இலக்கிய மேடையாக மாறிய மணமேடை!
சுந்தரி சீரியல் வசனகர்த்தாவின் திருமண விழா கலகலப்பு
ஒமிக்ரான் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட சென்னை புத்தகத் திருவிழா, பிப்ரவரி 16ம் தேதி தொடங்கியுள்ளது. புத்தக வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்கள் திருவிழாக் கொண்டாட்டம்தான். பல்வேறு பதிப்பாளர்களும் புதிய நூல்கள் வெளியிடுவதில் தீவிரமாக உள்ளனர்.
 இந்த நிலையில் ரெ.விஜயலெட்சுமி எழுதி ‘சுவடு பதிப்பகம்’ வெளியிட்டுள்ள, 50 நாவல்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகள் கொண்ட ‘வாசிப்பின் வாசல்’ என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு, நூலாசிரியர் ரெ.விஜயலெட்சுமி - வி.ராம் ஆகியோரது திருமண மேடையிலேயே நடைபெற்றது! இது தமிழ் இலக்கியச் சூழலில் புதுமையானதாக அமைந்தது.  ‘தாழ்வாரம்’ இலக்கிய அமைப்பின் நிறுவனர் பாரதி மோகன் நூலை வெளியிட, எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அமிர்தம் சூர்யா நூலைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அதில் ‘எழுத்தாளனுக்கான அங்கீகாரம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். அந்த வகையில் மணமக்கள் தங்கள் இலக்கியப் பயணத்தை இல்லற வாழ்வுடன் இணைத்தே தொடங்கியிருப்பது மகிழ்ச்சியான ஒன்று’ என்று அமிர்தம் சூர்யா தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.
புத்தக வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவரான ரெ.விஜயலெட்சுமி, ‘தேன்கூடு’ என்ற யுடியூப் சேனல் வழியாகவும், ‘நுழைபுலம் இலக்கிய அமைப்பின்’ வழியாகவும் புத்தக அறிமுக உரைகள் நிகழ்த்தி வருகிறார். மேடை நாடகக் கலைஞர், திரைக் கலைஞர், குறும்படம் மற்றும் விளம்பரப்பட இயக்குநர், வசனகர்த்தா என பன்முகத் திறனரான விஜயலெட்சுமி, சன் டிவியில் வெற்றி நடைபோடும் ‘சுந்தரி’ நெடுந்தொடருக்கு வசனப் பங்களிப்பு செய்து வருகிறார். மணமகன் வி.ஸ்ரீராமும் ஓர் எழுத்தாளர் என்பதோடு இசைக் கலைஞராகவும் இருக்கிறார்.
தன் திருமணத்தில் புத்தக வெளியீடு குறித்து பகிர்ந்து கொண்ட விஜயலெட்சுமி, “புத்தகத் திருவிழாவில் வெளியிட திட்டமிட்டோம். ஆனால், தள்ளிப் போனது. அதற்கிடையில் எங்கள் திருமண நாள் முடிவு செய்திருந்ததால் திருமண மேடையில் வைத்து வெளியிட முடிவு செய்தோம்.
இதில் அப்பா மற்றும் மற்ற உறவினர்கள் எல்லாம் கலந்து கொண்டார்கள். புத்தகத் திருவிழாவில் வெளியிடும்போது வாசிப்பாளர்களுக்கு மட்டுமே தெரியும். வாசிப்பைத் தாண்டி மற்றவர்களிடத்திலும் வாசிப்பை சேர்க்க வேண்டியிருக்கிறது. வாசிப்பு இந்த சமூக மேம்பாட்டிற்கு எப்படி அவசியமாக இருக்கிறது என்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
எனவே, வாசிப்பு பழக்கம் இல்லாதவர்களிடத்திலும் வாசிப்பை அறிமுகப்படுத்த எங்கள் திருமண மேடையை பயன்படுத்திக் கொண்டோம். இந்த நூலும் அதைத்தான் செய்கிறது. ஒரு நூலில் 50 நூல்கள் வாசிக்கும் அனுபவத்தைக் கொடுக்கும்...” என்றார்.
அன்னம் அரசு
|