கொத்தமல்லி ஐஸ்கிரீம்!
துரித உணவுகளின் ராஜா, ‘மெக்டொனால்ட்ஸ்’. வருமானத்தின் அடிப்படையில் உலகின் நம்பர் ஒன் உணவகம் இது. நூற்றுக்கும் மேலான நாடுகளில் கிளை பரப்பியிருக்கும் இந்த உணவகத்துக்கு தினமும் 6.6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் வருகை புரிகின்றனர். சுமார் 39 ஆயிரம் இடங்களில் இதன் உணவகம் கெத்து காட்டுகிறது.
 விஷயம் இதுவல்ல. சீனாவில் இயங்கி வரும் ‘மெக்டொனால்ட்ஸி’ல் கிடைக்கும் உணவுகள் உலகின் எந்த மூலையில் இயங்கி வரும் ‘மெக்டொனால்ட்ஸி’ல் மட்டுமல்ல, வேறு எந்த உணவகத்திலும் கிடைக்காது என்ற விஷயம் இருக்கிறதே... அதுதான் மேட்டர்!அதனாலேயே சீனாவுக்குச் சுற்றுலா வரும் பயணிகளில் 90 சதவீதத்தினர் ‘மெக்டொனால்ட்ஸை’ நாடிச் செல்கின்றனர்.
சமீபத்தில் சீன ‘மெக்டொனால்ட்ஸ்’ உணவகம் கொத்தமல்லி ஐஸ்கிரீமை அறிமுகம் செய்துள்ளது. சிறிய கோப்பையில் கிடைக்கும் இந்த ஐஸ்கிரீமின் விலை 80 ரூபாய். இதன் சுவை வித்தியாசமாக இருப்பதால் மதியத்துக்குள்ளாகவே தீர்ந்துவிடுகிறது. அதனால் சீனாவில் உள்ள ‘மெக்டொனால்ட்ஸ்’ உணவகங்கள் ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற பதாகையை கொத்தமல்லி ஐஸ்கிரீமின் புகைப்படத்துடன் தொங்கவிட்டுள்ளது.
த.சக்திவேல்
|