சதுரங்க ராஜா-உலக சாம்பியனை வீழ்த்திய தமிழகச் சிறுவன்



உலக அளவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார் சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தா.  காரணம், ஐந்து முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியதுதான். இதனால், இந்தியாவே அவரை வாழ்த்திக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் ஆன்லைன் வழியாக ஏர்திங்க்ஸ் ரேபிட் செஸ் சாம்பியன் போட்டி நடந்தது. இதில், இந்தியாவின் 5வது இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, நார்வே நாட்டைச் சேர்ந்த உலக சாம்பியன் கார்ல்சனை எதிர்கொண்டார். அப்போது 8வது சுற்றில் வெற்றியை வசப்படுத்தி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார் பிரக்ஞானந்தா. இதன்மூலம் உலகின் முதல்நிலை வீரரைத் தோற்கடித்த இளம் வீரர் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் அவரை வெகுவாகப் பாராட்டி வாழ்த்த, நெகிழ்ந்து போயிருக்கிறார் பிரக்ஞானந்தா.

சென்னை பாடியில் இருக்கிறது பிரக்ஞானந்தாவின் வீடு. உற்சாகத்தால் நிரம்பிய அந்த வீட்டினுள்  நுழைந்தவுடனே அவரும், அவரின் சகோதரி வைஷாலியும் வாங்கிய பதக்கங்களும், விருதுகளுமே வரவேற்கின்றன. சகோதரி வைஷாலியும் செஸ் வீராங்கனைதான். தந்தை ரமேஷ்பாபு கூட்டுறவு வங்கியில் பணிபுரிகிறார்.

தாய் நாகலட்சுமி. பெற்றோர் இருவரும் குழந்தைகளுக்கு பக்கபலமாக தோள் கொடுத்து தோழர்களாக நிற்கின்றனர். ‘‘இந்த வெற்றி ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்தத் தருணத்தை விவரிக்க முடியல. நிச்சயம் வெற்றி பெறுவோம்னு நம்பிக்கையுடனே விளையாடினேன். ஐ ஏம் வெரி ஹேப்பி...’’ நெகிழ்ந்தபடியே மெல்லிய புன்னகையுடன் பேசுகிறார் 16 வயதே நிரம்பிய பிரக்ஞானந்தா.

‘‘அக்கா வைஷாலியைப் பார்த்துதான் எனக்கு செஸ் விளையாட்டுல ஆர்வம் வந்தது. அக்கா சின்ன வயசுல நிறைய டிவி பார்ப்பாங்க. அதை திசை திருப்பணும்னு அப்பா நினைச்சாங்க. அதனால, அக்காவுக்கு ஸ்போர்ட்ஸ் மேல் ஆர்வம் இருப்பதை தெரிஞ்சு பக்கத்திலிருந்த ஒரு அகடமியில் செஸ் விளையாட்டுல சேர்த்துவிட்டாங்க. அக்கா படிப்பு முடிஞ்சதும் தினமும் செஸ் விளையாடப் போவாங்க. அங்க பயிற்சி எடுத்திட்டு வீட்டுக்கு வந்ததும் இங்கயும் பயிற்சி செய்வாங்க. அதைப் பார்த்து எனக்கும் செஸ் மேல் ஆர்வம் வந்துச்சு.

அப்ப எனக்கு அஞ்சு வயசு. உடனே என்னையும் அப்பா அதே அகடமியில் சேர்த்துவிட்டாங்க. நிறைய பயிற்சி எடுத்தேன். என் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ் சார் பல்வேறு நுணுக்கங்களை சொல்லித்தந்தாங்க. பிறகு, செஸ் விளையாட்டுல ஆர்வம் கூடிடுச்சு. தொடர்ந்து பயிற்சி செய்தேன். 2013ல் என் ஏழு வயசுல அண்டர் 8 பிரிவில் உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தில் வெற்றி பெற்றேன். 2015ல் அண்டர் 10 பிரிவுல உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றேன். 2018ல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வாங்கினேன்...’’ என்கிற பிரக்ஞானந்தா, ‘‘என் ரோல் மாடல் விஸ்வநாதன் ஆனந்த் சார்தான். என் அக்காவின் ரோல் மாடலும் அவர்தான்.

நான் இந்த ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் கார்ல்சனை வீழ்த்த விஸ்வநாதன் ஆனந்த் சாரும் ஒரு காரணம். எப்படினா, கடந்த ஓராண்டா சார்தான் எனக்கும் அக்காவுக்கும் கைட் பண்ணிட்டிருக்கார். இப்ப விளையாடினதைப் பார்த்து ரொம்பப் பாராட்டினார். அந்தப் பாராட்டுக்கு ஈடு இணை எதுவுமில்ல...’’ எனப் பூரிக்கும் பிரக்ஞானந்தாவைத் தொடர்ந்தார் அவரின தந்தை ரமேஷ்பாபு.  ‘‘நாங்க அவனை அகடமியில் சேர்த்துவிட்டதும் கெட்டியா பிடிச்சிட்டு போனான்.

நாங்க உற்சாகப் படுத்தினோம். போட்டி நேரத்துல ரொம்ப அமைதியா வொர்க் பண்ணுவான். ஆனா, அதுல சீரியஸ்னஸ் இருக்கும். விளையாட்டைப் போல அவன் படிப்பிலும் ரொம்ப சுட்டி. முப்பது நாடுகளுக்குப் போய் வந்துட்டான். ஆனா, இந்த வெற்றி ரொம்பவே ஸ்பெஷல். மகிழ்ச்சியா இருக்கு.

இதுக்காக அவன் ஸ்பான்சர்ஸ் ராம்கோ நிறுவனத்துக்கும், பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ் சாருக்கும், வழிகாட்டியான விஸ்வநாதன் சாருக்கும், அவன் படிக்கிற பள்ளிக்கும் நிறைய நன்றி சொல்லிக்கிறோம்...’’ என ரமேஷ்பாபு நெகிழ, பிரக்ஞானந்தாவிடம் லட்சியம் பற்றி கேட்டோம். ‘‘உலக சாம்பியன் பட்டத்தை வெல்லணும். அவ்வளவுதான்...’’ என்கிறார் நம்பிக்கை பொங்க. கனவு மெய்ப்படட்டும்!

ஆர்.சந்திரசேகர்