அரண்மனை குடும்பம்-6
திகைத்த முகத்தோடு நின்ற கணேசனை சற்று புன்னகையோடு பார்த்த டாக்டர் வெங்ட்ராவ், “என்ன கணேசன்... உங்க மகள் மேல எனக்கிருக்கற நம்பிக்கையும் அபிப்ராயமும் உங்களுக்கு இல்லையா? நல்லா அவளைப் பாருங்க... இந்தக் குழந்தை ரத்த வாந்தி எடுக்கற குழந்தைன்னா யாராவது நம்புவாங்களா? இவ ஒரு ‘ஹெமடமிசஸ்’னா... அதாவது ரத்த வாந்தி எடுக்கற குழந்தையா இருந்தா... இங்க இப்படி இவ்வளவு எனர்ஜெடிக்கா விளையாடல்லாம் முடியாது!” என்றார்.
 “அஃப்கோர்ஸ் டாக்டர்... எனக்குள்ளயும் அந்த ஆச்சரியம் இப்ப இருக்கு. ஆனா, இப்பதான் இப்படி இருக்கா! காலைல கூட டல்லா சிக்கியாதான் இருந்தா...”
“அதான் நம்ப பூபால்தாஸ் சாமி மருந்து கொடுத்துருக்காரே... அப்ப அது தன் வேலைய காட்டும்தானே?” “இப்ப இங்க வந்துட்டு போன சாமியார் பேர் பூபால்தாஸா?” “ஆமாம்... பூபால்தாஸ் எம்.பி.பி.எஸ். எம்.டி! இன்னும் என்னவெல்லாமோ படிச்சவர். யு நோ டச் தெரபி..?”
“டச் தெரபியா... அப்படின்னா?” “பார்வையாலயும், கைவிரல்களால உடம்புல உள்ள வர்மப்புள்ளிகளைத் தொட்டும் குணப்படுத்தற முறை... அதுல உலகத்துலயே சாமிதான் நம்பர் ஒன்!”“நான் கேள்விகூடப் பட்டதில்ல டாக்டர்...”“இப்ப தெரிஞ்சிக்குங்க... டச் தெரபியால நீங்க உங்களுக்கும் ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம். அந்த விஷயத்துல சாமிதான் எனக்கு குரு... சொல்லப்போனா சாமி அதுல மாஸ்டர்...” “அப்படின்னா உங்களுக்கு இப்ப டச் தெரபியும் தெரியுமா?”“நல்லாவே தெரியும். தொடக்கத்துல சாமியை நானும் பெருசா நினைக்கல. அவரை டூப்ளிகேட் சாமியார் லிஸ்ட்லதான் வெச்சிருந்தேன்!
ஆனா, நான் முடியாதுன்னு கை விட்ட ஒரு கேஸை சாமி க்யூர் பண்ணிக் காட்டவும் ரொம்ப ஆச்சரியப்பட்டேன். ஒரு டாக்டரா நான் அப்ப என்னையே வெறுத்தேன். அவர் எதை வெச்சு அந்த கேஸை க்யூர் பண்ணாருன்னு தெரிஞ்சிக்கறதுக்காக அந்த சேட் எஸ்டேட்டுக்கு போய் சாமிகிட்ட பேசினேன். ‘அது என்ன மருந்து சாமி’ன்னும் கேட்டேன். ‘நான்தான் அந்த மருந்து’ன்னு சொன்னார்... அதாவது தன் மூலமா நல்ல அதிர்வுகளை நாடிவழியா, ஓர் உடம்புக்குள்ள செலுத்தி குணப்படுத்தற ஒரு முறைதான் டச் தெரபி!’’
“என்னென்னவோ சொல்றீங்க டாக்டர். இப்படியெல்லாம் சுலபமா குணப்படுத்த முடியும்னா எதுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பு? அதுக்காக எதுக்கு நீட் எக்ஸாம் எல்லாம் எழுதணும்..?” “அஃப்கோர்ஸ்... எல்லாருக்கும் டச் தெரபி வசப்பட்டுட்டா இந்த படிப்பு தேவையே படாதுன்னு கூட சொல்வேன் நான். ஆனா, ஒரு பரீட்சைல எல்லாருமா நூத்துக்கு நூறை அப்படியே வாங்கிடறாங்க? சிலர்தானே வாங்கறாங்க... அந்த மாதிரிதான் இந்த டச் தெரபியில ஒருத்தர் மாஸ்டர் ஆகறதும்..!
காலைல மூணு மணிக்கு எழுந்திரிக்கணும். குளிச்சுட்டு சாலிடா இரண்டு மணி நேரம் மனசை அடக்கி தியானம் பண்ணணும். சரியான நேரத்துக்கு சரியான உணவை மென்று விழுங்கி சாப்பிடணும். மனசுல நெகட்டிவான எண்ணங்களே கூடாது. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கப் போயிடணும். இப்படி இந்தப் பயிற்சிக்கு அடிப்படையா பல விஷயங்கள் இருக்கு. இதுபோக தாவரங்களைப் பற்றிய அறிவு, உணவுகளைப் பற்றிய விழிப்புணர்வுன்னு நிறைய இருக்கு கணேசன்...
இதை எல்லாம் ஒருத்தர் தொடர்ந்து செய்தா அஞ்சு வருஷத்துல அவர் ஒரு நல்ல தெரபிஸ்டா மாறலாம். வருஷங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவருடைய பார்வைக்குக் கூட ஒரு சக்தி வந்துடும்.
இந்த விஷயத்துல பூபால்தாஸ் சாமிக்கு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு கால அனுபவம்! இப்பவும் தொடக்க நிலைல இருக்கற ஒரு கேன்சர் பேஷண்டை சாமி ஒரு நாலு தடவை தொட்டு ட்ரீட் பண்ணா போதும்... அந்த பேஷண்டோட கேன்சர் கரைஞ்சு உருகி காணாமப் போயிடும்... எவ்வளவோ பேருக்கு அப்படி போயுமிருக்கு!’’டாக்டர் வெங்கட்ராவ் சொன்ன தகவல்கள் கணேசனை மேற்கொண்டு எந்த கேள்வியையும் அப்போதைக்கு கேட்க முடியாதபடி செய்து விட்டன.
அவ்வேளை குழந்தை தியாவும் களைப்பே இன்றி விளையாடியபடியே இருந்தாள். ரத்திக்கும் டாக்டர் சொன்ன தகவல்களால் ஒரு புத்துணர்ச்சி. இருந்தும் ஒரு சந்தேகம்...“டாக்டர் சார்... என் மகள் இனி எப்போதும் இப்படியே இருப்பாதானே... திரும்ப ரத்த வாந்தி எடுக்கமாட்டா தானே?” என்று தன் சந்தேகத்தை கேள்வியாக்கினாள்.
“அதை என்னால இப்ப சொல்ல முடியாதும்மா... எங்க படிப்பும் ஒண்ணும் லேசானதில்லை. எங்க ஆராய்ச்சிகள்ல எவ்வளவோ கண்டுபிடிச்சிருக்கோம். அறுவை சிகிச்சைதான் தீர்வுன்னு ஆயிட்ட கேஸ்களுக்கு எங்க ட்ரீட்மென்ட்தான் ரொம்ப சரி. அதன்படி பார்த்தா குழந்தைக்கு ஆபரேட் பண்ண வேண்டிய தேவை இருக்கறதா இப்ப எனக்குத் தெரியல. சாமிகிட்ட குழந்தையை தினமும் கூட்டிக்கிட்டு போய் காட்டுங்க. ஒரு தடவை காட்டினதுக்கே இவ்வளவு எனர்ஜின்னா, அடுத்தடுத்து அது பலமடங்கு அதிகமாகும். குழந்தை பூரணமா குணமாயிடுவான்னுதான் நான் நினைக்கறேன்...”டாக்டரின் பதில் கணேசனை அப்போதைக்கு சில கேள்விகளைக் கேட்கச் செய்தது.
“டாக்டர்... உங்களுக்கும்தான் டச் தெரபி தெரியுமே..? அதை நீங்களே செய்யலாமே... எதுக்கு நாங்க அவர்கிட்ட போகணும்?” பதிலுக்கு சிரித்தார் டாக்டர் வெங்கட்ராவ்! “என்ன டாக்டர் சிரிக்கிறீங்க?”
“உங்களுக்கு அவர்மேல இன்னும் நம்பிக்கை வரலைன்னு நினைக்கறேன்...” “உண்மைய சொன்னா அதுதான் டாக்டர் நிஜம்...” “நான் இவ்வளவு சொன்னதுக்குப் பிறகுமா?”
“இல்ல... இப்ப நான் அவரைப் பத்தி யோசிக்கத் தொடங்கியிருக்கேன். அதேசமயம் ஒரு சாமியார், அவர் கால்ல விழுந்து கும்புட்றத எல்லாம் என்னால நினைச்சுப் பார்க்கவே முடியல...” “என்ன இருந்தாலும் எல்லாரையும் அடக்கியாண்ட ராஜ பரம்பரைல வந்தவர் இல்லையா நீங்க... அப்படித்தான் பேசுவீங்க...”டாக்டரின் பதில் முதுகின் மேல் ஒரு தீக்குச்சியால் அவர் உரசியது போல் ஒரு உணர்வை அவனிடம் உண்டாக்கியது. அது அவன் முகம் போன போக்கிலும் தெரியத் தொடங்கியது.
“டாக்டர்... நான் நீங்க நினைக்கற மாதிரி ஆணவமாகவோ இல்ல அலட்சியமாகவோல்லாம் பேசல... நாட்டுல நடக்கற நடப்புகளால் நொந்துபோய்தான் நான் பேசறேன். குறி சொல்றேன், ஜோசியம் சொல்றேன், யாகம் பண்றேன்னு இங்கதான் எவ்வளவு போலிங்க..?”“அதனாலதான் மிஸ்டர் கணேசன் நான் கூட இந்த சாமிய தொடக்கத்துல பெருசா நினைக்கல. ஆனா, உண்மை எப்பவும் உண்மைதானே? போகப்போகத் தான் புரிஞ்சிக்கிட்டேன். நீங்களும் புரிஞ்சிப்பீங்க.
சாமி இங்க கூப்பிடு தூரத்துல இருக்கும் போது நான் சிகிச்சை தர விரும்பல. அவர் முன்னால நானொரு கத்துக்குட்டி. நீங்க இன்னும் ஒரு நாலு நாள் அவர்கிட்டயே குழந்தையை கொண்டு விடுங்க.அஞ்சாவது நாள் ஒரு பிளட்டெஸ்ட், ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பார்ப்போம். அப்ப தெரியும் நான் இப்ப சொன்னதோட மதிப்பு...”‘‘அப்ப மாத்திரை மருந்து..?”“உங்க திருப்திக்காக வேணும்னா இப்ப கொடுக்கறதையே கொடுங்க.
டாக்டர் சங்கர நாராயணன் சரியான மருந்தைத்தான் கொடுத்திருக்கார். ஆனா, அதெல்லாம் தேவைப்படாது. குழந்தை திரும்ப ரத்தவாந்தி எடுத்தாலோ, இல்ல சுருண்டு படுத்தாலோதானே உங்களுக்கு மருந்து தேவைப்படும்..?எனக்கென்னவோ குழந்தை இனி இப்படியே உற்சாகமா இருப்பான்னுதான் தோணுது. அவளோட சர்வ நாடிகளையும் சாமி சரியா துடிக்கச் செய்துட்டாரு. அதேபோல கபாலத்தையும் தட்டி விட்டுட்டார். ஓஜஸ்ங்கற சுரோணித சக்தியையும் சாமி உசுப்பி விட்டிருக்கார். அதனாலதான் அவகிட்ட புறா மாதிரி பறவைகள் பயமில்லாமல் கிட்ட வந்தது. இனியும் வரும்!’’டாக்டர் வெங்கட்ராவ் சொல்லிக் கொண்டே போனார். கணேசன் பிரமித்தானோ இல்லையோ ரத்தி பிரமிப்பின் உச்சிக்கே போய்விட்டாள்!
ராஜ விலாசம் என்கிற அந்த பங்களாவின் இரும்பு வேல்கம்பு கிராதி கேட் ரிமோட் கன்ட்ரோலால், தானாகத் திறந்து கொண்ட நிலையில் ஒன்றுக்கு நான்கு படகு கார்கள் உள் நுழைந்தன.
பங்களா முகப்பில் ஒரு பெரிய தோட்டம். தோட்ட நடுவில் கார் செல்வதற்கான டைல்ஸ் வேய்ந்த பாதை... அந்த பாதைக்குள் ஊடுருவிய கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக பக்கவாட்டு போகன் வில்லா நிழலில் தேங்கி நின்றன.தரையெங்கும் போகன் வில்லா உதிர்த்திருக்கும் காகிதப் பூக்கள். காருக்குள் இருந்து மிடுக்கோடு பலர் இறங்கினார்கள்.
அவர்களில் குறிப்பிடப்பட வேண்டியவர் எம்.பி. அருணாசலம்! வெள்ளை வேட்டி சட்டை என்கிற அரசியல்வாதிக்கான அக்மார்க் உடையோடு கட்சிக் கொடியின் வண்ணத்தில் கையில் இரண்டு பவுனில் மோதிரத்தோடு அவர்தான் முன்னால் நடந்தார். அவரை மற்றவர்கள் தொடர்ந்தனர்.
அருணாசலத்தின் தாத்தா கனகசபை ஒரு காலத்தில் ராஜவிலாசத்தில் வசிக்கும் அரண்மனைக் குடும்பத்தின் கார்வாராக பணியாற்றியவர். பின்னர் அப்பா நடராஜன் அரண்மனைக் குடும்பத்து பெரியவர் மகாதேவ ராஜாவால் அரசியலுக்கு வந்தவர். சட்டசபைக்குள்ளேயும், பார்லிமெண்ட்டிலும் தன் சார்பில் ஒருவர் இருப்பதுதான் வருங்காலத்திற்கு நல்லது என்று உணர்ந்து, தனக்கு எல்லா விதத்திலும் தலையாட்டும் நடராஜனை எம்.எல்.ஏ ஆக்கி அழகு பார்த்தவர் மகாதேவ ராஜா.பதிலுக்கு நடராஜனும் அரண்மனைக் குடும்பத்திற்கு எவ்வளவு விசுவாசம் காட்ட முடியுமோ அவ்வளவு காட்டினார். அவர் வாரிசான அருணாசலமும் இப்போது அப்பா வழியிலேயே விசுவாசத்தோடு இன்று கூட பிறந்த நாளைக்கு ஆசி வாங்கத்தான் வந்திருக்கிறார்.கார்களை சற்று தொலைவில் நிறுத்திவிட்டு இறங்கி பதவிசாக நடந்து வரும் அருணாசலத்தை இப்போதைய அரண்மனைக் குடும்ப பிதாமகரான கைலாசராஜாவும் மேலே பால்கனி சாளரம் வழியாகப் பார்த்து விட்டு கீழிறங்கி வரலானார்.
அருணாசலம் சும்மா வரவில்லை. தட்டுத்தட்டாக, கூடை கூடையாக மாம்பழங்கள், ஆப்பிள், முந்திரி, அன்னாசி என்கிற தங்கள் தோட்டத்து விளைச்சலைச் சுமந்துகொண்டுதான் வந்தார். மாம்பழம் மல்லூர் பக்கமாக தோப்பில் விளைந்தது. ஆப்பிள் ஏற்காடு எஸ்டேட்டில் விசேஷமாக வளர்க்கப்பட்டது. முந்திரி பண்ருட்டியை ஒட்டி வாங்கிப்போட்ட தோப்பிலும், அன்னாசி கொல்லி மலை எஸ்டேட்டிலும் விளைந்ததாகும்.
தட்டுகளையும், கூடைகளையும் பார்த்த உடனேயே அருணாசலத்தின் சொத்துக்கள்தான் கைலாசராஜாவுக்கு புலனானது.அருணாசலத்துக்கும் தன் பவிசைக் காட்டிக் கொள்ளும் ஆர்வமுண்டு.பங்களாவின் யூனிஃபார்ம் அணிந்த வேலைக்காரர்கள் பணிந்து ஒதுங்கி நின்றிட, அருணாசலம் ஹால் மையத்தில் தட்டுகளையும், கூடைகளையும் வைத்து விட்டு நின்ற விதமே அலாதியாகத்தான் இருந்தது.
கைலாச ராஜாவும் சகலத்தையும் பார்த்தபடியே “வாய்யா அருணாசலம்... வா!” என்றார் கெத்தாக. அவர் குரல், அவர் மனைவி கஸ்தூரி, அம்மா மங்களவல்லி, மகள் அமிர்தவர்ஷினி, மச்சினன் குலசேகர ராஜா, அவர் மகள் மஞ்சுளா என்று சகலரையும் ஹாலுக்கு வரவழைத்து விட்டது. அருணாசலமும் பெரிதாக ஒரு கும்பிடு எல்லோரையும் பார்த்து போட்டார்.
“முதல்ல உக்காருய்யா... என்ன விசேஷம் இன்னிக்கு? இப்படி தோட்டத்தையே கூடைல அள்ளிப் போட்டுட்டு வந்துருக்கே?” என்று கேட்டபடியே அவரும் சோபாவில் அமர்ந்தார். “அய்யா... இன்னிக்கு பேப்பர் பாக்கலீங்களா?” அருணாசலமும் கேட்டுக் கொண்டே அமர்ந்தார். அவர் உதவியாளரும், உடன் வந்தவர்களும் நின்றபடியேதானிருந்தனர். “பேப்பர்ல என்ன செய்தி... பாக்கலியே..?”
“போகட்டும்... இன்னிக்கு என் பிறந்த நாளுங்க! அதான் உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு போக வந்தேன்...”“அப்படியா சங்கதி... அட ஆமால்ல... ஊர் பூரா உன் போஸ்டரக் கூட பாத்தேனே... அது இதுக்குதானா?”“ஆமாங்கய்யா... நான் வேணாம்னாலும் தொண்டர்கள் கேக்கமாட்டேங்கறாங்க... நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது...”“இதில் தப்பா எடுத்துக்க என்ன இருக்கு... அரசியல்னாலே இதெல்லாம் இருந்தாத்தானே இன்னிக்கு அரசியல்வாதி..?
எது எப்படியோ... உங்கப்பா போலவே இந்த அரண்மனைக் குடும்பம் மேல விசுவாசம் கொஞ்சமும் குறையாம நீ இருக்கே. அது போதும் எனக்கு...அப்புறம் நானே உன் கூட ஒருசில விஷயம் பேசணும்னு இருந்தேன். இப்ப நம்ம சேலம் ஏர்போர்ட்டுக்கு தினசரி ஒரு ஃப்ளைட்தான் வந்து போகுது. நம்ப குடும்பம் சார்பா ஒரு ஃபளைட்டை வாங்கி மும்பைக்கு விட்டா என்னன்னு எனக்குள்ள இப்ப ஒரு எண்ணம். நீ என்ன சொல்றே?”
“விடலாங்கய்யா... நான் நம்ம விமானப்போக்குவரத்து அமைச்சர்கிட்ட உங்க விருப்பத்த சொல்லி என்ன செய்யணுமோ செய்துடறேன்...”“பேசிட்டு சொல்லு... நீ இருக்கும்போதே இதையெல்லாம் நான் பண்ணிக்க விரும்பறேன்...”“அய்யா... குறைஞ்சது இன்னும் பத்து வருஷத்துக்கு நான் இருப்பேங்க.
எனக்கு தாங்க சீட்..! மையத்துல யார் வந்தாலும் நம்ம தொகுதியில நான் ஜெயிச்சிடுவேங்க. அதுக்கு எதை எப்படி செய்யணும்னு எனக்கு நல்லா தெரியுங்க...”“பார்றா... நல்லா திடமாத்தான் இருக்கேன்னு சொல்லு...”“ஆமாங்கய்யா... அய்யாவும் குடும்பமும் எப்பவும் எனக்கு துணையா நின்னா போதுங்க... ஆனா..?”“என்ன ஆனா? அதுல என்ன உனக்கு சந்தேகம்?” கைலாச ராஜா அப்படி கேட்கவும் அருணாசலத்திடம் ஒரு சின்ன தடுமாற்றம்... தயக்கம்...“என்ன அருணாசலம் யோசனை... திடீர்னு ஏன் உனக்கு இப்படி ஒரு சந்தேகம்?’’கைலாசராஜா சற்று அழுத்தம் கொடுத்து கேட்கவும் அருணாசலத்திடம் அதற்கு பதில்.“அய்யா... நம்ம சின்னவர் கணேசன் நம்ம தொகுதி சார்பா நிக்கப் போறாருன்னு என் காதுல விழுந்திச்சுங்க... எனக்கு ஒரே ஆச்சரியம்... இந்த அரசியல் சாக்கடைல இவர் எதுக்கு இறங்கறாருன்னு...”அருணாசலம் அப்படிச் சொல்லவுமே கைலாசராஜா முகத்திலும் ஓர் ஆச்சரிய அதிர்வு!
(தொடரும்)
சர்ப்ப சாபம் என்கிற ஒரு விஷயம் காதில் விழவுமே, திரு அசோகமித்திரன் அதை ஒரு வகை மனப் பேதலிப்பு என்றே முதலில் கருதினார். இந்த வார்த்தையை முதலில் உச்சரிப்பவர்கள் ஜோதிடர்களாகவே இருந்தனர். அடுத்து அந்த ஜோதிடர்களை நம்புகின்ற சில தீவிர வேதம் படித்த வேதியர்கள் இந்த சர்ப்ப சாபம் என்கிற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகின்றவர்களாக இருப்பது தெரியவந்தது.
ஒரு பாம்புக்கு இருப்பது எல்லா உயிரினத்துக்கும் இருப்பது போன்ற ‘பசி உணர்வு, காம உணர்வு, வலி உணர்வு’ என்கிற மூன்று மாத்திரமே. சாபமிடவேண்டும் என்றால் எண்ணிப்பார்க்கும் மனம் என்கிற ஒன்று வேண்டும். மனம் அமைந்திட ஆறறிவு வேண்டும். ஆறறிவில் ஓரறிவு குறைந்த ஐந்தறிவுடைய யானை போன்ற ஜீவன்களுக்குக் கூட மன அமைப்பு இருக்க வாய்ப்பில்லை.அப்படி இருக்க ஒரு பாம்பு எப்படி தன்னை அழித்து விட நினைப்பவனுக்கோ, இல்லை அழித்து விட்டவனுக்கோ சாபமிட முடியும்?
எனவே, இந்த சர்ப்ப சாபம் என்பதே ஒரு கற்பனையான விஷயம் என்றே கருதவேண்டியிருந்தது. சர்ப்ப சாபம் உண்மையென்றால் தங்கள் அன்றாட உணவில் ஓர் உணவாக பாம்பை உட்கொள்ளும் சீனர்களும் அந்த தேசமும் எப்படி இன்று நம்மையும் விஞ்சிய ஒரு நாடாக வளர்ந்திருக்க முடியும்? இப்படி பல கேள்விகள் திரு அசோகமித்திரனுக்குள் எழும்பின. அதை வேதத்தில் கரை கண்டவரான சந்திரமௌலீஸ்வர கனபாடிகள் என்பவரிடம் கேட்கவும் செய்தார். கனபாடிகளும் அதற்கு விஸ்தாரமாகவே பதில் கூறத் தொடங்கினார். அந்த பதில்..?
இந்திரா செளந்தர்ராஜன்
ஓவியம்: வெங்கி
|