அரண்மனைக் குடும்பம் - 8



குலசேகரன் சொல்லிவிட்டு விலகவும் சதீஷ் அடுத்து மார்ட்டினைத்தான் அழைத்தான். மார்ட்டின் அப்போது ஏற்காட்டின் ஏரிக்கரையோரத்தில் சூடான மிளகாய் பஜ்ஜியை சாப்பிட்டபடி இருந்தான்.
ஒரு கையில் மிளகாய் பஜ்ஜி, மறுகையில் டீ கிளாஸ்...“மார்ட்டின், நான் சதீஷ் பேசறேன்...”“இப்பல்லாம் யார் பேசறோம்னு சொல்லத் தேவையே இல்லியே சதீஷ்... உன் பேரைத்தானே போட்டு வெச்சிருக்கேன்..? செல்போன் சப்தம் கேட்டாலே உன் பேர் பளிச்னு தெரியும். நீ விஷயத்துக்கு வா...”
“வர்றியா... ஸ்டார் ஹோட்டலுக்கா போய் விருந்து சாப்பிட்டு வருவோம்...”

“என்னா சதீஷ் விசேஷம்..? உனக்கு இன்னிக்கு பொறந்த நாளா?”

“மண்ணாங்கட்டி... நான் எதுக்கு கூப்புடுவேன்னு உனக்கு தெரியாது... நான் பேர் சொல்லி உன்னைக் கூப்பிட்றத எல்லாம் ஒரு மேட்டர்னு பேசிக்கிட்டிருக்கியே? நம்ம விஷயம் எந்த அளவுல இருக்கு? அதை முதல்ல சொல்லு...” கோபம் கொப்பளித்தது சதீஷிடம்.“கவனிச்சிட்டேதான் இருக்கேன். மூணு பேரும் இதுவரை ஒண்ணாவே இருக்காங்க. அந்த குட்டிப் பொண்ணு நேற்ற விட இன்னிக்கு இன்னும் நல்லா இருக்குது. குளிருக்கு போட்டு விட்ட மங்கி குல்லாவைக் கூட கழட்டி வீசிட்டு என்ன பாத்து பந்து விளையாட கூப்பிடுது...”
“இதையெல்லாம் நான் கேட்டேனா... போட்டுத் தள்ள என்ன வழி? அதைச் சொல்...”

“முதல்ல சின்னவரை அவங்கள விட்டு பிரிக்கணும். அவர் ஒரு மணி நேரமாவது வெளிய போகணும். இந்த வடநாட்டுப் பொண்ணும் சின்னப் பொண்ணும் அன்னிக்கு மாதிரியே அந்த சாமியாரைப் பாக்க வெளிய கிளம்பினா போதும்... லாரிய உட்டு அடிச்சு ஒரே தூக்கா தூக்கிடுவேன்...”

“ஏன் வேற ஐடியாவே தோணலியா?”

“கொலைன்னாதான் எப்பவோ பண்ணி முடிச்சிருப்பேனே..? இது விபத்து மாதிரி இருக்கணும், யார் மேலயும் சந்தேகமும் வந்துடக் கூடாதுன்னா எப்படி..?’’
“அதுவும் சரிதான்... அந்த பொண்ணு பாம்பை பார்த்தா உழுந்து கும்பிடுதுன்னு சொன்னேல்ல?”
“ஆமாம்...’’

“அப்ப அந்த பாம்பாலயே கதையை முடிச்சிட்டா?”

“நீ சொல்றதும் சரிதான்... ஆனா, இதுல அவங்க சுதாரிச்சிக்க கொஞ்சம் இடம் இருக்கே?”
“எப்படி?”

“பாம்ப பார்த்து அரண்டு போய் அடிக்கப் பார்த்தாதான் அது சீறும். இவங்கதான் உழுந்து கும்புட்றாங்களே?”
“ஒண்ணுக்கு நாலு பாம்பை விடு. ஒண்ணு கூடவா கடிக்காம போயிடும்?”

“ரைட்... முயற்சி பண்ணிப் பாக்கறேன்” “பண்ணியெல்லாம் பாக்காதே... முடி! அவங்க அப்புறம் மலைய விட்டு கிளம்பிடப் போறாங்க...”

“சதீஷ்... இப்படி போன்லயே எல்லாத்தையும் சாதிச்சிக்க பாக்காதே. இந்த மலைலதானே நீயும் இருக்கே? இங்க என்கூட வா... ரெண்டு பேரும் சேர்ந்தா வேலையும் வேகமா நடக்கும்...”
“சரி வரேன்... நீ பாம்புக்கு ஏற்பாடு பண்ணு...”“அதெல்லாம் பிரச்னையே இல்ல... பாம்புங்கள பிடிச்சு அதோட விஷத்தை எடுத்து அதை வெச்சே ஆயிரக்கணக்குல சம்பாதிக்கற போதிமுத்துங்கறவனை எனக்குத் தெரியும். எப்ப பார் ஏதாவது வயக்காட்டுலதான் இருப்பான்.

அதுவும் கடலை வயலா பாத்துதான் சுத்திக்கிட்டு இருப்பான். அங்க எலிங்க நிறைய இருக்கும். அது இருக்கற இடத்துலதான் நல்ல பாம்பு நடமாட்டமும் நிறைய இருக்கும்கறதால் அங்கயே சுத்திக்கிட்டு இருப்பான். கையிருப்பாவே எப்பவும் பத்து பதினைஞ்சு புஸ்சுங்க அவன்கிட்ட இருக்கும்!’’
“புஸ்சுங்களா?”

“ஆமா... அவன் பாம்புன்னே சொல்ல மாட்டான். புஸ்சுங்கன்னுதான் சொல்வான். பாம்புங்க அப்படித்தானே சீறும்?”
“ஓ அதனாலயா... சரி இப்பவே அந்த போதிமுத்துவை பிடி... ஒரு நாலஞ்சு பாம்புகளோட உடனே வரச் சொல். நான் சின்னவரை அங்க இருந்து கிளப்ப பாக்கறேன். குலசேகர ராஜா சார்கிட்ட சொன்னா போதும்... அவர் எதையாவது பண்ணி சின்னவரை கிளப்பி விட்றுவாரு. அப்புறம் நம்ம பாடுதான்!”

‘‘அவனை வரச் சொல்றது பெருசு இல்ல... அவனும் பங்கு கேட்பான்... அவன் கேக்கறதை கொடுத்தாதான் சம்மதிப்பான்...’’
“எவ்வளவு கேப்பான்?”

“தெரியாது... பேசித்தான் பாக்கணும்...”“அதுக்கு பேசாம பாம்புகள விலைக்கு வாங்கி நாமளே அதுகளை பங்களா ரூமுக்குள்ள விட்றுவோம். என்ன சொல்றே?”
“நமக்கெதுக்கு சதீஷ் அந்த வில்லங்கம் பிடிச்ச வேலை..? அவன்னா லாவகமா அதை பண்ணுவான்...”“மார்ட்டின்... இந்த விஷயத்துல நாம யாரையுமே கூட்டு சேர்க்கக் கூடாது. நான் உன்னை கூட்டு சேர்த்ததே குலசேகர ராஜா சாருக்கு பிடிக்கலை. கஷ்டப்பட்டு சமாதானப்படுத்தினேன்...”

“பெரியாளுங்க எப்பவுமே உஷாரா இருக்காங்க பாரு... சரி, நான் போய் எதையாவது சொல்லி பாம்புங்கள வாங்கிட்டு வந்துட்றேன்...”“வாங்கிட்டு வந்துட்டு உடனே போன் பண்ணு... அடுத்த சில மணி நேரங்கள்ல சின்னவரை மட்டும் தனியா வெளிய கிளப்பற வேலைய குலசேகர ராஜா சார் பார்த்துக்குவார். அந்த சமயத்துல நாமளும் உள்ள நுழைவோம்...”
“இந்த வேலைக்காரன் நாச்சிமுத்து, அவன் பொண்டாட்டி பங்கஜத்தை என்ன பண்ண?”

“அந்த நேரத்துக்குத் தகுந்த மாதிரி எதையாவது பண்ணுவோம். இந்த சந்தர்ப்பத்தை மட்டும் விட்றவே கூடாது...”சதீஷ் பேசி முடித்திட, மார்ட்டின் டீ கிளாஸைப் பார்த்தான். மலைக் குளிருக்கு அது குளிர்ந்து ஆடை போர்த்திக் கொண்டிருந்தது. அப்படியே கீழே கொட்டி விட்டு, கிளாஸை அருகில் இருக்கும் கடையில் கொடுத்து விட்டு போதிமுத்துவைப் பார்க்க புறப்பட்டான்.

லேப்டாப் ஸ்கிரீன் மேல் கவனமாக இருந்த கணேசன் மேல் பொத்தென்று வந்து விழுந்தது தியா தூக்கி எறிந்த பந்து! அந்த பந்துக்காக ஓடிவந்து நின்ற செல்ல மகளை ஆசையாகப்பார்த்தான் கணேசன்.

அப்போது ரத்தி குளித்துவிட்டு ஆளுயரக் கண்ணாடி முன் அமர்ந்து தலைவாரிக் கொண்டிருந்தாள்.“டாடி... பால்...”“இந்தா... பாத்து விளையாடு... கண்ணாடி மேல பட்டா உடைஞ்சிடும். வெளில போய் விளையாடு...”“மம்மிதான் உள்ளயே விளையாடச் சொல்றாங்க...”“ரத்தி... எங்க இருக்கே?”“இதோ வந்துட்டேன் ஜி...” என்றபடி ரத்தி தலைக்கு கிளிப் பொருத்தியபடியே அவன் முன் வந்தாள். ஒரு முறை அவளை ஆழமாகப் பார்த்தான். தொடக்க காலத்தில் நாக்பூரில் கெஸ்ட் ஹவுஸில் பார்த்தபோது எப்படி இருந்தாளோ அப்படியே இருந்தாள்.

“நீ இப்ப முன்ன மாதிரியே அழகா இருக்கே ரத்தி...” பதிலுக்கு அவள் சிரித்தாள். தியா இப்போது அவன் மடிமேல் இருந்த நிலையில் லேப்டாப் லெட்டர் பட்டன்களை தட்டத் தொடங்கியிருந்தாள்.

“நோ தியா... டாடி ஒர்க்
பண்ணிக்கிட்டிருக்கேன்...”
“நான் மிக்கி மவுஸ் பாக்கணும் டாடி...”
“பேட்ல அம்மா உனக்கு போட்டுத்தருவாங்க...”
“நானே ஓபன் பண்ணி பார்ப்பேன் டாடி...”
“ஓ... நீ அதெல்லாமும் பண்ணுவியா?”

“இவ இப்ப மொபைல்ல கிரிக்கெட்டே விளையாட ஆரம்பிச்சிட்டா. நீங்க இதை ஒரு பெரிய விஷயமா சொல்லிக்கிட்டிருக்கீங்க...”
ஒரு சந்தோஷ உரையாடல் அங்கே தொடங்கி விட்டிருந்தது. தியாவிடம் துளியும் சோர்வோ, சலிப்போ இல்லை. மாறாக ஒரு மான்குட்டியின் துறு துறுப்
போடுதான் தெரிந்தாள்.

“ஆமா... மருந்து கொடுத்தியா?”
“கொடுத்தேன்... சாப்ட மாட்டேங்கறா...”
“ஆமாம் டாடி... எனக்கு அந்த கசப்பு மருந்தெல்லாம் வேண்டாம். நான் இப்ப நல்லாதானே இருக்கேன் டாடி...”குழந்தை தானாக முன்வந்து குழைந்து பேசினாள்.“இல்லடா... எப்பவும் நல்லா இருக்கணும்னா நீ மருந்து சாப்பிடணும். அப்பதான் உனக்கு பூரணமா குணமாகும்...”
“ஜீ... ஒரு விஷயம்...” ரத்தி கணேசனை தன் பக்கமாகத் திருப்பினாள்.

“என்ன ரத்தி?”
“குழந்தையோட நான் அந்த சாமியாரைப் போய் ஒரு தடவை பாத்துட்டு...” முழுவதும் முடிக்காமல் மென்று விழுங்கினாள்.
கணேசனிடம் சிந்தனை!“உங்களுக்கு இன்னும் அவர்மேல நம்பிக்கை வரலியா?”
கணேசன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாகவே இருந்தான்.

“டாக்டர் வெங்கட் ராவ் அவ்வளவு சொல்லியுமா உங்களுக்கு சந்தேகம்?”
“சரி போய்ட்டு வா... ஆனா, ஒண்ணு... போய்ட்டு சீக்கிரம் வந்துடணும்...”
“நீங்க?”

“நான் வரலை... நீ கூட்டிகிட்டு போய்ட்டு வா. பங்கஜத்தை கூட கூட்டிகிட்டு போ...”
“கார் எடுத்துகிட்டு போறேன். அரண்மனைக் குடும்ப மருமகள் ஆட்டோவுல போனாதான் உங்களுக்கு பிடிக்கலியே...”
“தாராளமா எடுத்துட்டு போ... அதுக்குதானே உனக்கு கார் ஓட்டவே சொல்லிக்கொடுத்தேன்...”
“ரொம்ப தேங்க்ஸ் ஜீ...”

உற்சாகமான ரத்தி, மிக வேகமாக தியாவுக்கு உடை மாற்றத் தொடங்கினாள். மாற்றும் போதே ‘‘பங்கஜம்...’’ என்று உரத்த குரல் கொடுக்க பங்கஜமும் ஈரக்கைகளை துடைத்தபடி எதிரில் வந்தாள்.“அம்மா கூப்ட்டீங்களா?”

“ஆமாம்... நாம இப்ப சேட்டோட எஸ்டேட்டுக்கு சாமிய பாக்கப் போறோம். நீயும் கூட வரே...”“அப்படியாம்மா... ரொம்ப சந்தோஷம்...” என்றவள் அடுத்து கணேசனைத்தான் பார்த்தாள். அவன் அவள் பார்க்கவும்  லேப்டாப்பை பார்க்கத்தொடங்கி விட்டான்.

ஏற்காட்டில் அன்று நல்ல இதமான காலச் சூழல். தை மாத மேகங்கள் தரையில் ஆடும் என்பார்கள். அவற்றின் ஊடாக ரத்தி காரைச் செலுத்தியபடி இருந்தாள்.
தார்ச்சாலை மேல் லேசாய் பெய்திருந்த மழை ஈரம்! சாலையும் அடர் கருப்பில் மின்னியது. காருக்குள் முன்சீட்டில் தியா உட்காராமல் நின்றபடி இருந்தாள். பின்னால் பங்கஜம்.
“அம்மா... அய்யா சாமியார் விஷயத்துல மனசு மாறிட்டாருங்களாம்மா?” என்று பங்கஜம் கேட்டாள்.

“மாறிக்கிட்டே வர்றாரு பங்கஜம்... நான் இப்ப எவ்வளவு சந்தோஷத்துல இருக்கேன் தெரியுமா?” என்று கேட்டபடியே ஒரு வளைவில் காரைத்திருப்
பினாள் ரத்தி. அங்கே மார்ட்டினும் தன் மோட்டார் பைக்கில் அப்போது அவளைக் கடந்தவனாக அதிர்ந்து போய் அவர்கள் காரில் செல்வதைப் பார்த்தான்.
உடனேயே ஓரமாய் ஒதுங்கி சதீஷைத்தான் அழைத்தான்.

“சதீஷ்... அந்த வடநாட்டுப் பொண்ணும், சின்னப்பொண்ணும் வேலைக்காரியோட சேட் எஸ்டேட் பக்கமா போய்க்கிட்டிருக்காங்க...”

“அப்ப கார்ல சின்னவர் கணேசன் இல்லையா?”

“இல்ல... நான் போதிமுத்து வைப் பாக்க பைக்ல புறப்பட்டுக்கிட்டிருக்கறப்ப எதிர்ல கார்ல இவங்கள பாத்தேன். அந்தப் பொண்ணு கார் கூட ஓட்டும் போல..?”

“சரி... இப்ப என்ன பண்ணப் போறே..?”

“பழைய ஐடியாதான். பாம்பு மேட்டர தூக்கி தூரப் போட்டுட்டு லோடு லாரிய எடுத்துக்கிட்டு இப்பவே சேட் எஸ்டேட்டுக்கு போறேன்...”“என்னவேணா செய்... எனக்கு காரியம் நல்லபடி நடந்து முடிஞ்சா போதும்...”“இந்த தடவ என் முயற்சி தப்பாது... எஸ்டேட்ல இருந்து அவ கார்ல திரும்பும்போது ஒரு கர்ண கொடூர ஆக்சிடென்ட் கேரன்ட்டி. பாவம் அந்த வேலைக்காரியும் கூட சேர்ந்து சாகப்போறா... அதை நினைச்சாதான் கஷ்டமா இருக்கு...” போனை முடக்கிய மார்ட்டின், தன் பைக்கை லோடு லாரி நிற்கும் ஷெட்டை நோக்கித்தான் செலுத்தினான். அவனிடம் ஒரு ஆக்ரோஷம்... அதன் மதிப்பு 25 லட்சமாயிற்றே!

(தொடரும்)

சந்திரமௌலீஸ்வர கனபாடிகள் நம்பிக்கை வைத்தே நாகம் சார்ந்த விஷயங்களை ஏற்க வேண்டும் என்று சொல்லவும் அசோகமித்திரன் முகத்தில் ஒரு கேலிச்
சிரிப்பு உதடுகளில் நெளிந்தது. கனபாடிகளுக்கும் புரிந்தது. உடனேயே “நிதர்சனமா நிரூபிக்க முடிஞ்சாதான் நான் நம்புவேன்னு நீங்க நினைச்சா நாம இந்த விஷயத்தை இதுக்குமேல பேச வேண்டாம். நீங்க உங்க போக்குல போய்க்கோங்கோ...” என்றார் கனபாடிகள். அந்த பதில் அசோகமித்திரனை சற்று திடுக்கிட வைத்தது.

“என்ன இப்படி சொல்லிட்டீங்க... எதையும் பாரபட்சமில்லாதபடி அணுகறதுதான் என் வழக்கம். சரி... நம்பிக்கை வைத்தே நீங்க சொல்லப்போறத நான் ஏத்துக்கறேன். நீங்க சொல்லுங்க... பாம்புகளை உணவுப் பொருளா நினைச்சு சாப்பிட்ற ஒரு கூட்டம் நல்லாதானே இருக்கு? அது சபிச்சிடும், அதோட சாபம் நல்லபடியா வாழ விடாதுங்கறதெல்லாம் ஏற்க முடிஞ்ச ஒரு கருத்தா இல்லையே?”

“பொதுவா எந்த உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது. ஒரு புழு பூச்சியை கொல்லக் கூட நமக்கு அனுமதி கிடையாது. மீறி செயல்படும்போது நிச்சயமா அது பாவம்தான். அந்த பாவத்துக்கான பதில் விளைவும் நிச்சயமா உண்டு.இதுல பாம்புகள் வரைல ஒரு வேகம் இருக்கறதை நான் உணர்ந்திருக்கேன். அதேபோல சர்ப்பதோஷ ஜாதகங்கள் ஒருபோதும் பொய்யானதில்லை. பாம்பையே உணவா சாப்பிடறவங்க நல்லரதானே இருக்காங்கன்னு நீங்க சொல்றதை நான் பொருட்படுத்த தயாராயில்லை.

நல்லா இருக்கறதுக்கு நீங்க வெச்சிருக்கற அர்த்தம் எதுன்னு எனக்கு தெரியாது. என்வரைல நல்லா இருக்கறதுன்னா சாப்பிட்றதும், தூங்கறதும் மட்டுமில்ல. பதினாறு பேறுகள்னு பதினாறு விஷயங்கள் இருக்கு. அதைப் பெற்று வாழ்வதுதான் பெருவாழ்வு.உயிரினங்களை துன்புறுத்தவோ கொல்லவோ செய்தால் இந்தப் பெருவாழ்வை நிச்சயம் ஒருவர் வாழமுடியாது.

ஒருவரோட சந்தோஷமான வாழ்வுங்கறது அவர் மட்டும் சந்தோஷமா வாழ்றது கிடையாது. அவரோட பிள்ளை, பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி... இப்படி எல்லாரும் உடல் ஊனமில்லாம, மனநலத்தோட சந்தோஷமா வாழ்றதை சார்ந்தது.

எல்லாத்துக்கும் மேலா பூரண சுதந்திர உணர்வோட, இந்தப் பிறப்பு பற்றிய தெளிவுகளோட வாழ்வதும்மிக முக்கியம்.உயிரினங்களை கொல்றவங்களுக்கு நிச்சயம் பிறர் பார்த்து வியக்கும்படியான ஒரு வாழ்க்கை இருக்கவே இருக்காது. இதுதான் எண்பது வயசான நான் என் வாழ்க்கைல பார்த்த உண்மை...”
“அஹிம்சைக்கு அப்ப பெரிய சக்தி இருக்குன்னு சொல்றீங்க... அப்படித்தானே?”

“அப்படியும் சொல்லலாம்...”

“உயிரினங்களைக் கொல்ற யாரும் அதுக்கான பாவத்துல இருந்து தப்பிக்க முடியாதுன்னு சொன்னீங்க... கேக்கறேனேன்னு தப்பா நினைக்கவேண்டாம்... நாம சாப்பிட்ற அரிசி, பருப்புல இருந்து காய்கறி, கீரை வரை எல்லாமே உயிருள்ளவைதானே? இவைகளை சாப்பிட்டா மட்டும் பாவமில்லையா? ஆடு, மாடு, பாம்பு, தேளுன்னு சாப்ட்டாதான் பாவமா?”
“இது ரொம்ப அரதப்பழசான கேள்வி... இதுக்கு எவ்வளவோ பேர் எப்படியெப்படியெல்லாமோ பதில் சொல்லிட்டாங்க. இருந்தாலும் பரவால்ல... நான் எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன்...’’
என்று ஒரு பெரிய விவாதத்திற்குத் தயாரானார் கனபாடிகள்!

இந்திரா சௌந்தர் ராஜன்

ஓவியம்: வெங்கி