சிறுகதை - மாவடு



தயாளன் வரும்போது திலகா தூங்கிக் கொண்டிருந்தாள்.சாப்பாட்டுக் கூடையைத் தலைமாட்டில் வைத்து விட்டு, டிரிப்ஸ் அளவைப் பார்த்தான். ஆக்சிஜன் மாஸ்க்கைக் கழற்றி இருந்தார்கள்.
இவன் வந்ததும் நர்ஸ் எழுந்து வெளியில் போக திலகாவின் அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான். சிறிது நேரம் அவளையே பார்த்தபடி இருந்தான். இடது கை மணிக்கட்டில் பிளாஸ்டர் போட்டிருந்தது.மணிக்கட்டு நரம்பை வெட்டிக் கொள்ள எப்படித் துணிந்தாள்?

உடம்பு நடுங்கியது.“ஹிஸ்டீரியா பேஷண்ட் எந்த நேரம் என்ன செய்வாங்கன்னு தெரியாது தயாளன். முதல்ல அவங்க மனசுக்கு சிகிச்சை தரணும்...” - டாக்டர்.
மனசுக்கு மாத்திரை இருந்தால் தேவலாமே. காலையில் ஒன்று, மாலையில் ஒன்றுன்னு தந்து சரிப்படுத்தி விடலாம். இவள் மனசுக்குள் வைத்து மறுகும்
விஷயத்துக்கு மருந்து?

“வெளியில் வா திலகா...” மனசுக்குள் கெஞ்சினான்.வெளியிலும் அவளிடத்தில் பலமுறை கெஞ்சியிருக்கிறான். ஆனால், அவள்தான் ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதற்குள் சுற்றுகிறாள்.
மெல்ல தலையை வருடி விட்டான். ஆழ்ந்த உறக்கம் அவளிடம்.“வாழ்க்கை அழகால் அமைவதில்லை. வாழும் முறையால் அழகாகிறது. இதை நீ எப்போ புரிந்து கொள்ளப் போகிறாய்?” அவனின் கேள்விக்கு அவனுக்கே பதில் தெரியவில்லை.‘‘சார், உங்களை டாக்டர் கூப்பிடறார்...” - நர்ஸ்.எழுந்து போனான். டாக்டர் அவனின் குடும்ப வைத்தியர்தான். அறுபது வயதுக்கு மேல் இருக்கும். அவனை தலையசைத்து வரவேற்றார்.

இவரின் அப்பாவும் வைத்தியர்தான். முப்பது வருஷத்துக்கு முன் அவனுக்கு ஏழு வயதாக இருக்கும்போது, அவனின் அம்மாவும் இப்படித்தான் படுத்திருந்தாள். ஆனால், தீயில் வெந்த உடலுடன்.

“சாரி தயாளன்...” என்று முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார் அவர். இவர் என்ன சொல்லப் போகிறார்?

“தயாளன்... அவங்க ரொம்ப மனசளவுல பாதிச்சிருக்காங்க. உடல் பருமன், தான் அழகா இல்லைன்னு மனசுல ஊறிப் போச்சு. நீங்க பளிச்சுன்னு எடுப்பா இருக்கறதால உங்களுக்கு, தான் பொருத்தம் இல்லைன்னு நினைக்கிறாங்க. இதே அவங்களை பாதிச்சிருக்கு. அந்த உணர்வு மாறணும். ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்க்கணும் நீங்க...”
திலகா பைத்தியம் என்று மறைமுகமாகச் சொல்கிறாரோ? தயாளன் அவரைச் சந்தேகமாகப் பார்த்தான். அவர் சங்கடமாகச் சிரித்தார்.

“சரி சார்...” அவன் எழுந்தான். “நீங்க எந்த டாக்டர்னு சொல்லுங்க. நான் பாக்கறேன்...”
“குட். நீங்க இன்று மாலை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்...”
“ஓகே சார்...”

“அவங்க வீட்டிலிருந்து யாரும் வரலையா..?”
“நான் விஷயம் சொல்லலை சார். அவங்க அம்மா சுகர் பேஷண்ட். அப்பாவுக்கு இப்பதான் ஹார்ட் ஆபரேஷன் செஞ்சிருக்கு. அதனால் நான் தகவல் சொல்லலை. மெதுவா சொல்லிக்கலாம். அவங்க வயசானவங்க...”“எத்தனை வருஷம் ஆச்சு கல்யாணம் ஆகி?”‘ரெண்டு வருஷம் ஆச்சு..”“ஒண்ணும் இஷ்யூஸ் இல்லையா?”“நடுவில் ஒரு குழந்தை உண்டாகி கலைஞ்சு போச்சு. அதுக்குப் பிறகுதான் உடம்பு பெருத்துப் போச்சு...”“தைராய்டு அதிகமா இருக்கு. தொண்ணூறு கிலோ இருக்காங்க. ரெண்டுக்கும் டிரீட்மெண்ட் எடுக்கணும்...”

அதுதான் பிரச்னையே. திருமணத்தின்போது ஒல்லியாகத்தான் இருந்தாள். ஒரு குழந்தை உண்டாகிக் கலைந்தது. இர்ரெகுலர் பீரியட்ஸ் என்று சில மருந்துகள் சாப்பிட்டாள். உடம்பு பெருக்க ஆரம்பித்தது. ஏற்கனவே மாநிறம். தான், சுமாரான தோற்றம் என்ற எண்ணம் உண்டு அவளிடம்.

அதிகப்படியான தைராய்டு. அதற்கு மருந்து, உடம்பு இளைக்க மருந்து, விரதம், பட்டினி என்று இருந்தாள். அவள் முயற்சிகள் எதுவும் வெற்றி அடையவில்லை.
சிலர் அவளைக் கிண்டல் செய்ய, சிலர், ‘உங்க வீட்டுல அவர் எவ்வளவு அம்சமா இருக்கார். நீ அவருக்குப் பொருத்தமே இல்லை’ என்று சொல்ல, சிறிது சிறிதாக அந்த எண்ணம் மனதில் ஊறிப் போனது. மனதளவில் பாதித்து, ஹிஸ்டீரியா பேஷண்ட் போல் கத்த ஆரம்பித்தாள். சில சமயம் அவன் அலுவலகம் கிளம்பத் தயாராகும்போது அவனின் தோற்றத்தைப் பார்த்து ஒரு வெக்காளம் வந்துவிடும்.   

அவனும் பொறுமையாகப் போனான். தான், அழகு இல்லை. அவனுக்கு, தான் பொருத்தம் இல்லை என்று மனசில் நம்ப ஆரம்பித்துவிட்டாள். அதேசமயம் அவன் மேல் அளவற்ற பிரியம் வைத்திருந்தாள். அவனுக்காகவே தன் விருப்பங்களை மாற்றிக்கொண்டாள். அவன் ஆசை, அவன் சௌகர்யம், அவனின் தேவை என்றே வாழ்ந்தாள். அவளின் அன்பில் அவன் மூச்சுத் திணறித்தான் போனான்.தயாளன் அவளின் உள்ளத்தை மட்டுமே பார்த்தான். அவளின் மனப் புழுக்கத்தில் அவன் தன் அம்மாவைப் பார்த்தான். அம்மாவின் சொத்துக்காக அப்பா அவளைக் கல்யாணம் செய்து கொண்டார். சொந்த மாமா பெண். அம்மா கருப்பு. பல் தூக்கலாக இருக்கும். நல்ல குண்டு.

திருமணம் செய்து கொண்ட அப்பா அவளை வார்த்தைகளால் அவமானப் படுத்தினார். செய்கைகளால் நிராகரித்தார். அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு என்று தெரிந்த நொடியில் அவள் தீ வைத்துக் கொண்டாள்.அம்மாவின் மனவேதனை, குமுறல் தெரிந்துதான் தயாளன் சுமாரான தோற்றம் இருந்த திலகாவை மணந்துகொண்டான். அவளை அடிக்கடி ஒரு அநாதை இல்லத்தில் சந்தித்து, அவளின் மேல் ஒரு மரியாதை வந்தது. அவள் மூலம் அவள் வீடு பழக்கம் ஆனது. அவளுக்குத் திருமணம் ஆகவில்லை என்று அவளின் அம்மா வேதனைப் பட்டபோது தயாளனே, தான் அவளைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்றான்.

ஆனால், திலகா சுய பரிதாபத்தில் சுருங்கினாள். தன் மேல் பரிதாபத்தில்தான் அவன் தன்னை மணந்து கொண்டான் என்று நம்பினாள். அவன் வேறு பெண்களுடன் பேசினால் சந்தேகம், யாராவது வீட்டுக்கு வந்தால் எதிரில் வரக் கூச்சம் என்று தாழ்வு மனப்பான்மை. மனப்பிறழ்வு.

சிலசமயம் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வாள்.உடல் பருத்து தோற்றம் விகாரமானபிறகு அவளின் மனநோய் அதிகரித்துவிட்டது. நேற்று மாலை அவனின் ஆபீசில் ஒரு பார்ட்டி. அதில் எடுத்த போட்டோக்களைக் காட்டிக் கொண்டிருந்தான். அதில் அவன் அருகில் ஒரு இளம்பெண் நின்றிருப்பதைப் பார்த்ததும் கத்த ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் ஆவேசத்துடன் தன் மணிக்கட்டை கத்தியால் அறுத்துக் கொண்டாள்.இவளை எப்படி மாற்றுவது?

அவனுக்குள் ஒரு கவலை எழுந்தது.ரூமுக்குள் நுழையும்போது திலகா விழித்திருந்தாள். நர்ஸ் டிரிப்ஸை கழற்றி விட்டுப் போனாள். தயாளன் தட்டில் சாதம் போட்டு பிசைந்து ஒரு ஸ்பூன் போட்டு அவளிடம் நீட்டினான்.திலகா வாங்கவில்லை. தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

“சாப்பிடு திலகா..”
“இல்லை, வேண்டாம்...”
“சாப்பிடலைன்னா எல்லாம் சரியாயிடுமா?”

அவள் நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. “ஸாரி...”
“ஓகே... இப்போ சாப்பிடு...”“உங்களுக்கு என்மேல் கோபம் இல்லையா?”
“இல்லை திலகா. வருத்தம்தான்...” அவன் நிதானமாகக் கூறினான். “வாழ்க்கையை ஏன் அழகோடு தொடர்பு படுத்தறே. அம்மா அழகா இல்லைன்னா வெறுத்துடுவோமா? நம்ம குழந்தை அழகா இல்லைன்னா தூக்கிக் கொஞ்சமாட்டோமா? சரி, இப்போ நான் உடல் பெருத்து, கருத்து விகாரமா மாறினா நீ என்னை விட்டு விலகிப் போயிடுவியா?”
“ஆ... அ... அது எப்படி?”“அப்போ என்னை மட்டும் ஏன் இப்படி நினைக்கறே?”
“...’’
“ஆண்கள்னா பெண்ணோட அழகை மட்டுமே ரசிப்பாங்க. அழகான பொண்டாட்டியை மட்டுமே விரும்புவாங்கன்னு ஏன் நீயா தப்புக் கணக்கு போடறே? அழகை மதிக்காம அன்புக்கு முக்கியத்துவம் கொடுக்கற எத்தனையோ ஆண்கள் இருக்காங்க திலகா. எங்கப்பா அப்படி இருந்தார்னா, நானும் அப்படி இருக்கணுமா? நான் எப்படி, என்னன்னு தெரியாம நீயே ஒரு அனுமானம் செஞ்சுட்டு உன்னையும் துன்புறுத்தி எங்களையும் மனம் நோகடிக்கலாமா..?”
அவள் தட்டில் ஒரு மாவடு எடுத்துப் போட்டான்.

“இது வாங்கினப்ப எப்படி இருந்தது! குண்டு குண்டா அழகா. இப்போ பாரு, உப்பும் காரமும் ஊறி சுருங்கிப்போச்சு. ஆனா, இதான் ருசி. வாழ்க்கையும் இப்படித்தான் திலகா. இளமை, அழகு எல்லாம் குண்டு மாவடு மாதிரி. பார்க்க அழகா இருக்கும். ஆனால், வாழ்க்கையில் ஊறி, அனுபவம்கிற உப்பும், காரமும் சேரச் சேர அதோட ருசி தனி. அதுக்குத்தான் மதிப்பு அதிகம். நம்ம வயசுக் காலத்துல உன் தோற்றம் முக்கியமா இருக்காது. நீ என்கூட இருக்கேன்ற உணர்வுதான் மகிழ்ச்சி அளிக்கும்...”அவன் மெல்ல அவளின் கைகளைத் தடவிக் கொடுத்தான்.

“நீ என் அம்மா திலகா. உன் அன்புல நான் அவளைப் பாக்கறேன். உன் நேசம், பாசம், இதைவிட அழியும் உன் அழகு மீது நான் ஆசை வைப்பேன்னு நீ எப்படி நினைக்கலாம்...”
திலகா பேசவில்லை. “மனசுல இருக்கற அழுக்கை தூக்கி எறி. தெளிவா இரு. நான் உன் புறத்தோற்றத்தை ரசிக்கலை. உள்ளழகை விரும்பறேன்னு புரிஞ்சுக்கோ. நம்பு. அதை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் கொடு...” “எ... எ... எப்படி?”“உன்னை மாதிரி அன்பும், பிரியமுமா ஒரு பெண் குழந்தையை பெத்துக் கொடு...” அவன் குரல் தழுதழுத்தது.மெல்லிய நாணச் சிரிப்போடு கண்ணீர் வழிய அவன் கைகளை இறுக்கிக் கொண்டாள் திலகா.

- ஜி.ஏ.பிரபா