இத்தாலியன் யூடியூபர்ஸ்



இத்தாலின்னா பீட்சா, பாஸ்தா மட்டுமல்ல, யூடியூப் சேனலும்தான் என்று கெத்து காட்டுகின்றனர் இத்தாலியன் யூடியூபர்கள். பெரும்பாலும் தங்களது தாய்மொழியிலேயே வீடியோக்களை வெளியிடுவது இவர்களது சிறப்பு. இசை, ஓவியம், வீடியோ கேம்ஸ், சமையல், நகைச்சுவை... என அனைத்து தளங்களிலும் யூடியூப் சேனல்கள் மிளிர்கின்றன. பத்து லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட இத்தாலியன் யூடியூப் சேனல்கள் ஏராளம். அதில் முதன்மையான சில சேனல்களின் விவரங்கள் இதோ...

டேவி504 (Davie504)

உலகளவில் இசையை மையப்படுத்திய யூடியூப் சேனல்களைப் பட்டியலிட்டால், முதல் பத்து இடங்களுக்குள் வரக்கூடிய சேனல், ‘டேவி504’. இத்தாலியைச் சேர்ந்த டேவிட் பையேலின் சேனல் இது. பள்ளிப்பருவத்திலிருந்தே பேஸ் கிதார் வாசிப்பில் கெட்டிக்காரராகத் திகழ்ந்தார் டேவிட். ‘‘உனது இசைத் திறமையைப் பகிர்ந்துகொள்ள சரியான தளம் யூடியூப்தான்...’’ என்று நண்பர்கள் டேவிட்டுக்கு பரிந்துரை செய்திருக்கின்றனர்.

தனது 17 வயதில், அதாவது மே 19, 2011ம் வருடம் ஆரம்பித்த இந்தச் சேனலை 1.1 கோடிப்பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். ஆரம்ப நாட்களில் எமினம் போன்ற பிரபலங்களின் பாடல்களில் இடம்பெறும் இசையை வாசித்து சப்ஸ்கிரைபர்களை அள்ளினார் டேவிட். அடுத்து ரசிகர்களின் பின்னூட்டங்களில் இடம்பெறும் விருப்பங்கள் சார்ந்த வீடியோக்களைப் பதிவிட்டார்.
சிலர் டேவிட்டிடம், ‘‘இந்த இசையை வாசிக்க முடியுமா..?’’, ‘‘தொடர்ந்து 5 மணி நேரம் கிதாரை வாசிக்க வேண்டும்...’’ என்று சவால் வைத்தனர்.

இதுபோன்ற சவால்களை ஏற்று சில வீடியோக்களை வெளியிட்டார். அவை லட்சக்கணக்கில் பார்வைகளை அள்ளி வைரலாயின. கிதார் வாசிப்பதற்காக டேவிட் தேர்ந்தெடுக்கும் இடம் அவரது வீடியோக்களை வசீகரமானதாக மாற்றுகிறது. மட்டுமல்ல; இந்தியா, ஜப்பான், ரஷ்யா... என பல நாடுகளுக்குப் பயணித்து அங்கிருந்து இசை வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் பரப்பை விரிவுபடுத்தினார். இதுவரை டேவிட் பதிவிட்ட வீடியோக்கள் 191 கோடிக்கும் அதிகமான பார்வைகளை அள்ளியிருக்கின்றன.

கிளியோமேக்அப்  (ClioMakeUp)

இத்தாலியின் மிகப்பிரபலமான ஒப்பனைக் கலைஞரான கிளியோ ஜமாட்டியோவின் சேனல் இது. அமெரிக்காவுக்குச் சென்று ஆங்கிலம் பயின்று, அங்கேயே மேக்அப் கலை சார்ந்தும் படித்தவர் கிளியோ. பெண்கள் தங்களை சுயமாக அழகுபடுத்திக் கொள்வதற்கான எளிய மேக் அப் டிப்ஸ்களை வழங்குவது இவரது ஸ்பெஷல். யூடியூபில் இவருக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, இத்தாலியிலுள்ள பல தொலைக்காட்சி சேனல்கள் மேக்அப் சார்ந்த நிகழ்வுகளுக்கு அழைப்புவிடுத்தன. அதனால் இத்தாலியிலுள்ள ஒவ்வொரு பெண்ணுக்குமே கிளியோ அறிமுகமானவர்.

இதுபோக சேனல் பெயரிலேயே மேக்அப் சாதனங்களை விற்பனை செய்துவருகிறார். ஜூலை 2, 2008ல் ஆரம்பிக்கப்பட்ட கிளியோவின் சேனலை 13.6 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இத்தாலியில் முதன்முதலாக ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களை வசப்படுத்திய முதல் மேக்அப் சேனலும் ‘கிளியோ மேக்அப்’தான். இதுவரை இதில் பதிவிடப்பட்ட வீடியோக்கள் 29 கோடிக்கும் அதிகமான பார்வைகளை அள்ளியிருக்கின்றன.

வில்வூஷ் (Willwoosh)

இத்தாலியின் முதன்மையான சமையல் நகைச்சுவை யூடியூப் சேனல் இது. இத்தாலியின் நகைச்சுவை நடிகரும், எழுத்தாளருமான குக்லியெல்மோ சில்லாதான் இந்தச் சேனலை நடத்திவருகிறார். மினி பர்கர், சாக்லேட் பாஸ்தா, கலர்ஃபுல் டோனட்... என விதவிதமான இத்தாலிய உணவுகளை விசித்திரமாக சமைத்துக்காட்டி, பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது இவரது வீடியோக்கள்.

சமைக்கும்போது சில்லா கொடுக்கும் செயல்முறை விளக்கங்களுக்கும், அணிந்துவரும் ஆடைகளுக்கும் சிரிக்காதவர்கள் யாருமே இல்லை. இதுபோக நகைச்சுவையான கதைகளைச் சொல்லி அசத்துகிறார் சில்லா. ஒவ்வொரு வீடியோவும் ஆங்கில சப்டைட்டிலுடன் வெளியாவது சிறப்பு. பெரும்பாலான வீடியோக்கள் அதிகபட்சமாக 10 நிமிடங்களே ஓடுகின்றன. அதனால் இவரது சேனலுக்குள் நுழைபவர்கள் நிறைய வீடியோக்களைப் பார்க்கின்றனர்.

ஜனவரி 1, 2008ல் தொடங்கப்பட்ட இந்தச் சேனலை 11.4 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதுவரை இதில் வெளியான வீடியோக்கள் 25 கோடி பார்வைகளை நெருங்கிவிட்டன. இந்தச் சேனல் குக்லியெல்மோவின் வங்கிக்கணக்கை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் அள்ளித்தருகிறது.

ஃபாவிஜ்டிவி  (FavijTV)

இத்தாலியில் 10 லட்சம் மற்றும் 20 லட்சம் சப்ஸ்கிரைபர்களை அள்ளிய முதல் யூடியூப் சேனல் இது. இச்சேனலை கேமிங்கில் நிபுணத்துவம் வாய்ந்த இளைஞரான லொரென்ஸோ ஒஸ்தூனி நிர்வகித்து வருகிறார். இத்தாலிய சந்தையில் புதிதாக இறங்கியிருக்கும் வீடியோ கேம்ஸின் அறிமுகம், டாப் 10 கேம்ஸின் பட்டியல், வீடியோ கேம்ஸை விளையாடுவது... என கேம்ஸ் தளங்களில் மட்டுமே இயங்குகிறது இச்சேனல். கேம்ஸை விவரிக்கும் ஒஸ்தூனியின் குரல் ரொம்பவே ஸ்பெஷலானது. ஆம்; அனிமேஷன் படத்தில் டப்பிங் கொடுப்பதற்கான வாய்ப்பு கூட அவரைத் தேடி வந்திருக்கிறது. ஆரம்பத்தில் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ஒரு கேமிங் சேனலைத் தொடங்கினார் ஒஸ்தூனி.

அதில் ஒஸ்தூனிக்கு நல்ல வரவேற்பு கிடைக்க, அந்தச் சேனலில் இருந்து விலகி தனியாக ‘ஃபாவிஜ்டிவி’யைத் தொடங்கிவிட்டார். டிசம்பர் 8, 2012ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலை 62.7 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதில் வெளியாகியிருக்கும் வீடியோக்கள் 401 கோடி பார்வைகளைத் தாண்டிவிட்டன.

டிஎம் பிராங்க்ஸ் (DM Pranks)

வித்தியாசமான முறையில் மக்களை நம்ப வைக்கிற மாதிரி பிராங்க் செய்பவர்களுக்கு யூடியூப் சேனல்களில் தனி இடம் உண்டு. அந்த வகையில் ஐரோப்பாவிலேயே முக்கியமான பிராங்க் சேனல் இது. இரவு நேரத்தில் ஜாம்பி, பேய் மாதிரி வேடம் போட்டு, கையில் கொடூரமான ஆயுதங்கள் மற்றும் வெட்டப்பட்ட தலைகளுடன் பொது மக்களிடம் பிராங்க் செய்வது மேட்டியோ மொரோனியின் வழக்கம். இவரது பிராங்கில் பலர் பயந்து, நடுங்கி காய்ச்சல் வந்த கதைகூட உண்டு. இன்னும் சிலர் இவரை காவல்துறையிடம் மாட்டிவிட்டிருக்கின்றனர். இதையெல்லாம் தனக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதிய மேட்டியோ, மே 16, 2013ம் வருடம் ‘டிஎம் பிராங்க்ஸ்’ எனும் சேனலை ஆரம்பித்தார்.

‘கில்லர் கிளவுன்’ எனும் கதாபாத்திரத்தில் இவர் செய்த திகில் பிராங்க் வீடியோக்கள் ஒவ்வொன்றும் கோடிக்கணக்கான பார்வைகளை அள்ளின. இதுவரை இச்சேனலை 47.9 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதில் பதிவான வீடியோக்கள் 23 கோடிக்கும் மேலான பார்வைகளைக் குவித்துள்ளன. பொதுமக்களைப் பயமுறுத்துகிறார் என்று மேட்டியோவுக்கு எதிர்ப்புகள் கிளம்ப, சில வருடங்களாக புது வீடியோக்களை அவர் பதிவிடுவதில்லை. இருந்தாலும் சப்ஸ்கிரைபும், பார்வைகளும் வழக்கம்போல தொடர்கின்றன.  

த.சக்திவேல்