Dating apps...ஜல்சாவா ஃப்ரெண்ட்ஷிப்பா..?



உக்ரைன் பிரச்னை மட்டுமல்ல... இன்றைய தேதியில் உலக நாடுகளின் முக்கிய பிரச்னை டேட்டிங் appஸ்தான்.ஏனெனில் டேட்டிங் apps மூலம் இன்று திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்கிற வழக்கம் கிளை பரப்பி வருகிறது. நம் நாட்டிலும்... ஏன், நம் தமிழ்நாட்டிலும் வேரூன்றத் தொடங்கியுள்ளது.இதில் என்ன சிக்கல் என்றால், உங்களுடன் சேர்ந்து வாழ்பவர் வெளியே போனால் திரும்ப வருவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இந்த உலகில் எந்த ஒரு வாழ்க்கை முறையையும் மிகச் சரியாக வாழ்வதற்கும் பயன்படுத்த முடியும், மிகத் தவறாக வாழ்வதற்கும் பயன்படுத்த முடியும். நிச்சயமில்லாத உறவுகளாலேயே பலருக்குப் பைத்தியம் பிடித்துக் கொண்டிருக்கிறது.கடந்த 2 ஆண்டுகளில் சமூகமயமாக்கல் மாறியிருந்தாலும் கொரோனா தொற்றுக்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடும் போது உலகளவில் டேட்டிங் ஆப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருந்து வருகிறது. இதை Sensor Tower Usage Intelligence-ன் டேட்டாக்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன.

சென்சார் டவரின் கூற்றுப்படி, கடந்த 5 ஆண்டுகளாக அமெரிக்காவில் சிறந்த டேட்டிங் ஆப்களில் ஒன்றான டிண்டர் (Tinder) அதன் பெரும்பான்மை மார்க்கெட் ஷேரை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. அதேபோல பம்பிள் (Bumble) மற்றும் ஹின்ஞ் (Hinge) ஆகியவற்றின் உலகளாவிய பயன்பாடும் 2019ம் ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டான 2022 ஜனவரியில் 17% அதிகரித்துள்ளதாக சென்சார் டவரின் டேட்டாக்கள் கூறுகின்றன.

கடந்த ஜனவரி 2019ம் ஆண்டில் Bumble-ன் மில்லியன் கணக்கான மாதாந்தர செயலியில் உள்ள யூஸர்கள் அதாவது MAU-க்கள் (million monthly active users) டிண்டரின் 13 சதவீதத்தை எட்டியது. அதே சமயம் Hinge 3 சதவீத MAUவை கண்டது. இப்போது மூன்று ஆண்டுகளில் Bumble-ன் யூசேஜ் 13 புள்ளிகள் உயர்ந்து ஜனவரி 2022ல் Tinder-ன் கால்வாசி பகுதியை எட்டியது. மேலும் Hinge-ன் யூசேஜ் 9 புள்ளிகள் அதிகரித்து 12 சதவீதமாக இருந்தது.

அதாவது Bumble மற்றும் Hinge ஆகிய டேட்டிங் apps கடந்த மூன்று வருடங்களாக தங்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. ஜனவரி 2022ல் Hinge, அதன் MAU-க்கள் ஜனவரி 2019ல் இருந்ததைவிட 4 மடங்குக்கு மேல் எட்டி வளர்ச்சியைக் கண்டது, அதே நேரத்தில் Bumble அதன் MAUக்களில் ஒட்டு மொத்தமாக 96 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. மறுபுறம் இதே காலகட்டத்தில் Tinder-ன் யூசேஜ் ஒப்பீட்டளவில் நிலையானதாக காணப்படுகிறது.  

“முதலில் இந்த apps குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இது அறிமுகமில்லாத இருவர் நண்பர்களாக மாறுவதற்கான ஒரு தளம். எப்படி வாட்ஸ்அப், கூகுள் / ஃபேஸ்புக் சாட் ஆப்ஷன்கள் இதற்குமுன் அறிமுகமில்லாத இருவர் பேசிப்பழக வழிவகுத்ததோ அப்படித்தான் இந்த டேட்டிங் ஆப்ஸும் செயல்படுகின்றன. ஆனால், முந்தைய மெசேஜ் ஆப்ஷன்ஸை விட டேட்டிங் ஆப்ஸின் வீரியம் அதிகம்.

ஆம்... இந்த டேட்டிங் ஆப்ஸ்களின்  பின்னணியில் செயல்படுவது உறவுகளுடனான உணர்ச்சிகரமான விளையாட்டு...’’ என்றபடி பேசத் தொடங்கினார் பெயர் சொல்ல விரும்பாத இளம்பெண் ஒருவர்.‘‘இதில் நல்ல நண்பர்கள், நல்ல மனிதர்களின் உறவுகள் கிடைக்கவும் செய்கிறது. அதேநேரம் தவறான நோக்கம் கொண்ட மனிதர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே நமக்கு என்ன வேண்டும் என்பதில் நாம்தான் தெளிவாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற ஆப்கள் உலகில் உள்ள பலரை இணைக்கின்றன. ஒவ்வொருவரையும் புரிந்து கொள்வதற்கும், புதிய விஷயங்கள் பகிர்வதற்கும் இந்த தளங்கள் உதவுகின்றன.
சில விஷயங்களை வெளிப்படையாக எல்லோரிடமும் பேச முடியாது. அந்தச் சூழல்களில், டேட்டிங் ஆப்கள் மூலம் தொடர்ந்து நம்மிடம் உரையாடிக் கொண்டிருப்பவர்களிடம் நம்மையும் மீறி நமது அந்தரங்கங்களைப் பகிரத் தொடங்குவோம். மெல்ல மெல்ல இது அடுத்த கட்டத்தை நோக்கி மனிதர்களை நகர்த்தும். இந்த டேட்டிங் appகளின் அல்காரிதம் இப்படித்தான் நம் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக உறவுகளுக்கு அடிப்படையாக அமைவது அன்புதான். ஆனால், இந்த அன்புக்கு டேட்டிங் ஆப்களில் இடமில்லை. ஆப்களால் நம் தேவைகள் நிறைவேறலாம். இதற்குப் பெயர் அன்பு அல்ல; உதவி! நானும் டேட்டிங் ஆப்பை இன்ஸ்டால் செய்திருக்கிறேன். ஆனால், எப்பொழுது எனது வேலைக் கோ அல்லது என்னையே தொந்தரவு செய்யும் அளவுக்கோ அது மாறுகிறதோ அப்பொழுது அதிலிருந்து வெளியேறி விடுவேன். இந்தத் தெளிவுதான் எனக்கான கவசம்.

பொதுவாக ஒருவர் தன்னைப் பற்றிய நேர்மறையான கருத்துக்களை மட்டுமே இதுபோன்ற டேட்டிங் ஆப்களில் பகிர்ந்திருப்பார். ஆனால், அவருடன் பழகும் வாய்ப்போ அல்லது தொடர்ந்து அவரோடு உரையாடலில் இருக்கும்போதோதான் அவரது இன்னொரு முகம் நமக்குத் தெரிய வரும். எனவே, ‘டேட்டிங் என்பது எந்த விதத்திலும் என்னையும், எதிரிலிருக்கும் நபரையும் பாதிக்காது. அந்தத் தருணம் மட்டுமே எங்களுக்கானது’ என்று கடந்து செல்லக் கூடிய மனநிலையில் இருப்பவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

அதைத் தாண்டி இருவரில் யாராவது ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ மனதளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்போது இதுபோன்ற ஆப்களில் இருந்து விலகுவதே நல்லது...’’ என அழுத்தம்திருத்தமாக சொல்கிறார் இந்த பெயர் சொல்ல விரும்பாத பெண்.இதை ஆமோதித்தபடியே பேசத் தொடங்கும் ஐடி துறையில் பணிபுரியும் முப்பது வயதுள்ள ஆணும் தன் பெயரையோ அல்லது அடையாளத்தையோ வெளிப்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன் தன் தரப்பை முன்வைத்தார்.

‘‘ஒரு பெண்ணிடம் அறிமுகமாகி அவளுடன் தனி அறையில் நேரத்தைச் செலவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் டேட்டிங் ஆப்ஸை இன்ஸ்டால் செய்தேன். ஆனால், இதை நோக்கி நான் செல்லவேயில்லை; செல்லவும் விரும்பவில்லை. பரஸ்பர நட்பை மட்டுமே இப்போது இந்த ஆப்ஸ் வழியாகப் பேணுகிறேன்.பெண்களில் சிலர் தங்களுக்கு போர் அடிக்கும் போதோ, சலிப்பு ஏற்படும்போதோ அரட்டை அடிக்க தங்களுடன் நேரத்தைச் செலவிடும் நபர்களைத் தேடுவார்கள். இந்தப் புள்ளியில்தான் டேட்டிங் ஆப்கள் கோலம் போடுகின்றன. எதிர் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மனநிலையைத்தான் கச்சிதமாகக் கையாள முற்படுகிறார்கள்.

டேட்டிங் ஆப்களில் நமது சுய விவரங்களைப் பதிவு செய்யும்போது நமக்குத் தகுந்த ஜோடிகளை டேட்டிங் ஆப்பின் அல்காரிதம் காண்பிக்கும்.அதாவது நமக்கு பாடல்களைக் கேட்கப் பிடிக்கும் என்றால் எதிர் முனையில் சேட் செய்யும் அல்லது பழகும் நபரும் பாடல் பிடித்திருப்பவராக இருப்பார். நான் கடந்த ஓராண்டாக டேட்டிங் ஆப்களை பயன்படுத்தி வருகிறேன். பொதுவாக என்னுடன் டேட் செய்த பெண்களை ரெஸ்ட்டாரண்டுக்கு அழைத்துச் செல்வது அல்லது அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு அழைத்துச் செல்வதுமாக இருக்கிறேன்.

பொதுவாக சேட் செய்யும்போது, ‘சாப்பிட்டியா... தூங்கினியா...’ என்றில்லாமல் அவர்களுக்குப் பிடித்த வார்த்தைகள் சொல்லி பேச வேண்டும். எந்த விதத்திலும் எதிலிருப்பவர்களை காயப்படுத்தாத சொற்களைப் பயன்படுத்தும்போது, சேட்டிங்கிலிருந்து நேரடி சந்திப்புக்கு நகர்கிறது...” என்கிறார் அந்த ஆண். இந்நிலையில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை மனித சமூகம் எப்படி எதிர்கொண்டு வருகிறது என்பதை விளக்கத் தொடங்கினார் மானிடவியல் ஆய்வாளர் பக்தவத்சல பாரதி.

“மனிதகுலம் தன் இருப்பில் யார் உயர்ந்தவர்... யார் தாழ்ந்தவர் என்கிற நிலையை நிறுத்த காலம்தோறும் போராடி வருகிறது. ஏன், இப்போது கூட அமெரிக்கா, ரஷ்யா என இரு வல்லரசு நாடுகளின் பின்னால் எத்தனை நாடுகள் அணிவகுத்து நிற்கின்றன..?

இந்த வல்லரசுகளின் பின்னணியில், போர்க் கருவிகள் வாங்கிக் குவிப்பதைத் தாண்டி தொழில்நுட்பமும் இப்போது பெரிய போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. மேற்கத்திய சமூகம் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட நாகரீகம். நமது சமூகமோ, நீர்ப்பாசன வேளாண்மையை மையமாகக் கொண்ட நாகரீகம். நீர்ப்பாசன வேளாண்மை நாகரீகத்தை மையமிட்ட சமூகம் இப்போது தொழில்நுட்பத்தை மையமிட்ட சமூகத்தை ஏற்றுக் கொண்டு அதன் கூடவே பயணிக்கிறது.

அதேநேரம் மேற்கத்திய சமூகம் நமது நீர்ப்பாசன வேளாண்மை கொண்ட சமூகத்தைப் பின்பற்ற முடியவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.   
தனிமனிதப் போக்கை மையமிட்ட சமூக அமைப்பு, வாழ்க்கை முறையைக் கொண்டது மேற்கத்திய சமூகம். ஆனால், நமக்கு கூட்டு மனநிலைதான் எப்போதுமே. இதன் அடிப்படையில் நீண்ட காலமாக வாழ்ந்து ‘இப்படி இருந்தால்’ நன்றாக இருக்கும் என்று நம் சமூக அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதை ஏதோ பழமையானது, பின்தங்கியது என்று கருதும் போக்கு இன்று ஆழ வேர் ஊன்றத் தொடங்கியுள்ளது.

மேற்கத்திய கலாசாரம் வேறு. நம் கலாசாரம் வேறு. அதன் மீதான மோகம் தவிர்க்க முடியாததுதான். ஆனால், மேற்கத்திய கலாசாரம்தான் உயர்ந்தது, அதுதான் சரி என்கிற மாயையை வளர்ந்த - வளரும் தொழில்நுட்பம் திட்டமிட்டு இப்போது உருவாக்குகிறது. இதனால் இவ்விரு நாகரீகங்களில் எதையும் முழுமையாக பின்பற்ற முடியாமல் இரு பக்கமும் ஊசலாடும் தலைமுறை இன்று உருவாகியிருக்கிறது. இதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்.

கூட்டு மனநிலையும் தனி மனிதப் போக்கும் மிகப்பெரிய யுத்தத்தை இன்று ஒவ்வொருவரின் அகத்திலும் நிகழ்த்தி வருகிறது. இதன் காரணமாகவே மன அழுத்தங்கள் இன்று பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்குக் கூட ஏற்படுகின்றன. இதிலிருந்து தாங்கள் தப்பிக்கவும், தங்களை இதிலிருந்து மீட்கவும் குடும்பத்தை - சமூகத்தை நம்பாமல் முகம் தெரியாத தனி மனிதர்களை நம்பும், அவர்களிடத்தில் ஆதரவு தேடும் போக்கு அதிகரித்திருக்கிறது. டேட்டிங் ஆப்ஸ் பரவலாவதற்கு இதுதான் காரணம்.  

தொழில்நுட்பம் பல நன்மைகள் கொண்டிருந்தாலும் அதன் மறுபக்கம் பிரச்னைக்கு உரியதுதான். அந்தப் பிரச்னைகளைக் களைந்து தொழில்நுட்பங்களை பயன்படுத்தக் கூடிய அளவுக்கு நாம் இன்னும் வெற்றி அடையவில்லை. வெற்றி பெறுவோமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்...’’என்கிறார் பக்தவத்சல பாரதி.

அன்னம் அரசு