மாமாவுக்கு...
வானம் மேக மூட்டத்துடன் இருள் சூழ்ந்திருந்தது. அந்தப் பகுதிக்கு நான் முதலில் சென்றபோது, அவர்களின் வீட்டைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், நான் போக வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். அதனால், கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், நான் கூகுள் செயலியின் உதவியை நாடினேன்.
 துரதிர்ஷ்டவசமாக, அது நம்மை எங்கே அழைத்துச் செல்கிறது என்று கூகுள் செயலிக்குக் கூட சில நேரங்களில் தெரியாது. அதனால் நான் தவறாக வழிநடத்தப்பட்டேன் என்பதை உணர்ந்தேன். வீட்டைக் கண்டுபிடிக்க நான் மற்றவர்களின் உதவியை நாடி, கடைசியில் அவர்கள் வீட்டை அடைந்து, கதவைத் தட்டினேன்.  கதவைத் திறந்த சுப்பராயன், ‘யார் அங்கே?’ என்று விசாரித்துக் கொண்டே கதவைத் திறந்தார். உண்மையில், அவருக்கு என்னைத் தெரிய வாய்ப்பில்லை. ஒரு வாரத்திற்கு முன்பு வரை, அவர் யார் என்று எனக்கும் தெரியாது.அந்த சுப்பராயன் யார் என்று கண்டுபிடிக்க நாம் ஆறு மாதங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். அலுவல்கள் காரணமாக வெவ்வேறு மாநிலங்களில் வேலை செய்வது கடந்த இருபத்தைந்து வருடங்களாக எனக்குப் பழக்கமாகிவிட்டது. ஆறு மாதத்திற்கு முன், அலுவலக மாற்றல் காரணமாக லக்னோ சென்றேன். அங்கு சென்றதும் ஒரு தமிழ்க் குடும்பம், எனக்கு அறிமுகமானது.
பொதுவாக நாம் வேறு மாநிலத்தில் இருக்கும்போது நம் மொழியைக் கேட்டாலே மகிழ்ச்சியாக இருக்கும். மற்றவர்கள் நம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் இன்னும் மகிழ்ச்சிதான். அவர்கள் நம் ஊரைச் சேர்ந்தவராக இருந்தால் அந்த மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. என் நிலைமையும் அப்படித்தான் இருந்தது. அறிமுகமான தமிழ் மக்கள் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள். அதனால், ஓராண்டுக்குப் பிறகு நான் எனது சொந்த ஊருக்குச் செல்லும்போது, அந்தக் குடும்பம், சுப்பராயனுக்கான சில பொருட்களை என்னிடம் கொடுத்து அனுப்பினார்கள். இதன் காரணமாக இப்போது நான் சுப்பராயன் வீட்டுக் கதவைத் தட்டுகிறேன்.
என் பெயரையும் விவரத்தையும் சொன்னதும், சுப்பராயனின் முகம் அற்புதமாக மலர்ந்தது. அவர் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று எனக்கு அப்போது புரியவில்லை. கொரோனா ஆரம்பித்து இந்த இரண்டு வருடங்களில் அவர்களது வீட்டிற்கு வந்து காபி குடித்த முதல் நபர் நான்தான் என்பதுதான் அவரது மகிழ்ச்சிக்குக் காரணம் என்று பிறகுதான் தெரிந்தது. உறவினர்களை, நண்பர்களைப் பார்க்க அவர்கள் எவ்வளவு ஆசைப்படுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது.
உண்மைதான், கொரோனா மனிதர்களின் வாழ்க்கை முறையை முழுமையாக மாற்றிவிட்டது. பொதுவாக, உறவுகளை, சமூக இடைவெளி என்ற பெயரில் முற்றிலும் பிரித்து விட்டது. சுப்பராயனுடன் பேசிக்கொண்டே இருந்ததில் ஒரு மணி நேரம் கழிந்ததே தெரியவில்லை. அந்த விவாதத்தில் நிறைய விவரங்கள் அறிந்தேன். வெளியூர்களில் இருந்து பயணத்தைத் தொடங்கி, வேலை வாய்ப்பு என்ற பெயரில் பல இடங்களுக்குச் சென்று, உறவினர்களையெல்லாம் விட்டு விலகி, சொந்த ஊரைவிட்டு விலகி, குழந்தைகள் நலனை முதன்மையாகக் கருதி, அவர்களுக்காக, சுப்பராயன், சகல வசதிகளுடன் கூடிய பிரமாண்ட வீட்டைக் கட்டி இருக்கின்றார்.
சிறிது காலத்தில், அவரது மகன் நன்றாகப் படித்து, ஆஸ்திரேலியாவில் படிக்கச் சென்று, அங்கேயே திருமணம் செய்து செட்டில் ஆனான். மகளையும் நன்றாகப் படிக்க வைத்து நல்ல நிலையில் உள்ள பையனுக்குத் திருமணம் செய்து வைத்தார். லக்னோவில் என்னைச் சந்தித்த ஒரே ஒரு தமிழ்க் குடும்பம் அந்தப் பையன். பிள்ளைகள் விருப்பப்படி வளர்ந்தாலும், மகன் வேறு நாட்டிலும், மகள் வேறு மாநிலத்திலும் குடியேறியதால், சுப்பராயனும், அவர் மனைவியும் தனித்து விடப்பட்டனர். கிராமப்புறங்களிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், அக்கறையுள்ள உறவினர்கள் கூட இல்லாமல் போய்விட்டனர்.
சுப்பராயன் என்னுடன் பேசிக்கொண்டும், அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டும் இருந்தபோது, என் எதிர்காலம் என் கண்முன்னே தோன்றியது. எந்தப் பெற்றோர்கள்தான் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படித்து வளரவேண்டும் என்று விரும்ப மாட்டார்கள்? ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் சிறகுகளை அசைத்து பறந்து சென்றால், கூடு மட்டும் சிறியதாக இருக்கும்!
இப்போது எல்லா வீடுகளிலும் நடக்கும் கதை இது. ஆனால், அப்படி இருக்கக் கூடாது என்றால் என்ன செய்வது? சுப்பராயனின் துயரம் அவர் வார்த்தைகளில் தெரிந்தது. கொரோனா வந்ததும், கூட்டம் எல்லாம் போய்விட்டது. இப்போதுள்ள உடல்நலக் குறைவால் அவர்கள் வெளியே செல்லத் துணிவதில்லை. நாள் முழுவதும் வீட்டில் உட்கார்ந்து பொழுது போக்கும் நிலை. அதோடு, தனிமையின் துன்பமும் வாட்டி வதைக்கிறது.
குழந்தைகள், வாரந்தோறும் போனில் அழைத்தாலும் அந்த சந்தோஷமான பத்து நிமிடங்கள், ஒரு கணம் மட்டுமே இருக்கும். மீண்டும் அவர்கள் அழைப்பிற்கு ஏங்கி காத்திருக்க வேண்டிய நிலை. முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு முறையாவது ஊர் வந்து முகத்தைக் காட்டுவார்கள். இப்போது அவர்கள் கொரோனாவினை காரணமாகக் காட்டி, வருவதில்லை. இந்நிலை தொடர்ந்தால், வயதான பெற்றோரின் நிலை என்னவாகும் என நான் கவலைப்பட்டேன். என் குழந்தைகள் இன்னும் இளமையாக இருக்கிறார்கள், ஆனால், வரவிருக்கும் நாட்களை கற்பனை செய்து பார்க்க மிகவும் கடினமாக இருந்தது.
வெளியே இடி மின்னலுடன், வானிலை மேலும் பயங்கரமாக மாறியது. அப்படியே சுப்பராயனிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வரும் தருணத்தில், என்னிடம் இருந்த, அவர்களின் மருமகன் கொடுத்து அனுப்பிய பை நினைவிற்கு வர, அந்த பையினை எடுத்து அவரிடம் கொடுத்தேன். என் கண்முன்னே அவர் அந்தப் பையினைத் திறந்து பார்த்தார். அவற்றில் லக்னோவின் பிரபலமான பைஜாமா சுப்பராயனுக்கும், அவரது மனைவிக்கான புடவையும் இருந்தன.
ஒரு கணம் என் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. லக்னோவில் நான் சந்தித்த குடும்பம் பெரியவர்களை மிகவும் மதிக்கிறது என்பதை அறிந்து, அந்த மரியாதையை என் கைகளால் வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். லக்னோவில் சந்தித்த அந்த ஜோடிக்கு, மனமார்ந்த நன்றிகளை மனதில் தெரிவித்துக் கொண்டேன்.
அந்தப் பொருட்களுடன் ஒரு கடிதமும் இருந்தது. நான் அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் ஈடுபடக்கூடாது என்று உணர்ந்து, வெளியேறுகிறேன் என்று சொன்னேன். ‘ஒரு நிமிஷம்’ என்று சொல்லிவிட்டு சுப்பராயன் அந்த கடிதத்தை என்முன்னே படிக்க ஆரம்பித்தார்.
‘‘மாமா, உங்க வீட்டுக்கு வந்தவர்களிடம் மரியாதைக்காக துணிகளை அனுப்பியிருக்கிறேன். நான் முன்னாடியே கேட்டது போல அந்த பத்து லட்ச ரூபாயை உடனே அனுப்பினால் நல்லது. உங்களிடம் எத்தனை லட்சம் இருந்தாலும், அந்த பணத்தினால் உங்களுக்கு எந்த பயனும் கிடையாது. உங்கள் மகனும் இந்தியாவுக்கு வரவே மாட்டான். அதனால்அந்தப் பணத்தை உடனே எனக்கு அனுப்புதல் நன்று...’’நான் பேச்சற்று நின்றேன்.
- என்.டி.எஸ்.வி.நாகேஸ்வர ராவ்
|