துற மாதிரி பாடல்களா அமைஞ்சதே கிடையாது. அந்த ஏரியாவைத்தான் நான் ஃபுல்ஃபில் பண்ணணும்னு நினைச்சேன். ஓபனிங் மாஸ் பாடலா இருக்கணும்... அதே சமயம் அவர் ரசிகர்கள் கிட்ட பேசுற மாதிரி இருக்கணும்... இந்த மேஜிக் மற்ற ஹீரோக்களுக்கு நிறைய நடந்துருக்கு. இன்னும் சூர்யா சாருக்கு அது நடக்காத மாதிரி இருந்துச்சு.

சூர்யா சார் ஃபேன்ஸ் போகிற போக்கில் அவருக்கு ரசிகர்கள் ஆனவங்க கிடையாது. ரொம்பவே லாயல் ரசிகர்கள். வெறுமனே அவர் படங்களுக்காக மட்டுமில்லாம அவர் படத்தில் யார்,  நிஜத்தில் யார்னு உணர்ந்து ரசிகர்கள் ஆனவங்க. இந்தச் சூழல்ல அவர்களிடம் சூர்யா சார் பேசினா எப்படி இருக்கும் என யோசிச்சு உருவாக்கின பாட்டுதான் ‘வாடா தம்பி...’ இந்த வார்த்தை மட்டும் போட்டுக் கொடுத்துட்டேன், மத்ததை விக்னேஷ் சிவன் கம்ப்ளீட் செய்துட்டார்.

‘உள்ளம் உருகுதய்யா...’ வரிகளை எப்படி காதலுக்கான வரிகளா மாற்றம் செய்தீங்க?

யுகபாரதிதான் வரிகள். படத்தில் சூர்யா சார் முருக பக்தர். அதிலே ஹீரோயின் கூட காதல். ஸோ, பக்தி, காதல் ரெண்டும் சேர்ந்து ஒரு பாடல் கிடைச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சேன். இருக்கற அத்தனை முருகன் பாடல்களையும் கேட்டு அதில் இந்த டி.எம்.சௌந்தர்ராஜன் சார் பாடின ‘உள்ளம் உருகுதய்யா...’ பாட்டை தேர்வு செய்தோம். ஏன்னா, பக்தியா கேட்டா பக்தியாவும்; முருகனை காதலிச்சு கேட்டா காதல் பாடலாவும் இருந்தது.

அந்தப் பாடலை அப்படியே ரீமிக்ஸ் செய்தாலும் அந்த பாடலுடைய ஸ்பெஷல் கெட்டுடும். அதனால அந்த முக்கியமான வரிகளை மட்டும் எடுத்துக்கிட்டு கம்போஸ் செய்தேன். அதற்கேற்ப பாடல் விஷுவல் பட்டையைக் கிளப்பிடுச்சு. சூர்யா சார் லுக், பிரியங்கா மோகன் லுக் இப்படி பாடல் முழுக்க நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு தெய்வீகமும் காதலும் சேர்ந்து கிடைச்சிருக்கு.

‘சும்மா சுர்ருன்னு...’ சுண்டி இழுக்குதே ?

குழந்தைகள்னு சொன்னா கூடவே சிவகார்த்திகேயன் சேர்ந்துக்குவார். அப்படித்தான் இந்த பாட்டை சிவகார்த்திகேயன் எழுதியிருக்கார். அவர் இன்னைக்கு டாப் ஹீரோ. ஆனா, கொஞ்சமும் அந்த ஈகோ, பந்தா இல்லாம கேட்டதும் கேட்ட நேரத்துல எழுதிக் கொடுத்தார். இதுக்கு முன்னாடி ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்துல ‘காந்தக் கண்ணழகி...’ல சேர்ந்து வேலை செய்திருக்கோம். எப்படி பார்த்தாலும் அது அவருடைய படம். இன்னொருத்தர் படத்துக்கு செய்யணும்னு எந்த தேவையும் இல்லை. ஆனா, அதை எல்லாம் பார்க்காம அவர் தன் படத்துக்கு ஒரு லிரிக்ஸ் எழுதினா எப்படி சின்சியரா செய்வாரோ அப்படி இந்தப் படத்துக்கு எழுதிக் கொடுத்திருக்கார்.

அந்த ‘சும்மா சுர்ருன்னு...’ வரியை மட்டும் நான் ஆரம்பிச்சு கொடுத்துட்டேன். அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் வரிகள் எழுதினார். அதுவும் ‘டாக்டர்’ ரிலீஸ் பிரஷர்ல இருந்தப்ப!

பேக்ரவுண்ட் ஸ்கோர் பத்தி சொல்லுங்க?

‘எதற்கும் துணிந்தவன்’ முக்கியமான சமூகப் பிரச்னையை அழுத்தமா பேசற படம். அதனால மொத்தமே மூன்று பாடல்கள்தான். அதேசமயம் பேக்ரவுண்ட் ஸ்கோருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கோம்.இந்தப் படத்தில் முக்கியமான ஒரு தீம் இருக்கு. படத்தின் வில்லன் வினய்க்கு ஒரு தீம் மியூசிக் உருவாக்கியிருக்கோம். படத்தில் பாடல்கள் குறைவு என்பதால் ஆடியோ கூடவே ‘எதற்கும் துணிந்தவன்’, ‘வெனோம்’, ‘த பிரே’, ‘ரோமெடி’, ‘தாண்டவம்’, ‘ஜூபிலேஷன்’, ‘பவுன்சிங் டைகர்’னு முக்கியமான ஏழு பேக்ரவுண்ட் ஸ்கோரை மட்டும் ரிலீஸ் செய்திருக்கோம். இதில்லாம படத்தில் இன்னும் நிறைய பேக்ரவுண்ட் மியூசிக் இருக்கு.

சன் பிக்சர்ஸ் பத்தி சொல்லுங்க?

வொண்டர்ஃபுல் டீம். ஏகப்பட்ட புராஜெக்ட் பண்ணிட்டு இருக்காங்க. எல்லாமே பெரிய படங்கள்... பெரிய ஹீரோக்கள். அவங்களை மாதிரி புரமோஷன் பிளானிங்கை யாராலும் செய்ய முடியாது. எந்த நேரத்தில் எப்படி எந்த புராஜெக்ட்டுக்கு புரமோஷன் கொடுக்கணும்னு  தெளிவா இருப்பாங்க. அதேபோல படம் முடிஞ்ச பிறகுதான் கலாநிதிமாறன் சார் படம் பார்க்க வருவார். அந்த வகையில் அவங்க கூட தொடர்ந்து வேலை செய்யறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒரு கலைஞனுக்கு வேலையில் சுதந்திரம்தான் முக்கியம். அது சன் பிக்சர்ஸ் கிட்ட அதிகமாகவே கிடைக்கும்.

அது எப்படி உங்க கூட வேலை செய்கிற இயக்குநர்கள் மட்டும் குறைந்தபட்சம் மூன்று படங்களாவது இணைந்து செய்யறாங்க..?

லேட் செய்யாததை முதல் காரணமா நினைக்கறேன். எந்த ஒரு படத்தின் ஆரம்பமும் சரி  முடிவும் சரி... அது இசையமைப்பாளர்கள்கிட்டதான் இருக்கு. மியூசிக் கம்போசிங்ல ஆரம்பிச்சு ரீரெக்கார்டிங்ல முடிப்போம். அதனால எப்பவும் நான் தாமதிக்கவே மாட்டேன். இந்த நம்பிக்கைதான் பல இயக்குநர்கள் கூட தொடர்ந்து என்னைப் பயணிக்க வைக்குது.

ஷாலினி நியூட்டன்