மேப்படியான்
ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளை அள்ளி வரும் மலையாளப்படம், ‘மேப்படியான்’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. குடும்பம்தான் முக்கியம் என்று வாழ்ந்துவருபவன் ஜெயகிருஷ்ணன். எப்படியாவது சீக்கிரத்தில் பணம் சேர்த்து பெரியாளாக வேண்டும் என்ற பேராசையில் இருப்பவன் வர்க்கி.

தனது சகோதரிக்காக 10 சென்ட் நிலம் வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறான் ஜெயகிருஷ்ணன். இதை எப்படியோ தெரிந்துகொள்கிறான் வர்க்கி. “ஊருக்குள்ளேயே 54 சென்ட் இடம் இருக்கிறது.
அதை ரெண்டு பேரும் சேர்ந்து டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து வாங்கிவிடலாம். நமக்குப் போக மீதியை நல்ல லாபத்துக்கு விற்றுவிடலாம்...” என்று ஜெயகிருஷ்ணனுக்கு ஆசை காட்டுகிறான் வர்க்கி. ரியல் எஸ்டேட் வலையில் ஜெயகிருஷ்ணனும் விழுந்துவிடுகிறான். இதிலிருந்து ஜெயகிருஷ்ணன் தப்பித்தானா என்பதே மீதிக்கதை. குடும்ப உறவுகளின் வலிமையையும், பேராசைகளின் விளைவுகளையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்தப் படம். ரொம்பவே எதார்த்தமான, எளிய திரைக்கதை படத்துக்கு பலம் சேர்க்கிறது. ஜெயகிருஷ்ணனாக நடித்து, படத்தை தயாரித்திருக்கிறார் உன்னி முகுந்தன். படத்தின் இயக்குநர் விஷ்ணு மோகன்.
|