ஜீரோ கார்பன்! தயாராகும் இந்தியா
இன்று உலகம் முழுதும் எல்லா நாடுகளையும் தலைபோகும் அவசரத்தில் நிற்க வைத்திருக்கும் பிரச்னை கால நிலை மாற்றம் எனும் சூழலியல் யுத்தம். எதிர்வரும் 2050ம் ஆண்டுக்குள்ளாக இந்த உலகம் கார்பன் உமிழ்வு சமநிலை அல்லது ஜீரோ கார்பன் என்ற நிலையை அடைய வேண்டும் என்பது இன்று உலக நாடுகள் முன்பு உள்ள பிரதானமான சவால்.
 கடந்த வருட இறுதியில் கிளாஸ்கோ மாநகரில் நடந்த சூழலியல் மாநாட்டில் இயற்கை நம்மீது தொடுத்திருக்கும் இச்சூழலியல் யுத்தம் தொடர்பாக கடும் எச்சரிக்கை தரப்பட்டது. ‘இது ரெட் அலெர்ட்டோ, எச்சரிக்கை மணியோ அல்ல. அதற்கான கால கட்டத்தை எல்லாம் நாம் கடந்துவிட்டோம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இயற்கை தன் பதிலடியைத் தரத் தொடங்கிவிட்டது. நாம் புவியின் வெப்பமாக்கல் உயர்வை ஒரு டிகிரி அளவுக்குள் கட்டுப்பாட்டில் வைக்காவிடில் மிக மோசமான அழிவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
 2050ம் ஆண்டில் நடக்கக் கூடும் என்று எதிர்பார்த்த இயற்கைப் பேரழிவுகள், சூழல் மாற்றங்கள் எல்லாம் முப்பது வருடங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதைப் பார்க்கும்போது, இயற்கை நாம் எதிர்பார்த்ததைவிடவும் வேகமாகவும் மூர்க்கமாகவும் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்...’ என அம்மாநாட்டில் விஞ்ஞானிகள் ஒரே குரலில் உரக்கப் பேசிய பிறகுதான் உலக நாடுகள் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அழுத்தத்துக்கு முகம் கொடுக்கத் தொடங்கின.
 இதோ இந்த பட்ஜெட்டில் நமது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டுக்குள்ளாக நாம் ஜீரோ கார்பன் இலக்கை அடைவதற்கான முயற்சிகள் உடனே தொடங்கப்படும்...’ என்று அறிவித்திருக்கிறார். அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கான காலநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கான ‘அம்ரித் கால்’ எனப்படும் ‘அமிர்த யோகம்’ அதாவது ‘உகந்த நேரம்’ தொடங்கிவிட்டதாக அவர் அறிவித்தார்.
இந்திய அரசின் இந்த முடிவு புதிய இந்தியாவுக்கான நுழைவாயிலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம்முடைய அடிப்படைக் கட்டுமானங்களில் மாற்றங்களை உருவாக்கும் அளவுக்கு புதிய விஷயங்களை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இது புதிய வேலை வாய்ப்புகளைத் தருவதாகவும் புதுப் புது திறன்களை நாம் கண்டுகொள்ளவும் வளர்த்துக்கொள்ளவும் வேண்டியதாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள் சமூகவியலாளர்கள்.
ஒரு தேசத்தின் ஆற்றல் கட்டுமானம் என்பது மின்சாரத்தை நம்பி இருக்கிறது என்றால் அந்த மின்சாரம் கார்பன் போன்ற எரிபொருளை கணிசமாக நம்பியிருக்கிறது. நாம் கார்பனைத் தவிர்க்க வேண்டுமானால் சூரிய ஒளி மின்சாரம், லித்தியம் பேட்டரிகள், நீல ஹைட்ரஜன் போன்ற மாற்று வழிமுறைகளை இனி உருவாக்க வேண்டியிருக்கும்.
டேட்டா மையங்கள் மற்றும் அடர்த்தியான சார்ஜிங் சிஸ்டம் கொண்ட ஆற்றல் சேமிப்பு மையங்கள், க்ரிட் ஸ்கேல் பேட்டரி சிஸ்டம் போன்ற புதிய தொழில்கள் இனி உருவாகும். ஏற்கெனவே இருக்கும் எலக்ட்ரானிக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட எண்ணெய்க் கழிவுகள், விஷத்தன்மை மிக்க தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவற்றையும் இதன் எஞ்சிய பாகங்களையும் வாங்கி விற்கும் மறுசுழற்சிக்குப் பயன்படுத்தும் நிறுவனங்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட துறைகள் அடி வாங்கும்.
ஆனால், இது காலத்தின் தேவை ,வேறு வழியில்லை. இதை செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உலக அரசுகள் இருக்கின்றன. இவற்றை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறோம்,அதற்கான திட்டங்கள் என்னென்ன என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள்.இந்த முறை நிதியமைச்சர் பட்ஜெட் உரையை நிகழ்த்தியபோது, பசுமை என்ற சொல்லை ஏழு முறையும், ஆற்றல் என்ற சொல்லை இருபது முறையும், நீட்டிக்கத்தக்க என்ற சொல்லை பத்து முறையும், பருவநிலை என்ற சொல்லை எட்டு முறையும், சுத்தம் என்ற சொல்லை பத்து முறையும் பயன்படுத்தியிருக்கிறார்.
ஏற்கெனவே கிளாஸ்கோ மாநாட்டுக்கான தனது சிஓபி26 சமர்ப்புரையில் பிரதமர் மோடியும் எதிர்கால இந்தியா சூழலியல் விஷயங்களுக்கு அழுத்தம் தந்து சிந்திப்பதாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். பிரதமரின் அந்த வாக்குறுதிக்கு வலு சேர்ப்பதுபோல் இந்த பட்ஜெட் உரையும் நிகழ்ந்திருப்பது எதேச்சையானது அல்ல.எதிர்வரும் 2030ம் ஆண்டுக்குள்,அதாவது இன்னும் எட்டு ஆண்டுகளில் நிலக்கரி போன்ற ஃபாசில் ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பது நிறுத்தப்பட்டு, நிலக்கரியற்ற, ஃபாசில்களற்ற ஆற்றல் இடுபொருட்கள் மூலம் ஐநூறு கெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நிலையை அடைவோம் என பிரதமர் கிளாஸ்கோ உரையில் அறிவித்தார்.
இது சாத்தியமா என்றால் சாத்தியமே என்கிறார்கள் நிபுணர்கள். நம்முடைய இப்போதைய மின்சார உற்பத்தி நிலை என்பது 392 கெகாவாட். இதில் இப்போதே 157 கெகாவாட் மின்சாரத்தை நாம் நிலக்கரியற்ற மூலாதாரங்கள் வழியாகவே உற்பத்தி செய்கிறோம். அதாவது இப்போதே நாற்பது சதவீதம் அந்த வகை மின்சாரம்தான் உற்பத்தியாகிறது.
தற்சமயம், மின்சார ஆற்றல் மூலம் 48.55 கெகாவாட், காற்றாலைகள் மூலம் 40.03 கெகாவாட், சிறு ஹைட்ரோ கார்பன்கள் மூலம் 4.83 கெகாவாட், பயோ ஆற்றல் மூலம் 10.62 கெகாவாட், பெரிய நிலக்கரி மூலம் 46.51 கெகாவாட், அணுமின் நிலையங்கள் மூலம் 6.78 கெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.கடந்த ஏழு ஆண்டுகளில் நம்முடைய நிலக்கரியற்ற மின்சார உற்பத்தி இருபத்தைந்து சதவீதம் வளர்ந்திருக்கிறது. இதனை மேலும் அதிகமாக உயர்த்தச் செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறோம். சூரிய ஒளி மின்சாரம் இப்போது பதினெட்டு மடங்கு வளர்ந்திருக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இருமடங்கு அதிகமாக வளர்ந்திருக்கிறது. இதெல்லாம் நமக்கு நம்பிக்கை தரும் விஷயங்கள்தான். ஆனால், நிச்சயம் இவை மட்டுமே போதாது. கடந்த ஏழு ஆண்டுகளில் மரபுசாரா எரிசக்தித் துறையில் அந்நிய முதலீடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருவது ஒரு நல்வாய்ப்பு. இப்போது ஐம்பத்து நாலாயிரத்து ஐநூற்று இருபத்தைந்து கோடி ரூபாய்அந்நிய முதலீடு இதில் இருக்கிறது. இத்துறையில் அந்நிய முதலீடு மேலும் அதிகரிக்கக்கூடும்.
முதலீடுகள் கிடைத்தால் மரபுசாரா எரிசக்தி என்பது மேலும் வேகமாக வளரும் என்பதில் ஐயமில்லை. மோடி வாக்குறுதி கொடுத்தது போல 2070ல் நாம் ஜீரோ கார்பன் இலக்கையும் எட்டிவிடுவோம். ஆனால், தேசத்தின் உயிர்நாடியான எரிபொருள் கட்டுமானம் நம் கரங்களில் இருக்குமா என்பதொரு பெரிய கேள்வி. நம் அரசிடம் இதற்கு நிச்சயம் சரியான பதில் இல்லை. நாம் மாற்று எரிபொருள் கட்டுமானத்தை உருவாக்குகிறோம் என்ற பெயரில் அந்நிய முதலீடுகளில் சிக்கிக்கொள்வதும் விவேகமல்ல. ஜீரோ கார்பன் என்பதை இந்திய அரசு கையாளத் தயாராகிவிட்டது. ஆனால், அது எப்படிக் கையாளப்போகிறது என்றுதான் நமக்குத் தெரியவில்லை. மாற்றங்கள் ஒன்றே மாறாதது.
இளங்கோ கிருஷ்ணன்
|