உலகின் அபாயகரமான நாய் பிட் புல் இந்தப் படத்துல நடிச்சிருக்கு!



‘‘சினிமாவை யாரிடமும் கற்றுக்கொள்ளவில்லை. தியேட்டர்தான் என்னுடைய போதி மரம். என்னுடைய கதையும் தயாரிப்பாளர் என்மீது வைத்த நம்பிக்கையும்தான் எனக்கு படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது...’’ என்கிறார் நட்டி நடிக்கும் ‘வெப்’ படத்தின் இயக்குநர் ஹாருண்.  என்ன மாதிரியான கதை?சிலந்தி வலையில் மாட்டிய பூச்சி தன்னை விடுவிக்க என்ன முயற்சி எடுத்தாலும் அந்த வலையைவிட்டு வெளியே வருவது என்பது முடியாத காரியம்.

அந்த மாதிரி கதாநாயகி தன்னையும் அறியாமல் பண்ணும் விஷயம் அவரை எப்படியெல்லாம் பாதிப்புக்குள்ளாக்குகிறது என்பதை த்ரில்லர் கலந்த கமர்ஷியல் ஃபார்மூலாவில் சொல்லியிருக்கிறோம். ‘கேட் அண்ட் மவுஸ்’ மாதிரி கதாநாயகனுக்கும் கதாநாயகிக்குமிடையே நடக்கும் மோதலை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன்.
முதல் படத்திலேயே நட்டியை இயக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது?கதை  எழுதும்போதே நட்டி சார் மைண்ட்ல இருந்தார். முதல் தெரிவாக அவரிடம் கதை சொன்னேன். பவுண்ட்டட் ஸ்கிரிப்ட் இல்லாமல் கதை கேட்க மாட்டார் என்று சொல்வார்கள். நான் அவரிடம் சொல்லும் போது கையில் பவுண்ட்டட் ஸ்கிரிப்ட் இல்லை.

பத்து நிமிஷத்துக்குள்ளேயே ‘நான் பண்றேன்’ என்றார். நட்டி சார் இன்றைய தேதியில் பிசி ஹீரோ. அவரிடம் தினமும் பலர் கதை சொல்ல வருகிறார்கள். நான் சொன்ன சமயத்திலேயே அவர் பல கதைகளைத் தவிர்த்துவிட்டதை அறிந்தேன். மிகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நட்டி சாரின் படங்களிலும் அது தெரியும். எந்தப் படத்தை எடுத்தாலும் அதில் நட்டி சார் தெரியமாட்டார். கேரக்டர்தான் தெரியும். ‘மிளகா’, ‘சதுரங்க வேட்டை’, சமீபத்தில் வந்த ‘கர்ணன்’ உட்பட எல்லா படத்திலும் மாறுபட்ட நட்டி சாரை பார்த்திருப்போம்.

அதே மாதிரி இதில் நட்டி சாருக்கு நடிப்பைப் பொறுத்தவரை பல வித்தியாசமான கோணங்கள் இருக்கும். கேரக்டர் பேர் வீரா. இதுவரை பார்க்காத நட்டி சாரை பார்க்கலாம். நட்டி சாருடன் வேலை செய்வது என்னை மாதிரியான அறிமுக இயக்குநருக்கு ஒரு கிஃப்ட் என்றுதான் சொல்லணும். முதல் தடவை கதை கேட்கும்போதே டவுட் இருந்தா க்ளியர் பண்ணிக்கிட்டு ஸ்பாட்டுக்கு தெளிவா வந்து நிற்பார்.

இந்திய சினிமாவில் முக்கியமான டெக்னீஷியன் என்ற பெயர் பெற்றவராக இருந்தாலும் இயக்குநரின் நடிகராகவே தன்னை வெளிப்படுத்துவார். இயக்குநர் சீனியரா, ஜூனியரா என்று பார்க்காமல் இயக்குநர் எது சொன்னாலும் அப்படியே செய்வார். எங்கள் இருவருக்குமான வேவ்லெங்க்த் ஒத்துப்போனதால் படப்பிடிப்பை ஸ்மூத்தா முடிக்க முடிந்தது. டப்பிங்கிலும் அதே வேகத்தை காட்டினார்.

ஷில்பா மஞ்சுநாத் துணிச்சலான நடிகைனு பேர் வாங்கியவராச்சே..?இந்தக் கதையில் வரும் கதாநாயகியோட முகத்துல கர்வம் தாண்டவமாடணும். ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்துல ஹரீஷ் கல்யாண் ரொமான்ஸ் மூடுடன் பார்க்கும்போது ஷில்பா ஆம்பளத்தனமா பார்ப்பார். இந்த கதைக்கு அந்த மாதிரி நடிக்கும் ஒரு ஹீரோயின்தான் தேவைப்
பட்டார். நட்டி சார் 6 அடி உயரம் உள்ளவர். அவருக்கு ஈடுகொடுக்குமளவுக்கு நாயகியும் இருக்கணும்.

எதற்கும் நாயகனிடம் விட்டுக்கொடுக்காத கேரக்டர். அதனால் ஷில்பாவிடம் கதை சொன்னேன். அவருக்கும் கேரக்டர் பிடிச்சதால உடனே ஓ.கே.சொல்லிட்டார்.
நட்டி சாருக்கும் அவருக்கும் ஒரு ஆக்‌ஷன் ப்ளாக் இருக்கு. அப்புறம் உலகிலேயே அபாயகரமான நாய் என்று பெயர் எடுத்துள்ள ‘பிட் புல்’ (Pit bull) என்ற நாயுடன் நடிச்சிருக்கிறார். இதெல்லாம் நாயகிக்கு பேர் வாங்கித்தரும் இடமாக இருக்கும்.

சாஷ்வி பாலா, சுபா பிரியா மலர், அனனியா மணி, ப்ரீத்தி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், முரளி ராம் ஆகியோர் முக்கியமான வேடத்துல வர்றாங்க.
படத்துல வேற என்ன ஸ்பெஷல்?

சினிமா என்பது மக்களை என்டர்டெயின் பண்ணுவதோடு சிந்திக்கவும் வைக்கணும் என்பதுதான் என்னுடைய பார்வை. பொதுவா பிறர் தப்பு பண்ணும்போது அதற்கு அழுத்தம் கொடுத்து ‘தப்பு’ என்போம். அதே தப்பை நாம் பண்ணும்போது அதற்கு நியாயம் கற்பிப்போம். அந்தவகையில் ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் பொறுப்பை இதில் சொல்லியிருக்கிறேன்.

நான் சொல்லும் கருத்து படம் பார்த்துவிட்டு வரும் ரசிகரின் மனதில் நிற்கும் என்ற நம்பிக்கை இருக்கு.கார்த்திக்ராஜா  இசையில் பாடல்கள் எப்படி வந்திருக்கு..?
கார்த்திக்ராஜா செலக்டிவ்வா பண்ணக்கூடியவர். கதை அவருக்கு பிடிச்சதால இன்வால்வாகி பண்ணிக்கொடுத்தார். வழக்கமா த்ரில்லர் கதையில் பாடல்கள் அன்னியமா தோணும். இதுல ஒவ்வொரு பாடலும் கதையை நகர்த்திட்டு போகுமளவுக்கு இருக்கும்.

கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். தெலுங்குல சில படங்கள் பண்ணியவர். தமிழில் இதுதான் அவருக்கு முதல் படம். நட்டி சார் பெரிய கேமராமேன். அவரே பாராட்டும் அளவுக்கு கேமரா ஒர்க் இருந்தது. ‘ஒத்த செருப்பு’ சுதர்சன் எடிட்டிங். தயாரிப்பாளர் முனிவேலன் சார் என்னுடைய உடன்பிறவா சகோதரர். என்னுடைய கதைதான் வாய்ப்பு கிடைக்க காரணமா இருந்தது. அவரிடம் பல கதைகள் சொன்னேன். ஆனாலும் கதைத் தேர்வை என்னிடமே கொடுத்துவிட்டார். என்னிடம் இருபதுக்கும் மேற்பட்ட கதைகள் இருக்கு. அதில் நான் தேர்வுசெய்தது ‘வெப்’.

சினிமா வாய்ப்பு எப்படி கிடைத்தது..?

சொந்த ஊர் சென்னையை அடுத்த அரக்கோணம். அப்பா எக்ஸ் சர்வீஸ்மேன். அம்மா ஹோம்மேக்கர். அப்பா, அம்மா இருவரும் கலையை ரசிப்பவர்கள். சின்ன வயசுல நானும் அம்மாவும் மதிய உணவை எடுத்துக்கொண்டு காலைக் காட்சி, பகல் காட்சி என்று நான் ஸ்டாப்பாக படம் பார்த்துள்ளோம். ரஜினி சாருடைய டை ஹார்ட் ஃபேன் நான். அப்படியே சினிமா என்னுடைய பேஷனாக மாறிடிச்சு. ஷூட்டிங் தவிர்த்து பிரபல இயக்குநர்களுடன் டிராவல் பண்ணியிருக்கிறேன். அவர்களிடமிருந்து பல மாதிரி அனுபவம் பெற்றிருக்கிறேன். தனியாக என்னால் ஒரு படம் பண்ண முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

சினிமா டிஜிட்டலுக்கு மாறியுள்ள நிலையில் புதுமுக இயக்குநர்கள் சினிமா எடுப்பது எளிதா, சிரமமா?

இப்ப ஈஸியா இருக்கு. இதுல எந்த மாற்றமுமில்லை. அந்தக் காலத்தில் உதவி இயக்குநராக ஜாயின் பண்ணி டைரக்‌ஷன், கேமரா என்று சினிமாவைப் பற்றி அறிந்துகொள்ள நிறைய டைம் எடுக்கும். சினிமா டிஜிட்டலுக்கு மாறிய பிறகு கதவுகள் எளிதாக திறக்கப்படுகிறது. ஒரு பேட்டியில் பிரபல இயக்குநர் ஒருவர், ‘அப்போது சினிமாவில் நுழைவது கடினம். அதையும் மீறி வருபவர்கள் நீடித்து நிற்கலாம். இப்போது வருவது ஈஸி. ஆனால் குவாலிட்டி, கன்டென்ட் இருந்தால்தான் நிக்க முடியும்...’ என்று சொல்லியிருந்தார். அந்த வகையில் தனித்துவமாகத் தெரிந்தால் சினிமாவில் எளிதாக சர்வைவ் பண்ணமுடியும்.

எஸ்.ராஜா