7 படங்கள்!
அழகிய கண்ணே பட்டிமன்றத் தலைவர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘அழகிய கண்ணே’. கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். விஜய்சேதுபதி மற்றும் இயக்குநர் பிரபுசாலமன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்கள். சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்தப் படத்துக்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். பாடல்கள் வைரமுத்து. அறிமுக இயக்குநர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார்.
‘‘இது மதுரையில் ஆரம்பித்து சென்னையில் முடியும் லவ் ஜர்னி படம். சினிமாவில் ஜெயிக்க நினைக்கும் ஹீரோ, வேலை தேடும் ஹீரோயின். இந்த காதல் ஜோடிக்கு ஒரு கட்டத்தில் திருமணம் நடக்கிறது. அதன்பிறகு அவர்கள் வாழ்க்கையில் ஜெயித்தார்களா என்பதை யதார்த்தமான வாழ்வியலாக சொல்லியுள்ளேன்.
இது எல்லா தரப்பு ரசிகர்களுக்குமான படமாக இருக்கும். 20 முதல் 45 வயதுவரை உள்ள எல்லோரும் படத்தை தங்கள் வாழ்க்கையோடு கனெக்ட் பண்ணிக் கொள்வார்கள். பாலுமகேந்திரா, சீனுராமசாமியின் பட்டறையில் உருவான மாணவன் நான். அவர்களின் படம்போல் இது ஃபீல் குட் மூவியாக இருக்கும்...’’ என்கிறார் இயக்குநர் ஆர்.விஜயகுமார்.
ரஜினி
விஜய் நடித்த பல ஹிட் படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். இப்போது விஜய் சத்யா நடிக்கும் ‘ரஜினி’ படத்தை இயக்கியுள்ளார். இதன் நாயகி ஷெரின். அம்ரிஷ் இசையமைத்துள்ளார். பழனிவேல் தயாரித்துள்ளார். ‘‘என்னுடைய பாணியில் த்ரில்லர், ஆக்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான படமாக இதை உருவாக்கி உள்ளேன். ‘ரஜினி’ என்று டைட்டில் வைத்தவுடன் நிறைய பேர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதையா என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இது அவருடைய கதை இல்லை. நாயகன் தீவிர ரஜினி ரசிகராக வருகிறார். அதனால்தான் படத்துக்கு ‘ரஜினி’ என்று டைட்டில் வைத்தேன்.
ரஜினி ரசிகரான விஜய் சத்யா தனது வாழ்வில் எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். அதனால் என்ன மாதிரியான சிக்கல்கள் வருகிறது... அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை பரபரப்பான திரைக்கதையுடன் அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியான சென்டிமென்ட் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாக்கியுள்ளேன்.
விஜய் சத்யா இதில் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் நடித்திருக்கிறார். சித் ராம் பாடியுள்ள ‘துறுதுறு கண்கள்...’ பாடல் டிரெண்டிங்கில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ‘ரஜினி’ இந்த ஆண்டின் சிறந்த பொழுது போக்குப் படமாக இருக்கும்...’’ என்கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.
கடலை போட பொண்ணு வேணும்
டைட்டிலை வைத்தே கோடம்பாக்கத்தை தெறிக்கவிட்ட படம் ‘கடலை போட பொண்ணு வேணும்’. டிவி புகழ் அசார் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளார். இவர்களுடன் செந்தில், மன்சூரலிகான் போன்ற சீனியர்களும் இருக்கிறார்கள். ‘திரௌபதி’, ‘ருத்ரதாண்டவம்’ படங்களுக்கு இசையமைத்த ஜூபின் இசையமைத்துள்ளார். ராபின்சன் தயாரித்துள்ளார்.
‘‘இது செல்ஃபோனை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. தன்னுடைய பரம்பரை சாபத்தை நீக்க போராடும் ஹீரோ, தான் காதலித்துதான் கல்யாணம் பண்ணணும் என்கிற எண்ணத்தோடு பல பெண்களிடம் காதலைச் சொல்லியும் தோல்வியைச் சந்திக்கிறார். கடைசியாக, ஒரு பெண்ணை ஃபாலோ செய்து தன்னுடைய காதலை தெரிவிக்கிறார்.
அவர் தன் பதிலை செல்போனில் தெரிவிப்பதாகக் கூற, சில மணி நேரத்திற்குப் பின் தன் வாழ்நாளில் மறக்க முடியாத சிக்கல்களை அந்த செல்ஃபோன் மூலம் சந்திக்கிறார். இதிலிருந்து அவர் மீண்டாரா, பெண்ணின் பதில் என்ன ஆனது, இறுதியில் தனது குடுபத்தின் சாபத்தை நீக்கினாரா... என்பதை டைம் லேப் முறையில் சொல்லியுள்ளேன்...’’ என்கிறார் இயக்குநர் பா.ஆனந்தராஜன்.
கஜானா
கலகலப்பான காமெடி, திகில் மற்றும் சாகசங்கள் நிறைந்த படமாக உருவாகி வருகிறது ‘கஜானா’. பிரபாதிஸ் சாம்ஸ் இந்தப் படத்தை தயாரிப்பதோடு, படத்தின் கதையையும் எழுதியுள்ளார். ஜோதிகா நடித்த ‘ராட்சசி’ படத்தை இயக்கிய சை.கெளதம் ராஜ் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். அறிமுக இயக்குநர் யாசின் இயக்குகிறார்.
இயக்குநர் வேலுபிரபாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இதில் யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப் பேரரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட பிரம்மாண்ட கஜானாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் இளைஞர்களின் சாகசப் பயணத்தையும், அந்த கஜானாவைக் காப்பாற்றும் பேய்களின் அட்டகாசங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களுடன், திகில் மற்றும் காமெடியோடு சொல்லப்பட்டிருக்கும் இந்தப் படம் பெண்கள் மற்றும் குழந்தைகளை வெகுவாகக் கவரும் என்கிறது படக்குழு.
அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டிருக்கும் இதில் யானை, புலி, கரடி, குரங்கு மற்றும் பாம்பு போன்ற விலங்குகளை குழந்தைகள் ரசிக்கும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளனர். குழந்தைகளை குஷிப்படுத்துவதற்காக விலங்குகளை வைத்து காட்சிகளைப் படமாக்கிய படக்குழு, இதற்காக விலங்குகள் நல அமைப்பின் வழிகாட்டுதலை முறையாகப் பின்பற்றியுள்ளார்களாம்.
ஃபாரின் சரக்கு
கப்பலில் ஒன்றாகப் பணியாற்றிய விக்னேஷ்வரன் கருப்புசாமி, கோபிநாத் மற்றும் சுந்தர் ஆகியோர் சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக பணிகளுக்கு மத்தியில் இதுவரை 20 குறும்படங்கள் எடுத்திருக்கிறார்கள். இவர்களுடைய குறும்படத்துக்கு வரவேற்பு கிடைக்கவே, கப்பலில் சம்பாதித்த பணத்தை வைத்து ‘ஃபாரின் சரக்கு’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார்கள்.
கோபிநாத் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை விக்னேஷ்வரன் கருப்புசாமி இயக்க, சுந்தர் மற்றும் கோபிநாத் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.‘‘சரக்கு என்றாலே மதுபானம் என்ற கண்ணோட்டத்தில் பலர் பார்க்கிறார்கள். ஆனால், நாங்கள் இங்கு குறிப்பிடும் சரக்கு மதுபானம் அல்ல, அது வேறு ஒன்று. அது என்ன என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. காரணம், அதுதான் கதையின் மையப்புள்ளி.
குஜராத்தில் தொடங்கும் கதை தமிழகத்தில் முடிவடையும். இதுதான் ‘ஃபாரின் சரக்கு’ படத்தின் கதைச் சுருக்கம். அந்த சரக்கு என்ன, அதற்கும் குஜராத்துக்கும் என்ன தொடர்பு என்பதை விறுவிறுப்பாக சொல்லியுள்ளோம். நிச்சயம் ரசிகர்களிடமும், தமிழ் சினிமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்...’’ என்கிறார் இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புசாமி.
பொல்லாப்பு
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் தயாராகும் படம் ‘பொல்லாப்பு’. இந்தப் படத்தை தேவன் இயக்கி நடித்துள்ளார். நாயகியாக தாரா நடித்துள்ளார். ‘‘நேர்மையான போலீஸ் அதிகாரியைப் பற்றிய படம் இது. குற்றவாளிகளைத் தண்டிக்க நினைக்காமல், திருத்த நினைக்கும் நேர்மையான அந்தக் காவல்துறை அதிகாரியை கடமை செய்யவிடாமல் சில சமூக விரோதிகள் எதிர்க்கிறார்கள். அதை அவர் எப்படி கையாள்கிறார்... எதிரிகளால் தனது குடும்பத்தை இழந்தும் எப்படி இந்த சமூகத்திற்கு சிறப்பாகப் பணியாற்றி தர்மத்தை நிலைநாட்டினார் என்பதை விறுவிறு திரைக்கதையில் சொல்லியுள்ளேன்.
படத்தின் சிறப்பம்சமாக சண்டைக் காட்சிகள் பேசப்படும். 6 சண்டைக் காட்சிகளையும் பெரிய ஹீரோக்களுக்கு கம்போஸ் பண்ணுவது மாதிரி சண்டை இயக்குநர் ஜாக்குவார் தங்கம் கம்போஸ் பண்ணிக் கொடுத்தார். லாக்டவுன் சமயத்தில் பொதுமக்களின் உற்ற நண்பனாக காவல்துறை செயல்பட்டது. அந்தவகையில் காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் படமாக இந்தப் படம் இருக்கும்...’’ என்கிறார் தேவன்.
தொகுப்பு:எஸ்.ராஜா
|