அரண்மனைக் குடும்பம் - 9



சேட் எஸ்டேட் கிட்டத்தட்ட ஒரு கோயிலைப் போல் ஆகிவிட்டிருந்தது. எங்கெங்கிருந்தெல்லாமோ மக்கள் வந்திருந்தனர். எஸ்டேட்டுக்கு செல்லும் தார்ச்சாலை முழுக்க கார்களும், வேன்களும்தான் நின்றுகொண்டிருந்தன!ரத்தியும் சாலையோரமாகக் கிடைத்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு தியாவோடும், பங்கஜத்தோடும் இறங்கினாள்.
தியா கீழிறங்கிய வேகத்தில் எஸ்டேட்டின் மெயின் கேட் நோக்கி ஓடத் தொடங்கினாள். அவளைப் பிடிக்க பின்னாலேயே ஓடினாள் பங்கஜம். அதைப் பார்த்த ரத்திக்கு அந்தக் காட்சியே பேரானந்தமாக இருந்தது. தன் துப்பட்டாவை குளிருக்கு இதமாகத் தலையைச் சுற்றி மூடிக் கொண்டு அவளும் நடந்தாள்.

தியா ஓட்டமாக ஓடி பூபால்தாஸ் சுவாமிஜியின் முன் போய் நின்றிருந்தாள். தியாவைக் காணவும் அவரிடமும் உற்சாகம். “அரே பேபி... ஆவ்... ஆவ்...” என்று தியாவை இருகரம் நீட்டி அழைத்திட, தியாவும் சுவாமிஜியின் மடிமேல் போய் மிக சௌஜன்யமாக அமர்ந்து கொண்டாள்.

அருகில் ஏராளமான செவ்வாழைப் பழங்கள் இருந்தன. அதில் ஒன்றை எடுத்து நெற்றிமேல் வைத்து பிரார்த்தித்து விட்டு தியா வசம் தந்து சாப்பிடவும் சொன்னார்.
அதற்குள் பங்கஜமும், ரத்தியும் அவர் முன்னால் வந்து விட்டிருந்தனர். அவர்கள் பார்க்க தியா அழகாக வாழைப்பழத் தோலை உரித்து சாப்பிடலானாள்.

சுவாமிஜி ரத்தியையும் ஏறிட்டார். மடிமேல் குழந்தை இருக்க அவர் இந்தியில் ரத்தியுடன் பேசத் தொடங்கினார்.“குழந்தை இப்ப எப்படி இருக்கா?”“நல்லா இருக்கா சுவாமிஜி... இவ்வளவு சீக்கிரம் இவ குணமாவான்னு நாங்க நினைக்கல...”“ரொம்ப சந்தோஷம். ஆனா, நீ இதைப் பார்த்து பெருசா சந்தோஷப்பட்டுடாதே...”அவர் சொல்வதில் ஒரு சின்ன மர்மத்தை ரத்தியால் உணர முடிந்தது.“சுவாமிஜி என்ன சொல்றீங்க... இவ பூரணமாக குணமாகலையா... அதைத்தான் இப்படி சொல்றீங்களா?”“இல்ல... நான் வியாதிக்காகவே பேசலை... இதுவும் தானா வந்த வியாதியும் இல்லை...”“அப்படின்னா?”

“ஆமா... உன் புருஷன் இப்ப உன் கூட வரலையா?”“இல்ல... ஆனா, என்னை மனப்பூர்வமாதான் அனுப்பி வெச்சிருக்கார்... ஏன் ஜீ?”ரத்தி கேட்க பூபால்தாஸ் சுவாமிஜி முகத்தில் ஒருவித சிந்தனை. அதனால் சில விநாடிகள் மௌனம். அதில் பலவிதமான அர்த்தங்கள்.“சுவாமிஜி... யோசிக்கறத பார்த்தா எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு...”
“பயப்படாதே... நான் சொல்றத கேட்டு நடந்தா நீ தீர்க்காயுசோட நல்லா இருப்பே... ஆனா...”அவரால் அதற்குமேல் பேச முடியவில்லை.

“ஏதோ சொல்ல வந்து சொல்லாம நிறுத்திட்டீங்களே... என் உயிருக்கு ஏதோ ஆபத்து இருக்கற மாதிரியும் நீங்க பேசறத பார்த்தா தெரியுதே?”“ஆமாம்... நான் உன் வரைல மறைக்க விரும்பலை. என் எதிரில் நீ இருக்கும்போதும் உன் உடம்பைச் சுற்றி ஒரு கருப்பு நிறத்தை நான் பாக்கறேன்... நீ ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும். ஆபத்து உனக்கு மட்டுமில்லை... உன் குழந்தை, கணவனுக்கும்தான்..!” சுவாமிஜியின் பேச்சு ரத்தியை ஒரு உலுக்கு உலுக்கியது.

“சுவாமிஜி... நான் இப்பதான் கொஞ்சம் சந்தோஷத்துல இருக்கேன். அதை போக்கிடுச்சு உங்க பேச்சு. ஆபத்துன்னு நீங்க சொல்றது யாரால... எதனால..?”
“அதை எல்லாம் சொல்ற அளவு நான் த்ரிகால ஞானியில்லம்மா... இப்பதான் கர்ம வியாதிகளை குணப்படுத்த முடிஞ்ச ஒரு சக்தி எனக்கு வசப்பட்டிருக்கு. அதை வெச்சு சொல்றேன்.

உன் குழந்தைக்கு இனி வியாதியால எந்த தொந்தரவும் இல்லை... அதே சமயம் நீங்க இனி சந்தோஷமா இருப்பீங்கன்னு என்னால சொல்ல முடியலை. இப்போதைக்கு என்னால இவ்வளவுதான் சொல்ல முடியும்.

உன் வரைல எமன் என் கண்ணுக்கு ரொம்ப பக்கமா தெரியறான். நீயோ உன் குழந்தையோ தனியா மட்டும் எங்கேயும் போகாதீங்க. நீங்க மூணு பேரும் எப்பவும் சேர்ந்தே இருங்க... இப்போதைக்கு அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்.இப்ப கூட சொல்றேன்... நீ கொஞ்சம் காத்திரு... தனியா நீ மட்டும் போகாதே...”“சுவாமிஜி... இப்படி சொன்னா எப்படி? எனக்கு ஏதாவது ஆனா கூட பரவாயில்லை ஜி... என் கணவரும், குழந்தையும் நல்லா இருக்கணும். அவங்களுக்கு எதுவும் ஆயிடக் கூடாது...”“அது உன் கைலதான் இருக்கு. எதிரிகள் எங்கேயோ இல்லை. உன்னைச் சுத்தி... உன் வீட்டுக்குள்ள இருக்கறமாதிரிதான் நான் யூகிக்கறேன்.

நீ, உன் குழந்தை, உன் கணவர் நீங்க மூணுபேரும் நல்லா இருக்கணும்னா நீங்க மட்டும் தனியா இருக்கணும். அப்ப கூட ஆபத்து நீங்கிடும்னு சொல்ல மாட்டேன்... இதுதான் இப்போ உன் விதி...”“இது மாற வழி இல்லையா... ஆபத்துன்னு சொல்லத் தெரிஞ்ச உங்களுக்கு அதை தடுத்து நிறுத்த வழிகாட்ட முடியாதா?”“அதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு... நான் ஒரு மாலை தரேன்... அதை உன் புருஷன் தன் கழுத்துல போட்டுக்கணும். எப்பவும் கழுத்தைவிட்டு அது வெளியேறக் கூடாது.அதை உன்னால செய்ய முடிஞ்சா ஒருவேளை நீங்க ஆபத்துல இருந்து தப்பிக்கலாம். இல்லேன்னா...”பூபால்தாஸ் ஜீ அப்படி நடக்காமல் போகக்கூட வாய்ப்பு இருப்பதுபோல்தான் ‘இல்லேன்னா...’ என்று இழுத்தார்.

“சுவாமிஜி நீங்க கொடுங்க... நான் அதுக்கு பொறுப்பு. அவர் கழுத்துல அதை நான் போட்டு விட்றேன். எனக்கு அவர் நல்லா இருந்தா போதும்...”
படபடப்பாகப் பேசிய ரத்தி முன் ஆழமாக ஊடுருவிய சுவாமிஜி தன் கழுத்தில் அணிந்திருந்த மாலைகளில் ஒரு கருங்காலி மரத்துண்டை மணிகளாக்கி செய்திருந்த மாலை ஒன்றைக் கழற்றி அவள் முன் நீட்டினார்.“இதை காசியில இருக்கும் என்னோட குருவான ‘விஸ்வநாத அகோர பைரவர்’ எனக்கு கொடுத்தார். இதன் முன்னால மரணமும் எமனும் ஒரு விளையாட்டுப் பொருள் மாதிரிதான்! இதை நான் உனக்குத் தரேன். எனக்கு இனி தேவையில்லை. பெருசா வாழற விருப்பமும் எனக்கு இல்லை.

என் வரைல எல்லா நாட்களும் இன்னொரு நாள்தான். அந்த நாளுக்குள்ள பெருசா எந்த வெளிச்சமும் இல்லை, இருட்டும் இல்லை! நான் சமநிலை அடைஞ்ச ஒரு துறவி. என் வரைல இந்த பூமியில நான் அனுபவிக்கவோ, உணரவோ எதுவும் இல்லை.விதிதான் உன்னை என் முன்னால கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.

நான் உனக்கு கடன் பட்டிருக்கேன். இந்த மாலை மூலமா அதை அடைக்கறேன்... உன் வரைல சொல்ல வேண்டியதையும் சொல்லிட்டேன்.நீ போய் காத்திரு... தனியா போகாதே! உன் புருஷனை வரச் சொல்லி அவன் கூட போ... அவ்வளவுதான் இப்ப நான் உனக்கு சொல்வேன்...”என்று இந்தியில் அவர் பேசியது அருகில் நின்று கொண்டிருந்த பங்கஜத்துக்குப் புரியவே இல்லை.

குழந்தையும் பழத்தைச் சாப்பிட்டு முடித்தவளாக அவர் கழுத்து மணிமாலைகளைப் பிடித்து அதைத் திருகி விளையாடியபடியே இருந்தாள்.ரத்தியோ கலங்கிப் போய் விட்டிருந்தாள். அந்த கருங்காலி மணி மாலையை பத்திரமாக தன் துப்பட்டாவின் முனையில் முடிந்து கொண்டவள், குழந்தையை வாங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு இடம் விட்டு அவரை விட்டு விலகி மரத்தடிக்கு வந்தாள்.

பெரிய வாதாமரம்... கீழே அதன் பழுப்பு இலைகள்... உதிர்ந்து கிடக்கும் வாதாமரக் கனிகள்...பங்கஜம், ரத்தியின் கலங்கிய முகத்தை வைத்து ஏதோ விபரீதம் என்பதைப் புரிந்துகொண்டாள்.
“அம்மா... ஏம்மா ஒருமாதிரி இருக்கீங்க?” என்று ஆரம்பித்தாள். அதற்கு பதில் சொல்லாமல் ரத்தி சற்று விலகிச் சென்று கணேசனுக்கு போன் செய்யத் தொடங்கினாள்.
“ஜீ... கொஞ்சம் சேட் எஸ்டேட்டுக்கு வரீங்களா?”“எதுக்கு ரத்தி?”

“வாங்களேன்... எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. கார் ஓட்ட பயமா இருக்கு...”
“இது என்ன புதுசா? அதான் ஒரு மகா பெரிய டாக்டர் அங்க இருக்காரே... அவரை பாத்துட்டேதானே..?”
“பாத்துட்டேன்... ப்ளீஸ்... நீங்க கொஞ்சம் வாங்களேன்...”
“வான்னா எப்படி வர... கார்தான் உன்கிட்ட இருக்கே?”

“ப்ளீஸ்... ஒரு ஆட்டோ பிடிச்சு வரமுடியுமா?”
“வாட்... நான் ஆட்டோ பிடிச்சு வரணுமா? ரத்தி உனக்கு என்ன ஆச்சு? நான் எந்த காலத்துல ஆட்டோல எல்லாம் ஏறியிருக்கேன்..?”
“இல்லேன்னா உங்க நண்பர் சந்தோஷை வரச் சொல்லி அவரோட கார்ல வாங்களேன்...”
“ஸ்டுப்பிட் மாதிரி பேசாதே... போகத் தெரிஞ்ச உனக்கு வரத் தெரியாதா?”

“இல்ல... நான் காரணமாதான் சொல்றேன். நம்ம மூணு பேருக்குமே இப்ப நேரம் சரியில்ல ஜீ...”“அப்படின்னு அந்த சாமியார் உன்கிட்ட சொன்னாரா..?”“ஜீ... நான் எல்லாத்தையும் விபரமா அங்க வந்து சொல்றேன். கொஞ்சம் வந்து கூட்டிக்கிட்டு போங்க ஜி...”“இதோ பார் ரத்தி... நான் நினைச்ச மாதிரிதான் எல்லாமே நடக்குது. அந்த சாமியார் கெட்ட நேரம் அது இதுன்னு சொல்லி பயத்தை உருவாக்கிட்டார் போல... அப்பதானே நான் அந்த பூஜை பண்றேன்... இந்த யாகம் பண்றேன்னு சொல்லி பணத்தை கறக்க முடியும்..?”

“ஐயோ... அவர் அப்படிப்பட்டவர் இல்ல... அவர் நம்பள காப்பாத்த நினைக்கறவர். அவ்வளவு ஏன், நம்ம தியாவை அவர் முழுமையா குணப்படுத்திட்டார்... அவரை தயவு செய்து சந்தேகப்படாதீங்க...”“தியாவை காப்பாத்தறதா... அவ இப்ப பிரிஸ்க்கா இருக்கறத வெச்சு சொல்றியா..? நான் ஸ்கேனை பார்த்துட்டு டாக்டர் வெங்கட் ராவ் சொன்னா மட்டும்தான் நம்புவேன். இப்ப சம்திங் அவர் ஏதோ மேஜிக் பண்ணியிருக்காரு. அது அவரைப் பார்த்து நாம வாயப் பிளக்கறதுக்காகக் கூட இருக்கலாம். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பாங்களே... அப்படிதான் நான் தியா விஷயத்தை நினைக்கறேன்...”

“இல்ல ஜீ... நீங்க நம்ம கெட்ட நேரம் புரியாம ஏதேதோ பேசறீங்க. நம் மூணுபேர் உயிருக்குமே ஆபத்து இருக்கு...”
“ஆபத்தா... யாரால..? ஆபத்துன்னு சொல்லத் தெரிஞ்ச அவருக்கு யாரால எதனாலன்னு சொல்ல முடியலையா..?”
“கூடவே இருக்கறவங்களாலன்னு மட்டும் சொன்னார். யாருன்னு விபரமா சொல்லலை...”
கூடவே இருக்கறவங்கன்னா... என் அப்பா - அம்மாவை சொல்றாரா..?”
“அது... அது...”

“கமான்... அவங்கதானே கூட இருக்கறவங்க..?”
“ஜீ... எல்லாத்தையும் என்னால போன்ல பேச முடியாது ஜீ... ப்ளீஸ் ஜீ... ‘நீ தனியா போகாதே... உன் புருஷனை வரச் சொல்லி சேர்ந்து போ’ன்னு சொல்லியிருக்காரு... அப்படிச் சொன்னா நிச்சயம் அர்த்தம் இருக்கும் ஜீ...”“நோ... இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். நான் உனக்கு இப்ப சொல்றேன்... அந்தாள் சொன்னதை எல்லாம் தூக்கி தூரப் போடு. நீ போய் அவர பார்த்ததே தப்பு. அவர் என்ன அவர்... அவன்... ஆமா... அவனை பாக்கப் போனதே தப்பு! பாத்தவரை போதும்... கிளம்பிவா.
எந்த ஆபத்து எங்க இருந்து எப்படி வருதுன்னு நானும் பாக்கறேன்...”“ஜீ...’’

“ஷட்அப்... நீ இப்ப தைரியமா கிளம்பி வரே... வந்தாதான் என் மனைவி... இல்லேன்னா நீ ஒரு கோழை, முட்டாள்..!”கணேசன் கடுமையாகச் சொன்னதோடு போனை கட் செய்துகொண்டான்.ரத்தி அந்தக் குளிரிலும் வியர்த்திருந்தாள். சற்றுத் தொலைவில் இதைப் பார்த்தபடி இருந்த பங்கஜத்தின் முகத்திலும் வரிவரியாக சலன ரேகைகள்.
எந்த கவலையுமின்றி வாதாமரக் கொட்டைகளைப் பொறுக்கி எடுத்து விளையாடிக் கொண்டிருந்தாள் தியா.\

ரத்தியும் வேறு வழியின்றி ஒரு முடிவுக்கு வந்தாள். காரை நோக்கி நடந்து அதை ஸ்டார்ட் செய்தாள். வழக்கம்போல் தியா முன்புறம் ஏறிக்கொள்ள, பங்கஜம் பின்னால் ஏறிக் கொண்டாள்.காரும் வளைந்து திரும்பி புறப்பட்டது.

ஓரிடத்தில் மார்ட்டினும் லாரியோடு காத்துக் கொண்டிருந்தான். கார் கடக்கவும், தன் லாரியைக் கிளப்பி வேகமெடுத்தான்... அசுர வேகம்!

(தொடரும்)

தாவர உணவுகளில் உயிரில்லையா... அவற்றைஉண்ணுவது மட்டும் பாவமாகாதா... என்கிற கேள்விக்கு கனபாடிகள், தானறிந்த பதிலைக் கூறத் தொடங்கினார்.
“தாவரங்களுக்கு உயிர் நிச்சயம் உண்டு. ஆனால், அவற்றுக்கு வலியுணர்ச்சியோ, பலவிதமான பருவங்களோ இல்லை... ஒரு காயோ, கனியோ முழு வளர்ச்சி கண்ட நிலையில் மரத்தையும், செடியையும் விட்டு விழுந்து, மண்ணில் கிடந்து அழுகியோ, இல்லை காய்ந்தோ, மண்ணோடு மண்ணாகவே போகும்.

அப்படி அவை மண்ணாவதற்கு அது மனித உயிரின் ஆற்றலுக்கு பயன்படுவது என்பது ஒரு நல்ல மாற்றமாகும்.அதனாலேயே தாவரங்களை உண்ணும் முன் நன்றி உணர்வோடு உணவை வணங்கிவிட்டு உண்பது எனும் வழிமுறை உருவாக்கப்பட்டது. விருட்சமாகிய மரங்களைக்கூட நம்முடைய பலவிதமான தேவை கருதி வெட்ட முற்படும்போது அவற்றை உரிய முறையில் மஞ்சள் குங்குமம் இட்டு வணங்கியபிறகே வெட்டும் ஒரு நயந்த முறையும் உருவாக்கப்பட்டது.

விருட்சங்களாகிய மரங்களுக்கென்று விருட்ச சாஸ்த்ரம் என்கிற நூலே இயற்றவும் பட்டது. ஜீவ வாயுக்களை அதிகம் வெளிப்படுத்தும் அரசமரம் போன்றவை வணங்கப்பட்டன.
உணவு தானியங்களையும் கோள்களின் தொடர்புடையதாக உணர்ந்து அவற்றை தானமளிக்கும் மேலான பண்பாடும் தோன்றியது. தானியங்களை பெருமைப்படுத்தும் பொருட்டு தான்யலட்சுமி என்று அஷ்ட லட்சுமிகளில் ஒரு லட்சுமி கருதப்பட்டாள்.

உணவுக்குத் துணை செய்யும் நீரும் நெருப்பையும் கூட தேவதாரூபமாகக் கருதி அவற்றை வணங்கிப் போற்றும் பழக்கம் கற்பிக்கப்பட்டது,குளத்திலோ, ஆற்றிலோ இறங்குமுன் அதை முதலில் கால்களால் தீண்டாது, கைகளால் தீண்டி தலையில் தெளித்துக்கொண்ட பிறகே அதில் இறங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. நெருப்பைக் கூட ஊதி அணைக்கக் கூடாது. எச்சில் படும் வாய்ப்பு உண்டு. அது அதனைச் சிறுமைப்படுத்துவதாகும்.இப்படி பார்த்துப் பார்த்து வழிமுறைகள் தோற்றுவிக்கப்பட்டன. அடுத்து எந்த தாவரமும் முற்றாக அழிந்து போய் விடுவதில்லை. அதன் முழுமையான வாழ்வை வாழ்ந்தே நமக்கு உணவாகின்றன.

இது ஏனைய விலங்குகளுக்கோ, பறவைகளுக்கோ, நீர்வாழ் உயிரினங்களுக்கோ பொருந்துவதில்லை. வேட்டையாடி இவைகளைக் கொன்று விடுவதன் மூலம், அது முழுமையாக வாழவேண்டிய வாழ்வை நாம் தடுத்து விடுகிறோம். அவைகளை வலிக்க விட்டே கொல்கிறோம். இந்த வலி வேதனைதான் பாவமாக மாறுகிறது. யார் காரணமோ அவரைச் சேருகிறது!” - என்று கனபாடிகள் சொன்ன கருத்துக்குள் மேற்கொண்டு நிறைய கேள்விகள் கேட்க இடமிருந்தது.

ஆனால், அசோகமித்திரன் அதற்குமேல் அம்மட்டில் வாதம் புரிய விரும்பவில்லை.திரும்ப சர்ப்பங்களாகிய பாம்புகளிடமே திரும்பினார்.“ஏன் எவ்வளவோ உயிரினங்கள் இருக்க நம்முடைய எல்லா இறை ரூபங்களோடும் பாம்பு மட்டுமே பெரிதும் சம்பந்தம் கொண்டுள்ளது... எந்த வகையில் பாம்பு இப்படி சம்பந்தப்படுகிறது?” -  என்பது அவர் கேட்ட முக்கிய கேள்வியாகும்.

-இந்திரா சௌந்தர் ராஜன்

ஓவியம்: வெங்கி