காபி டேபிள்



முதல்நாள் திருமணம்;  மறுநாள் போர்க்களம்!

திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்கு எந்த நாட்டுக்கு செல்லலாம் என திட்டமிடுபவர்கள் மத்தியில், நாட்டுக்காக துப்பாக்கி ஏந்தி போர்க்களம் புகுந்த புதுமணத் தம்பதி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் போருக்கு நடுவே சிம்பிளாக திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, நாட்டைக் காப்பதற்காக துப்பாக்கி ஏந்தி போரில் இறங்கிய புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.2019ல் உக்ரைனின் தலைநகரான கீவ் நகரில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பங்கேற்றபோது, யாரினா அரீவா, சீவியடூஸ்லாவ் பர்ஸின் இருவருக்கும் இடையே மலர்ந்த நட்பு, நாளடைவில் காதலாகக் கனிந்தது. இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

இருவீட்டார் சம்மதத்துடன் மே 6ம் தேதி கோலாகலமாக திருமணத்தையும், ரஷ்யாவில் உள்ள வால்டாய் மலையின் டினீப்பர் நதிக்கரையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்தையும் நடத்த திட்டமிட்டிருந்தனர்.ஆனால், ரஷ்யாவால் உக்ரைனில் வெடித்துள்ள போரால் ‘நாளை யாருக்கும் எதுவும் நடக்கலாம்’ என்ற பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

எனவே, நமக்கு ஏதாவது ஆபத்து நேரும் முன்பு, திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என யாரினா அரீவா, சீவியடூஸ்லாவ் பர்ஸின் இருவரும் முடிவெடுத்தனர். இதனையடுத்து உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள தேவாலயம் ஒன்றில் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், சிம்பிளாக திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

தேவாலயத்திற்குள் இவர்கள் திருமணம் நடந்துகொண்டிருந்த போதுதான் ரஷ்யா தனது படைகளை உக்ரைனுக்குள் அனுப்பியுள்ளது. வெளியில் துப்பாக்கி மற்றும் வெடி குண்டு
களின் ஓயாத சத்தத்திற்கு நடுவில்தான் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

திருமணத்துக்கு அடுத்த நாளே இருவரும் பிராந்திய பாதுகாப்புப் படையில் இணைந்துள்ளதுதான் ஹைலைட். பிராந்திய பாதுகாப்புப் படை என்பது உக்ரைனின் ஆயுதப் படைகளில் தன்னார்வலர்களைக் கொண்ட படை. உக்ரைன் அரசு போரில் ஈடுபட வரும் தன்னார்வலர்களுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது. அப்படி புதுமணத் தம்பதியின் கைக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டன.

கர்ப்ப காலத்தில் காஜல் செய்யும் உடற்பயிற்சி!

நடிகை காஜல் அகர்வால் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமண வாழ்க்கையில் புகுந்துவிட்டார். கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது நீண்டநாள் காதலர் கௌதம் கிச்லுவைத் திருமணம் செய்து கொண்டார்.

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தாமதமாகிக்கொண்டே போக, அந்தப் படத்திலிருந்தே விலகினார் காஜல் அகர்வால். ஏன் விலகினார் என்று பலரும் கேட்ட நிலையில் அதன் பிறகுதான் அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்தது. இப்போது ‘இந்தியன் 2’ படத்தில் காஜலுக்குப் பதில் தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.

சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தேறியது. மொத்தக் குடும்பமும் ஒன்றுசேர்ந்து காஜலை கொண்டாடியிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவின. இந்நிலையில், கர்ப்ப காலத்தில், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஆப்கன் to உக்ரைன் to போலந்து...

போர் காரணமாக உக்ரைனில் வாழும் பல்வேறு நாட்டினரும் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக உக்ரைனிலிருந்து வெளியேறி வெவ்வேறு நாடுகளுக்கு அகதிகளாகச் செல்கின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து ஏற்பட்ட நெருக்கடியால் உக்ரைனுக்குச் சென்ற அஜ்மல் ரஹ்மானி மற்றும் அவர் குடும்பத்தினர் இப்போது உக்ரைனிலிருந்து போலந்து நாட்டிற்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

‘‘என்னுடைய துரதிர்ஷ்டம், நான் ஒரு போரிலிருந்து ஓடுகிறேன், மற்றொரு நாட்டிற்கு வருகிறேன். பின்னர் மற்றொரு போர் தொடங்குகிறது. நான் மீண்டும் ஓடுகிறேன்.
ஆப்கானிஸ்தானில் சொந்த வீடு, கார்... என அனைத்தையும் விட்டுவிட்டு குடும்பத்துடன் உக்ரைன் வந்தோம். இப்போது ரஷ்ய - உக்ரைன் போரால் குடும்பத்துடன் போலந்து நாட்டுக்கு ஓடிவந்திருக்கிறோம். இப்போது என்னிடம் எதுவுமில்லை. எனக்கு என் குடும்பத்தின் வாழ்க்கையை விடவும், என் அன்பை விடவும் எதுவும் பெரிதில்லை...’’ தழுதழுத்தபடி உருக்கமாகச் சொல்கிறார் அஜ்மல் ரஹ்மானி.

சர்வதேச ஐஸ் ஹாக்கி போட்டிகளில் ரஷ்யா, பெலாரஸ் அணிகள் பங்கேற்க தடை

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை அடுத்து, ரஷ்யா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு அணிகள் சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று விளையாட்டு அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யா மற்றும் பெலாரஸை அனைத்து வயது பிரிவிலும் சர்வதேச ஐஸ் ஹாக்கி மற்றும் எல்லை தாண்டிய ஐஸ் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க இடைக்காலத் தடை விதிக்கப் படுவதாக சர்வதேச ஐஸ் ஹாக்கி நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

மேலும் 2023 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஐஸ் ஹாக்கி போட்டிகளை நடத்துவதற்கான உரிமைகளும் ரஷ்யாவிடமிருந்து திரும்பப் பெறப்பட்டன.

உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஐஸ் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே ரக்பி மற்றும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்க தடை விதித்திருந்த நிலையில் ஐஸ் ஹாக்கி போட்டிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குங்குமம் டீம்