COFFEE TABLE
வாராவாரம் சாதனை வாரம்!
‘‘2021ம் வருடத்தில் அதிக உலக சாதனைகளைப் படைத்தவர்...’’ என்ற புதிய கின்னஸ் சாதனையைத் தன்வசமாக்கியிருக்கிறார் டேவிட் ரஷ். அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தைச் சேர்ந்த இவர் எழுத்தாளர், பேச்சாளர், பொழுதுபோக்காளர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட ஓர் ஆளுமையாகத் திகழ்கிறார். ‘ஒரு நிமிடத்தில் வாயின் மூலம் அதிக ஆப்பிள்களை வீசியவர்; பிடித்தவர்’, ‘அதிக நேரம் பலூனை முகத்தின் மேல் நிறுத்தி வைத்தவர்’, ‘30 நொடியில் அதிகமான டி-ஷர்ட்டுகளை அணிந்தவர்’, ‘ஒரு நிமிடத்தில் எலெக்ட்ரிக் யுனிசைக்கிளில் அதிக தூரம் சென்றவர்’, ‘மூன்று நிமிடங்களில் ராட்சத பந்தை அதிக தொலைவுக்கு வீசியவர்’ என கடந்த வருடத்தில் மட்டும் 52 சாதனைகளை முறியடித்திருக்கிறார் டேவிட்.
 வாரம் ஒரு சாதனை என்ற வீதம் இந்த அசாத்தியத்தை நிகழ்த்தியிருக்கிறார். 2015லிருந்து உலக சாதனைகளை நிகழ்த்தி வரும் டேவிட்டின் புரொஃபைலில் இப்போது 150 சாதனைகள் சேர்ந்துவிட்டன. 2022ல் இன்னும் அதிகமான உலக சாதனைகளைப் படைக்கப்போவதாக கட்டை விரலை உயர்த்திக்காட்டி சவால் விட்டிருக்கிறார் டேவிட்.
 அரசின் திட்டத்திற்கு நிலம் வழங்கிய அடூர்!
புகழ்பெற்ற மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் தன் நிலத்தின் ஒரு பகுதியை அரசின் லைஃப் மிஷன் என்கிற இலவச வீட்டுமனைத் திட்டத்திற்கு தானமாகத் தந்துள்ளார். சமீபத்தில் கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.வி.கோவிந்தன், வசதி படைத்தவர்கள் கூடுதல் நிலம் இருந்தால் இந்தத் திட்டத்துக்காக தங்கள் நிலத்தை பகிர்ந்தளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். ஏற்கனவே கேரள அரசு இதற்காக, ‘மனசோதித்திரி மண்ணு’ என்ற பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.
 இந்நிலையில் அடூர் அருகேயுள்ள துவாயூரில் தன்னுடைய 13.5 சென்ட் நிலத்தை இத்திட்டத்திற்காக வழங்கினார் அடூர் கோபாலகிருஷ்ணன். இதனை அறிந்ததும் அமைச்சர் எம்.வி.கோவிந்தன் திருவனந்தபுரத்திலுள்ள அடூர் கோபாலகிருஷ்ணனின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று நன்றி தெரிவித்தார். அப்போது அடூர், “இது நில தானம் அல்ல. எனது நிலத்தின் ஒரு பகுதியைப் பகிர்ந்தளிக்கிறேன். இது என் கடமை. அவ்வளவே...’’ என எளிமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
 ஐபிஎல் ஏலத்தில் ஷாரூக் மகன், மகள்...
கடந்த வாரம் பெங்களூரில் ஐபிஎல் ஏலம் பரபரப்பாக நடந்தது. இதில் எல்லோர் பார்வையும் இருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளரான நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் மகள் சுஹானா கான் மீதே! காரணம், கடந்த ஆண்டு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் வரை சிறையில் இருந்து பெயிலில் வந்திருந்த ஆர்யன் கலந்துகொண்ட முதல் நிகழ்வு இது என்பதுதான்.
 சுஹானாவும் முதல்முறையாக ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்கிறார். இவர்களுடன் கடந்தமுறை ஆர்யனுடன் கலந்துகொண்ட அணியின் மற்றொரு இணை உரிமையாளரான நடிகை ஜூஹிசாவ்வலாவின் மகள் ஜானவியும் கைகோர்க்க, மூவரும் சேர்ந்திருக்கும் புகைப்படம் சமூகஊடகங்களில் வைரலானது. இதில் ரசிகர்கள் பலரும் ஆர்யன் கான் அணிந்திருந்த பிளேசரை உற்றுநோக்கி, இது ஷாரூக்கானின் பிளேசர்... தந்தையின் கோட்டை அணிந்து பிரகாசிக்கிறார் என ஹார்ட்டின்களை அள்ளி வீசியுள்ளனர்.
உலகை நெகிழவைத்த அமெரிக்க பள்ளியின் வாலிபால் போட்டி!
கலிஃபோர்னியா மாநில கைப்பந்து போட்டியின் செமி ஃபைனல்தான் ஹாட் ஆஃப் த வீக்.பாரடைஸ் பெண்கள் அணிக்கும், ஃபாரஸ்ட் லேக் பெண்கள் அணிக்கும் இப்போட்டி நடைபெற இருந்தது. ஆனால், பெரிய காட்டுத் தீயால் பாரடைஸ் அணி பெண்களின் வீடுகள் எரிந்து சாம்பலாகின. அவர்களால் ஷூ, ஜெர்ஸி கூட உடனடியாக வாங்க முடியாத சூழல். என்றாலும் கடன் வாங்கியாவது டி ஷர்ட்டில் நம்பர், பெயர் எழுதியாவது விளையாடுவது என்று முடிவெடுத்தனர்.
பாரடைஸ் அணி தங்களை எதிர்த்து விளையாட தங்கள் ஊருக்கு வருகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட ஃபாரஸ்ட் லேக் அணி செய்த காரியம்தான் உலகின் பேசு பொருளாகி இருக்கிறது. யெஸ். ஃபாரஸ்ட் லேக் அணியினர் தங்கள் பள்ளி, சோஷியல் மீடியா, Inter school sports federation மற்றும் தங்கள் நண்பர்கள்... என அனைவரிடமும் நிதி வசூலித்தனர். இந்நிலையில் தங்கள் சொந்த சோகத்தை மறைத்தபடி பாரடைஸ் அணியினர் ஃபாரஸ்ட் லேக் குழுவினரின் ஊருக்கு வந்தனர். போட்டிக்கு முன் பயிற்சி பெற அந்த ஊரில் இருக்கும் ஜிம்முக்கு சென்ற பாரடைஸ் அணியினர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
ஆம். 12 புத்தம் புதிய ஜெர்ஸி யுனிஃபார்ம்கள், 12 ஜோடி ஷூக்கள், நீ பேட்... என விளையாடுவதற்குத் தேவையான அனைத்து ஆடை அணிகளும் அந்த ஜிம்மில் அவர்களுக்காகக் காத்திருந்தன! இப்பரிசை அளித்தவர்கள், தாங்கள் எதிர்த்து விளையாடப் போகும் ஃபாரஸ்ட் அணியினர் என்பதை அறிந்து நெகிழ்ந்தனர்.
ஆனாலும் இரு அணிகளுக்கு இடையிலான போட்டி கடுமையாகவே இருந்தது. இறுதியில் ஃபாரஸ்ட் லேக் அணியினர் வென்றனர். போட்டிக்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணுக்கும் $300 ( இந்திய மதிப்பில் ரூ.22,000) gift voucher கொடுக்கப்பட்டது. அது தவிர பள்ளிக்கு $10,000 (ரூ.7,50,000) உதவித் தொகையைக் கொடுத்தனர். ஒரு பள்ளி வாலிபால் மேட்ச்சில் வெளிப்பட்ட இந்த மனிதாபிமான செயலை சர்வதேச விளையாட்டு வீரர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தலைநகர் மாற்றம் தேவையில்லாதது
இந்தோனேசியா நாடு தன் தலைநகரை இப்போதிருக்கும் ஜகார்த்தாவில் இருந்து இடப்பெயர்வு செய்யப்போவதாக அறிவித்திருப்பது பலருக்குத் தெரியும். ஆனால், இதுபோல் தலைநகரங்களை மாற்றிய பல்வேறு நாடுகள் மேலும் பிரச்னையைத்தான் அனுபவித்தன என்கின்றனர் ஆய்வாளர்கள். ஜகார்த்தா தலைநகரை வெள்ளம் சூழ்கிறது, காற்று மாசால் பாதிக்கப் படுகிறது, கடலுக்குள் தாழந்துகொண்டே போகிறது என்றுதான் அதை மாற்ற இந்தோனேசியா அரசு முடிவு செய்தது. ஆனால், ஆய்வாளர்களோ, ‘1900க்கு முன்புவரை 40 தலைநகரங்கள்தான் இருந்தன. இது இன்று 200 வரை இருக்கிறது. இதிலும் 40 சதவீத தலைநகரங்கள் மாற்றப்பட இருப்பதாக சொல்லப்படுகின்றன.
ஆனால், இதுவரை மாறிய தலைநகரங்களின் தலையெழுத்து அப்படியொன்றும் சுபீட்சமாக இல்லை...’ என புள்ளிவிவரங்களுடன் சொல்கின்றனர். உதாரணமாக, நம் நாட்டின் தலைநகரான புதுதில்லிகூட மாற்றப்பட்ட நகர்தான். இந்தக் குறைகளுக்கான காரணங்களாக அவர்கள் சுட்டிக்காட்டுவது, ‘இவையெல்லாம் ஆண்களால் மட்டுமே திட்டமிடப்பட்டு ஆண்களால் கட்டியதும், இயற்கையை நாசம் செய்து புது தலைநகரங்களை உருவாக்கியதும், புது நகரங்கள் அதிகாரத் தோரணையில் மட்டுமே இருந்ததும், புது நகரங்களைக் கட்டும்போது உள்ளூர்வாசிகளை ஊரைவிட்டு துரத்துவதுமே’ என்கின்றனர்.
ஒரு டுவிட் 26 சிறுமிகளை காப்பாற்றும்!
ஆதர்ஷ் வத்சவா என்பவர் உத்தரப் பிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது தன் கோச்சில் 26 சிறுமிகள் பதற்றமாகவும் அழுது கொண்டும் வருவதைப் பார்த்தார். ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்த அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘நான் இந்த ரயிலில் இந்த கோச்சில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். இங்கு 26 சிறுமிகள் பயத்தோடு இருக்கிறார்கள்.
அவர்களைக் கடத்திகொண்டு போகிறார்கள். உதவவேண்டும்...’ என்று ரயில்வே துறை, அதன் அமைச்சர், மாநில முதல்வர், பிரதமர் அலுவலகம், பிரதமர் ஆகியோரை tag செய்து டுவிட் விட்டார். இந்த டுவிட்டைப் பார்த்த ரயில்வே நிர்வாகம், துரிதமாக செயல்பட்டு அடுத்த ஸ்டேஷனில் அந்த சிறுமிகளை மீட்டனர்!
பிளைண்ட் டேட்
உலகின் முதன்மையான டேட்டிங் appகளில் ஒன்று, ‘டிண்டர்’. தனக்கான ஜோடியைத் தேடுபவர்கள் முதலில் நுழைகின்ற ஆப் இது. தவிர, இந்த ஆப்பை சுமார் 62 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். மாதத்துக்கு சராசரியாக 7.5 கோடிப்பேர் இதைப் பயன்படுத்துகின்றனர். இதன் பயனாளிகள் தினமும் குறைந்தபட்சம் 11 முறையாவது ஆப்பிற்குள் நுழைந்து, வெளியேறுகின்றனர். விஷயம் இதுவல்ல. ‘டிண்டர்’ போன்ற டேட்டிங் ஆப்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் புரொஃபைலில் இருக்கும் புகைப்படம்தான் முதலில் எல்லோரையும் கவரும். தோற்றம் பிடித்திருந்தால் பேச ஆரம்பிப்போம்.
இதற்கு மாற்றாக ஆளுமையை முன்னிறுத்தி ‘பிளைண்ட் டேட்’ என்ற ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ‘டிண்டர்’. இதில் பதிவு செய்யும்போது புரொஃபைலில் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டிய தேவையில்லை. புரொ ஃபைல் வெறுமையாக இருக்கும். ஆனால், உங்களைப் பற்றிய தகவல் சரியாக இருக்க வேண்டும். அந்த தகவல் பிடித்திருந்தால் உங்களுடன் பேசு விரும்புபவர்கள் உரையாடத் தொடங்கலாம்.
ஆளுமையின் அடிப்படையில் தகுந்த ஜோடியைத் தேடுவதற்கான அம்சம் இது. இப்போது அமெரிக்காவில் மட்டுமே ‘பிளைண்ட் டேட்’ பயன்பாட்டில் உள்ளது. 18 - 25 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து உலகமெங்கும் ‘பிளைண்ட் டேட்’ பயன்பாட்டுக்கு வரும்.
தினக்கூலி டு மாடல்
கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் மம்மிக்கா. அழுக்கான லுங்கி, பட்டனில்லாத சட்டை, தலையில் துண்டு, நீண்ட தாடி, கிடைத்த வேலையைச் செய்து கொண்டு பிழைப்பை ஓட்டும் 60 வயதானவர் என்பதுதான் இவரது அடையாளம். உள்ளூர்வாசிகளுக்குக் கூட இவரைப் பற்றி பெரிதாகத் தெரியாது. சில மாதங்களுக்கு முன்பு புகைப்படக் கலைஞர் ஷரீக் வயலிலின் கண்ணில் பட்டிருக்கிறார் மம்மிக்கா.
இவரிடம் ஏதோவொரு வசீகரம் இருக்கிறது என்று மம்மிக்காவைப் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளியிருக்கிறார். அத்துடன் அவரது புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் பகிர்ந்தார். மம்மிக்காவின் புகைப்படங்கள் லைக்குகளை அள்ளின. அத்துடன் “நடிகர் விநாயகன் போல இருக்கிறார்...” என்று கமெண்டுகள் குவிந்தன. அடுத்து நேர்த்தியான ஆடை, மேக் அப்புடன் மம்மிக்கா போஸ் தர, ஒரு நல்ல மாடல் கிடைத்துவிட்டார்... என அழகழகான புகைப்படங்களை எடுத்துத் தள்ளினார் ஷரீக். இதுவும் ஹிட்டடிக்க மம்மிக்காவுக்காக தனி இன்ஸ்டாகிராம் பக்கம் திறக்கப்பட்டுவிட்டது. விரைவில் தொழில்ரீதியான மாடலாக களமிறங்கப்போகிறார் மம்மிக்கா.
தொகுப்பு: குங்குமம் டீம்
|