உலகம் முழுவதும் தினமும் 200 கோடி கோப்பை தேநீர் பருகப்படுகிறது!
பெயர்: தமிழில் தேநீர், ஆங்கிலத்தில் டீ, மலையாளத்தில் சாயா, இந்தியில் சாய், ஜப்பான் மற்றும் சீனாவில் சா... என ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு பெயர்.
 பிறந்த இடம்: சீனா.
தேநீர் பழக்கம் : 3 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மருந்து போல தேநீர் பருகப்பட்டது. அதற்குப்பிறகே மக்கள் மகிழ்ச்சிக்காக தேநீர் அருந்தத் தொடங்கினர். ஜப்பானில் தேநீருக்காக திருவிழாக்கள்கூட கொண்டாடப்படுகின்றன.
 பிறந்த தேதி: கி.மு 2737ம் வருடத்தின் ஒரு நாள். அப்போது ஒரு வெட்டவெளியில் சீன அரசரும், மூலிகை நிபுணருமான ஷெனாங் சுடுநீர் அருந்திக் கொண்டிருந்தார். அவருடைய சுடுநீர் கோப்பைக்குள் சில இலைகள் வந்து விழுந்தன. அதை அவர் பருகியபோது, வித்தியாசமான ஒரு சுவையை உணர்ந்தார். தவிர, அதில் மருத்துவ குணங்களும் இருப்பதாகக் கண்டுபிடித்தார். அந்த இலைதான் தேயிலை. ஷெனாங் பருகியதுதான் முதல் தேநீர் என்று நம்பப்படுகிறது.
 அறுவடை : தேயிலைச் செடி வளர ஆரம்பித்ததிலிருந்து மூன்று வருடங்கள் கழித்துதான் அறுவடை செய்ய முடியும். தேயிலைச் செடி விதைகளை உற்பத்தி செய்ய நான்கு முதல் பன்னிரண்டு வருடங்களாகும். தேயிலை செழித்து வளர வருடத்துக்கு 50 இன்ச் மழை தேவைப்படுகிறது. பெரும்பாலும் கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்தில்தான் தேயிலை வளரும்.
தேநீர் கோப்பை : ஆசியாவில் 11 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பீங்கானால் ஆன தேநீர் கோப்பையைப் பயன்படுத்தியதாக வரலாறு சொல்கிறது. 16ம் நூற்றாண்டு வரைக்குமே ஐரோப்பாவுக்குள் தேநீர் நுழையவில்லை.
மருத்துவ குணம்: தேயிலையில் polyphenols எனும் antioxidants உள்ளன. இவை செல்களுக்கு புத்துயிர்ப்பு அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இதயம் சம்பந்தமான நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது நல்ல, தரமான தேநீர்.
ரஷ்யாவில் அறி முகம்: 1600களில் சீன தூதரகம் ரஷ்யாவின் ஜார் அலெக்ஸிஸுக்கு பரிசாக தேயிலையை வழங்கியது. இப்படித்தான் ரஷ்யாவில் தேநீர் அறிமுகமானது.
அதிகமாக தேயிலை விளையும் நாடு : சீனா. இங்கே வருடத்துக்கு 24 லட்சம் மெட்ரிக் டன் தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆச்சர்யம் : 18ம் நூற்றாண்டில் அதிக மதிப்பு வாய்ந்த ஒரு பொருள் தேநீர். அதனால் தேயிலையை பெட்டிக்குள் பூட்டி வைத்தனர்.
சிறப்பு: தண்ணீருக்குப் பிறகு உலகில் அதிகமாக பருகப்படுவது தேநீர்தான். உலகம் முழுவதும் தினமும் 200 கோடி கோப்பை தேநீர் பருகப்படுகிறது.
வகைகள் : உலகில் 3 ஆயிரம் வகை தேநீர் கிடைக்கின்றன. எல்லாவகையான தேயிலைத் தூளும் தேயிலைச் (Camellia Sinensis) செடியிலிருந்துதான் வருகின்றன. அந்த தேயிலைச் செடி வளரும் பகுதி, அறுவடை செய்யப்படும் காலம், அறுவடை செய்யப்படும் தேயிலைச் செடியின் பகுதி, தேயிலைச் செடியின் வகைமை, தேயிலைத் தூளைத் தயாரிக்கும் முறைமை உட்பட பல காரணிகளைப் பொறுத்து தேநீரின் வகைகள் வேறுபடுகின்றன.மிகவும் விலையுயர்ந்த வகைமை: சீனாவின் வூயி மலையில் விளையும் டா ஹோங் பாவோ (Da Hong Pao) எனும் தேயிலைதான் உலகிலேயே விலை அதிகமானது. ஒரு கிலோ டா ஹோங் பாவோவின் விலை சுமார் 3 லட்ச ரூபாய்.
தேநீரின் சாம்பெயின் : இமயமலையின் அடிவாரத்தில் 70 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வளர்கிறது டார்ஜிலிங் தேயிலை. உலகில் விலை உயர்ந்த தேயிலைத் தூள்களில் இதுவும் ஒன்று. டார்ஜிலிங் தேயிலையிலிருந்து உருவாகும் தேநீரைத்தான் தேநீரின் சாம்பெயின் என்று அழைக்கின்றனர்.
ஐஸ் டீ : இத்தாலியில் 1823ல் ஐஸ் டீ அறிமுகமாகியிருந்தாலும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் அது பரவலானது. அமெரிக்கர்கள் ஐஸ் டீயையே அதிகம் விரும்புகின்றனர்.
உற்பத்தி : உலகம் முழுவதும் வருடத்துக்கு 50 லட்சம் டன் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. சீனா, தாய்வான், ஜப்பான், இந்தியா, இலங்கை, கென்யா ஆகிய நாடுகள் தேயிலை உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. தவிர, 60க்கும் மேலான நாடுகள் தேயிலையை உற்பத்தி செய்கின்றன.
தேசிய பானம் : ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும் தேசிய பானமாக தேநீர் கருதப்படுகிறது. அங்கே தாகத்துக்கு கிரீன் டீயை அருந்துகின்றனர்.
டீ பேக் : இன்று டீ பேக் வெகு பிரபலம். முதன் முதலில் டீ பேக்கை யார் பயன்படுத்தியது என்ற விவாதம் இன்னும் முடியவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த பிசினஸ்மேன் தாமஸ் சுல்லிவன், தேயிலையை இறக்குமதி செய்து உள்நாட்டில் விநியோகம் செய்து வந்தார். 1908ம் வருடம் புதிதாக இறக்குமதி செய்த தேயிலையை பட்டுத்துணியாலான சிறு பைக்குள் வைத்து சில வாடிக்கையாளர்களுக்கு அனுப்பினார்.
அந்த வாடிக்கையாளர்கள் பையுடனே தேயிலையைச் சுடுதண்ணீரில் முக்கி எடுத்து, தேநீரைத் தயாரித்திருக்கின்றனர். அதன் சுவை அலாதியாக இருந்திருக்கிறது. அதிலிருந்து பைக்குள் வைத்தே தேயிலையை அனுப்புமாறு வாடிக்கையாளர்கள் வேண்டுகோள் வைத்தனர். ஆனால், தாமஸ் சுல்லிவன் தேயிலையின் பாதுகாப்புக்காகத்தான் அதைப் பைக்குள் வைத்து அனுப்பியிருந்தார்.
இன்னொரு பக்கம் 1901ம் வருடமே ராபெட்டா சி.லாசன் மற்றும் மேரி மோலரேன் இருவரும் டீ பேக்குக்கு காப்புரிமை வாங்கி வைத்திருந்தனர். இவர்கள் உருவாக்கிய டீ பேக்தான் இன்றும் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. துபாயில் உள்ள ‘லிப்டன்’ எனும் நிறுவனம் வருடத்துக்கு சுமார் 500 கோடி டீ பேக்குகளைத் தயாரிக்கிறது.
டீ பிரேக் : வேலையின்போது தேநீர் அருந்துவதற்காக எடுத்துக்கொள்ளும் டீ பிரேக்கின் வயது 200. இங்கிலாந்து வணிகர்களிடையே இருந்த டீ பிரேக், உலகம் முழுவதும் பரவலானது.
அமெரிக்கா : தினமும் அமெரிக்காவில் மட்டும் 14.2 லட்சம் பவுண்ட் எடை கொண்ட தேயிலைத் தூள் நுகரப்படுகிறது.
இந்தியா : ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் இந்தியாவுக்குள் தேயிலை நுழைந்தது. ஆனால், 17ம் நூற்றாண்டிலேயே மருத்துவத்துக்காக தேநீரை இந்தியர்கள் பயன்படுத்தியதாகச் சொல்கின்றனர்.
த.சக்திவேல்
|