23 வயதில் 23 விருதுகள்! ஓவியத்தில் கலக்கும் கமுதி இளைஞர்
மணிகண்டனின் ஓவியங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு தத்ரூபமாக மிளிர்கின்றன. பென்சில் ஓவியங்கள் தொடங்கி ஆயில் பெயிண்டிங் வரை அனைத்திலும் தேர்ந்த ஓவியராக ஜொலிக்கிறார்.
குறிப்பாக, எழுத்துகளைக் கொண்டே ஓவியங்கள் வரைவதில் தனித்துவம் காட்டுகிறார். சமீபத்தில்கூட விடியல் என்கிற வார்த்தையைக் கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஓவியத்தை அழகாகத் தீட்டி பலரின் பாராட்டைப் பெற்றார்.
 இதுமட்டுமல்ல. இருபத்திமூன்றே வயது நிரம்பிய மணிகண்டன் ஓவியத்திற்காக மட்டும் 23 விருதுகள் பெற்றிருக்கிறார் என்பது ஆச்சரியத் தகவல். பள்ளி மாணவர்களுக்கு ஓவியங்கள் வரைய நிறைய இலவச பயிற்சிகள் எடுத்தவர். குறிப்பாக, கொரோனா காலத்தில் வெளியூர் மாணவர்களுக்கு ஆன்லைனிலும், உள்ளூர் கிராமத்து மாணவர்களுக்கு நேரிலும் வகுப்புகள் எடுத்து அசத்தியிருக்கிறார். இந்த அளப்பரிய பணியைப் பார்த்தே சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவரென இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்திருக்கிறது. சினிமாவில் கலை இயக்குநராக வேண்டும் என்கிற தீராக்கனவுகளுடன் சென்னைக்கு நகர்ந்திருப்பவரிடம் பேசினோம்.
 ‘‘சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பக்கத்துல பேரையூர்னு ஒரு குக்கிராமம். அப்பா முனியசாமி என் பனிரெண்டு வயசுலேயே தவறிட்டார். அம்மா சண்முகவள்ளிதான் கிடைக்கிற வேலைகளைச் செய்து என்னையும் தம்பியையும் படிக்க வச்சாங்க. அம்மாவின் கஷ்டத்தைப் போக்க நானும் எட்டாவது படிக்கிறப்ப வேலைக்குப் போயிட்டேன். தெருவில் சுவரோவியங்கள் வரையிறதும், கட்சிகளின் சின்னங்கள் வரையிறதும், விளம்பரங்கள் எழுதுறதுமா இருந்தேன்.
அப்படியா நான் ஓவியங்கள் வரைய கத்துக்கிட்டேன். முதல்ல பென்சில், மரக்கரியில் கோட்டோவியம் போட்டேன். பிறகு வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங், அக்ரலிக்னு விதவிதமான வகை ஓவியங்கள் வரைய பழகினேன். இதுல தலைகீழா வரையிறது, எழுத்துகள்ல வரையிறதுனு வித்தியாசமான ஓவிய முயற்சிகளுக்கும் பயிற்சி எடுத்தேன். எனக்கு குருனு யாரும் கிடையாது.
நானே சுயமா கத்துக்கிட்டதுதான். ஆனா, எல்லாமே எனக்கு சிறப்பா கைகூடி வந்தது. என் முதல் ஓவியமா என் அம்மாவை வரைஞ்சேன். அப்பா இறந்தபிறகு அந்த வலி தெரியக்கூடாதுனு அம்மா என்னை இடுப்புல தூக்கி வச்சுக்கிட்டே வியாபாரம் செய்திருக்காங்க. அதையே தத்ரூபமா வரைஞ்சேன். நான் வரையிறதைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட்டாங்க. ரொம்ப அழகா இருக்குனு பாராட்டினாங்க. அப்படி பாராட்டும்போது சிலர், ‘உன் அப்பாவை மாதிரியே வரையிறடா’னு சொன்னாங்க. அப்பதான் என் அப்பா ஒரு சைன்போர்டு ஆர்ட்டிஸ்ட்டா இருந்திருக்கார்னு எனக்குத் தெரிய வந்துச்சு. அதனால்தான் எனக்குள்ள இயல்புல ஓவியக்கலை இருந்திருக்குனு நினைக்கிறேன்.பிறகு பி.காம் படிச்சேன். அந்நேரம், ஓவியத்தை படிப்பு ரீதியா கத்துக்கலாம்னு நினைச்சேன். அதனால, திருத்தணி தொழிற்பயிற்சி மையத்துல தொலை தூரக்கல்வி வழியா டிப்ளமோ இன் ஃபைன் ஆர்ட்ஸ் கோர்ஸ் படிச்சேன். அடுத்து, டிப்ளமோ இன் டெம்பிள் ஆர்ட்னு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துல படிச்சேன்.
சான்றிதழ் பெறவே இந்த கோர்ஸ்களை முடிச்சேன். ஏன்னா, பள்ளி மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த ஓவியக்கலையைக் கொண்டு போய்ச் சேர்க்கணும்னு நினைச்சேன். காரணம், ஓவியம் சம்பந்தமான படிப்புகள் எங்க ஊர் பக்கங்கள்ல கிடையாது. அதை மாணவர்களுக்கு கத்துக்கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு சான்றிதழ் இருந்தால் இன்னும் பயனுள்ளதா இருக்கும்னு தோணுச்சு.
பிறகு, என் கிராமத்து பசங்களுக்கு ஓவியங்கள் சம்பந்தமா இலவச வகுப்புகள் எடுத்தேன். அப்புறம், எங்க ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசப் பயிற்சி அளிச்சேன். பொதுவா, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஓவிய ஆசிரியர்கள் இருப்பாங்க. ஆனா, நடுநிலைப் பள்ளிக்கு அதுமாதிரி இருக்கமாட்டாங்க. அவங்க என்னை அழைச்சு சொல்லித்தர சொல்லுவாங்க. அப்படி அழைக்கிற பள்ளிகளுக்குப் போய் ஓவியம் கத்துத் தந்தேன்.
அங்குள்ள குழந்தைகளை உலக சாதனை செய்ய தயார்படுத்தினேன். அதாவது, தலைகீழா வரையிறது, எழுத்துகள் வச்சு வரையிறதுனு அவங்கள இந்தியன் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸுக்கு தயார்செய்தேன். நிறைய குழந்தைகள் ஆர்வமா கத்துக்கிட்டாங்க. இதைப் பாராட்டிதான் எனக்கு விருதுகள் எல்லாம் கொடுத்தாங்க...’’ என்கிறவர் நிதானமாகத் தொடர்ந்தார்.
‘‘கொரோனா நேரத்துல ஆன்லைனிலும், நேரிலும் ஓவியப் பயிற்சி அளிச்சேன். இதையும் இலவசமாகவே செய்தேன். இதுக்கிடையில் என் ஓவியங்களை முகநூல்ல போட்டேன். அதை நிறைய பேர் கவனிச்சாங்க. லைக்ஸ் பண்ணினாங்க. வாழ்த்தினாங்க. அதன்வழியா ஆர்டரும் கிடைச்சது. ஓவியங்களை விற்பனை செய்தேன். அடுத்து என் ஓவியங்களை சர்வதேச ஆர்ட் கேலரி வாங்கி விற்பனைக்கு வச்சாங்க. இதுல டோல் வாசிக்கிற ஒரு பையனின் ஓவியமும், பரதநாட்டியம் ஆடுகிற பெண்ணின் ஓவியமும் எண்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனையாச்சு. அது என் வாழ்நாளில் எனக்குக் கிடைச்ச பெரிய தொகை.
சமீபத்துல தமிழக அரசு கலைச்செம்மல் விருதுக்கான தொகையை ஐம்பதாயிரத்துல இருந்து ஒரு லட்ச ரூபாயா அறிவிச்சாங்க. அதற்காக விடியல்னு எழுத்துகள்ல முதல்வர் ஸ்டாலினின் ஓவியத்தைப் போட்டேன். அதுக்கு நிறைய ரெஸ்பான்ஸ்! பிறகு, காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரின் 118 படங்களை 118 நிமிடங்களில் வரைஞ்சு உலக சாதனை செய்தேன். இதைப் பாராட்டி சர்வதேச கலைத் திலகம்னு விருது கொடுத்தாங்க.
இதுக்கு முன்னாடி கடந்த தமிழக அரசு என் ஓவியங்களையும், குழந்தைகளுக்கு வகுப்புகள் எடுப்பதையும் பாராட்டி கலை ரத்னானு ஒரு விருது மதுரையில் வச்சு வழங்கினாங்க. இதுதவிர, இந்தியன் உலக சாதனை விருது, கலாம் சாதனை விருது, காமராஜர் கல்விச் செம்மல் விருதுனு 23 விருதுகள் வாங்கினேன். இதில் கலை பண்பாட்டுத்துறை, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் பாராட்டு சான்றிதழும் கிடைச்சது.
இருந்தும், என்னால் ஊர்ல பெரிசா முன்னேற முடியல. சரியான வேலைவாய்ப்பு இல்லாததால தமிழக அரசுகிட்ட ஓவிய ஆசிரியர் பணிக்கான வாய்ப்புகள் கேட்டு கோரிக்கை வச்சேன். அது நடக்கல. அதனால, ஒருகட்டத்துல தனித்து ஏன் நாமே நமக்கான பணிகளை முன்னெடுக்கக்கூடாதுனு தோணுச்சு. ஒரு ஓவியப் பள்ளி தொடங்கலாம்னு நினைச்சேன். அப்புறம், கலை இயக்குநராகவும் முயற்சி செய்யலாம்னு தோணுச்சு. இதுக்காகவே வாய்ப்புகள் தேடி சென்னைக்கு வந்தேன். எங்க ஊரைச் சேர்ந்த வனிதா ராம்குமார்னு ஒரு அக்காதான் என்னை அழைச்சிட்டு வந்து அடைக்கலம் தந்தாங்க.
இங்க நடனலோகானு ஒரு பரதநாட்டியப் பள்ளி இருக்கு. இப்ப அவங்க எனக்காக ஓவியத்திற்கென ஒரு பிரிவை உருவாக்கித் தந்திருக்காங்க. அதுல குழந்தைகளுக்கான ஓவிய வகுப்புகள் எடுத்திட்டு இருக்கேன். ஒரு இடத்துல ஓவியம் கத்துக்க மாதம் மூவாயிரம், நான்காயிரம்னு சொல்வாங்க. ஆனா நான் அறுநூறு, ஐநூறு ரூபாய்க்கு ஓவிய வகுப்பு எடுக்குறேன்.
என் எண்ணமெல்லாம் நான் நல்ல நிலைக்கு வரும்போது இலவச வகுப்புகள் எடுக்கணும் என்பதுதான்...’’ என நெகிழும் மணிகண்டன், ‘‘என் ஆசையெல்லாம் இப்பவரை எங்களுக்காக ஓடிக்கிட்டே இருக்கிற அம்மாவை உட்கார வக்கணும். நான் வேலை செய்து அவங்கள காப்பாத்தணும். அப்புறம், ஓவியத்துல ஒரு கின்னஸ் சாதனை செய்யணும்னு குறிக்கோள் வச்சு பயணிச்சிட்டு இருக்கேன். சீக்கிரமே அந்த எண்ணம் நிறைவேறும். அடுத்து, கலை இயக்குநரா ஆகணும். அவ்வளவுதான்...’’ என நம்பிக்கையாகச் சொல்கிறார் இளம் ஓவியர் டாக்டர் மணிகண்டன்.
பேராச்சி கண்ணன்
|