அப்படிப்போடு அருவாள! நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யங்கள்
சமீபத்திய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வரலாறு காணாத வெற்றியைப் பெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 21ஐயும் கைப்பற்றி சாதித்திருக்கிறது. கூடவே, 138 நகராட்சிகளில் 132 இடத்தையும், 489 பேரூராட்சிகளில் 435 இடங்களையும் பிடித்திருக்கிறது.
 இதில் எப்போதும் இல்லாத வகையில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்திருப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணத்துக்கு கணவன், மனைவி, மகள், மகன் குடும்பமாக நின்றுகூட இந்தத் தேர்தலில் ஜெயித்திருக்கிறார்கள். தவிர, 21 வயது இளம் பெண்களும், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளும் கவுன்சிலராகி இருக்கிறார்கள். திருநங்கை ஒருவரும் வாகை சூடியிருக்கிறார். இதோ அவர்கள் பற்றிய விறுவிறு தகவல்கள்...
 கவுன்சிலரான எம்பிஏ மாணவி!
சென்னையில் திமுக சார்பில் 136வது வார்டில் போட்டியிட்ட 22 வயதே நிரம்பிய நிலவரசி துரைராஜ் வெற்றி வாகை சூடியிருக்கிறார். இந்த வார்டில் நிலவரசிக்கும், சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கிய முன்னாள் கவுன்சிலர் குணசேகரனின் மனைவி அறிவுச்செல்விக்கும்தான் கடும்போட்டி நிலவியது.
 இதில் நிலவரசி 7222 வாக்குகளும், அறிவுச்செல்வி 5112 வாக்குகளும் பெற்றனர். மற்ற 11 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். எம்பிஏ படித்து வரும் நிலவரசி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள், தாய்மார்கள், தோழமைக் கட்சி நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
 மாமியாரும் மருமகளும் வெற்றி!
விருதுநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மாமியார் - மருமகள் வெற்றி பெற்றிருப்பது அந்தப் பகுதியையே சுவாரஸ்யமாக்கி இருக்கிறது. விருதுநகர் நகராட்சியின் 26வது வார்டில் மருமகள் சித்தேஸ்வரியும், அடுத்த 27வது வார்டில் மாமியார் பேபியும் போட்டியிட்டனர். இதில், மருமகள் சித்தேஸ்வரி முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து நின்ற மற்ற ஐந்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தார். மாமியார் பேபி மூன்றாவது முறையாக வாகை சூடியிருக்கிறார்.
 21 வயது கவுன்சிலர்
சென்னை 98வது வார்டில் திமுக கூட்டணிக் கட்சியான சிபிஎம் வேட்பாளராகக் களமிறங்கி வெற்றி பெற்றிருக்கிறார் 21 வயதே ஆன பிரியதர்ஷினி. இப்போது எம்.ஏ. சமூகவியல் படித்து வரும் இவர், 8695 வாக்குகள் பெற்று அதிமுகவைத் தவிர்த்து மற்ற சக போட்டியாளர்களை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார். இவரின் தந்தை ஆறுமுகம் ஆட்டோ டிரைவர். சிஐடியு தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். சென்னை மாநகராட்சியின் மிக இளம் வயது கவுன்சிலராக பிரியதர்ஷினி இருப்பார் என்கின்றன தகவல்கள்.
ஜெயித்த திருநங்கை!
வேலூர் மாநகராட்சிக்கு திருநங்கை சமூகத்திலிருந்து முதல்முறையாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் கங்கா. திமுக சார்பில் போட்டியிட்ட இவர், தான் பிறந்து வளர்ந்த வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார். திருநங்கை சமூகத்திற்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கும் கங்கா, 2131 வாக்குகள் பெற்று 15 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.
நிறைமாத கர்ப்பிணியாக போட்டி... பிரசவ சமயத்தில் வெற்றி!
கடையநல்லூர் நகராட்சி 1வது வார்டுக்கு பாஜ சார்பில் போட்டியிட்டவர் ரேவதி பாலீஸ்வரன். மனுத்தாக்கலின்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தேர்தல் பிரசாரத்தின்போதே அவருக்குப் பிரசவ வலி ஏற்பட, உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவரால் ஓட்டு அளிக்க முடியவில்லை. அந்த வார்டில் 738 வாக்குகள் பெற்று வெற்றியை ஈட்டியிருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தந்தை, மகன், மகள் மூவரும் வெற்றி!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சியில் அமமுக சார்பில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் மூவரும் வெற்றி பெற்றிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதில், 15வது வார்டில் தந்தை ரமேஷும், ஒன்றாவது வார்டில் மகன் பாலகௌதமும், 2வது வார்டில் மகள் மதுமிதாவும் போட்டியிட்டு வென்றுள்ளனர்.
தம்பதி சகிதமாக வெற்றி!
துவாக்குடி நகராட்சியில் காயாம்பு, மீனா என்கிற தம்பதி வெற்றி வாய்ப்பை பெற்றதுடன், தங்களை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்துள்ளனர். திமுக சார்பில் நின்ற இவர்களில் காயாம்பு 12வது வார்டிலும், மீனா 15வது வார்டிலும் போட்டியிட்டனர். இருவரும் முறையே 895 மற்றும் 712 வாக்குகள் பெற்று பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டினர். இவர்களைப் போல பல தம்பதிகள் பல்வேறு கட்சிகளிலிருந்து இம்முறை வெற்றியை ஈட்டியுள்ளனர்.
ஜெயித்த செகண்ட் இயர் ஸ்டூடண்ட்!
திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சியின் 5வது வார்டில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியிருக்கிறார் கல்லூரி மாணவியான சினேகா. அங்குள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவர், தன் தந்தை செல்வராஜ் செய்துவரும் சமூக சேவையைப் பார்த்து போட்டியிட முன்வந்ததாகத் தெரிவிக்கிறார். இவர் 495 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக, பாஜ, நாம் தமிழர், தேமுதிக எனப் பெரிய கட்சிகளின் வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார்.
18 பேரை ஜெயித்த மாணவி!
கோவை மாநகராட்சி 97வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டார் இளம் வேட்பாளர் நிவேதா சேனாதிபதி. இவரின் வார்டில் 18 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் நிவேதா 8925 வாக்குகள் பெற்று மற்ற அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்தார். இப்போது இவர் எம்.ஏ. சைக்காலஜி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரின் தந்தை சேனாதிபதி கோவை திமுகவில் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருக்கிறார்.
நாகர்கோவிலின் இளம் கவுன்சிலர்!
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 17வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றியை ஈட்டியிருக்கிறார் 21 வயதான கௌசுகி. இவர் பி.ஏ. ஆங்கிலம் முடித்துவிட்டு சட்டம் படிக்க விண்ணப்பித்துள்ளார். இவரின் தந்தை இளஞ்செழியன் திமுகவில் மாவட்ட வர்த்தக அணியின் துணைச் செயலாளராக உள்ளார்.
முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை ஈட்டியுள்ள கௌசுகி தொடர்ந்து மக்கள் பணி செய்ய ஆசைப்படுவதாகக் குறிப்பிடுகிறார். நாகர்கோவில் மாநகராட்சியில் மிக இளம் கவுன்சிலராக கௌசுகி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மாவும் மகனும் வெற்றி!
இந்தத் தேர்தலில் அம்மாவும் மகனும் சில இடங்களில் வெற்றி வாகை சூடியிருக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சியில் திமுக சார்பில் 5வது வார்டில் போட்டியிட்டார் பாத்திமா கனி. அடுத்த 6 வது வார்டில் அவரின் மகன் ஜாகிர்உசேன் போட்டியிட்டார். இருவருமே வெற்றி வாகை சூடினர். இதேபோல, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் மார்க்சிஸ்ட் சார்பில் 18வது வார்டில் விஜயாவும், அவரின் மகன் ஜோதிபாசு 27வது வார்டிலும் நின்றனர். இருவருமே கவுன்சிலர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வால்பாறை நகராட்சியில் 10வது வார்டில் திமுக சார்பில் காமாட்சியும், அவரின் மகன் மகுடீஸ்வரன் 9வது வார்டிலும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினர். இதில், காமாட்சி 2502 வாக்குகள் பெற்று சக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்தார்.
பேராச்சி கண்ணன்
|