அட ஆமாம் பா... அம்பிகா, ராதா... அணிந்த பேண்ட்தான் இப்ப ஃபேஷன்!
யெஸ். 80களில் மாதவி, ராதிகா, அம்பிகா தொடங்கி பல நாயகிகள் அணிந்து வந்த டிரெண்ட்தான் இந்த டை - அப் பாட்டம்ஸ்.அப்போது ஹீரோயின்களுடன் முடிந்துவிட்ட இந்த டிரெண்ட் இப்போது ஆபீஸ் போகும் பெண்கள் முதல் கல்லூரிப் பெண்கள் வரை பலரையும் கவர்ந்திழுத்திருக்கிறது.  ‘‘ஒரு காலத்தில் குறைந்தபட்சம் ரூ.1500 செலவு செய்தால் மட்டுமே இந்த பேண்ட்களின் பேசிக் மாடல் கிடைக்கும். ஆனால், இன்னைக்கு நிலையே வேற.ரூ.250ல் தொடங்கி வெரைட்டிகளும் சரி, டிசைன்களும் சரி நிறைய ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள்ல கொட்டிக் கிடக்கு...’’ உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார் டிசைனர் ஃபேன்ஸி ராஜா.  ‘‘இப்ப இந்த டிரெண்ட் அதிகரிக்க ஈஸியா வாங்கும் முறை, குறைஞ்ச செலவு... இது ரெண்டும் கூட ஒரு காரணமா இருக்கலாம். பிராண்ட் அல்லது வெஸ்டர்ன் வேர்ஸ் விற்கும் கடைகள்ல மட்டுமே விற்பனைக்கு இருந்த இந்த பேண்ட்ஸ் இப்ப சாதாரண ஜவுளிக் கடைகள் தொடங்கி ஆன்லைன் ஷாப்பிங்ன்னு எங்க வேணும்னாலும் கிடைக்குது...’’ என்னும் ஃபேன்ஸி ராஜா, டை - அப் பேண்ட்ஸ் டிரெண்டின் விபரம், எப்படி அணிய வேண்டும் என்பதையும் பகிர்ந்தார்.
‘‘இதை டிசைனிங்ல பேப்பர் பேக் கட்டிங்னு சொல்வோம். அதாவது ஒரு பேப்பர் பேக் முடிச்சு போட்டு வைச்சா எப்படி இருக்குமோ அதே பாணிலதான் இந்த பாட்டம்ஸ் இடுப்பை சுத்தி கவர் செய்து சரியா முடிச்சு போட்ட மாதிரி காண்பிக்கும். டெனிம், காட்டன், பாலிஸ்டர், பாலி - காட்டன், கிரெப், லினென், கார்கோ... இப்படி நிறைய மெட்டீரியல்கள்ல இந்த பேண்ட்ஸ் வர ஆரம்பிச்சிடுச்சு. எலாஸ்டிக்குடன் டிசைன்களுக்காக இணைச்ச முடிச்சுகளை ஃபார்மலா போட்டுக்கும் போது வசதியான உடையா இருக்கும். தவிர வயிற்றுப் பகுதிய முடிச்சு போட்டுக் கட்டி மறைப்பதால ஒல்லியோ, பெல்லியோ தொப்பைய மறைச்சு ஒரு மாய பிம்பத்தை உண்டாக்கிடும்.
குறிப்பா பிளஸ் சைஸ் பொண்ணுங்களுக்கு இந்த பாட்டம்ஸ் ஒரு ஸ்பெஷல் வரவு...’’ என்றவர், இதில் என்னென்ன வெரைட்டிகள் உள்ளன என்பதையும் பட்டியலிட்டார் ஃபேன்ஸி ராஜா.
‘‘ஹை வெயிஸ்ட் டை - அப் பாட்டம்ஸ், தோத்தி டை பாட்டம்ஸ், பலாஸ்ஸோ டை பாட்டம்ஸ், ஷார்ட் டை பாட்டம்ஸ், ஆங்கிள் டை பேண்ட்ஸ் இப்படி நிறைய இருக்கு. இதுல ஆங்கிள் டை பேண்ட்ஸ்ல இடுப்பு மட்டுமில்லாம முடிச்சுகள் கணுக்கால்கள்லயும் வர்ற மாதிரியான மாடல்களும் இருக்கு. இடுப்புப் பகுதிலயும் மடிப்பு வெச்சு டிசைன் செய்யறதுண்டு. பலாஸ்ஸோ பாட்டம்ஸ் பெரும்பாலும் எலாஸ்டிக்... மற்றும் அதனுடன் அழகுக்கு சேர்க்கப்பட்ட முடிச்சுகளா வருது.
குர்தா, டி - ஷர்ட், ஷர்ட், ஹூட்டி... குறிப்பா பஃப் ஸ்லீவ் வெச்ச டாப்ஸ், ஹை நெக் ஃபிரில் டாப்ஸ் எல்லாம் பயன்படுத்தலாம். ஒல்லியான பெண்கள் கிராப் டா, ஸ்லீவ்லெஸ் ஹை நெக் டாப்ஸ் கூட மேட்ச் செய்துக்கலாம். ஒருவித ரஃப் அல்லது முரட்டுப் பொண்ணு தோரணை கொடுக்கக் கூடிய உடைகளை லிஸ்ட் போட்டா இந்த டை பாட்டம்ஸ் முதல்ல வரும்.
அதனாலேயே ஆபீஸ்ல மேலதிகாரிகள், ஹெச்.ஆர், எம்.டி, மேனேஜர் மாதிரியான போஸ்ட்கள்ல இருக்கும் பெண்கள் இப்ப இந்த பாட்டம்ஸை ஃபார்மல் உடைகளா அதிகம் தேர்வு செய்யறாங்க. டாப்களை இன் பண்ணி முடிச்சு வெளியே தெரியற மாதிரி போட்டுக்கும் இந்த உடைக்கு வாட்ச், சின்ன ஸ்டட் தோடு, கட் ஷூ, ஆங்கிள் ஷூஸ், லோஃபர் மாதிரியான காலணிகள் பயன்படுத்தலாம். ஸ்டிராப் காலணிகளும் கூட நல்ல மேட்ச்சிங்கா இருக்கும்...’’ புன்னகைக்கிறார் ஃபேன்ஸி ராஜா.
ஷாலினி நியூட்டன்
|