115 மூலிகைகள்... 10 ஆயிரம் திருமணங்கள்... கலக்கும் புளியம்பட்டி ஜக்குபாய் டீ!



புத்தம் புது துணி விரிப்பில் நீளமான மேஜை. அதன்மீது நூற்றுக்கும் மேற்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட சின்னச் சின்னதட்டுகள்.

அதில் சிறிய நாவல் கொட்டை, அகத்திப்பூ வெள்ளை, அகத்திப்பூ சிகப்பு, துத்தி இலை, சவலைக்கிழங்கு இப்படி எழுதப்பட்டு, நாம் இதுவரை கேள்விப்பட்டே இராத மூலிகைகள், செடிகள், காய்கள், உலர் கனிகள், வேர்கள், கிழங்குகள் கடை விரிக்கின்றன.இந்த தட்டுகளுக்கு அப்பால் சின்ன பேனர். அங்கு கடை விரிக்கப்பட்டுள்ள 110 மூலிகைகளின் பட்டியல். அதில் ‘நோய் எதிர்ப்பு சக்தியுள்ள அதிசய மூலிகை டீ!’ என்ற தலைப்பில் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு மூலிகையும் எந்த மாதிரியான நோய்களை தீர்க்க வல்லவை, உடல் ஆரோக்கியத்தை பேணுபவை’ என்றும் தனித்தனியே சின்னச்சின்ன பேனர்கள். எல்லா பேனர்களிலும் தவறாமல் கீழே மாஸ்டர் ஜக்குபாய் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.டேபிளின் மறுகோடியில் எவர்சில்வர் அண்டாக்களில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கிறது. மூன்று பேர் அதற்குள் இந்த மூலிகைகளை அவ்வப்போது இடுகிறார்கள். கொதிநிலை ஆவி பறக்க அதில் கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை, தேன் போன்றவற்றையும் சேர்க்கிறார்கள். தொடர்ந்து டம்ளர்களில் பிடிக்கப்படும் மூலிகை டீ கும்மென்று மணக்கிறது. குடித்துப் பார்த்தால் அட, என்று சப்புக் கொட்டவும் வைக்கிறது.

இந்த டீக்கு பெரிய க்யூவே நிற்கிறது. இது ஏதோ ஒரு கடைத் தெருவில் என்று நினைத்து விடாதீர்கள். பெரிய ஒரு கல்யாண மண்டபத்தில் சாப்பிட்டு முடித்தவுடன் பீடா, வாழைப்பழம், காப்பி, தேநீர் என்று தருவார்களே அந்த வரிசையில் பெரிய வரிசையாக இதுவும் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்குத்தான் நல்ல கூட்டம்.இந்த டீ, டீ அல்ல. 115 மூலிகைகள் கலந்த சாறு. இதை சாப்பிடுவதற்கு முன்பு குடித்தால் நல்ல பசியெடுக்கும். சாப்பிட்ட பின்பு குடித்தால் நன்றாக ஜீரணமாகும். சாப்பிட்டவுடன் ஒரு சோம்பல், தூக்கம் வருமே அது நிச்சயம் இருக்காது. வெடுக்குனு இருக்கும்!’ என இதற்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார் இந்த மூலிகை டீ தயாரித்துக் கொடுப்பவர்களில் மூத்தவர்.

இந்த மூலிகை டீயை பெரிய, சிறிய கல்யாண, சீர், புதுமனை புகுவிழா விசேஷங்களில் வைத்து வருகிறார்களாம். ‘‘10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் விசேஷங்களில் சப்ளை செய்திருப்போம். சின்ன விளம்பரம் கிடையாது. ஒரு கல்யாணத்திற்கு வரும்போது சாப்பிட்டுப் பார்ப்பவர்கள் அடுத்துதன் வீட்டு விசேஷத்திற்கு அழைத்து விடுகிறார்கள். இப்படி சினிமா நட்சத்திரங்களின் வீட்டு விசேஷங்கள், அரசியல் தலைவர்கள் வீட்டு விசேஷங்களில் எல்லாம் இந்த டீ இடம் பிடித்திருக்கிறது...’’ என்கிறார் இந்த மூலிகை டீயை சப்ளை செய்து கொண்டிருந்த அன்வர் என்ற இளைஞர்.

‘‘நிறைய பேர் மூலிகை டீ என்ற பெயரில் எதையோ தயாரித்து ட்ரம்மில் கொண்டு வந்து விற்கிறார்கள். டிரம்மில் வைத்துக்கொண்டு வந்து விற்பது மூலிகை டீயே அல்ல.
இப்படி கண்முன்னால் அத்தனை மூலிகைகளையும் வைத்து, அடுப்பு மூட்டி,  தண்ணீர் கொதிக்க கொதிக்க ஒவ்வொரு மூலிகையிலும் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே அதில் அவ்வப்போது போட்டு சரியான பக்குவத்தில் சுண்டவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி தயாரித்து ஆவிபறக்க எடுத்துக் கொடுப்பதுதான் சரியான மூலிகை டீ.

நாங்கள் இந்த மூலிகை டீயில் மட்டும் 115 மூலிகைகளை பயன்படுத்துகிறோம். இதை உருவாக்கியவர் ஜக்குபாய் மாஸ்டர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அவர், காடு மலையெல்லாம் திரிந்து இந்த மூலிகைகளை பெரும்பாலும் சேகரிக்கிறார். அதில் பல மூலிகைகள் அவரிடம் வேலை செய்யும், அவரின் சிஷ்யர்களான எங்களுக்கே தெரியாது. அவர் கொண்டு வருவதை இதை இதை இன்னின்ன விகிதாச்சாரத்தில், இப்படி இப்படி போட வேண்டும் என்று எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

உதாரணத்திற்கு எலுமிச்சம்

பழத்தை மூலிகை டீயில் பலரும் பிழிந்து கொடுப்பார்கள். அப்படி செய்யக்கூடாது. எலுமிச்சம் பழத்தை இந்த மூலிகை கரைசல் கொதித்துக் கொண்டிருக்கும்போது இப்படி அவ்வப்போது முழுசாகப் போடுவோம். அது கொதித்து வெந்து அதன் தோல், உள்ளிருக்கும் சாறு எல்லாமே எசென்சாக இறங்கும். ஒரு கட்டத்தில் எலுமிச்சம் பழம் வெடித்து பஞ்சு போல் மேலே மிதக்கும். அப்போது அதைத் தூக்கி எறிந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் டீயில் அந்த கசப்பு ஏறிவிடும். இதுபோல 115 மூலிகைகளுக்கும், நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவைகளும் ஒவ்வொரு நேரத்தில் வேண்டிய விகிதத்தில்தான் சேர்க்க வேண்டும்!’’ என்று தெரிவித்தார் அன்வர்.

ஒரு கல்யாணத்தில் 2000 முதல் 5000 பேர் வரை இந்த மூலிகை டீயை அருந்தியிருக்கிறார்கள். இப்படி கடந்த பத்தாண்டுகளில் மட்டும் கோடிக்கணக்கானோர் இதன் ருசியை அறிந்திருக்கிறார்கள்.

இதற்கான ஆர்டர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து மட்டுமல்ல வடமாநிலங்களிலிருந்தும் வருகிறதாம். இதற்காகவே 20 குழுக்கள் இயங்குகின்றன. அதன் மூலம் ஒரே நாளில் 20 விசேஷங்களுக்கு செல்கிறார்கள். இந்த முறையில் மூலிகை டீ தயாரிப்பவர்களே இல்லை என்பதே அனைவரின் பாராட்டுதலாம். கொேரானா
ஊரடங்கு காலத்தில் கிராமம் கிராமமாக லட்சக்கணக்கானோருக்கு இந்த மூலிகை டீயைப் போட்டு இலவசமாகவே வழங்கியிருக்கிறார்கள் ஜக்குபாய் குழுவினர்.

‘‘இந்த மூலிகை டீயை ஒரு திருமண விசேஷத்தில் குடித்துப் பார்த்தேன். நன்றாக இருந்தது. பலருக்கும் சொன்னேன். அவர்கள் விசேஷத்திற்கும் போய் அருந்திப் பார்த்தேன். ஒரே சுவை, ஒரே மணம் மாறாமல் இருந்தது. என் பெரிய மகன் கல்யாணம் போன வருஷம் நடந்தது. அதற்கு இவர்களையே ஏற்பாடு செய்தேன். இப்ப சின்ன மகன் கல்யாணம் திருப்பூரில் நடக்கிறது. இதற்கும் சொல்லிட்டேன். பந்தி முடிச்சு டீ, காப்பி சாப்பிடறவங்களை விட மூலிகை டீ சாப்பிடறவங்கதான் அதிகமா இருக்காங்க!’’ என்றார் கருணாநிதி.

கா.சு.வேலாயுதம்